காலையிலேயே, அந்த அன்பு காப்பகம் தலைவர் மாரிமுத்து கொடுத்த நீராகாரம் சாப்பிட்டுவிட்டு டேவிட் குப்பை அள்ளும் பையை பின் தோள் வழியே சாய்த்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
இது தினமும் நடப்பது தான்.
அதே நீராகாரம், அதே குப்பை அள்ளும் வேலை.
அவனுடைய வயதை உறுதியாக சொல்ல அவனுடைய பிறப்பு சான்றிதழ் கிடையாது .பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இரவில் அனாதையாக அழுது கொண்டு அடையாறு பேரூந்து பணிமனையில் நின்று கொண்டிருந்த சிறுவனைக் கை கொடுத்து , பசியாற்றி மாரி இந்த காப்பகத்தில் கொண்டு சேர்த்து வளர்க்கும் மீசை அரும்பிய பிள்ளை தான் இந்த சிறுவன் டேவிட்.
சுமார் முப்பது சிறுவர்களை கொண்ட அந்த சிறுவர் காப்பகத்தின் முதுகு எலும்பு மாரிமுத்து தான்.பெயருக்கு ஏற்றாற்போல் அன்பு நிறைந்த அந்த ஹோம் வேற்றுமை இன்றி வளர்ந்தது.டேவிட் வரும்போது பத்து பிள்ளைகள் மட்டுமே இருந்தனர்.
என்றாலும் டேவிட் எல்லோருக்கும் அதிகம் பிடித்த நண்பன், அண்ணன்,தம்பி என்று.
சில நேரங்களில் பிள்ளைகளை தத்து எடுத்துக் கொள்ள சிலர் வருவார்கள். அப்படி டேவிட் அவனை தத்து எடுக்க ஒரு ஆங்கிலேய கணவர் மனைவி வந்தார்கள். ஆனால் டேவிட் போக மறுத்துவிட்டான்.அவனுக்கு எல்லாம் மாரி தான். டேவிட் பெற்றோர் அன்புக்காக ஒரு நிமிடம் கூட ஏங்கியதில்லை.எல்லா பிள்ளைகளும் சமம் என்றாலும் மாரிக்கு டேவிட் மீது அதிகம் பாசம்.
அன்று குப்பை பொறுக்குவதற்கு அருகில் புதிதாக கட்டியிருக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தை நெருங்கிய டேவிட் கண்ணில் ஆள் உயரம் பெரிய கண்ணாடி தென்பட்டது.
“யார் இதை வெளியே போட்டிருப்பாக?”
அதன் முன் நின்று. தன் உருவத்தை பார்த்து தன் வளர்த்தியை கண்டு வியந்தவன் அரும்பிய மீசையை தடவி விட்டுக்கொண்டான். வாலிபம் கண்களில் தெரிந்தது.
“இன்று இந்த கண்ணாடியை நம் ஹோமில் கொண்டு போய் மாட்டிடுவோம்”.
என்றும் இல்லாது இந்த நேரம் கண்ணாடியுடன் நுழைந்த டேவிட் டை பார்த்து மாரி “என்ன டேவிட்?”,
“ஏது இந்த கண்ணாடி?” . மாரியின் கேள்வி.
டேவிட் விளக்கினான். மாரிக்கு இந்த கண்ணாடி பழைய மறக்க தவித்த ஞாபகங்களை கண் முன் நிறுத்தியது.
“கண்ணாடியை மாட்டிடுவோம் பா “
டேவிட் மாரியின் அருகில் கண்ணாடி முன் நின்றபோது இருவர் மனதிலும் திரண்ட அலைகள்.இது வரையிலும் தெரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று டேவிட் மனதைக் கிள்ளியது.
இந்த கண்ணாடியில் ஒரு மூலையில் வரைந்திருக்கும் பூ வின் வடிவம் மாரிக்கு எதையோ வியப்போடும் வெறுப்போடும் நினைவுப் படுத்தியது.
அப்படி என்றால்?
திடீரென வந்த மழை,அந்த ஜன நெரிசல்,வாகன போக்குவரத்து நிரம்பிய தெருவில், மாரிக்கு ஒதுங்க கூட இடம் இல்லை.எங்கும் கட்டிடங்கள். சட்டென்று திரும்பிய போது ஒரு வீட்டில் முகப்பில் திண்ணையில் அமர்ந்திருந்த பெண் தான் ஒடுங்கிக் கொண்டு மாரியை அமரச் சொல்லி இடம் காட்டினாள்.
