2018ல் கலைஞர் இறந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓர் எழுத்தாளர் (இலக்கிய ஏடு ஒன்றின் உதவி ஆசிரியர். ஓர் ஆராய்ச்சியாளரும் கூட) சென்றிருக்கிறார். ஆனால் அங்கு காணப்பட்ட கூட்டத்தைக் கண்டு – குறிப்பாக சினிமா சம்பந்தப்பட்டவர்களே – வெறுத்துப் போய்த் திரும்பி விடுகிறார்.
அந்த மனநிலையில் இலக்கிய ஏட்டில் மூன்று பக்கங்கள் குமுறி தள்ளிவிட்டார். ‘சினிமா தமிழ் நாட்டை மிகவும் கெடுத்துவிட்டது’ என்பதை சில உதாரணங்களுடன் எழுதியிருக்கலாம். ஆனால் மனிதர் அக்கு வேறு ஆணி வேறாகச் சில நடிகர்கள் மீது ஆவேசமாகப் பாய்ந்துவிட்டார். (வடிவேலு, நாகேஷ், ரஜினி) நாகேஷின் உடல் மொழியும், நடிப்பும் அப்பட்டமான காப்பி என்பதை ஒரு காட்சி மூலம் (சர்வர் சுந்தரம்) விவரித்திருந்தார்.
‘இளையராஜாவோ இங்கு பலருக்கு தெய்வம்’ என்று குறிப்பிட்டிருந்தார். கவனியுங்கள் அது பாராட்டே அல்ல, எள்ளலான தொனியில் எழுதப்பட்ட வாக்கியம்.
வேறொரு நாவலாசிரியர், உலகம் சுற்றி வந்த எழுத்தாளர். வாராவாரம் பிரபல இதழில் நடிகர்களைக் கிண்டலடிப்பார். இவருடையது வேறு பார்வை, வேறு கோணம். அதாவது சில நிமிடங்களே உடலசைவு செய்து வசனமும் பேசிவிட்டு லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் என்று அங்கலாய்ப்பார். எழுத்தாளார்களையும், நடிகர்களையும் ஒப்பிடுவது இவர் பாணி.
இந்தப் போக்கு சரியா? திரைப்படமும், எழுத்தும் ஒன்றாகி விடுமா?
ஒரு சினிமா வெளியாக முதலில் முதல்போட தயாரிப்பாளர் தேவை. பிறகு இயக்குநர் சொல்கிற ‘ஒரு வரி’ கதையை காட்சி காட்சியாக விரித்து எழுத வசனகர்த்தா வேண்டும். படத்தின் சூழலுக்கேற்ப இசையமைக்க இசையமைப்பாளர், திறமையான ஒளிப்பதிவாளர் என்று நிறைய பேர் தேவைப்படுவார்கள்.
ரொம்ப சரி, ஆனால், பாதாம்பருப்பு, நெய், சர்க்கரை, குங்குமப்பூ எல்லாம் சேர்ந்தால் பாதாம் கேக் ஆகி விடாதே? மிகச் சரியானபடி பருப்பை அரைத்து, பிறவற்றைச் சேர்த்து பதமாகக் காய்ச்சி அளவாக வெட்டியெடுத்தால் மட்டுமே நாவுக்கு ருசியான பாதாம் கேக் அமைகிறது. நடுவில் ஏதாவது சின்ன கோளாறு நேர்ந்தால் கூட, போச்! அவ்வளவுதான். நேரம், பணம் எல்லாம் விரயம்.
இது போலத்தான் திரைப்படமும், படத்துக்கு ஏற்ற நாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து இயக்குகிற பொறுப்பு இயக்குனரைச் சேர்ந்தது. இதில்தான் எத்தனை தடங்கல்கள்.
முதலாவது இடம், பொருள், நேரம், பிரதான நாயகர் நாயகி தவிர பிற நடிகர்கள் எல்லாரும் கூப்பிட்ட நேரத்தில் இணைய வேண்டும். என்னுடைய சொந்த அனுபவமும் உண்டு. 2004ல் தனியார் டிவி ஒளிபரப்புக்காக என் நெருங்கிய உறவினர் பங்கேற்றார். வினாடி வினா போன்ற நிகழ்ச்சி. கேள்வி கேட்பவர் ஒப்பனை செய்து கொண்டு அமருவதற்கும், பிறவற்றுக்குமே நிறைய நேரமாயிற்று. நிகழ்ச்சி முடிய காலை 3 மணி. ஒரு சாதாரண க்விஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சடங்குகள் தேவையென்றால், திரைப்படக் காட்சிக்கு எப்படி இருக்கும் என்று ஊகியுங்கள்.
