எங்கோ ஒரு அடர்வனத்தில்..
சூதாட்டத்தில், நாட்டையும், மக்களையும், இழந்து, நாடோடிகளாக வனம் விட்டு வனம் திரிந்து கொண்டிருந்தார்கள் பாண்டவ சகோதரர்கள்.
சோதனை மேல் சோதனையாக, வழியில் அரக்கர்களையும், வஞ்சகர்களையும், தம்முடைய போர்த்திறமையால் வென்றும், சந்திக்கும் ரிஷிகள் மற்றும் மாமுனிகளின் சாபங்களிலிருந்து, -கண்ணனின் மதியூக யோசனைகளால்- தப்பித்தும் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
அன்றொருநாள்,அந்த நெடிய வனத்தைக் கடக்கும் போது, திரௌபதி ஒரு அதிசய மரமொன்றைக் கண்டாள்.அந்த மரத்தில் இலைகளும், கிளைகளும் பரந்திருக்க, அதன் ஒரு காம்பில், கொய்யாப் பழம் அளவிற்கு, ஒரேயொரு வெளிர் நீல நிறத்தில் பழுத்துத் தொங்கியிருந்த ஒரு நெல்லிக்கனியைக் கண்டாள்.
அதை உடனே பறித்துத் தருமாறு, அருகில் வந்து கொண்டிருந்த தன்னுடைய கண்ணாளன், அருச்சுனனிடம் வேண்டினாள். விஜயனும், அம்பெய்து அதை வீழ்த்தி, அந்தக் கனியை, திரௌபதியிடம் அளித்தான்.
அப்போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், ஓடி வந்து, “மகாராஜா! அந்தப் பழம் தெய்வத் தன்மை வாய்ந்தது, அது நரர்கள் உண்ணக்கூடியது அல்ல. அந்த மரம் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே, ஒரேயொரு பூ பூத்துக் காய்த்துப் பழமாகும், அதிசய நெல்லிக்கனி!
அதை, வருடமுழுவதும் உபவாசமிருந்து, தவமியற்றும் அமித்திர மாமுனிவர், வருடத்திற்கொருமுறை மட்டுமே அதைக் கொய்து உண்பார். அதை நீங்கள் பறித்துவிட்டீர்கள் என அவருக்குத் தெரிந்தால், உங்கள் யாவரையும் சபித்துவிடுவார்” என்று எச்சரித்தார்.
இதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் அனைவரும் இப்போது என்ன செய்வது என்பதறியாமல் மனங்குழம்பினர்.
பறித்த அக்கனியை அந்த மாமுனி வரும் போது காணிக்கையாக கொடுத்துவிடலாம் என்று அருச்சுனன் கூற, அதை அந்த மாமுனி ஏற்க மாட்டார், சபித்துவிடுவார், என மறுபடியும் அந்தப் பெரியவர் அச்சுறுத்தினார்.
அப்போது, சகாதேவன், எப்போதும் நாம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது, நம்மை காப்பதற்கு உபாயம் சொல்லும், அந்த நீலமேக சியாமளினிடமே, மனத்தால் ஓர்ந்து, இதற்கு ஒரு வழியைத் தேடலாம் எனக் கூறினான்.
உடனே, தருமன், கண்களை மூடி, பிரார்த்தனை செய்து, கண்ணனிடம் வேண்டினான். அதற்கு கண்ணன், பாண்டவர் ஐவரும், திரௌபதி உட்பட, தம்முடைய செயலுக்கு, அந்த மரத்திடம் மன்னிப்புக் கோருவதற்கு முன், ஒவ்வொருவரும், தத்தம் அடி மனத்தில், ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தங்களுடைய ரகசிய அபிலாஷயை, மறைக்காமல் அந்த மரத்திடம் உரைத்து வேண்டிக் கொண்டால், கையில் இருக்கும் அந்தப் பழம், கிளையில் இருக்கும் அந்தக் காம்பில் போய்த் தானாக ஒட்டிக்கொள்ளும் என அருளினான்.
அவ்வாறே பாண்டவர்களில் மூத்தவனான தருமன், “என்னுடைய ஆழ்மனதில், இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருப்பது, உலகில் பாவமும், பழியும், அசுரரின் கோபமும், வெறுப்பும், அதனால் நேரும் துன்பமும் என்றும் வெல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ஆகும்” எனக்கூறினான்.
