நகைச்சுவை மன்னர் – தேவன்

தேவன்’ நினைவு நாள்: மே 5, 2010

துப்பறியும் சாம்பு என்ற காலத்தால் அழியாத பாத்திரத்தைப் படைத்த அமரர் தேவன் அவர்களைப் பற்றி பசுபதிவுகள் ( http://s-pasupathy.blogspot.in/) என்ற வலைப்பூவில் விளக்கமாக எழுதியுள்ளார் .

திருவிடை மருதூரில் பிறந்த மகாதேவன் என்ற தேவன் ஆனந்தவிகடனின் ஆசிரியராக இருந்தவர்.

ஆங்கிலத்தில்   பி ஜி ஓட்ஹவுஸ்  போல் நகைச்சுவைத்  ததும்ப எழுதியவர்.

சாம்புவைப் பற்றி திரு பசுபதி அவர்கள் எழுதிய கவிதைகள் :

காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் — ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு

துருவும் கூர்மை விழிமுகம் –   துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரங்கள் பேசினால் – எதிரி மீண்டும் எழுந்திரான்
தெருச்சீ ராளம் புசிப்பான்  – திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு – தேவன் படைத்த சந்துரு!

தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்புவிற்கு’ உயிரூட்டியவர் அவரே.

பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், ‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார்.

கோபுலுவின் சித்திரங்கள் குறிப்பாக சாம்புவின் மூக்கு அந்தக் கதைகளுக்கு மெருகேற்றியது என்பது உண்மை !
சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்”

சாம்பு’ என்.எஸ். நடராஜன்

திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை.

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்.

சாம்பு கதை சாம்பிள் ஒன்று படிக்க வேண்டுமா? பசுபதியார் உதவிக்கு வருகிறார்.

 

தேவன் எழுதிய மற்றொரு சிறுவர் கதை !  ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான் என்று துவங்குவார்.

ராஜ்மவுலியின்  ‘நான் ஈ’ க்கு முன்னோடி. 

ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, ‘டப்’னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே ‘பளாச்’சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, “தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!” அப்படின்னுது.

தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, “போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்…” என்று ஆரம்பிச்சுது.

அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, “அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி”னு சொல்லிச் சிரிச்சுது.

இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, “கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்”னுது.

தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, “போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்…”

சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, ‘டணார்’னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.

இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!

காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது.

தூர்தர்ஷனில்  தொடல் சீரியலில் ஒய் ஜி மகேந்திரன் துப்பறியும் சாம்புவாக நடித்திருக்கிறார்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். .

துப்பறியும் சாம்புவின் ஒலிப் புத்தகம் கேட்க வேண்டுமா?  இதோ இந்த லிங்கில் கேளுங்கள்: