கவிதை வரிகள்

                                               எழுது

  image

அஞ்சுகின்ற விழியினிலே  கருமை மை எழுது

கெஞ்சுகின்ற இதழினிலே கவிதைப் பொய்  எழுது

மிஞ்சுகின்ற நெஞ்சினிலே பஞ்சணையைத் தான் எழுது

விஞ்சுகின்ற இடையினிலே சிந்தனைத் தேன் எழுது

 

                         தம்பி சின்னத் தம்பி

 

 வானத்தை பூமியுடன்    இணை க்கும் கம்பி –அது

கொட்டுகின்ற மழைத்துளி தான் சொல்லு தம்பி

கானத்தை நெஞ்சுடனே இணைக்கும் கம்பி –அது

மீட்டுகின்ற வீணை தான்  சொல்லு தம்பி

 

மேகத்தில் துடிதுடிக்கும்   தும்பி தும்பி – வான்

நட்சத்திரம் என்று நீயும்   சொல்லு தம்பி

மோகத்தில் துடி துடிப்பார்  வெம்பி வெம்பி – திரை

நட்சத்திரம் என்று நீயும்  சொல்லு தம்பி

 

வானத்தில் நிலவுகின்ற  நிலவு தம்பி –அது

போல ஒரு பொண்ணு    வந்தா என்னை நம்பி

சொர்க்கத்தைப் பார்த்தோமே எம்பி எம்பி

 மிச்சத்தைக் கேட்காதே    சின்னத் தம்பி 

ராமாயண கிரிக்கெட் – தொடர் கதை

ராமாயண கிரிக்கெட்

     image

 

 அறுபதினாயிரம் டெஸ்ட்  ரன்களை குவித்தவரும் இந்நாள் ‘அயோத்யா  கிரிக்கெட்   கிளப்’ தலைவருமான தசரதன் தன் பிள்ளைகள்  ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் நால்வரும் கிரிக்கெட் டில் சிறப்பாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டார். அது சமயம் அங்கே வந்த விஸ்வாமித்ரர்  சௌத் ஆப்ரிக்காவில் நடக்கும் லோக்கல் மேட்சில்  கலந்து கொள்ள ராமனையும் லக்ஷ்மணனையும் கூப்பிட்டபோது அவர்கள் எதிர் காலம் என்னாகுமோ என்று கவலைப்பட்டார். 

 

சௌத் ஆப்பிரிக்காவில் சூப்பராக அவர்கள் விளையாடியதைப் பார்த்து மனம் மகிழ்ந்த  விஸ்வாமித்ரர் மிதிலையில் நடக்கும் புது வித  கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராம லக்ஷ்மணரை அழைத்துச் சென்றார்.

               image

மிதிலையில் தக தக என்று தங்கத்தினால் ஆன ‘வோர்ல்ட் கப் ‘ ஒன்று பரிசாகக் காத்துக்கொண்டிருந்தது. அருகே மாபெரும் பேட்.. அந்த பேட்டை எடுத்து யார் ஜனகர் போடும் பந்தை சிக்ஸர் அடிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ‘வோர்ல்ட் கப்’.

ராமன் வந்து பேட்டைத்தூக்கி ஜனகர் போட்ட புல்டாஸ்சை வேகமாக அடிக்க பேட், பந்து, ஜனகரின் அரண்மனை ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிப் போயின. ராமனுக்குக் கிடைத்தது  வோர்ல்ட் கப் .

தசரதன் மிக மகிழ்ந்து ராமனை அயோத்யா  கிரிக்கெட்   டீமின் காப்டனாக்க நிச்சயித்து அறிவித்தார்.

              image

உடனே  ஏ சி சி யின் மற்றொரு மெம்பர் கைகேயி பரதனைத்தான் கேப்டனாகப் போட வேண்டும் என்று வாதாடினாள் . அதுமட்டுமல்லாமல் ராமன் 14 வருஷம் ‘சென்னை 28ல்’ இருக்க வேண்டும் என்றும் போராடினாள் . கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணி கலங்கினான் தசரதன்.

