அசோகமித்திரனின்  தண்ணீர் –  அழகியசிங்கர் 

தண்ணீர் - அசோகமித்திரன் - அசோகமித்திரன் - நற்றிணை | panuval.com          

இன்று நான் எடுத்துக்கொண்டு எழுதப்போகிற எழுத்தாளரைப் பற்றி பலர் பேசி விட்டார்கள்.  இதில் நான் என்ன புதுமையாகச் சொல்ல முடியுமென்று தோன்றவில்லை.  ஆனால் என்னிடம் தெளிவாக ஒரு விஷயம் தோன்றிவிட்டது.  நான் படிக்கிற புத்தகத்தைப் பற்றி தாவது எழுதுவது என்பது.  

            சில புத்தகங்களை நான் முழுவதுமாகப் படிக்க முடியவில்லை.  சில புத்தகங்களை தம் பிடித்துப் படித்து விடுகிறேன்.  நான் அப்படிப் படித்த புத்தகம்தான் நகுலனின் ‘இவர்கள்.’  அதேபோல் இன்னொரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  நினைத்தபடியே படித்து முடித்து விட்டேன்.  

            அவ்வளவு எளிதாக என்னால் படித்து முடிக்கமுடியாத புத்தகங்கள் அதிகமாக உள்ளன.  எல்லாம் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.  எல்லாம் நாவல்கள்.  முழுவதும் படித்து முடித்தால்தான் எதையாவது அந்த நாவல்  பற்றிச் சொல்ல முடியும்.

            தினமும் எதாவது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எதையாவது எழுத வேண்டுமென்ற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறேன். முதலில் 50 நாட்களுக்குத்தான் இது.  இது எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும்.  அதன் பின் தொடர முடியுமா தொடர முடியாதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

            நான் இன்று எடுத்துக்கொண்டு படித்த நாவல் அசோகமித்திரனின் தண்ணீர்.   நற்றிணை வெளியிட்டுள்ள இந்த நாவலில் ந முத்துசாமி ‘தண்ணீர்’ என்ற நாவலைப் பற்றி எழுதியுள்ள நீண்ட கட்டுரை உள்ளது.  அதில் ந முத்துசாமி ‘தண்ணீர்’ என்ற நாவல் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் குறியீட்டு நாவல் என்று குறிப்பிடுகிறார்.  ஏன் அப்படி சொல்கிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  

            வண்ணநிலவன் பின் அட்டையில் இப்படிக் கூறுகிறார் : அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற அமர சிருஷ்டிகள் என்பேன்.என்கிறார்.

            அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலம் அவர் சூட்சுமமான எழுத்தாளர் என்பதை அறிந்து கொள்ளலாம்.  சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும், நாவல்கள் ஆகட்டும், குரலே உயர்த்தாமல் ஒருவித அழுத்தத்தை வாசிப்பவரிடம் உருவாக்கி விடுவார்.  அவருடைய எழுத்துக்களை வாசிப்பவர்களைத்  திரும்பத் திரும்ப அவருடைய எழுத்துக்களைப் பற்றியே யோசிக்க வைத்து விடுவார்.

            யமுனா, சாயா என்ற இரண்டு பெண்மணிகள். இருவரும் சகோதரிகள். யமுனா வயதில் மூத்தவள்.  சாயா படித்தவள். திருமணம் ஆனவள்.    மிலிட்டரியில் அவள் கணவன் பணிபுரிகிறான்.  எப்போது சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வரப்போகிறான் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறாள் சாயா.  முரளி என்ற ஆண்குழந்தை.  ஆனால் அவளுடன் வளரவில்லை.  சென்னையில் ஒரு ஒண்டு  குடித்தனத்தில்  வசிக்கிறார்கள்.  எவ்வளவு இடர்பாடுகள் இருக்குமோ அவ்வளவு இடர்பாடுகளுடன்.   அவர்கள் குடியிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீர்தான். 

            பாஸ்கர் ராவ் என்ற கயவன் யமுனாவிற்கு சினிமா ஆசையைக் காட்டி தன் இச்சைக்கு அவளைப் பயன்படுத்துகிறான்.  அவன் ஒருமுறை முனாவை அழைத்துக்கொண்டு போக வருகிறான்.  சாயாவிற்கு  அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை.  யமுனாவின் பலவீனத்தைப் பார்த்து அவளுடன் சேர்ந்து இருக்க வேண்டாமென்று தனியாகப் போய்விடுகிறாள்.