அடுத்து, வாயுமைந்தன் வீமன், “என்னுடைய உயிரே போனாலும், பிறர் பொருள் மற்றும் அவர்தம் மனைவியரின் மேல் ஆசை கொள்வதை எட்டிக்காய் போல வெறுக்கிறேன். அயலாரின் மேல் வீண்பழிகளைச் சுமத்தி, அவர்களை அவமானப்படுத்துவதை விட்டு, அவர்கள் வாழ்வில் நேருந் துன்பத்தைத் எனக்கு நேருவது போல நினைத்து, அவர்களைக் காப்பதே என்னுடைய தருமம் மற்றும் கடமை என்று நினைக்கிறேன்! இதுவே என் மனதில் நிலைகொண்ட அபிலாஷை ஆகும்”, எனக் கூறினான்.
அடுத்து, அருச்சுனன், “இந்த உலகத்தில் உள்ள யாவரும், அவரவருடைய வினைப்பயனால் தாழ்மை நிலையை அடைவது இயல்பு. அந்நிலையிலும், என்னுயிரே போவதாயிருந்தாலும், உடலில் தவழும் பொன்னாபரணம் போல- மாண்பையும், தூய்மையையும், உறுதியையும் அளிக்கவல்ல தன்மானத்தைத் தான், நான் என்றும் இடைவிடாமல் மனத்தில் தியானித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினான்.
அடுத்து குதிரையேற்றத்தில் வல்லவனான நகுலன், “இவ்வுலகில் சிறந்த குலத்தில் பிறந்திருந்தாலும், மிக்க அழகுடையவராய் இருந்தாலும், அவர்கள் கல்வியறிவு பெறாமல் இருந்தால், அவர்கள், மணமில்லாத வண்ண மலர்களுக்கு ஒப்பானவர்கள் ஆவார்கள். அதனால், கல்லாதவர்களை நான் என்றுமே மதிப்பதில்லை. இதுவே என் மனத்தில் உறையும் எண்ணம்” எனக் கூறினான்.
அடுத்து, சகல கலைகளிலும் வல்லுனனான சகாதேவன் கூறும் போது, “ஒருவனுக்கு அவனைப் பெற்ற தாயும், வரம்பில்லாத ஞானம் அளித்து, இப்பிறவிக்கான காரணமாக விளங்கும் தந்தையும், தருமமிகு சகோதரனும், கருணைமிக்க தோழனும், அழகான, அமைதிக் குணம் வாய்ந்த மனைவியும், பொறுமை மிக்க தனயனும் ஆன இந்த அறுவரைவிட வேறு யாரும் உற்றவர் அல்லர் என்ற சிந்தனையே என் மனத்தில் என்றும் வேரூன்றி இருக்கின்றது” எனக் கூறினான்.
அடுத்ததாக, திரௌபதி, “என்னுடைய அடிமனத்தில் வேரூன்றியிருக்கும் ஆசை- நான் மணந்த ஐவரோடு, ஆறாவதாக ஒருவரும் என்னுடைய மணாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம்” எனக் கூறினாள்.
அறுவரும் தத்தமது உள்ளக்கருத்தை ஒளிவு மறைவு இல்லாமல் கூறியதால், திரௌபதியின் கையில் இருந்த நெல்லிக்கனி, உடனே, அந்த மரத்தின் கிளையில் உள்ள காம்பில் போய் ஒட்டிக் கொண்டுவிட்டது.
அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், திரௌபதியின் மனம் குழப்பத்தில் தவித்தது. இந்த ஐவரைத் தவிர, தாம் வேறு யார் மீதும் ஆசைகொள்ளாதபோது, இந்த எண்ணம் எப்படி தமக்குள் முளைத்தது எனப் பலவாறு யோசித்து, விடை காண முடியாமல் குழம்பினாள்.
இப்புவியில் பெண்ணாகப் பிறந்த யாவருக்கும், தம்முளம் போல மணாளன் அமைவதில்லை என்பதனால், அந்த ஏக்கத்தின் பால் விளைந்த அற்ப ஆசையாயிருக்கும் என நினைத்து அந்த எண்ணத்தை ஒதுக்கி, தன்னுடைய கணவர்களோடு பயணத்தைத் தொடர்ந்தாள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு..