ராமன் தானாகவே சென்னை 28 போவதாக ஒப்புக்கொண்டு வோர்ல்ட் கப்பையும் லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

(தொடரும்)

 

கவிதை வரிகள்

குருவி குருவி குருவி

 

                                                                        image   image


 • குருவி குருவி குருவி
 • கும்பகோணத்துக் குருவி
 • குருவி குருவி குருவி
 • குளிக்கப் போனது குருவி
 • அருவி அருவி அருவி
 • குத்தாலத்து அருவி
 • அருவி அருவி அருவி
 • குருவியை அழைத்தது அருவி

 • குளிக்கும் குருவியின் வளைவு நெளிவை
 • உத்துப் பாத்தது அருவி
 • முறைச்சுப் பாத்த குருவியின் அழகில்
 • விறைச்சுப் போனது அருவி
 • குருவி குருவி குருவி  
 • குஷியாய் குளிக்கும் குருவி
 • வழுக்கிப் போனது அருவி  
 • குருவியின் மேனியைத் தழுவி

 • அருவி அருவி அருவி
 • ஆசையை கொட்டும் அருவி
 • குருவியின் மேனியில் பரவி
 • சுகத்தில்  சொக்குது அருவி
 • அருவியின் நீரைக் குடிக்கும் குருவி
 • முத்தம் முத்தம் என்றது அருவி
 • குருவியின் மேனியில் அளையும் அருவி
 • நித்தம் நித்தம் என்றது குருவி

 • அருவியின் வேகம் தாங்கா குருவி
 • வலியில் கொஞ்சம் துடித்தது குருவி
 • ஆசையை அடக்க முடியா குருவி
 • அருவியின் மடியில் மடிந்தது குருவி
 • குருவியின் அழகை மறவா அருவி
 • குருவியின் நினைவை மனதில் மருவி
 • குருவியின் கனவை நெஞ்சில் நிறுவி
 • பெருகிக் கொட்டுது கண்ணீர் அருவி 

சிசு கதை

சின்னஞ்சிறு கதை (சிசு கதை)

 

ஹெமிங்க்வே  எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு  வார்த்தை சிசு கதை!

image

For sale, Baby’s shoes, never worn

விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.

குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் – செருப்பை விற்கும் அவலம் –

ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!

 

 இன்னொரு திகில் சிசு  கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:

 தலைப்பு : சத்தம்

The last man on Earth sat alone in a room. There was a knock on the door…“

உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!

 image

இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:

விற்பதற்கு குழந்தை வந்தது

 

பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !

 

கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!

 

பசிக்கு விலை உடல் என்றாள்.

 

அடுத்த  தடவை என்னை கனவில் தான் காண்பாள்!

 

பால் பொங்கியது- அணைத்தேன்!

 

நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!

 

மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!

 

பிறந்த பெண் குழந்தை மரணம் . கொடுமை -பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

 

திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!

 

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! போஸ்ட் மார்ட்டம் பண்ண வந்த டாக்டர் திணறினார்!

மன்னர் ஜோக்ஸ்

 

வீரபாகு  என்ற மன்னர் பெயரை கல்வெட்டில் யார் மைசூர்பாகு என்று மாத்தியது?

 

போரில் தானே புறமுதுகு காட்டுவார். அந்தப்புரத்திலிருந்து ஏன் இப்படி தலை தெறிக்க ஒடி வருகிறார்?

மகாராணி வெளக்கமாத்தை எடுத்துக்கொண்டு துரத்தி வருகிறார்களாம்.

image 

பாரி ஓரி காரி வரிசையில் நானும் சேர வேண்டும் அமைச்சரே!

பூதகேசரி என்ற தங்கள் பெயரை பூரி என்று சுருக்கி விடலாம் மன்னா!

 

வரிக்குதிரை புலவர் அருகே வர ஏன் பயப்படுகிறது?

வரிகளைத் திருடும் புலவர் அல்லவா அவர்!

 

 தினமும் ஒரு ஜைனப் பெண்ணைக் கேட்கிறாரே மன்னர் ?

அவர் ஜைன மதத்தைத் தழுவப் போகிறாராம்!

 

மந்திரி நமது நாட்டில் ஏன் தோசையே இல்லை?

ஆசையை ஒழிக்கவேண்டும் என்ற அரசாணையில் தவறுதலாக தோசையை என்று அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது  மன்னா!

 

சிபி மன்னர் பரம்பரையில் வந்த நம் மன்னர் என்ன செய்கிறார் பார்த்தாயா? புறாக் கறியை தொடையில் வைத்து வெட்டுகிறார் !

image

 

காபி ராகத்தில் பாடும் புலவரிடம் கொஞ்சம் சிக்கரி சேர்த்திருக்கலாம் என்றும் சொல்வது கொஞ்சமும் சரியில்லை மன்னா!