            யமுனா பாஸ்கர் ராவின் பலவீனத்திற்கு உடன்படுகிறாள்.  அங்கே ஒரு காட்சியை  அசோகமித்திரன் விவரிக்கிறார் : தினமும் அவனால் இழுத்துப் போகப்பட்டு யார் யாரோ பெயர் ஊர் பாஷை தெரியாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து குடித்துவிட்டு இரவெல்லாம் இருட்டிலும் விளக்கு வெளிச்சத்திலும் கிக்கிக்கி என்று வாய்விட்டு இளித்துச் சிரித்துக்கொண்டே காலம் கழிக்க வேண்டுமா? அவர்கள் சாராயத்தைத் தரும்போது அந்த தம்ளரைப் பிடுங்கிச் சாராயத்தை அவர்கள் மீதே ஏன் கொட்டி விட முடியவில்லை.

            பாஸ்கர் ராவ் படம் எடுப்பதற்குப் பணம் போடுபவர்களை வரவழைக்கிறான்.  இரண்டு இரண்டு பேர்களாக வருவார்கள்.  அவர்கள் முன் யமுனா படும்பாட்டை இப்படிச் சொல்கிறார் :

      இரு நெல்லூர் தடியர்கள் யமுனாவைத் துணியை அவிழ்த்து அந்த ஓட்டல்  அறையில் ஓட வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.  இந்தக் காட்சியைக் கற்பனை செய்ய முடியவில்லை.  சாயா யமுனாவை  விட்டுப் போய்விடுகிறாள்.  ஹாஸ்டலுக்குஇந்த சம்பவத்திற்குப் பிறகு யமுனா தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்.  ஆனால் அந்தத் தருணத்தில் வீட்டுக்காரி பார்த்துவிடுவாள்.  கத்து கத்தென்று கத்துவாள்.  வீட்டைவிட்டு காலி பண்ணச்சொல்லி ரகளை பண்ணுகிறாள். 

            யமுனாவை ஆறுதல் படுத்த இரண்டு மூன்று வீடுகள் முன்னால் டீச்சர் ஒருவர் வசிக்கிறார்.  அவருடைய கதையை அசோகமித்திரன் விவரிக்கிறார்.  அது இன்னுமொரு சோகக் கதை.  டீச்சர் யமுனாவிடம் தன் சோகத்தை விவரிக்கிறார். 

 யமுனாவிடம் டீச்சர் கொல்கிறார்என்ன ஆயிடுத்து அப்படி உனக்கு? உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளேதானிருக்குஉன் கண்ணுக்குள்ளேயிருக்கு.’

            அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள்.  மாமா வீட்டில் இருக்கிறாள்.  மாமா அம்மா நிலைமையைச் சொல்லி யமுனாவையும் சாயாவையும் வந்துபார்க்கச் சொல்கிறார்.  அம்மாவைப் பார்க்க இருவரும் கிளம்புகிறார்கள்.  சாயாவைத் திரும்பவும் பார்க்கும்போது தன்னுடன் வந்து இருக்கும்படி கெஞ்சுகிறாள் யமுனா.   அம்மாவைச்   சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை.  ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சாயாவின் வாரிசு முரளி அங்கேதான் இருக்கிறான்.  

            அடுத்த முறை சாயா யமுனா இருக்கிற இடத்திற்கு பாஸ்கர் ராவ் வருகிறான்.  அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு சைட் ஹீரோயின் கொடுப்பதாகச் சொல்கிறான்.  யமனா வேண்டாமென்று சொல்லி விடுகிறாள்.  அதற்கு அவள் சொன்ன காரணம்.  அவனுடைய  குழந்தையைச் சுமக்கிறாள்.  மூன்று மாதம் என்கிறாள்.  சாயாவுக்குப் பெரிய அதிர்ச்சிபாஸ்கர் ராவிற்கு நம்ப முடியாமல் இருக்கிறது. 

            இந்த அதிர்ச்சியை யமுனா சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள். இப்படி சகதியிலே மாட்டிண்டே அக்கா,’ என்கிறாள் சாயா.

 எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்பலேருந்தே  கவலைப்பட்டுண்டு  இருக்கணும்?’ என்கிறாள் யமுனா. 

            இந்த நாவல் முழுவதும் தண்ணீருக்காக இரவு பகலாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள்  படுகிறபாட்டை விவரிக்கிறது. 

       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.