அடுத்ததாக வானிலை. ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ இலேசான மழைத்தூறல் விழும் போது காதலர்கள் சந்திப்பதாகக் இயக்குநர் காட்சி அமைக்கிறார் என்றால், முக்கிய நடிகர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் அப்போது பார்த்து வெயில் கொழுத்தும் அல்லது சற்றும் எதிர்பாரா விதமாக மழை கொட்டித் தள்ளலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வது? 50 வருட முன்பு ‘படம் எடுத்துப் பார்’ கட்டுரையை பிரபல வார இதழில் கே. பாலசந்தர் விவரித்து எழுதியிருக்கிறார்.
படம் எடுக்கிற காலகட்டத்தில், கதாநாயக நடிகருக்கோ, நடிகைக்கோ எந்த விதமான மாறுதலும் ஏற்படாமலிருக்க வேண்டும். உதாரணமாக நடிகர் வீட்டில் மரணமோ வேறு அசம்பாவிதமான நிகழ்வோ நேர்ந்துவிட்டால், படப்பிடிப்பை ஒத்தி வைக்கும் சந்தர்ப்பம் வரலாம். பெண்கள் என்றால் வேறு விதம். இடைப்பட்ட காலத்தில் யாராவது நடிகை கர்ப்பமாகிவிட்டால், கதையையே சற்று வேறு விதமாக மாற்ற நேரிடும்.
அப்புறம் இருக்கவே இருக்கிறது continutity என்கிற தொடர்புத் தன்மை. ஒரு முறை விவேக்கைச் சந்தித்த போது பாலசந்தர் “என்ன இது! எப்போதும் trimஆக இருப்பாயே… இப்போது என்ன தாடி மீசை கோலம்? ஓ… கன்டிநியூட்டியா.” என்று கேட்டிருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், இதை மையமாக வைத்து பிரபல இதழின் தீபாவளி மலரில் சிறுகதையே எழுதியிருக்கிறார். படம் எடுக்கும் போது இடையே தொகை பேரத்தால் குழந்தை நட்சத்திரத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை. உருவம், முகச்சாடை அனைத்தும் பொருத்தமாக அமைந்து, படம் வெற்றி பெற்றதில் டைரக்டர் பெருமிதப்படுகிறார். இருந்தாலும் இறுதியில் ஒரு ஏமாற்றம். புதிய குழந்தை நட்சத்திரத்துக்கு ஆறு விரல்! எனவே மிகச் சின்ன சின்ன அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பது மிக முக்கியம்.
இன்றைய காலங்களில், அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்தியா மொத்தமும் திடீர் திடீரென்று கலவரங்கள் எழுகின்றன. எங்கேயாவது இரண்டு மாநில எல்லை முடிவில் ஷுட்டிங் எடுத்தால் “_____ நடிகர் வரக்கூடாது” என்ற கூக்குரல் எழலாம்.
உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நிகழ்வுகளுக்குத் திரை உலகில் பஞ்சமே இல்லை. ஸ்டண்ட் காட்சி, சர்க்கஸ் காட்சிகள் போன்றவற்றில் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு கூட ஒரு படப்பிடிப்பில் கிரேன் மண்டையில் விழுந்து அடிபட்டு மூன்று பேர் இறந்து போனார்கள்.மிகப் பிரபல நடிகர் என்றால் ஸ்டண்ட் காட்சிக்கு டூப் போட்டு விடுவார்கள். என்றாலும் உயிர் உயிர்தானே?
“”திரைப்படம் வெளியிடுவதற்கென்றே சில பண்டிகைகள் இருக்கின்றன. தைப்பொங்கல், தீபாவளி. இதே போல மிகப் பெரிய நடிகர்களின் படத்தை வெளியிடும் போது, அவை மோதி, படங்களுக்கு பாதிப்பு வராமல் இருப்பதற்கு தோதான தேதியை தேர்ந்தெடுப்பது, தியேட்டர்களை தேர்வு செய்வது இது போன்று விஷயங்கள் தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றே சொல்லலாம்.