பாண்டவர்கள், சூதாட்டத்தால், நாட்டையும், குடும்பத்தையும், இழந்து 12 ஆண்டுகள் வனவாசம்மேற்கொண்டு, ஒரு வருடம் அஞ்ஞானவாசத்தையும் முடித்துக் கொண்டு, திரும்ப தம்முடைய நாட்டைத் திருப்பிக் கேட்டபோது, அதைக் கொடுக்காமல், போர் ஒன்றே இதற்குத் தீர்வென துரியோதனன் கூறிவிட, கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும், போர் மூண்டது. அந்தப் போரின் இறுதி நாட்களில்..
குருஷேத்திரம்..
இளங்குருத்தை மார்புக்கிடையில் புதைத்துக் கவிந்த பூதனை போல, திரௌபதியின் இதயத்தை, இனம்புரியாத பரிதவிப்பும், விலகாத அவநம்பிக்கையும், தீராத சோக பாரமும் அழுத்தினாலும், மத்தியில், மங்காத சுடர் விளக்காக கண்ணனெனும் தருமத் தீ விடாமல் எரிந்து கொண்டிருந்தது.
ஓயாத மரண ஓலங்களும், பச்சை ரத்தத்தின் ஈர வாடையும், நரி, கழுகு, கூகைகளின் வெறித்தனமான குதூகலக் கூவல்களும், குற்றுயிரில் புலம்பும் குதிரைகளின் முனகல்களும், பலரது கை, கால்கள், வெவ்வேறு திசைகளில் சிதறியிருக்க- சதையும், எலும்பும், குருதியும் கலந்த புனல், சேறாகத் தேங்கியிருக்க, வெற்றி தோல்வி மறந்த சடலங்கள் குப்பலாய்க் குவிந்திருக்க, சிதிலமானத் தேர்களும், ஆயுதங்களும்- அவலத்தோடு, அநாதையாய் மரித்த மனிதமும் – அலங்கரித்த யுத்தமுனையில், தன்னுடைய வில்லின் விஜயனைப் போருக்கு அனுப்பிவிட்டு, குருஷேத்திரத்தின் மூலையில், ஒரு ஓலைக்குடிசையில் காத்திருந்தாள், திரௌபதி.
கன்னங்கள் ஒட்டி, அவிழ்ந்த கூந்தலுக்கும் முகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல், கருமை நிறம் படர்ந்திருக்க, மானத்தை மறைக்க மரவுடுப்பு போர்த்தியிருக்க, கண்ணாடியில் தன்முகம் பார்த்தாள். நாக்கு நீண்டு, கோரைப்பற்கள் தெறித்து நீள, ஆக்ரோஷத்தின் தீக்கண்கள் வெறுப்பை உமிழ- மாகாளியின் ரூபத்திற்கு சற்றும் இளைத்ததல்ல தன்னுடைய உருவம், என நினைத்துக் கொண்டாள். பற்களையும், நாக்கையும் தவிர்த்துவிட்டால், கனன்று கொண்டிருக்கும் தீக்கங்குகளான கண்களில், வன்மத்தின் வலிமிகுந்த ஒளிக்கீற்று மட்டுமே, அவள் உடலில் உயிர் தங்கியிருக்கும் அடையாளமாக இருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது.
நிராயுதபாணியாக நின்ற சுபத்திரையின் இளங்குருத்தை வேட்டையாடிக் கொன்ற கௌரவச் சேனையின் வல்லூறு முகத்தைக் கண்டு, கணந்தோறும் பொங்கிப் பிரவகித்த வெறுப்பின் எரிபுனலாகக் கண்ணீர் சுட்டெரித்தத் தகிப்பில், அவளின் தேகமே எரிந்தது.
