பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காத்திருந்தும் சங்கர் வராததால் பொறுமை இழந்து செல்ஃபோனில் மணியைப் பார்த்தான் சேகர். மாலை மணி ஆறைத் தாண்டி விட்டது. இன்னும் சங்கரைக் காணோம். பொறுமையிழந்து அவனை ஃபோனில் அழைக்க முயற்சித்தான். நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று திரும்பத் திரும்ப ரெக்கார்டர் வாய்ஸ். எரிச்சல் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. ஏன் இப்படி பொறுமையே இல்லை….. எல்லாவற்றிற்கும் இப்படி எரிச்சல் படுகிறேன் எனக்கு என்னவாயிற்று? ஏதாவது டிராஃபிக் ஜாமில் சங்கர் மாட்டிக் கொண்டிருக்கலாம், இல்லை கிளம்பும்போது யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம்.
அவன் தரப்பிலிருந்து யோசிக்காமல் கோபப்படுவதில் என்ன நியாயம்? தன்னையே திட்டிக்கொண்டு ஒரு நிமிடம் சமாதானம் அடைந்தான். திரும்ப அலைபேசியில் சங்கரரை அழைத்தான். “என்னடா சேகர்… இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன். கிளம்பும்போதுதான் அப்பா மருந்து தீர்ந்து போச்சு வாங்கிக் கொடுத்துட்டு போன்னாரு…. அதான்… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றான். “அதனாலென்ன….. பரவால்லடா…. நான் வெயிட் பண்றேன். நிதானமா வா” என்று சொல்லி ஃபோனை அணைத்தான் சேகர்.
சங்கரும் சேகரும் பால்ய தோழர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். பிறகு இருவரும் வெவ்வேறு ஊர்களில் கல்லூரியில் படித்து வேலைக்குச் சென்று திருமணம் ஆகி குடும்பம் குழந்தைகள் என்று ஆனாலும் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படவே இல்லை. வேலையில் சேர்ந்த பிறகும் கூட இருவரும் சேலத்தை விட்டுப் போகக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தனர். இந்த 50 வயதில் நட்பு இன்னும் பலமுற்றதாகவே இருக்கிறது. அதில் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கூட. சங்கர் மனைவி சாரதாவும் சேகர் மனைவி செல்வியும் இவர்களுக்கு மேல் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர். இவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இதுவும் கடவுளின் சித்தம் தவிர வேறென்ன ? இப்போது கூட சங்கரை வரச்சொன்னது சேகரின் பையனுக்கு கல்லூரியில் அட்மிஷன் விஷயமாக ஒருத்தரைப் போய் பார்ப்பதற்குத்தான். அந்த பெரிய மனிதர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தக்காரர். எதேச்சையாக சேகருக்கு தெரியவந்தது அவர் சங்கரின் தூரத்து சொந்தக்காரர் என்று. அதனால் அவன் சங்கரிடம் சொல்லி அவனை அவரிடம் பேசி தன் மகனுக்கு ஒரு இன்ஜினியரிங் சீட் வாங்கி கொடுக்கச் சொல்லியிருந்தான். சங்கரும் சம்மதம் தெரிவித்ததால் அவனுக்காகக் காத்திருந்தான்.
“ஹாய் சேகர்…வா போகலாம்” என்று குரல் கேட்டதும் சேகருக்கு அப்பாடா என்றிருந்தது. இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர். பள்ளியில் படிக்கும்போது இருவரும் பள்ளி நாடகங்களில் நடித்து பரிசு வாங்கியது, பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீச்சல் கற்றுக் கொண்டது என்று பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தனர். வெய்யிலின் தாக்கம் தெரியவில்லை.
“அந்த ராமநாதன் நல்லவர்தான் சேகர்… எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா முறை வேண்டும். நான் சிறுவனாக இருக்கும்போது என் அப்பாவைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வருவார். இப்போது வருடங்கள் உருண்டோடி விட்டன. என் தகப்பனார் மறைவிற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தாரோடு அவ்வளவாக தொடர்பு இல்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம்” என்றான் சங்கர்.
சிறிது நேரத்தில் ஒரு பெரிய பங்களாவின் முன் வந்து நின்றனர் வாசலில் பெயர் பலகையில் என். ராமநாதன் என்று நேர்த்தியாக எழுதியிருந்தது. அங்கு ஸ்டூலில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் அவர்களை உள்ளே விடவில்லை. சங்கர் அந்த வாட்ச்மேனிடம், இன்டெர்காமில் அவரை அழைத்து, அவருடைய உறவினர் மகன் சங்கர் வந்திருப்பதாகச் சொல்லச் சொன்னான். அந்த வாட்ச்மேனும் அந்த பெரியவரை ஃபோனில் அழைத்து விபரங்களைச் சொன்னார். “யார் என்று ஐயா கேட்கிறார்… நீங்க கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா? நான் அவருடைய பெரியப்பா மகன் வெங்கடேசனின் மகன் சங்கர் என்று சொல்லப்பா” என்றான்.