மேற்சொன்ன பல அம்சங்களைத் தாண்டித்தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. இவை நீங்கலாக ஒலி, ஒளி, எடிட்டிங், போட்டோகிராபி முதலிய பல தொழில் நுட்பங்களும் இணைய வேண்டும்.
திரைப்பட இசைக்கு என்றுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதன் மெட்டும், வரிகளும் எளிதில் மக்கள் மத்தியில் பதிந்துவிடும். டி.கே. பட்டம்மாளின் காந்தீய பாடல்களும், பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலும் இன்றைக்கும் சாதாரண மனிதர்களும் முணுமுணுக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சினிமா மாதிரியான சாதனம்தான்.
சினிமா சங்கீதத்தை வெறும் ‘டப்பா பாட்டு’ என்று ஒதுக்கிக் தள்ளிவிடமுடியாது. இன்றைய கர்நாடக சங்கீதத்தில் மூத்தவரும், பல விருதுகளைப் பெற்றவரும், மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவருமான மதுரை ஜி.எஸ். மணியின் வார்த்தைகள்.
“சினிமாவுக்கு மெட்டமைக்கிறது சாதாரணம் இல்லை. கர்நாடக இசையில் மத்திம ஸ்ருதின்னு சொல்றது போல அங்கே ‘சைகிள் ஆஃப் போர், ஃபைவ்’ என்றெல்லாம் உண்டு. லைட் மியூசிக் என்பதை லைட்டா பண்ண முடியாது. ரொம்ப மெனக்கிடணும், உழைக்கணும்” என்று அழுத்திச் சொல்கிறார்.
இங்கு நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பெறுகிற ஊதியத்தைப் பற்றிச் சில வரிகள், என்னதான் வசனகர்த்தா ‘ரூம்’ போட்டு யோசித்தாலும் எவ்வளவுதான் டைரக்டர் இன்ன விதமான பாவம் என்று சொல்லிக் கொடுத்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு உருவம் கொடுப்பது நடிகர்தான். சந்தேகமேயில்லை. டீக்கடைக்காரர் சாமியார் வேடம் போட்டு “அதே அதே” என்று மலையாள உச்சரிப்புடன் பேசி அசத்தியவர். ஒரு பஞ்ச் வசனமான “இது எப்படி இருக்கு!” என்று வினோத முகபாவத்துடன் பேசினவர், சாதாரணமான கூப்பிடும் முறையை “சந்திரமவுலி சந்திரமவுலி” என்று உயர்த்திய கண்ணுடன் விளித்தவர்; “இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்” கோணல் உடல்மொழியோடு சொன்னவர்: இவை இடம் பெற்ற படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ஆனால் தேங்காய் சீனிவாசன், ரஜினி, கார்த்திக், விவேக் இவர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள். ஏனெனில் வசனத்துக்கு ‘உயிர்’ தந்தவர்கள் அவர்கள்தான்.
சினிமா தயாரிப்பாளர்களுக்குள்ள உள்ள சிக்கல்கள் , தொழில் முறைக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதில் உள்ள சிரமங்கள், இவற்றை நன்கு புரிந்து கொள்ள கோமல் சுவாமிநாதன் எழுதின ‘பறந்து போன பக்கங்களை’ படித்தாலே போதுமானது.
இதே மாதிரிதான், வரிகளுக்கு மெட்டுப் போட்டு உயிர் கொடுப்பவர் இசையமைப்பாளர்கள். “உன்னை ஒன்று கேட்பேன்” “ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா” “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வர்ணமோ” போன்றவை சாதாரண வரிகள்தான். இசையமைப்பாளர், ராகம் போட்டு பின்னணியுடன் இசைக்க வைத்ததால்தானே, மனதில் நிற்கிறது !
அவர்கள் வாங்குகிற சம்பளம் அடிப்படை பொருளாதாரமான தேவை – வினியோக சம்பந்தப்பட்டதுதான். இதில் குற்றம் காண்பது ஏன்?
சினிமா தொடர்புள்ளவர்களைக் குறித்து நிச்சயம் சில வார்த்தைகள் பதிவு செய்ய வேண்டும். இயற்கை பேரிடர் மழை, வெள்ளம், கரோனா தொற்றோ எது வந்தாலும், தனி மனிதனாகப் பொருள் உதவி செய்பவர்கள் அவர்கள்தான். நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலமாகவும், வேறு சிலர் ரசிகர் மன்றம் வழியாகவும் ஒத்தாசை புரிகிறார்களே.