பாரதப் போரில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்து, வெற்றியின் மறுப்பக்கத்தை நோக்கி பயணப்படுகிறோமோ என்ற நரக வேதனையில், நொந்து போயிருந்த அவளின் உள்ளம்- வெற்றியோ, தோல்வியோ, கடைசித் தருணத்தை, அக்கணமே துய்த்து, மடிந்துவிட மாட்டோமா என்ற கழிவிரக்கத்தின் கடைமடையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அதே சமயம், தருமத்தின் தீ அணைவது போலத் தள்ளாடினாலும், மறுநாள்- அடுத்தக்கணம், அக்கினிப் பேரலையாய் அது எழுந்து, அதர்மத்தைப் பொசுக்கிவிடும், என்ற அசையாத நம்பிக்கையின் துளிர்ப்பில், அவளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
பொழுது சாயும் நேரம்- அன்றைய நாளின் நிறைகோல் யாருடைய பக்கத்தைச் சாரப்போகிறதோ என்று அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தபோது, குடிசையின் கதவு படீரெனத் திறந்து கொள்ள, இரத்தம் படிந்த உடலோடு, அவளின் அந்தரங்க மெய்க்காப்பாளன், துடியன், மூச்சிரைத்தபடி ஓடிவந்து நின்றான்.
“தேவி! கர்ணன் மாண்டான்! பாண்டவர்களின் எதிரி, பார்த்தனின் பரம வைரி, கண்ணபரமாத்மாவின் பேருதவியாலும், விஜயன் எய்த தொடர் சரங்களாலும் அவன் மண்ணில் வீழ்ந்தான்!” என வெற்றிக் களிப்போடு கூவினான்.
“ஆ! ஆஹா! என்ன? என்ன? எனதருமை மணாளன், தேரோட்டி மகனைக் கொன்றானா? நிராதரவாய் நின்றாலும், வீரத்துடன் போரிட்ட என் மகனின் தலையில், கொள்ளியை வைத்துக் கொக்கரித்த கயவர் கூட்டத்தின் கொடூரத் தளபதி மாண்டானா!
கண்ணனின் தோழனுக்குத் தான் தான் காலன் என சூளுரைத்தவனை, என்னுடையக் காவலன் வீழ்த்தினானா! ஆஹா! வெற்றிச்செல்வியின் திருமுகம், இறுதியாக, நம்பக்கம் திரும்புகிறதா?
அறத்தின் வேர்களில் அநீதியின் அமிலத்தை வார்த்த கௌரவரின் குலம், மண்ணோடு மண்ணாகப் புதையப் போகுங் காலம் கனிந்துவிட்டதா? என்னுடைய ஈரங்காணாதக் கூந்தல், துரியோதன, துச்சாதனர்களின் நிணநீரால் நனையப் போகிறதா!
துடியா! இப்போதே விரைந்து போர்க்களத்திற்குச் செல்வோம். செஞ்சோற்றுக் கடனால்,
செந்நீரில் மிதக்கும் அந்தக் கயவனின் முகத்தை நான் காணவேண்டும்! விவேகமற்ற வீரத்தால், அறநெறி தவறிய அந்த அவ்வியக்தனை, நேரில் கண்டு நான் தூற்ற வேண்டும்! உடனே புறப்படு!” எனக் கூவினாள், திரௌபதி.
போர்க்களம்- பச்சயத்திற்குப் பதிலாக ரத்தமயம், புதர்ச்செடிகளுக்குப் பதிலாக, குத்தீட்டிகளும், வாட்களும் துளைத்த பிரேதங்கள்; உடைந்து, உருக்குலைந்த தேர்கள்; வெட்டுப்பட்ட மாமிச மிச்சங்களையும், குருதிக் குழம்பையும், ருசிக்க வந்த நரிகள்- வல்லூறுகளின் கூட்டம், என அடர்ந்திருந்த போர்க்களத்தில், சடலங்களுக்கிடையே, பாதம் பதித்து நடந்து போக, குத்தீட்டியால், பாதையேற்படுத்தியபடி துடியன் முன்னே செல்ல பின் தொடர்ந்தாள், திரௌபதி. சற்றே மேடான ஒரு பகுதியில், சிலர் அங்கே நிற்பது தெரிந்து, உடனே அங்கே விரைந்தார்கள்.
குடை சாய்ந்த கௌரவத் தேரொன்று நிற்க, அதன் சக்கரத்தில் தலை சாய்த்து, முனகியபடி படுத்திருந்தான், அங்க தேசத்து மன்னன், கர்ணன். நட்பிற்காகத் தன்னுயிரையே தானமாகத் தந்த சுத்த வீரனின் முகத்தைப் பார்த்த திரௌபதிக்கு சற்றே மனம் கலங்கினாலும், தன்னுடைய இன்னுயிர் மகனை சுற்றி நின்று வெட்டிச் சாய்த்த மூர்க்கர்களின் மூத்தவன் இவன் என நினைவுக்கு வர, வாய்வரை வந்த சாப வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் உடனே, அணை போட்டாள்.
