கடைசி ஏடு பட்டணம் பகோடாவை எடுத்து வடிகட்டியில் போட்ட காதம்பரி கேஸ் ஸ்டவை அணைத்து விட்டு ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்து ஏழெட்டு பகோடாக்களை சடகோபனுக்கு கொடுப்பதற்காக வைத்தாள்.
பட்டணம் பக்கோடா என்றால்அவருக்கு உயிர். அடிக்கடி அதை செய்து தரும்படி காதம்பரியிடம் கூறுவார்.
இருவருக்கும் சர்க்கரை, பிபி என்று பிரச்சினை ஏதும் கிடையாது அதனால் அவள் அவர்இஷ்டப்படி அடிக்கடி செய்வாள்
இன்றும் அப்படித்தான் . காதம்பரி குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும்”காதம்பரி இன்று பட்டணம் பக்கோடா செய்கிறாயா” என்று கேட்டார்.
இப்படிஅவர் திடீரென்று கேட்பது வழக்கம் அதனால் எல்லா பொருட்களும் வீட்டில் இருக்கும். வெங்காயத்தை அரிந்து தேவையான எல்லா சாமான்களையும் போட்டு மாவை கடலை எண்ணெயில் போட்டு எடுத்தாள். கடைசி ஏடு எடுத்தானதும் அடுப்பை அணைத்து விட்டு பக்கோடாக்களை தட்டில் போட்டாள்.
அப்பொழுது காலிங் பெல் அடித்தது.
“யார் என்று பார் காதம்பரி”
டிவி பார்த்துக் கொண்டிருந்த சடகோபன் சொன்னதும் தட்டோடு வந்த காதம்பரி ” உங்க நண்பர் ராகவேந்திரனாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் நான் பக்கோடா போடும்போது அவர் டாண் என்று வந்து விடுகிறார்.எப்படித்தான் மூக்கில் வியர்க்கிறதோ”என்று கூறி தட்டை அவரிடம் நீட்டி விட்டு கதவை திறந்தாள்.
அவள் கூறியது உண்மையாயிற்று.வெளியே ராகவேந்தர் தான் நின்றிருந்தார்
” வாங்கோ. ” என்று அவரை வரவேற்றவள் சடகோபனை அர்த்தமுள்ள பார்வை ஒன்று வீசினாள்.
” வாப்பாஉள்ளே” என்று அவரை அழைத்த சடகோபன் ” காதம்பரி! இவனுக்கும் ஒரு பிளேட் கொண்டு வா ‘ என்றார்.
உள்ளேசென்று இன்னொரு பிளேட்டில் 4 பக்கோடா போட்டுக்கொண்டு அவரிடம் நீட்டவும் அவரை முந்திக் கொண்டு பிளேட்டை வாங்கிய சடகோபன் தன் தட்டிலிருந்து மேலும் நான்கு பகோடாவை போட்டு ராகவேந்தரிடம் நீட்டினார்.
“எனக்கு நான்கு போறும்” என்று கூறியதை இலட்சியம் செய்யாமல் ” வாங்கிக்கோ” என்று சடகோபன் அதட்டி யதும் தட்டை வாங்கிக் கொண்ட ராகவேந்தர் சாப்பிடத்தொடங்கினார் .
காதம்பரிக்கு எங்கோ இடித்தது. அது எப்படி ஒவ்வொரு தடவை சொல்லி வைத்தார் போல் இவர் வருகிறார்? கணவன்தான் போன் செய்து வர சொல்கிறாரோ?
இந்த சந்தேகம் எழவும் ராகவேந்தர்கிளம்பிசென்றதும் நேரடியாகவே கேட்டுவிட்டாள்
“உண்மையை சொல்லுங்கள். நீங்கள் அழைத்து தானே இவர் வருகிறார்?”
“நீண்ட பெருமூச்சு விட்ட சடகோபன் சொன்னார் “
“நீ கெட்டிக்காரி காதம்பரி. கரெக்டாக சொல்லி விட்டாய்.நீ தூங்கும் போது நான் தான் அவனை வரச் சொன்னேன். அவன் சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தி.”
ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தாள்.
