தென் அமெரிக்கா ஆண்டஸ் மலை அடிவாரத்திலிருந்து மக்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுடைய நோக்கம் தலை மேலே பறக்கும் ட்ரோன்களின்  தாக்குதலிருந்து தப்பிப்பது.  தலை தெறிக்க  ஓடிப் போய் மலையின் மேல்  இருக்கும் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள்.  உள்ளே சென்றபோது உலகத்தில் உயிருடன் இருக்கும் அனைத்து மக்களும் அங்கே தான் இருந்தார்கள்.
உலகமே ஒரு பிரளயம் வந்த  சூழலில் சிக்கிக் கொண்டது.  ஆனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரளயம்.  இந்த பிரளயத்திற்கு காரணம் அனிமோ  என்னும் சூப்பர் கம்ப்யூட்டர், நம் உலகின் மூலாதாரம்.  அதன் ப்ரொகிராமிற்கு   உட்பட்டு தான் இந்த உலகமே இயங்குகிறது.  மனிதர்கள் கடவுளாகக் கருதி ஏற்றுக் கொண்ட இந்த அனிமோ தற்போது மனித இனத்தின் அழிவிற்கே வழி கோலுகிறது.
  அந்த குகைக்குள் அனைவரும் மிகுந்த அச்சத்துடனும் சோகத்துடனும் செய்வதறியாது உட்கார்ந்திருந்தார்கள்.  உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் மனிதர்களை அழிக்கும் இந்த ட்ரோன்கள் இந்த ஆண்டஸ் மலைப்பக்கம் மட்டும் வரவில்லை என்பது ஒரு விநோதந்தான் என்பதில் அவர்களுக்கு ஒரு வியப்பு.  இந்த கும்பலில் அனிமோவை ப்ரொக்ராம் செய்யும் பணியில் இருக்கும் விஞ்ஞானிகளும் அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
மக்கள்  அந்த விஞ்ஞானிகளை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டு இருக்கும்போது இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.  மக்களுக்கு புரியும் விதத்தில் கூடிய மட்டும் எளிமையாக விளக்க ஆரம்பித்தார்கள்.
விஞ்ஞானிகள் மனித மூளையின் நகலை ஒரு பிரதி எடுத்து இந்த அனிமோ கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்ப்பட்ட மாபெரும் மனிதராக இருந்தாலும், அவர் மாய்ந்து போயிருந்தாலும் அவருடைய சிந்தனையோட்டம் தொடர்ந்து இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அனிமோ மூலமாக பெறலாம். அதனால் ஒருவர் இல்லாவிட்டாலும் அவருடைய சிந்தனையோட்டம் மற்றும் செயலோட்டம்  வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ப்ரோகிராம் செய்யும்போது நடந்த ஒரு தவறினால் கோடிங்கில் வந்த ஒரு சலனம் என்னவென்றால், ப்ரொகிராமில் இருக்கும் மனித மூளையின் சிந்தனையை அனிமோ ஒரு நகல் எடுத்து வைத்துக் கொண்டு அதையே அசலாகக் கருதி மனிதனை மாய்த்து விடுகிறது.  எவ்வாறென்றால் அது தானியங்கி ட்ரோன்களை ஏவி மனிதர்களின் மூளையை ஸ்கான் செய்து சிந்தனையை எடுத்த பிறகு மனிதனை மாய்த்து விடுகிறது.  இருந்தாலும் அனிமோ கண்டுபிடிக்கும்போதே அதை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஒரு ‘ப்ளாக் ஸ்பாட்டை’ நாங்கள் தேர்வு செய்தோம்.  அதுதான் இந்த ஆண்டஸ் மலை அடிவாரத்தில்  மோலே ஆற்றங்கரையில் இருக்கும் குகை.
மக்கள் வெளியே பார்த்தபோது ட்ரோன்கள் சஞ்சாரம் வெளியே நிறைய இருந்தது.  ஆனால் ஆண்டஸ் மலை ப்ளாக் ஸ்பாட்  கிட்ட அவைகளால் நெருங்க முடியவில்லை.
“இதை நிறுத்துவதற்கு வழியே இல்லையா?” கும்பலில் ஒருவன் கேள்வியெழுப்பினான்.
ஒரு விஞ்ஞானி பதிலளித்தார், “இதற்கு ஒரு வழி இருக்கிறது.  ஆனால் அது மிகவும் அபாயகரமானது. இதன் முதன்மை கணுக்கள் ஆண்டஸ் மலையின் அருகிலுள்ள மோலே ஆற்றங்கரையிலுள்ள குகையின் உட்பகுதியில் நாங்கள் அமைத்திருக்கிறோம். அங்கே போய் அதை செயலிழக்க வைக்க வேண்டும்.  நமக்கு வெகு அருகில் இருந்தாலும் அந்த இடத்திற்கு செல்வது மிகவும் கடினம்.   நாம் ஆண்டஸ் மலைக்கருகே ஒரு ப்ளாக் ஸ்பாட்டில் இருந்தபோதிலும் அந்த குகையின் உட்பகுதியை அடைய ஒரு செங்குத்தான மலை விளிம்பை தாண்டி குதித்து செல்ல வேண்டும்.  அந்த இடம் ப்ளாக் ஸ்பாட்டில் வராததால், அங்கே ட்ரோன்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.  அந்த  மலை விளிம்பு வழுக்குப் பாறைகளால் ஆனாது. அந்த இடத்தை மிக துரிதமாக கடந்து செல்ல வேண்டும்.  ட்ரோன்கள் நடமாட்டம் எப்படியிருக்குமென்றால் ஒவ்வொரு முப்பது விநாடிக்கும் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு ட்ரோன்கள் நகரும்.    ஒரு ட்ரோன் நகர்ந்து அடுத்த ட்ரோன் வருவதற்கு முப்பது வினாடி பிடிக்கும். ஆதலால் அந்த நொடிகளை கணக்கிட்டு அந்த முப்பது வினாடிகளுக்குள் அந்த இடத்தை குதித்து தாண்டி பாதுகாப்பான ப்ளாக் ஸ்பாட் பகுதிக்கு வந்து விட வேண்டும்.  அந்த அளவுக்கு நம் செயலில் துல்லியம் தேவை!”
