கேட்டவரம்பாளையம் -ராம பஜனை மந்திரம்.

                                   “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

                                    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

                                    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

                                    இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

                                    (கம்பராமாயணம்: சிறப்புப் பாயிரம் 14.)

சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், போளூருக்குத் தென்மேற்கில் 20 கிமி தொலைவில் அமைந்துள்ள சிறிய, அழகிய கிராமம் கேட்டவரம்பாளையம். போளூரிலிருந்து, வீரளூர், மேல்சோழங்குப்பம் செல்லும் பேருந்துகள் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் நிற்கும்.

முன்னொருகாலத்தில் ‘கஷ்டஹரம்பாளையம்’ – கஷ்டங்களை நிவர்த்திக்கும் இடம் – என்றழைக்கப்பட்ட இடம்;  இங்கு எழுந்தருளியிருக்கும் இராமன், பக்தர்கள் கேட்ட வரங்களை அளிக்கவல்லவன்  என்பதால், ‘கேட்டவரம்பாளையம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

1907 ஆம் ஆண்டு முதல், வருடம்தோறும் பத்து நாட்கள் இங்கு ‘இராம நவமி’ உற்சவம் கொண்டாடப்படுகின்றது. ஶ்ரீ ஜானகிராம தீட்சிதர், முதன் முதலாகச் சிறிய அளவில் ‘ராம நவமி’ உற்சவம் இங்கு தொடங்கினார். இந்த வருடம் 118 ஆம் ஆண்டு ஶ்ரீராமநவமி மஹோத்ஸவம்!

திண்ணைகளும், மரத்தூண்களும், ஓடு வேய்ந்த கூரைகளும், தாழ்வாரங்களும், முற்றமும் கொண்ட, சுமார் முப்பது வீடுகள் எதிரெதிராக அமைந்துள்ள அழகிய அக்ரஹாரம். அதன் நடுவில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்துள்ளது ‘ஶ்ரீராம பஜனை மந்திரம்’. அக்ரஹார வீடுகளில் ஒன்று, அழகிய மண்டபமாக மாற்றப் பட்டு, அதில் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம், ‘ஶ்ரீராமர் பட்டாபிஷேகம்’. நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளது. (தஞ்சாவூர் ஓவியங்கள் மரப்பலகைகளில் வரையப்பட்ட ‘பேனல் ஓவியங்களா’கும். இவை ‘பலகைப் பதம்’ (மரப்பலகைப் படம்) என்றும் குறிப்பிடப்படுகின்றன. சிவப்பு, நீலம், பச்சை போன்ற அடர் வண்ணங்களில், கண்ணாடித் துண்டுகள், மணிகள்,  வண்ணக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓவியங்கள்!). மண்டபத்தின் தரை அந்தக்கால மண்தரை. அமர்ந்தபடி, ஶ்ரீராமர் பட்டாபிஷேகக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் – மனதில் நிம்மதியும், அமைதியும் தானாக வந்து அமர்ந்துகொள்ளும்!

இந்த ‘ஶ்ரீராம பஜனை மந்திரம்’, ஒரு பண்டைய கோயிலோ அல்லது வழிபடும் சிலைகளோ கிடையாது. ஆனாலும், அந்த மண்டபத்தில் நிலவும் சாநித்தியமும், ஆன்மீக அதிர்வுகளும், பக்திப் பிரவாகமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது – அனுபவித்து உணரவேண்டும்.

                 கதாவு பஞ்சபாதகங்களைத் துறந்த மந்திரம்

                ஸதாவிடாமலோதுவார் தமக்கு நல்ல மந்திரம்

             இதாமிதாமி தல்லவென் றெடுத்துறைக்கு மேழைகாள்

                      இதாமிதாமி ராமராமவென்னும் நாமமே.

ஒரு சில வீடுகளைத் தவிர மற்ற வீட்டுச் சொந்தக்காரர்கள், வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் உள்ளனர். அவர்களில் பலரும், இராமநவமி உற்சவத்தில் கலந்து கொள்ள ஆண்டுதோறும் வந்துவிடுகிறார்கள். பத்து நாட்களும், அக்ரஹாரம் அடைத்த பந்தல்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள், விளக்குகள் என ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுற்றி உள்ள கிராமத்து மக்களும் குடும்பத்துடன் வந்து, உற்சவத்தில் கலந்து கொள்கின்றனர்.