ஏனென்றால், அங்கே, பாரத சரித்திரத்தையே புரட்டிப் போடும், கனவிலும் காணாத விசித்திரமான காட்சியைக் கண்டாள், அவள். பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களின் பாபச் சரங்கள் கர்ணனுடைய மார்பைத் துளைத்து நிற்க, ராஜமாதா குந்தி தேவி, அவனின் காலடியில் வீழ்ந்து, அரற்றிக் கொண்டிருந்தார்.
நேரெதிரே, தவத்திலும், திறத்திலும் ஈட்டிய வில்லையும், அம்புகளையும், தூர எறிந்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான், யார்? யார், அது! கதிரவனின்புத்திரனுக்கே காலனான என் கண்ணாளன், பாண்டவர்களின் ஒரே நம்பிக்கையொளியான சவ்வியசாசி, அருச்சுனனா? என்ன இது? இங்கே என்ன நடக்கிறது?
கௌரவர்களின் துவேஷத்தால், சொல்லவொண்ணாத துன்பங்களையும், அவமானங்களையும் எமக்காகச் சுமந்தவன்- குரோதம் புரையோடிய குருவம்சத்தில், முளைத்த விஷவிருட்சத்தின் அடிவேரான கர்ணனைக் கொன்ற வெற்றி முழக்கத்தை தன்னுடைய தேவதத்த சங்கில் முழக்காமல், இங்கே கண்ணீரும் கம்பலையுமாய், மண்ணில் வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கின்றானே, என்னுடைய மனங்கவர்ந்த மணாளன்! அவனா துயரத்தில் தேம்பிக் கொண்டிருக்கிறான்? உடனே ஓடிப்போய், நெஞ்சில் அவனைச் சாய்த்து, அவனின் பரந்த நெற்றியில் முத்தமிட்டு, அவனைச் சாந்தப்படுத்த, அவளின் கைகள் துடித்தன.
அப்போது, வெடித்துக் கிளம்பியது ஒரு குரல், “அண்ணா! அண்ணா! சமுதாயத்தில் உனக்கான ஒரு இடம் தேடி, அதர்மத்தில் திளைக்கும் பதர்களின் கூட்டத்தில் இணைந்தாயே! இப்படி, அநாதையாய் அடிபட்டுக், குற்றுயிராய்க் கிடக்கிறாயே! ஐயகோ! உன்னைப் பின் தொடர்ந்து, இந்நானிலத்தில் உய்யும் வகை அறிந்து, கடைத்தேறும் வழி காணாமல், உன்னையே எங்களின் பேராசைக்கு பலியிட்டு விட்டோமே! அண்ணா!” என்ற கதறல், ‘என்ன- என்னை மணந்த கற்புக்கரசி மைத்ரியின் மைந்தன் நகுலனா பேசுவது?’ என்று தன்னுடையக் காதுகளை நம்பாமல், வியப்போடு பார்த்தாள்.
“கோள்களின் நிலையையும், விதியின் போக்கையும் கணித்து, மனித வாழ்வு மேம்பட, அறிவுரை கூறும் என்னுடைய சாத்திர ஞானத்தால், கூடப் பிறந்தவனை அடையாளம் தெரியாமல், அவனை எங்களின் முடி ஆசைக்காக வெட்டிச் சாய்த்துவிட்டோமே! ஐயோ! இந்தப் பாவ மூட்டையை எந்த கங்கை நதியில் கரைப்பது? எங்கே சென்று நான் பரிகாரம் தேடுவது?” என்று அடுத்தத் துயரக் குரல், எழுகிறதே- யாருடையது? ஆ., ஞானப்பண்டிதன் சகாதேவனின் குரல் தானே அது? இங்கு என்ன நடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என மயங்கினாள் அக்னிப் புத்திரி.
‘யாரை என்னுடைய கணவர்கள் சகோதரன் என அழைத்துப் புலம்புகிறார்கள்? கௌரவக் குலத்தைச் சார்ந்த கர்ணனையா! அர்ச்சுனனின் பாணங்களால், துளைபட்ட தேகத்திலிருந்து உயிர்ப்பறவை பறக்கும் நேரத்தில், எங்கிருந்து வந்தது இந்த திடீர் சகோதரப் பாசம்? இங்கு என்ன நடக்கிறது!