 

என்னது ! எதிரி நாட்டு யானைப் படையை நமது அரசர் பொடிப் பொடியாக்கி விட்டாரா?

பொடி டப்பாவை நமது மன்னர் தவறிக் கீழே  போட்டார். யானைப்படை தும்மித் தும்மி தனக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு அழிந்து விட்டது.

 

மன்னர் ஏன் போர் என்றதும் தளபதியை அழைக்காமல் பழ வியாபாரியை அழைக்கிறார்?

போன வாரம் அரண்மனையில் இருந்த  அத்தனை வாளையும் போட்டு பேரீச்சம்பழ அல்வா சாப்பிட்டு விட்டாராம்!

 

மன்னா! நமது ஆட்சியில் மிகமும் கேவலமான ஊழல் ஒன்று நடைபெற்றுவிட்டது !
 என்ன அது?
பூஜை வறட்டியில்  மாட்டு சாணத்துக்கு பதிலாக யாரோ யானை சாணத்தைக் கலந்து விட்டார்களாம்!

 பக்கத்து நாட்டு ராஜா மலிவு விலையில் இட்லிக் கடை,  கள்ளுக் கடை வைத்ததைப் பார்த்து நீங்களும் மலிவு விலையில் சலூன் வைப்பது கொஞ்சமும் சரியில்லை மன்னா!

 மன்னா நமது மீனவப் படகுகள் கடலில் சென்ற போது எதிரி  மன்னன் எல்லாவற்றையும் பிடித்து விட்டான்!
என்ன  துணிச்சல்! கடலிலிருந்த எல்லா மீன்களையும் ஏற்கனவே பிடித்து விட்டானா?

 

சின்னப்பெண்ணே

சின்னப்பெண்ணே

image 

மல்லிகைப் பந்தொன்று தொட்டிலில் கிடக்குது

வாய்  விட்டுச்  சிரித்து மணத்தைப் பரப்புது

வந்திடும் ஆனந்தம் அன்பே உன்கைவீச்சில்

தந்திடும் இன்பம் எந்நாளும் உன் வாய் எச்சில்

 

கன்னம் குழிந்திடச் சிரித்திடும் கண்கள்

என்னை ஈர்க்கும் மாணிக்கக் கற்கள்

பொன்னகை பெண்ணின் புன்னகை என்பர் –உன்

சின்னகை பட்டாலே தூசவை என்பர்

உன்னை நான் எடுத்துத்  தோளிலே கிடத்தி

கன்னத்தில் கன்னத்தை மெல்லவே இழைத்து

உன்பட்டு  முதுகில் என் கையால் தட்டி

ம்‌ம்‌ம் என்று நீ ராகமும் இழுக்க

ஓ ஓ ஓ என்று நான் தாளமும் இசைக்க

ஆனந்த  கீதங்கள் சங்கமமாகும்

அற்புத சுகங்கள் என்வசமாகும்

 

பாரதியாரின் பொன் வரிகள்

பாரதியாரின்  பொன் வரிகள்

                                   image


சுவை புதிது போரும் புதிது

வளம் புதிது சொற்புதிது

                                                                                                                 

கடமை யாவென தன்னைக் கட்டுதல்

பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்

 

துணையே     மணியே    அணியே     இணையே

 

நமக்குத் தொழில் கவிதை      நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்

 

பக்தி உடையார் காரியத்தில் பதறார்

 

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே

 

தீ வளர்த்திடு வோம் பெருந் தீ வளர்த்திடு வோம்

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

 

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல்  வேண்டும்

 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பது இல்லையே  

தமிழ்த்திரை உலகில் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்கள்

 

image

 

N S கிருஷ்ணன் –   டி ஆர்  ராமச்சந்திரன்

தங்கவேலு- சந்திரபாபு

பாலையா- நாகேஷ்

சுருளிராஜன்- சோ

தேங்காய்  சீனிவாசன் – கவுண்டமணி – செந்தில்

விவேக் – வடிவேலு

சந்தானம் – மனோரமா

கோவை சரளா

இவர்களைத்தவிர

துரைராஜ் ,காளி என் ரத்தினம், டி ஏ  மதுரம் , எம் சரோஜா, சாரங்கபாணி, கா கா ராதாகிருஷ்ணன் , குலதெய்வம் ராஜகோபால்,  எஸ் எஸ் சந்திரன், ஜனகராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி,  காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி‌ மகேந்திரன், எஸ் வி சேகர், குமரிமுத்து, லூஸ் மோகன்,  க்ரேசி மோகன், ஓமக்குச்சி நரசிம்மன், எம் எஸ் பாஸ்கர், கருணாஸ், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கமுத்து, மதன் பாப், மயில்சாமி, மனோபாலா, பரோட்டா சூரி, சத்யன் 

( படத்தில் யார் யார் இல்லை என்று கண்டுபிடியுங்கள்) 

இந்த மாத ஸ்டார் சிறுகதை சுருக்கம்

                                        image

 சுஜாதாவின்  “ பேப்பரில் பேர்”

 

எல்லாருக்கும் சிறு வயதில் கிராமத்தில் கிரிக் கெட் , கபடி, கில்லி தண்டா என்று ஆடிய சுவாரசியமான அனுபவம் இருக்கும். சுஜாதா தன் பாணியில்  ஸ்ரீரங்கம்  கிரிக்கெட்  கிளப்பில் பொடியன்கள் கூட ஆடிய அனுபவத்தைக் கதையாகச் சொல்லுகிறார்.

 

கே வி தான் ஹீரோ – கேப்டன்

 தஞ்சாவூர் டீம் – பெரிய டீம்

 நீ நல்லா  ஆடுவியோல்லியோ?

 சுமாரா ஆடுவேன் – ரங்கராஜன் (சுஜாதா)

  மாட்ச்  நிஜ மாட்ச்சா ?

 உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? பெரிய டீம்னா   எங்கேயாவது எக்கச்சக்கமா பந்து     போட்டு  மர்ம ஸ்தா னத்துல பட்டுரப் போறது.

தஞ்சாவூர் டீம் வந்தபோது வயத்தில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா      மாமாவாக தடித்தடியாக இருந்தார்கள். ( ஸ்ரீரங்கம் டீமில் பொடியன்கள் தான் ஜாஸ்தி)

முதலில் இவர்கள் கூட ஆட மறுத்தார்கள். கடைசியில் விளையாடி  கே வியும் சுஜாதாவும் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடி 52 ரன் எடுத்தார்கள் ( அதில் சுஜாதா 4 ரன் தான்.) கே வியின் புண்ணியத்தில் அவர்கள் 152 ரன் எடுத்தார்கள். தஞ்சாவூர்  டீமை 132ல்  சுருட்டினார்கள். ( அம்பயரை வேறு கையில் போட்டுக்கொண்டு எல் பி டபுள்யூ கொடுக்காமல் செய்து விட்டான் கே வி.)

அடுத்த நாள் இந்த வெற்றிச் செய்தி  இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் மகா ஓரத்தில் “ K V Srinivasan was ably supported by Rengarajan என்ற நியூசும் வந்ததாம்.

சுஜாதா சொல்கிறார்: 

 “இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த   தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத்திரும்பக் கிடைக்கவில்லை”

“பேப்பரில் பேர்” எவ்வளவு நிதர்சனம்!!

கவிதை வரிகள்

நாராணீயாம்ருதம்

 

நாராயணர் சொன்ன நாராயணீயம்

ஆராதனை செய்யும் புண்யாமிர்தம்

நாராயணீயம்  சுவை தேனாமிர்தம்

பாராயணம் செய்ய பாலாமிர்தம்

 

 • சிரக்கம்பம்

 

 

இருக்கையில் இருக்கும் வரை

இறக்கைகள் தேவையில்லை

சிரக்கம்பம் செருக்கெடுத்தால்

சிரமே தேவையில்லை

 • மம்மத ராசா

 

வில்லெடுத்து வந்தார் சேர நாட்டு ராசா

நெல்லெடுத்து வந்தார் சோழ நாட்டு ராசா

சொல்லெடுத்து வந்தார் பாண்டி நாட்டு ராசா

செல் எடுத்து வந்தார் நம்ம பெரம்பலூர் ராசா

மத்த ராசாவுக்கு ஜே ஜே  போடு!

நம்ம ராசாவுக்கு ஜி  ஜி  போடு!