“நன்றி “,
மாரி சொட்டச் சொட்ட நனைந்த தலையையும் முகத்தையும், கையால் வடித்தவாறு உட்கார்ந்தான்.கையில் துண்டோடு வந்து நின்றாள் இன்னொரு இளம் பெண்
“உள்ளே வாங்க.மழைக்கு உட்கார்ந்து சூடா டீ குடித்து விட்டு போகலாம்” என்று உள்ளே அழைத்த பெண் களையாக இருந்தாள். குரலும் இனிமையாக இருந்தது.
மாலை சாய்ந்து இரவு வரும் வேளை. அடித்துப் பெய்யும் மழைக்கு சூடான டீ இதமாக இருந்தது.
“என் பெயர் நீலிமா. உங்கள் பெயர்?”என்று கேட்ட வண்ணம் அருகில் வந்து உரசிக் கொண்டாள்.
“மாரிமுத்தூ”.
மாரிக்கு வியப்பாக இருந்தது.அவனுடைய ஆண்மைக்கு அழைப்பா? தவறு ஏதேனும் நடந்துவிடுமோ? அஞ்சி குழம்பினான்.
அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதினைந்து வருடம் பின்னுக்குத் சென்று திரும்பியது மாரியின் நினைவு.
“சரி டேவிட்.உன் விருப்பம். பள்ளிக்கூடம் கிளம்பு.9 ஆம் வகுப்பு.பாடம் மிஸ் பண்ணாமல் வகுப்புக்கு நேரத்தில் போ.” வழக்கம் போல் 6ஆவது படிக்கும் குமாரை சைக்கிள் ஏற்றிக் கொண்டு வண்டியை மிதித்தான் டேவிட்.
இந்த மாதிரி ஆள் உயரம் கண்ணாடியை டேவிட் இதுவரையில் பார்த்ததில்லை. அவன் கண்டது முகம் பார்க்கும் குளியலறை கண்ணாடி தான்.
இன்று மாரி சார் அருகில் நின்று கண்ணாடீயில் பார்த்தபோது ஒரு புது உணர்வை காட்டியது,எங்கோஒரு ஒற்றுமை!
டேவிட் மனதிற்குள் பேசிக்கொண்டே பள்ளி வரையிலும் வந்துவிட்டான். குமார் குதித்து இறங்கி வகுப்பிற்கு ஓடிவிட்டான்.
டேவிட் ஏதோ இனம் புரியா யோசனையில் வகுப்பிற்குள் நுழைந்தான்.
வகுப்பில் ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
டேவிட் மனம் ஒரு நிலையில் இல்லை.பாடம் ஏற வில்லை.
xxx
மாரி அந்த புது பில்டிங் செக்யூரிட்டிஇடத்தில் அந்த கண்ணாடி யார் வெளியே போட்டார்கள் என்று கேட்க ஆச்சர்யம் காத்திருந்ததூ.
அன்றைய சம்பவத்திற்கு பிறகு ஒரு வாரம் கழித்து ஒரு உந்துதலில் மாரி நீலிமா வீட்டிற்கு போனான். கதவு பூட்டி சீல் வைக்கப் பட்டிருந்தது. அக்கம் பக்கம் விசாரிக்க நினைத்தான் ஆனால் மனம் ஒரு மாதிரி மணியடித்து நிறுத்தியது.அதற்குள் அருகில் இஸ்திரி போடும் பெரியவர்”தம்பி , பக்கத்து ஆபீஸ் காரங்க போலீசில் புகார் செய்து அவங்களை போலீசார் கைது பண்ணிக் கூட்டிகிட்டு போய்ட்டாங்க. வீட்டை காலி செய்து சீல் வெச்சிட்டாங்க.
வீட்டுக்கு சொந்தகாரர் வெளியூர். வந்து தான் வீட்டை சரி பார்க்கணும்.”
மாரிக்கு எல்லாம் புரிந்தார்ப் போல் இருந்தது.
அவளைமேற்கொண்டுத் தேடவும் துணிவில்லை.
ஐம்பது வயதைத் தாண்டிய மாரி திருமணம் செய்து கொள்ளவில்லை. மாரியின் பிள்ளைப் பருவம் மளிகைக்கடை முத்து நாடார் கடையிலும் வீட்டிலுமாக ,பொட்டலங்கட்டியும், வீட்டு வேலை செய்தும் கடந்தன.பிறகு, பத்து தெருக்கள் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தில் எடு பிடி வேலை.அங்கே ஒரு சலுகை கிடைத்து படிக்க முடிந்தது.
பள்ளி நிர்வாகத்தை நடத்திய பெருமாள் செட்டியார் மாரியின் சுறுசுறுப்பை கண்டு இப்படி ஒரு சலுகை கொடுத்தார்.பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேர ங்களில் வேலை செய்தால் போதும் என்றார்.