அநாதரட்சகன், ஆதிநாயகன், ஜனார்த்தனனின் மற்றுமொரு நாடகம் அரங்கேறுகிறதா! கர்ணன், பாண்டவர்களின் மூத்தவனா?’ அவநம்பிக்கையோடு, அவளை, அவளாகவே நேசித்து, ரட்சிக்கும் கண்ணபரமாத்மா எங்கிருக்கிறான் எனத் தேடினாள்.
அப்போது, செவிகளை ரணப்படுத்தும் ராட்சசக் குரலில், கதாயுதன் வீமன் அலறினான். “இது, அந்த கௌரவ நரி துரியோதன் நம்மைப் பிரித்தாள நடத்தும் மாபெரும் சதி! இதை நான் நம்ப மாட்டேன்!” எனக் கதறிவிட்டு, அங்கு நிலைகுலைந்து நின்றிருந்த என்னைப் பார்த்து, “சகியே! இதை நம்பி விடாதே! உன்னைச் சபையில் மானப்பங்கப்படுத்திய அந்த காமக் கொடூரர்களின் மார்பைப் பிளந்து, குருதியைக் குடித்து, அதை, உன்னுடைய வற்றிப்போன கூந்தலுக்கு நெய்யாகத் தடவி, உன் சபதத்தை நிறைவேற்றுவேன்! இது சத்தியம்!” எனக் கூவினான்.
அவளால், தரையில் இரும்பாகக் கனத்த அவளின் கால்களை அசைக்கமுடியவில்லை. நா வரண்டு, எதையும் நம்ப மறுத்தக் கண்களை, அவளின் ஒரே ரட்சகன், அவளுடைய பெண்மையின் மானங்காத்த ஒரே சோதரன், ஈரேழுலுகையும் காத்திடும் சர்வேச்சுரன், கண்ணனை நோக்கித் திருப்பினாள்.
அங்கு நடப்பவை யாவையும், கடக்கும் ஏதோ ஒரு மேகத்தைக் காண்பதைப் போல, அசிரத்தையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்த கண்ணன், இவளைக் கண்டதும் முன்னேறி, அவளிடம் வந்தான்.
அவளுடைய வணங்கிய கைகளைப் பற்றினான்; இருண்ட முகத்துடன், தன்னிடம் ஒளி தேடும் கண்களைப் பாசத்துடன் நோக்கினான்; நடப்பது எதுவாயினும், ‘நான் இருக்கிறேன்’ என்று, அவளின் விரல்களை, ஆதுரத்துடன் அழுத்தினான், கண்ணன்.
“கிருஷ்ணை!” என்று எப்போதும் அவளை வாஞ்சையுடன் அழைப்பது போல, அப்போதும் விளித்தான். “கண்ணா! கண்ணா! இங்கு என்ன நடக்கிறது? கர்ணன்., கர்ணன்., யார்?” என திக்கித் திணறி, பொங்கும் அழுகையோடு, அவள் வினவினாள்.
அவன், அவளை, ஆழமாகப் பார்த்துவிட்டு, “அவனே தான்! சகோதரி! அன்று நீ கானகத்தில், அமித்திர மாமுனிக்காகப் பழுத்த நெல்லிக்கனியை நீ விரும்பியதால், விளையவிருந்த சாபத்தைத் தடுக்க, உன் இதயத்தின் ஆழத்தில் புதைந்திருந்த உண்மையை உரைத்தாயே! நினைவிருக்கிறதா? அந்த உண்மையின் உருவம் தான் இவன்., இவனே பாண்டவர்களின் மூத்தவன், கர்ணன்!” என்றான், மந்தகாசப் புன்னகையோடு.
அக்கணமே, சிறகிழந்த பறவையாக, மூர்ச்சித்து, அவன் கைகளில், மயங்கி விழுந்தாள், திரௌபதி.
*********
பின்குறிப்பு: ஶ்ரீவில்லிபுத்தூரார் எழுதிய வில்லிபாரதம்- சபா பருவம்- பழம் பொருந்து படலத்தில் சொல்லப்பட்ட கதையை, என் கற்பனையுடன் சேர்த்து எழுதிய சிறுகதை.