 

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

 

( உலகப் பிரசித்தி பெற்ற ‘ THE FISH’ என்ற Stephen C Lundin , Harry Paul and John Christensen எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம். தமிழ் வாசகர்களுக்காக இடம் ,பெயர்,மேற்கோள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)

 

image

 கோவாவில் அது ஒரு மோசமான மழைக்காலம். வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.  ஈரமான, குளிரான, தயக்கமான மயக்கம் தரும் திங்கட்கிழமை அன்று. மதியத்துக்கு மேல் மேக மூட்டம் விலகலாம்  என்கிறது வானிலை அறிக்கை.  இது மாதிரி நாட்களில் தான் மேரிக்கு சென்னையின் அருமை தெரியும்.

‘என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?’ மேரி தனது மூன்று வருடங்களை மனதில் மெல்ல வருடிப்பார்த்தாள். அவள் கணவன் ஜானுக்கு கோவாவில்  ஐ டி கம்பெனியில் வேலை கிடைத்டதும்  எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தார்கள். பழைய வேலைக்கு நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலி செய்து, புது ஊரில் புது வீடு பிடித்து, குழந்தைகளுக்கு காப்பகம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்தார்கள். அவளுக்கும் கோவாவில் ‘முதல் நிதிக் கம்பெனியில்’  வர்த்தகப் பிரிவில் வேலை கிடைத்தது.

 

ஜானுக்கு இந்த ஐ டி கம்பனி மிகவும் பிடித்திருந்தது. சாயங்காலம் வீ ட்டுக்கு வரும் பொது மிகவும் சந்தோஷத்துதுடன் வருவான். கம்பெனியில் செய்யும் வேலை மற்றும் அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும் மேரியிடம் சொல்லி மகிழ்வான். ஜானும்  மேரியும்   குழந்தைகளைச்  சீக்கிரம் தூங்கப்பண்ணிவிட்டு வெகுநேரம் சிரித்து மனம் விட்டு பேசி விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மேரியுடைய நிதிக் கம்பெனியைப் பற்றியும் மற்ற உடன் வேலை பார்ப்பவர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு கேட்பான். பார்ப்பவர்கள் கண்  படும் அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்கள் போல – காதல் பறவைகள் போலப்  பறந்து திரிந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு துள்ளல் மகிழ்ச்சி.

                            image

எல்லாவற்றையும் அழகாகத் திட்டம் போட்டிருந்தனர் மேரியும் ஜானும் – ஒன்றே ஒன்றைத் தவிர. ஒரு வருடம் ஆன பிறகு  ஜான் அடி வயிற்றில் ஏதோ ரத்தப் போக்கு என்று ஆஸ்பத்ரிக்குப் போனான். ரத்தப் போக்கு அதிகமாகி அதிலேயே  அவன் திடீரென்று  இறந்து  போனான். சொல்லிக் கொள்ள, அழ, விடை பெற எதற்கும் அவனுக்கு நேரமில்லை.

அது இரண்டு வருடம் முன்பு. ஊருக்கு வந்து முழுவதுமாக ஒரு வருடம் கூட ஆகவில்லை அந்த சமயம். அதை நினைக்கும் பொழுது மேரியின் உள்ளம் சுக்கு நூறாக

வெடித்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் . ‘எனது சொந்தக் கவலைபற்றி நினைக்க இப்போது நேரமில்லை.

திங்கட்கிழமையில்  ஆபீசில் ஏராளமான வேலை இன்னும் பாக்கி இருக்கிறது’.   

(தொடரும்)

 

 

பழைய பேப்பர்

பழைய பேப்பர்

உத்தரகண்டின் கோர இமாலய சுனாமிக்கு இயன்ற அளவு உதவி செய்வோமே?

இலவசத்தில் இன்னொன்று! பாரத கைபேசி திட்டத்தில்  கிராமத்தில் வீட்டுக்கு ஒரு மொபைல் இலவசம்!

·        image

 • பெட்ரோல் டீசல் விலையை அடிக்கடி உயர்த்துகிறார்களே ! விலை ஏற்றத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?·       முல்லைப்பெரியார் அணையின் உயரத்தை உயர்த்த த மிழ்நாடு கோரிக்கை -கேரளா மறுப்பு – கோர்ட் தான் தீர்மானிக்கவேண்டும்.

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பைப் பற்றி  (  1 USD = Rs.60.75) ரிசர்வ் வங்கி கூட கவலைப்படுவதாகத்  தெரியவில்லை.

தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக உதயமாகிறது.