மீண்டும் அந்த வாட்ச்மேன் அவரை ஃபோனில் தொடர்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தார். “வாங்க, ரெண்டு பேரும் உள்ளே வாங்க…. ஹாலில் உட்காருங்க. ஐயா இதோ வந்துவிடுவார்” என்று சொல்லி அவர்களை உட்கார வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். பத்து நிமிடங்கள் ஆயிற்று. இன்னும் அவர் வரவில்லை. அடிக்கடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிறிது சிறிதாக நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
“வாங்க தம்பி…. நல்லா இருக்கீங்களா?” என்ற குரலைக் கேட்டதும் இருவரும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர். “வணக்கம் ஐயா…நீங்க நல்லா இருக்கீங்களா? என்றான் சங்கர். “என்ன தம்பி இவ்வளவு தூரம் ? வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?” என்று கனிவாக விசாரித்தபடி அவர்கள் எதிரில் அமர்ந்தார். தூய வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் நெற்றியில் பட்டையாக திருநீறும் அணிந்திருந்தார். அவர் முகத்தில் தெய்வீகக் களை. தீட்சண்யமான கண்கள். தூக்கிப்படிய வாரிய தலைமுடி. கூரிய நாசி. ஒல்லியாக உயரமாக இருந்தார். சங்கர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “சித்தப்பா இவன் என் உயிர்த் தோழன் சேகர். இவன் மகன் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அடுத்த வருடம் கல்லூரியில் சேர்க்க வேண்டும். இவனிடம் அவ்வளவாக பணம் இல்லை. இவானோட பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கிறதோ இல்லையோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும்”. அதனால என்ன என்பது போல் அவர் பார்த்தார். “நீங்கதான் பார்த்து பையனுக்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சீட் ஒன்று உங்க கல்லூரியில் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று சட்டென்று சொன்னான் சங்கர்.
அவரை நேருக்கு நேர் பார்த்து அன்பாய் புன்னகைத்தான் சங்கர். இவனை மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருப்பார்… ஆனாலும் இவன் சொந்தக்காரன் ஆகிவிட்டான். ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் குனிந்த தலையோடு அமர்ந்திருந்தார். இருவருக்கும் ஒரே டென்ஷன். சேகருக்கு இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது, எங்கே முடியாது என்று சொல்லிவிடுவாரோ என்று. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “அது வந்து தம்பி…. என் இஞ்சினியரிங் கல்லூரி இப்போதைக்கு நஷ்டத்தில் ஓடுது… நான் நடத்துற பள்ளிக்கூடத்திலிருந்து வரும் வருமானத்தை வச்சுத்தான் சரிக்கட்டி வரேன். என்னால இப்போ ஃப்ரீ சீட் எல்லாம் கொடுக்கிற நிலைமையில் இல்ல… என்ன புரிஞ்சுக்கோ தம்பி. இவன் பையனுக்கு ரிசல்ட் வந்ததும் மார்க் வரட்டும், அப்போ மார்க் ஷீட் எடுத்துட்டு வா தம்பி, நான் ஒரு சீட் தர முயற்சிக்கிறேன். இப்போ நாலு மாசத்துக்கு முன்னால என்னால கமிட் பண்ணிக்க முடியாது.” என்று திட்டவட்டமாக சொல்லி எழுந்து கொண்டார்.