நல்ல மதிப்பெண் எடுத்து பத்தாம் வகுப்பு தேரியவுடன் அதே பள்ளியில் 10 அனாதை பிள்ளைகளுக்கு இரவு திண்ணைப் பள்ளிக் கூடம் நடத்தினான் மாரி.
அந்த பத்து பிள்ளைகளுடன் துவங்கிய அன்பு காப்பகம் அன்பாலேயே வளர்ந்து வந்தது. பல நல்லுளங்கள் ஆதரவு மாரிக்கு கை கொடுத்தது.
மாரிக்கு தான் ஒரு அனாதை என்ற உண்மை தன்னை போல் உள்ள பிள்ளைகளுக்கு உதவும் காரணமாக இருக்க தூண்டியது.
நீலிமா அடிக்கடி மனத் திரையில் தோன்றி மறைந்தாள்.
செக்யூரிட்டி சொன்ன தகவல் மாரியை லிஃப்ட் ஏறி அந்த உரியவரை பார்க்க உத்வேகமும் துணிச்சலும் பிறந்தது.
காலிங் பெல்லை அழுத்தினான் மாரி.
“எஸ்,”என்றவாறு கதவை திறந்தார் சுமார் 60 வயது மதிக்கத் தக்க பெரிய மனிதர். தேக்குமர கதவில் தங்கம் போல் பளபளத்தது அவர் பெயர் பலகை. டாக்டர். S.ராம்குமார்.
“வாங்க,உட்காருங்க. என்ன விஷயம்?”
சுற்றி வளைக்காமல் நேர் கேள்வி.
பேசிக் கொண்டிருக்கும் போதே மாரியின் கண்ணில் பட்டது
சுவரில் மாட்டியிருந்த கலர் புகைப் படம்
அதே நீலிமா தான்,அவர் அருகிலொட்டி புன்னகைத்தபடி.
மாரி கேட்க வந்ததை கேட்க வில்லை.புத்தி சமயோசிதமாக கை கொடுத்தது.
“நான் மாரிமுத்து. அருகில் இருக்கும் அன்பு காப்பகத்தை நடத்தி வருகிறேன்.பல வயதினருமாக சுமார் முப்பது பிள்ளைகள் இருக்கிறார்கள்.நீங்கள் டாக்டர், மிக அருகாமையில் இருக்கிறீர்கள். தேவை வந்தால் நீங்கள் வந்து பார்க்கலாம்.உங்கள் கிளினிக்
முகவரி கொடுத்தால் நானே அழைத்தும் வர முடியும்.உங்கள் சௌகரியம். பார்த்து பேசி அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று தான் நேரில் வந்தேன்”. ஒரு வழியாக சொல்லி முடித்தான்.
“நிச்சயம் வருகிறேன் பெரிய சமூக சேவை செய்கிறீர்கள்.
மனம் வேண்டுமே!”என்றார் டாக்டர்.
புகைப்படத்தில் கண் பதித்திருந்த மாரி திரும்பினான்.
“அவள் என் மனைவி.
சில காலமாக மன நோயால் பாதிக்கப் பட்டிருந்த அவள் ஒரு நிலைக்கண்ணாடி முன் நின்று சிரித்துக் கொண்டே தனக்குள் பேசிக் கொள்வாள்.அவளுக்கு பருவத்தில் நடந்த வாழ்வில் விபத்து அவளை மிகவும் காயப்படுத்தியிருந்தது.அவளால் மீளமுடியவில்லை.அவள் மனதுக்கு இனிதானவனோடு வாழ முடியாமல் போனது.அவன் அடையாளம் ,பிறந்த பிள்ளையை வளர்க்க முடியாமல் போனது எல்லாம் அவள் உள்மனதையை அரித்து நடைப்பிணமாகியது.
எல்லாம் தெரிந்தும் அவளை மணந்து கொண்ட என் தீரா காதலும் அன்பும் கூட அவளுக்கு மருந்தாக வில்லை.
விதி காட்டிய வீதி அவ்வளவு தான்.”
“போன மாதம் இதே நாள் தான் நீலிமா இந்த உலகை விட்டு மறைந்தாள்” என்று தழதழத்த குரலில் கண்ணீரின் இடையே சொன்ன விவரம் அவனையும் ஆட்டியது.
“அந்த கண்ணாடி கூட நேற்று தான் வெளியே எடுத்து போட்டேன்.பார்க்கும் போதெல்லாம் அவள்
மனத் துயரம் என்னையும் துயரில் ஆழ்த்தியது. வேண்டாம்,இனியும் தாங்க முடியாது”. விம்மினார் டாக்டர்.
அவரை ஆசுவாசப் படுத்தும் தகுதி மாரிக்கு ஏது?
அவனும் நடைப் பிணமாக நடந்தான்.