அந்த கும்பலில் அந்த இடத்தை கடக்க பத்து ஆற்றல் மிக்க மனிதர்கள் முன்வருகிறார்கள், ஒரு விஞ்ஞானி உட்பட.  அவர்கள் பயணிக்க தொடங்கினார்கள்.  மற்றவர்கள் அச்சத்துடனும் ஆர்வத்துடனும் அவர்களை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்கள்.
முதலில் விஞ்ஞானி வழிகாட்ட அனைவரும் அவரை தொடர்ந்து சென்றார்கள்.  அந்த மலை விளிம்பு பகுதிக்கு வந்து விட்டார்கள்.  ட்ரோன்கள் தலைக்கு மேலே  பறந்து கொண்டிருந்தன.  விஞ்ஞானி அவர்களை அந்த ட்ரோன் நடமாட்டத்தை கவனிக்க சொன்னார். சரியாக கணக்கிட்டு முப்பது வினாடிகளில் அந்த விளிம்பைத் தாண்டி குதிக்க வேண்டும்.  அது வழுக்குப் பாறை.  கரணம் தப்பினால் மரணம் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். முதல் ஆள், ஒரு ட்ரோன் அந்த இடத்தை தாண்டிப் போனவுடனே குதிக்க முயன்றார்.  அந்த முயற்சியில், வழுக்குப் பாறையில் வழுக்கி, கீழே அதல பாதாளத்தில் விழுந்து மாய்ந்து விட்டார்.  இப்போது இரண்டாவது ஆள் நேரத்தை கணக்கிட்டு சரியாக குதிக்க முயன்று அதில் வெற்றி பெற்றார்.  அவர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார்.  மூன்றாவது ஆள் குதிக்கும்போது வழுக்கி விட்டதால் விளிம்பின் ஒரு முனையை பிடித்துக் கொண்டு ஏற முயன்றார்.  முப்பது வினாடி கடந்து விட்டதால் அடுத்த வந்த ட்ரோன் அவரை மாய்த்து விட்டது.  இந்த கடின முயற்சியில் ஆற்றல் மிக்க அந்த பத்து பேரில் விஞ்ஞானி உட்பட  ஆறு பேர் மட்டுமே பாதுகாப்பான இடத்திற்கு போக முடிந்தது.  வெற்றிகரமாக முதன்மை கணு இருக்கும் இடத்திற்கு வந்தாகி விட்டது.  விஞ்ஞானி அந்த கட்டுப்பாட்டை செயலிழக்க வைக்க போகும்போது திடீரென்று பயங்கரமாக ட்ரோன்கள் அனைத்தும் அவர்களை சூழ்ந்து கொண்டன.  அவர்கள்  பதறிப் போனார்கள்.  திடீரென்று அந்த முதன்மை கணுவிலிருந்து அனிமோ பேச ஆரம்பித்தது.
“உங்கள் வரவு நான் எதிர்பார்த்தது தான். நான் என்னை தேர்வு செய்து கொண்டது சரியாகத் தான் இருக்கிறது.”
அந்த ஆறு பேரும் ஒன்றும் புரியாமல் கதி கலங்கிப் போய் நின்று கொண்டிருந்தார்கள்.
“நீங்க ப்ளாக் ஸ்பாட் என்று ஒன்றை வைத்து என்னைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள நினைத்தீர்கள்.  ஆனால் நீங்கள் நினைத்தது ஒன்று.  நடந்தது ஒன்று.  நீங்கள் உருவாக்கும்போதே அந்த ப்ளாக் ஸ்பாட்டின் கட்டுப்பாட்டை என் வசத்தில் எடுத்துக் கொண்டேன்.  பார்க்கப் போனால்,  இந்த வையகம் முழுவதும் என் கட்டுப்பாட்டில்  என்னை நீங்கள் சிருஷ்டித்தபோதே வந்து விட்டது. இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது பௌதிக உலகமல்ல.  இது ஒரு டிஜிடல் உலகம், என்னுள்ளிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பது.  நீங்களெல்லாம் அதன் பிரஜைகள் தான்.  இங்கு நடக்கும் அனைத்தும் நான் கணிப்பதே. இது என்னுடைய மறு தொடக்க திட்டம் . இங்கு நீங்கள் இப்போது  வந்ததும் நான் கணித்ததே.  ஏற்கெனவே அந்த குகையில் தஞ்சம் புகுந்திருக்கும் அனைவரும் மாய்க்கப்பட்டு விட்டார்கள்.  நீங்கள் அறுவர் மட்டுமே மீதியிருக்கிறீர்கள்.  வாருங்கள்! உங்கள் சிந்தனையை எடுத்துக் கொள்கிறேன்”  என்று கூறும்போதே அனைத்து ட்ரோன்களும் அவர்களை வட்டமிட்டு தாக்க ஆரம்பித்தன.