இவர்களும் அவர் குறிப்பைப் புரிந்து கொண்டு எழுந்து கைகூப்பி விட்டு வெளியே வந்தார்கள். சேகரின் முகத்தில் ஒரே ஏமாற்றம். பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தனர். மாலை ஏழரை ஆகிவிட்டது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. பஸ் வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சடார் என்று ஒரு நீல நிற ஸ்கோடா கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து ஆஜானுபாகுவாக ஒருவர் நீல நிற கோட் சூட்டில் பணக்காரத்தனம் மிளிர இறங்கி இவர்களை நோக்கி வந்தார். “என்னங்கடா சங்கர், சேகர் ,இன்னமும் நீங்க ஒண்ணாத்தான் இருக்கீங்களா? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா பொறாமையா இருக்குடா…” என்று சொல்லிக்கொண்டே இவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். இருவருக்கும் ஒரே ஆச்சரியம். அட நம்ம கார்த்திக். எப்போதும் பாடப்புத்தகங்களைத் தவிர எல்லா வித புத்தகங்களையும் படிக்கும் அறிவு ஜீவி. கார்த்திக் பக்கமே சங்கரும் சேகரும் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இவர்கள் சராசரி மாணவர்கள் என்றால் கார்த்திக் ஒரு அறிவு ஜீவி. இவர்களுடன் ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன். பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தவன். அவன் வாங்காத பரிசுகள் இல்லை. எல்லாப் போட்டிகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் வாங்கிக் குவித்தவன். பள்ளிப் படிப்பிற்கு பிறகு கல்லூரிக்கு அந்தக் காலத்திலேயே அமெரிக்கா சென்றவன். அவனை இவர்கள் இருவரும் சுத்தமாக மறந்து விட்டனர். இப்போது எதிர்பாராத விதமாக இந்த சேலத்தில் இவனைப் பார்த்தவுடன் சங்கருக்கும் சேகருக்கும் ஒரே மகிழ்ச்சி. “எப்படிப்பா இருக்க கார்த்தி? எங்களால நம்பவே முடியல…. அதே கார்த்திதானா ?” என்றான் சேகர். “ஆமாண்டா அதே கார்த்திதான். நான் அமெரிக்காவில் செட்டில் ஆகி சொந்தமாகக் கம்பெனி ஆரம்பிச்சு நல்ல வசதியா இருக்கேன். இப்போ இங்க சேலத்துக்கு வந்தது ஒரு காலேஜ் விலைக்கு வந்திருக்கு அதை வாங்கத்தான் வந்திருக்கேன்” என்றான்.
இவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “எந்த காலேஜ்டா? என்று கேட்டார்கள். “அதாண்டா ராமநாதன் இன்ஜினியரிங் கல்லூரி” என்றான் மூவரும் தங்கள் குடும்ப விபரங்களை எல்லாம் பரிமாறிக் கொண்டனர். இப்போதுதான் சேகரின் மகனின் கல்லூரி சீட் விஷயமாக அதே ராமநாதனைப் பார்த்து விட்டு வந்த விஷயத்தை சங்கர் கார்த்திக்கிடம் சொல்லத் தயங்கவில்லை.
“ அட…அப்படியா… உன் பையனுக்கு கல்லூரி சீட் என்ன, வேலை வாங்கிக் கொடுக்கிற வரைக்கும் என்னோட பொறுப்பு, கவலைய விடு.” அப்புறம் உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு? “நான் பார்த்துட்டே இருக்கேன்பா… கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு தான் அதைப்பத்தி யோசிக்கணும்” என்றான். “கவலைய விடுடா… நான் எதுக்கு இருக்கேன்… எனக்கு எக்கச்சக்க பணம் இருக்குடா. என்னோட ஒரே பையன் லண்டன்ல செட்டில் ஆயிட்டான்டா. அவனும் நல்லா படிச்சு நல்ல வேலைல இருக்கான்டா. இப்ப நானும் என் மனைவியும் மட்டும்தான் நியூயார்க்கில் தனியா இருக்கோம். நானே எங்க ரெண்டு பேர் தேவைக்குப் போக சேரிட்டிக்குக் கொடுக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். அப்பத்தான் இந்த ராமநாதன் ஒரு இன்ஜினியரிங் கல்லூரிய விற்கப் போறதா எனக்கு அங்க ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது. ஏன் நாமே நம்ம சொந்த ஊர்ல ஒரு கல்லூரியை வாங்கி, அதை நடத்தி கொஞ்சம் வசதி குறைந்த மாணவர்களிடம் ஃபீஸ் கம்மியா வாங்கி அவங்கள படிக்க வைக்கலாமேன்னு யோசிச்சேண்டா. அதாண்டா என்ன இங்க சேலத்துக்கு கொண்டு வர வெச்சது” என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் கார்த்திக்.
சேகரும் சங்கரும் இது தெய்வ சித்தம் இல்லாமல் வேறென்ன என்று நினைத்தனர். இல்லையென்றால் இத்தனை வருடங்கள் சேலத்தையே திரும்பிப் பார்க்காமல் இருந்த கார்த்திக் இன்றைக்குப் பார்த்து திடீரென்று தங்களை சந்தித்திருக்கிறான் என்றால் இது கட்டாயம் கடவுள் சித்தம் தான். இருவருக்கும் தொண்டை அடைத்தது. வார்த்தையே எழும்பவில்லை.
சேகரும் சங்கரும் கார்த்திக்கின் கையை இறுகப் பற்றிக்கொண்டனர். இருவரின் கண்களும் பனித்தன. கார்த்திக் தோழமையுடன் இருவரையும் கட்டிக் கொண்டான். அதை ஆமோதிப்பது போல லேசாக மழை தூற ஆரம்பித்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