சடகோபன் தொடர்ந்தார்”இது 45 வருட நிகழ்ச்சி. அப்பொழுது நான் பள்ளி இறுதி படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பசி தாங்காது. அதனால் அம்மா காலையில் இட்லி தோசை என்று டிபன் செய்து மதியம் சாப்பிட சாம்பார் சாதம் தக்காளி சாதம் என்று விதவிதமாக செய்து வைப்பாள்.
ஒரு நள் காலையில் அம்மாவிற்கு உடம்பு சரி இலலை. எனக்கு காலையில் ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது. அதனால் பழையது சாப்பிட்டு கிளம்பினேன். மதியம் கேண்டினில் சாப்பிட இரண்டு ரூபாய் அம்மா தந்தாள்.
மதியம் இடைவெளியில் கேண்டீனுக்கு வந்த போது என்னிடம் இருந்துஇரண்டு ரூபாய் காணவில்லை. ஜாமின்டிரி பாக்ஸில் வைத்திருந்ததை எந்த பையனோ லவட்டி விட்டான்.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.பசி வயிற்றை கிள்ளியது.
என்னிடம் சேர்ந்து சாப்பிடும் ராகவேந்தர் என் நிலைமையை புரிந்து கொண்டு ” என்சாப்பாட்டை இருவருமாக பகிர்ந்து கொள்வோம். என் பாக்ஸில் வெரும் மோர்சாதம் தான் இருக்கிறது. அம்மா அதிசயமாக ஒரு அணா கொடுத்து சாதத்திற்கு தொட்டு கொள்ளஎதுவும் வைக்கவில்லை. அதனால் நீ ஆசைப்படுவாயே அந்த பக்கோடாவை வாங்கிக் கொள் என்று சொன்னாள். நல்ல வேளையாக இந்த பக்கோடா வாங்கினேன். நீ பக்கோடா தொட்டுக்கொண்டு சாப்பிடு.’என்று கூறி முழு பக்கோடாவையும் கொடுத்து விட்டான். ஒரு அணா அந்த காலத்தில் மிகவும் குழந்தைகளுக்கு அரிது.அதுவும் ராகவேந்திர போல் ஏழைகளுக்கு பெரிய தொகை . மிகவும் அபூர்வமாக கிடைக்கும் அந்த பணத்தில் பக்கோடா வாங்கியும் அதைத்தான் சாப்பிடாமல் எனக்கு கொடுத்து விட்டது என்னால் மறக்கவே முடியவில்லை.
பள்ளி இறுதி முடித்ததும் அவன் வேலை தேடி வெளியூர் சென்று விட்டான். அதன்பிறகு அவனைப் பார்க்க முடியவில்லை. யதேச்சையாக மூன்று மாதங்களுக்கு முன் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவனை பார்த்தேன். அவனது மனைவி உடல்நிலை சரியாக இல்லாத தால் இவன் தான் சமையல் முதற்கொண்டு செய்கிறான். குழந்தை கிடையாதாம். எனக்கு அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால்அவன் மானஸ்தன். வேலை செய்து ரிடையர் ஆனதும்கிடைத்த பணத்தில் சிறிதாக பிளாட் வாங்கிக் கொண்டு கிடைக்கும் பென்ஷனில் வாழ்கிறான். அது அவனுக்கு போதுமானதாக இருக்கிறது. அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. அவனது ஃபேவரிட் பட்டணம் பக்கோடா
அவன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் தான் நீ பக்கோடா செய்யும் போதெல்லாம் அவனுக்கு போன் செய்து வரச்சொல்வேன். இதில் எனக்குஒரு அல்பத்திருப்தி. ஒருபழைய மோர்சாதத்திற்கு இத்தனை பில்டப்பா என்று நீ கேட்கலாம். ஒரு பொருளின் மதிப்பு அது தேவையான போது கிடைப்பதில் தான் இருக்கிறது இல்லையா?”
காதம்பரி அவர் அருகில் கலந்து கொண்டு அவரை கையை பிடித்துக் கொண்டு சொன்னாள் “இதை நீங்கள் முதலிலேயே சொல்லி இருக்கலாம். இனி பக்கோடா போடும்போது அவரது மனைவிக்கும் சேர்ந்தே போடுகிறேன் சரியா?”
