
சுப்ரமணியன் படுக்கையில் புரண்டு படுத்தார். இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையிலேயே இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், பக்கத்தில் பத்மாவைக் காணோம். டக்கென எழுந்து உட்கார்ந்தார்.
“பத்மா, காபி போட்டு முடித்திருப்பாளோ? “ என்ற கவலை. ஒன்று ஆறிய காபி குடிக்க வேண்டும். இல்லை, எத்தனை தரம் காபி போடறது என்கிற அவளது ஏச்சைக் கேட்க வேண்டும்.
பத்மா சோர்வாக அமர்ந்திருந்தாள்.
“என்ன ஆச்சு, பத்மா? தலைவலியா?”
லேசாக இருமி, தொண்டையில் கையை வைத்துக் கொண்டு, தன்னால் பேச முடியவில்லை என சைகை காட்டினாள்.
”ஆமா, நேத்திக்கி, ரிஸப்ஷன்ல மூணு ஐஸ்க்ரீம் சாப்பிட்ட. வேண்டாம்ன்னு சொன்னாக் கேட்டா தான?”
உதட்டைச் சுளுக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“சரி, காபி போட்டுத் தரேன்” என்றபடி சமையலறை நோக்கிச் சென்றார்.
அவரது கைபேசி ஒலித்தது.
பத்மா தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்!
“போட்டு வச்சிருக்கேன்” அதான் செய்தி!
‘ஆறிப் போன காபி… சரி காபியே கிடையாது என்பதை விட இது பரவாயில்ல” என நினைத்த படி”எங்க வச்சிருக்கெ?” என்றார்.
“டைனிங்… ஃப்ளாஸ்க்ல” : குறுஞ்செய்தி.
நாக்கு ரசிக்கவில்லை ஃப்ளாஸ்க் காபியை. மூக்கும் தான். சூடும் இல்லை. ’மொடக் மொடக்’ என்று முழுங்கினார்.
பத்மா படுத்தேவிட்டாள். இருமல் அதிகமாக இருந்தது.
“படுத்தா இருமல் ஜாஸ்தியாகும். உட்காரு”
உக்கார முடியல : சரக்கென வந்து விழுந்தது குறுஞ்செய்தி..
“கொஞ்ச நேரம் உக்காரு. காலை வேளையில நெஞ்சு சளி மேலாக நிக்கும் . கொஞ்ச நேரம் உக்காந்தா…”
பத்மா பக்கத்தில் இருந்த திண்டைத் தூக்கி எறிந்தாள்.
“சொன்னா கேக்க மாட்ட” என்ற படி அவள் அருகில் வந்து தொட்டுப் பார்த்தார்.
“கதகதப்பா இருக்கு. சரி, சரி, நீ படுத்துகிட்டு இரு. நா போய் ப்ரெட், மாத்திரை வாங்கி வரேன்”
“எனக்கு ‘ஒவர் தி கவுண்ட்டர்’ மெடிசின் வேண்டாம்”
சுப்ரமணியன் ப்ரெட் வாங்கிக் கொண்டு பாலும் வாங்கிக் கொண்டு “வைத்தீஸ் கிச்சன்ஸ்” வழியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார்.
“வத்தக்குழம்பு, கேரட் பொறியல், கொட்டு ரசம் இருக்கு அண்ணா” என்றார் வைத்தீ.
அப்போதே வயிறு கலங்குவது போல இருந்தது சுப்ரமணியனுக்கு. வந்ததுக்கு ஒரு கேரட் பொறியல் வாங்கிக் கொண்டார்.
எதிர் சாரியில் தான், சற்று தள்ளி ஆனந்த் டாக்டர் கிளினிக். கதவு திறந்து இருந்தது.
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
வாசலில் கோலம் அழகாக இருந்தது. உள்ளேயும் பெருக்கித் துடைத்து இருந்தார்கள்.
“டாக்டரு காலையில வரல சார். ஈவ்னிங் தான் என்றார்” பணிப்பெண்.
மருத்துவ உதவியாளர் யாரையும் காணோம்.
திரும்பச் செல்ல எத்தனித்தவர், சட்டெனத் திரும்பி, டோக்கன் நோட்டை எடுத்து, பக்கத்தைத் திருப்பினார். அன்றைய தேதியைத் தலையில் எழுதி ஒரு அடிக்கோடு போட்டார். இரண்டு வரிகளை விட்டு விட்டு மூன்றாவது டோக்கனுக்குப் பேர் எழுதினார்.
ப்ரெட் சாப்பிட்டு, கஷாயம் குடித்த பின் பத்மா சற்று தெளிந்தாற் போல இருந்தாள்.
“நீ ஒண்ணும் செய்ய வேண்டாம் பத்மா, சாதமும் பருப்பும் நானே வச்சிடறேன். நீ பருப்பு சாதம் சாப்பிட்டுக்கோ. நா மோர் சாதம்”
மௌனம் சம்மதமானது.
வேலை ஏதும் இல்லை என்றாலும் சுப்ரமணியனால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. சில முறை கழிவறைக்கும் சென்று வந்தார்.
“என்னாச்சு, முடியல்லயா?” : குறுஞ்செய்தி.
ஒருவழியாக, மதிய உணவு முடிந்தது.
”பத்மா, கிளம்பு, ஆனந்தைப் பாத்துட்டு வந்திடலாம்”
“வேணாம், வீட்டு வைத்தியத்திலயே சரியாயிடும்” குறுஞ்செய்தி.
“ராத்திரி இருமல் அதிகமாயிடும், டோக்கன் போட்டு இருக்கேன்”
வயிற்றை சற்றுப் பிடித்துக் கொண்டு, தளர்ந்த குரலில் பேசினார் சுப்ரமணியன்.
“சரி, உங்களுக்காக வரேன்” : குறுஞ்செய்தி.
புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர் ஆனந்த்.
”நேத்திக்கி ஒரு ரிஸப்ஷன் போனோம் டாக்டர், அதிலேர்ந்து கொஞ்சம் முடியல்ல” என சன்னமான குரலில் சொன்னார் சுப்ரமணியன்.
” டாக்டர், ரெண்டு செட் பானி பூரி, பாப் கார்ன், கரும்பு ஜூஸ், ரெண்டு கட்லெட், கோபி 65, ரெண்டு சாம்பார் வடை…. ரசமலாய்… அன்னாசி கேசரி மூணு கப்பு… அடிச்சு விட்டு இருக்கார் டாக்டர். மூணு மணி நேரம் வாய் ஓயவே இல்லை. சொன்னாக் கேட்டா தான ?.” படபடவெனப் பொரிந்தாள் பத்மா.
”லூஸ் மோஷன் இருக்கா?”, டாக்டர்.
சுப்ரமணியனால் பேசவே முடியவில்லை. தலையை பலமாக ஆட்டினார்.
அடுத்த அறையில் சுப்ரமணியனுக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டார் டாக்டர். பத்மாவுக்கும் சில மாத்திரைகள் எழுதித் தந்தார்.
பத்மா கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள்.
“ஆமா… ஆனந்த் டாக்டர் கிட்டத்தான்…. என்ன செய்யறது? வாயைக் கட்டுப்படுத்தணும். சொன்னாக் கேட்டா தான?”