சும்மா கிடச்சா சித்தப்பாவுக்கு ஒண்ணு என்பது போல நிறைய மாநிலங்கள் கேட்டு போராடப்போகிறார்களாம்- அவத் பிரதேஷ், பூர்வாஞ்சல், பூந்தெல்கண்ட், பச்சிமாஞ்சல், பிராஜ் பிரதேஷ், போஜ்பூர், விதர்பா, கோர்காலண்ட் , போடோலாண்ட், மிதிலாஞ்சல், சௌராஷ்ட்ரா, டிமாலாண்ட்,, கொங்கு நாடு, கூர்க், கோசல், துளு நாடு , கூகிலாண்ட், கொங்கன், காமத்பூர், கரோலண்ட், கிழக்கு நாகாலண்ட், லடாக் யூனியன் பிரதேசம் . இந்தியா பழையபடி 56 தேசங்கள் ஆகிவிடுமோ?

2015 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் முதல் சுற்றில்  மோதப் போகிறதாம்!

2014 ல் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் – எந்தக் கட்சி வெற்றிபெறும்? ஹிந்து பத்திரிகை சொல்கிறது: இழுபறி நிலை மை தான். யார் பிரதமர்? மோடி? ராகுல்? மூன்றாவது மற்றும் நாலாவது அணி? பொறுத்திருந்து பார்ப்போம்!

பி.ஜே. பி யிலிருந்து டிவோர்ஸ் செய்து கொண்ட நிதிஷ்குமார் என்னவானார்  ?

உணவுப் பாதுகாப்பு சட்டம் வருமா? காலித்தட்டை வைத்துக் கொண்டு காத்திருக்குது பசியில் துடிக்கும் வயிறுகள்.

கிரிமினல் வழக்கு இருக்கும் உறுப்பினர்கள் பதவி ரத்தாக்கும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கிறார்கள்!  வேற்றுமையில் ஒற்றுமை என்பது இது தானா? ஆனால் சுப்ரீம் கோர்ட் மரண அடி அடித்திருக்கிறது !

ஆதார் அடையாள அட்டை வாங்கிவிட்டீர்களா?

விண்டோஸ் 8 -நாயகன் பாணியில்- நல்லதா? கெட்டதா ?

தனுஷுக்கு மச்சம் தான்! ஹிந்தி ‘ராஞ்சனா’ 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டதாம்! மரியான்?

தமிழில் அடுத்த மேஜர் எதிர்பார்ப்புகள்: ரஜினியின் கோச்சடையான் – கமலின் விஸ்வரூபம் –2 – விக்ரமின் (ஷங்கரின்) ‘ஐ’ – அஜித்தின் ஆரம்பம் 

சந்தானம் தான் காமெடி சூப்பர் ஸ்டார் !கொட்டாவி விட்டால் கூட ரசிகர்கள் சிரிக்கிறார்களாம்!

நாலு வரிக் கதைகள்

நாலு வரிக் கதைகள் 

 

பசி       சைட்       மதம்      சாமி      கீதை

பாட்டு   நெருடல்    அப்பா

பசி   

பசி வயிற்றைக்  கிள்ளியது! முந்தா நாள் கிராமத்தை விட்டு ஓடி வந்தவனுக்கு பட்டணத்தில்  என்ன கிடைக்கும்? மாடசாமி பசியின்  கொடுமையில் துடித்தான். அவன் அதிர்ஷ்டம் குப்பை லாரியிலிருந்து காஞ்சு போன பிரட் பாக்கெட் அவன் கிட்டே விழுந்தது. ஆசை தீர பிரிச்சு சாப்பிடப் போகும் போது எதிரே நாலு வயசு பொண்ணு அண்ணே! சாப்பிட்டு நாலு நாளாச்சு அண்ணே !!

 

சைட்

 

ரவிக்கு பெரியவர் மீது கோபம் கோபமாய்  வந்தது. பின்னே என்ன ஒரு நாளைப்போல தினமும் சாயங்காலம் ஆறே காலுக்கெல்லாம் வீட்டுக்குத்  திரும்பணுமாம் 1 அந்த நேரத்திலே பீச்சிலே எத்தனை அழகு  சுந்தரிகள்! வயசாயிடிச்சு பெரியவருக்கு! கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலே!

 ‘ம் ! ம் !  நடையைக் கட்டு !’ பெரியவர் உத்தரவு போட்டார்.

கண்கள் சிவக்க அழுதுகொண்டே அடி வானத்தில் மறைந்தான் ரவி – சூரியன்.