யோசித்துப் பாருங்கள், இவ்வளவு தடங்கல்கள் இடையூறுகள் சூழ்ந்துள்ள திரை உலகை – சில நடிகர்கள் பெறும் ஊதியத்தை வைத்தோ, கூடுகிற கூட்டத்தை வைத்தோ மதிப்பிடுவது சரியான அளவுகோலா? இல்லவே இல்லை.
சரி, இருக்கட்டும். எழுத்தாளர்களின் நிலைமை என்ன? ‘அல்லலற்ற உலகு’ என்றே அந்தத் துறையைக் குறிப்பிடலாம். மழை, வெயில், புயல், காற்று, கரோனா தொற்று, பிற நோய் தொற்றுகள் என்று இருந்தாலும் அவர்கள் அமைதியாக நாலு சுவருக்குள் எழுதிக் கொண்டிருக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால், இத்தகைய சூழல்கள் எழுத்தாளனுக்கு ஒரு உந்து சக்தியாக மாறுகிற வாய்ப்புண்டு. கற்பனைக் குதிரையை உற்சாகமாகக் தட்டி, ஓட வைக்க முடியும். தான் எழுதினதை, மீண்டும் மாற்றி எழுதலாம். யாருக்காகவும் அவசரப்படத் தேவையில்லை, போட்டி என்று வந்தால் கூட, குறைந்த பட்சம் ஒரு மாதம் அவகாசம் தருகிறார்கள்.
தீபாவளியின் போதோ அல்லது வேறு ஏதாவது நடப்பு நிகழ்வின் போதோ (current topic) அவற்றை வைத்து கதை எழுத பிரபல எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் வரும். “இரண்டே நாளில் —— கதை எங்களிடம் சேர வேண்டும்” என்று பத்திரிகை ஆசிரியர் கோரிக்கை விடுப்பார்.
நேரில் சென்று, நடுவர்கள் முன் எழுதிய அனுபவமும் கிட்டும். ஒரே ஒரு முறை ‘மாவட்ட சிறுகதை’ என்ற தலைப்பில் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடி சிறுகதை எழுதுகிற சந்தர்ப்பத்தைக் குமுதம் அளித்தது. நேரம் மூன்று மணி. கோவையிலிருந்தபோது நான் அதில் பங்கு பெற்றேன். நடுவர்கள் ராஜேஷ்குமார், பூவண்ணன், விமலா ரமணி. பத்து மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் ஒரு மணிக்கு பரிட்சை முடிந்தவுடன் அன்று மாலையே முடிவையும் அறிவித்தார்கள். என்னதான் முன்கூட்டியே கதைக் கரு, அமைப்பு, நடை முடிவு எல்லாவற்றையும் தீர்மானம் பண்ணியிருந்தாலும், பலர் நடுவே உட்கார்ந்து எழுதுவது வித்தியாசமான அனுபவமாகத்தானிருந்தது.
இன்னொரு வசதி எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு, உடல் நலம் குன்றிப் போன சமயத்தில் ஓர் அசிஸ்டென்டை வைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் பொறுப்பு கூடுதலாக இருந்த, பத்திரிகையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் – 1959-60, குமுதம் எஸ்.ஏ.பி. சொல்லச் சொல்ல உதவி ஆசிரியர் புனிதன் எழுதினார். இதை ‘சொல்லாதே’ நாவலின் முன்னுரையில் எஸ்.ஏ.பி. பதிவு செய்திருக்கிறார்.
ஏன்… சமீப காலத்தில் கூட பாலகுமாரன் நிறைய எழுத வேண்டியிருக்கிற சூழலில் உதவியாளர் வைத்துக் கொண்டாரே? பார்வை பழுது போன போது, அ.ச.ஞா. தம் மகள் மீராவின் உதவியுடன்தான் கம்பராமாயண விளக்கம் எழுதினார்.
லேட்டஸ்ட் மாறுதல்:- கணினி. எழுத்தாளர்கள் கதையைத் தபாலில் சேர்க்கக் கூட தேவையில்லை. கணினியில் கதையை டைப் செய்து, மின்னஞ்சலில் முகவரியை டைப் செய்து அழுத்தினால், கதை பத்திரிகை ஆபிசுக்குச் சேர்ந்துவிடுகிறது.