 

மதம்

 

ராமசாமிக்கு மதம் பிடித்துவிட்டது! அவன் யானை இல்லை!மனுஷன்!

சாமி

 

சாமிக்கு பூர்வாசிரமம் எங்கே?

கும்பகோணம் பக்கத்திலே குடவாசல் ஊரு! ஒரு மாத  சோத்துக்கு என்னை வித்திட்டாரு எங்க அப்பா ! அதுக்கப்புறம் ஆடுதுறையிலே ஆடு மேய்ச்சேன் ! மாயவரத்திலே மாடு மேய்ச்சேன் ! ஏ. வி. எம் மிலே ஏணி தூக்கினேன்! அதிர்ஷ்டம் அடிச்சுது! நடிகனானேன்! காரு, பங்களா, தோட்டம்,ஆளு, படை,பந்தா எல்லாம் வந்தது. படம் ஒண்ணு எடுத்தேன். சாமியானேன்!

 

 

கீதை

கிருஷ்ணா? இந்த துச்சாசனன் கிட்டேர்ந்து காப்பாத்த வர மாட்டியா? பாஞ்சாலி போல அஞ்சலை கத்தினாள். கிருஷ்ணன் கொஞ்சம் லேட்டா வந்தான். அதுக்குள் துச்சாசனன் ரேப்பு செய்துவிட்டு போயி விட்டான். கிருஷ்ணா? இது நியாயமா? அஞ்சலை கேட்டாள்.  அந்தப் பாவாத்மாவுக்குத் தான் எய்ட்சை  கொடுத்திட்டியே ! போகட்டும் கண்ணனுக்கே! தத்துவம் பேசினான். 

பாட்டு 

 

அம்மா சாப்ட்வேர் . அப்பா  ஹார்ட்வேர் . அகிலா ஹார்டு வேரும்  சாஃப்ட்வேரும் சேர்ந்து செய்த லிட்டில்வேர் – ரெண்டு வயசு பொண்ணு. அதில் என்ன ப்ராப்ளமோ? குழந்தை எப்போதும் ஒரே அழுகை! பாட்டியின் லேப்டாப்பில்   இருந்தால் தான் சிரிக்கும். இந்த ரெண்டு வேரைக் கண்டால்  கத்தும். பாட்டி ஒரு நாள் ஊரில் இல்லை. ஒரே கத்தல் நிலாப்பாட்டு பாடு என்று.  ஹார்ட்வேர் அடிக்க வந்தது. அம்மா சாப்ட்வேர் பாடியது. “ மூனே மூனே ஓடி வா! கம்ப்யூட் டர் மேலே தவழ்ந்து வா! பேஸ் புக்கிலே  நடந்து வா!இண்டெர்நெட்டிலே ஏறி வா!” குழந்தை அழுகையே தேவலை.

 

நெருடல்

“தொழிலாளர் வர்க்கம் ஓங்குக! தொழிற்சங்கம் ஓங்குக!”  ஆவேசமாகக் குரல் கொடுத்தான் ஆராவமுதன். கூட்டத்தில் காம்ரேட்  காலை மிதிக்க செருப்பு வாயைப் பிளந்தது. பக்கத்தில் இருக்கும் செருப்புத் தைக்கும்  சிறுவனிடம் ஓடினான். “மூணு ரூபாய் கொடு சார் . இன்னிக்கு காலேயி லிருந்து பட்டினி.” “ அதெல்லாம் முடியாது. ஒரு ரூபாய் தான்.” சிறுவன் தைத்துக்  கொடுத்தான். காசை விட்டெறிந்துவிட்டு ஊர்வலத்தின் முன்னணிக்கு ஓடி ஸ்லோகன் எழுப்பினான். “ தோற்றதில்லை தோற்றதில்லை தொழிலாளர் வர்க்கம் தோற்றதில்லை!”

 

அப்பா

                                                           

டீ   அக்கா ! எனக்கு இந்த அப்பாவைப் பிடிக்கவே இல்லை!

ஏண்டா?

பின்னே என்ன ! நம்ம அம்மாவை நாம தான் கட்டிப்போம். அவர் ஏன் கட்டிக்கிறார்?

போடா மண்டு! அப்பா அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கார்.

அதனால?

அதனால அவா கட்டிக்கலாம்!

அது சரி! சித்திக்கு கல்யாணம் ஆயிடிச்சா?

இல்லையே! ஏண்டா?

ஒண்ணுமில்லை – என்றான் பொடியன்.