1947ல் தேவன் ‘விச்சுவுக்கு கடிதங்கள்’ தலைப்பில் பல தொழிலின் சாதக பாதகங்களை நகைச்சுவையுடன் விவரித்து இருக்கிறார். இஞ்சினியர், வைத்தியர், சட்டம், அரசு வேலை, பள்ளி ஆசிரியர் போன்றவை இதில் அடங்கும். இதில் எழுத்தாளரும் இடம் பெறுகிறார். (கவனிக்க நடிகர் இல்லை) அவர் எழுதியிருப்பதாவது:- எழுத்தாளனாக தொடங்குவதற்கு பேப்பரும், பேனாவும், மசிக் கூடுமே போதுமானது. மூலதனம் இல்லாமல் இவ்வளவு மலிவாக இதை ஆரம்பிக்க முடிகிறது என்பதே இந்தத் தொழிலின் சிறந்த கவர்ச்சி. யாரும் பழகலாம். யாரும் பெயர் வாங்கலாம். கன்னியாகுமரியிலிருந்து இமயமலைச் சாரல் வரையில் பிரபலமாகலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில், இமயமலை என்ன உலகம் முழுதுமே எழுத்தாளர்கள் பெயர் தெரிகிறது. பத்திரிகையில் சிறுகதை எழுதும் எழுத்தாளன் முதல், நோபல் பரிசு பெறும் எழுத்தாளன் வரை, சாகித்ய அகாடமி விருது வாங்குபவர் வரை, நிலைமை இதுதான். மாற்றமே இல்லை.
முத்தாய்ப்பாக இலக்கிய எழுத்தாளர்களுக்கும், நவீன எழுத்துச் சிற்பிகளுக்கும் ஒரு வார்த்தை:- திரைத் துறையில் உள்ள பாதக அம்சங்களைக் குறிப்பிடுங்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, நடிகைக்குக் கோயில் கட்டுவது போன்ற அபத்தங்களை குற்றம் சாட்டுங்கள். சினிமா மாயையில், கனவுலகில் சிக்கி பாழாகாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை விடுங்கள். பிற மாநிலங்களைப் போலத் (கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகா) தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு உரிய மதிப்பு தரப்படுவதில்லை என்று ஆதங்கப்படுங்கள். ஓகே…
அதை விட்டுவிட்டு, அந்தத் துறையையும், துறை சேர்ந்த நடிக நடிகைகளை இகழ்வது, எள்ளி நகையாடுவது போன்றவை அனாவசியம். சமூகத்தில் பொறுப்பானவர்களுக்கு இது அழகல்ல.
எழுத்தும் ஒரு தொழில்தான். ஏதோ அதைத் தவம், வரம் என்று பிரமையில் ஆழ்ந்து, உலகத்திலேயே உன்னதமானது என்று நினைத்து சுயதம்பட்டத்தில் ஈடுபடாதீர்கள்.
கல்கி, மிகச் சரியாக ‘திரை உலகம்’ பத்திரிகைக்கு அனுப்பின குறிப்பில், 1948, இவ்விதம் சொல்கிறார்.
“ஓர் எழுத்தாளன் தன்னை மகா மேதாவியாக நினைத்துக் கொண்டு, சுயபுராணக் குப்பைகளைக் கிளறி பக்கம் பக்கமாக எழுதுவதைவிடத் தலைவலி வேறு இருக்க முடியாது.”
70 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்கியின் வார்த்தைகள் இன்றும் பொருத்தமாக இருப்பது ஒரு வியப்புதான்.
வாதூலன் மன்னிக்க வேண்டும். சினிமாவும், எழுத்தாளர்களும் என்று தலைப்பு கொடுத்துவிட்டு, அதற்கு ஏற்றாற்போல சில பிரபல எழுத்தாளர்களின் படங்களையும், பகிர்ந்துவிட்டு, கட்டுரையில் சம்பந்தமே இல்லாது ஏதோ எழுதியிருக்கிறார்.
LikeLike
வாதூலன் மன்னிக்க வேண்டும். சினிமாவும் எழுத்தாளர்களும் என்று தபைப்பிட்டுவிட்டு, சில பிரபல எழுத்தாளர்களின் படங்களையும் பகிர்ந்துவிட்டு, சம்பந்தமே இல்லாமல் ஏதோ எழுதியிருக்கிறார்.
LikeLike