உற்சவத்தின் சிறப்பு பத்து நாட்களும் நடைபெறும் பஜனைகள்! வித்தியாசமாக, எவ்வளவு நேரமானாலும் நின்றபடியே ராம நாம பஜனை நடைபெறுகின்றது. பூஜை நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் தொடர்ச்சியாகப் பல குழுக்களால், சம்ப்ரதாயப் பஜனைப் பாடல்கள் பாடப்படுகின்றன. பாடல்களுடன் கும்மியும், ஆட்டமும் உண்டு!  இரவு பத்து மணிக்குமேல் பெரியோர்களைக் கொண்டு திவ்ய நாம ஸங்கீர்த்த பஜனை நடத்தப்படுகின்றது. கலிகாலத்தில் இறைவன் பெயரை உச்சரித்தாலே முக்தி. ‘நாம சங்கீர்த்தனம்’ மட்டுமே இறைவன் திருவடிகளை அடையப் போதுமானது! கேட்டவரம்பாளையத்தில் பத்து நாட்களும் இராம நாமம் கேட்டவாறே இருக்கும் – ராமனைப் பார்ப்பதுவும், அவன் அருளை உணர்வதுவும் தொடர்ந்து நடைபெறும்.

உற்சவ ஆரம்பத்தில் (ஶ்ரீராம நவமி), கலசத்தில் புன்ணிய தீர்த்தம் நிரப்பி, அலங்கரித்து பகவான் ஶ்ரீராமனை ஆவாகனம் செய்து, படத்திற்கு முன் வைத்து, பத்து நாட்களும், நான்கு வேதங்கள், அஷ்டபதிகள், நாராயணீயம், பாகவதம், தேவாரம் மற்றும் இலட்சார்ச்சனை செய்து பூஜை செய்யப்படும். பட்டாபிஷேகத்திற்கு முந்தைய தினம் மாலை ‘சீதா கல்யாண’ வைபவம் நடைபெறுகிறது. மறுநாள் பட்டாபிஷேகம் – வேதங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசத்திலிருந்து, புண்ணிய தீர்த்தம் எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது. தம்பதிகளுக்கோ, எண்பது வயது தாண்டியவர்களுக்கோ, ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கோ – இந்தக் கலச நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறது. பதினோராம் நாள் ஹனுமந்த உற்சவம். ஒரு பக்தர் மீது ஹனுமார் வருவதாக ஐதீகம் – மிகுந்த பலத்துடன், தன்னை மறந்த நிலையில் அவர் செய்கைகள் – மரத்தில் ஏறுவது, பழங்களைத் இன்பது, தரையில் முட்டிக்கொள்வது, பஜனை கோஷ்டியைச் சுற்றி வருவது – நம் கண் முன் ஶ்ரீராம பக்த ஹனுமானைக் கொண்டுவந்து நிறுத்தும்.

உற்சவத்தின் பத்து நாட்களும் ‘உஞ்சவிருத்தி’ எடுப்பது – பாகவதர்கள் பஜனைப் பாடல்கள் பாடியபடி, வீடு வீடாகச் சென்று ‘பிக்‌ஷா’ கேட்டு, அரிசி வாங்கி, அதை ஶ்ரீராமனுக்கு அர்ப்பணிப்பது  ஒரு மரபு. பக்தியின் ஒரு நிலை. 

பத்து நாட்களும் காலை காப்பி, டிபன்; மதியம் சாப்பாடு. மாலை காப்பி; இரவு டிபன் அல்லது சாப்பாடு என வருகின்ற அனைவருக்கும் – வேளைக்கு 300 பேருக்குக் குறையாமல் – அன்னதானம் செய்யப்படுகின்றது. இதற்காகப் பிரதியேகமான சமையலறை, உணவுக்கூடம் எல்லாம் மண்டபத்தின் பின்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்போது 16 குழந்தைகள் வேதம் பயிலும் வேத பாடசாலை ஒன்று ராம மந்திரம் டிரஸ்டு மூலம் நடதப்பட்டு வருகிறது. இதைத் தவிர ‘கோசாலை’ ஒன்றும் பராமரிக்கப்படுகின்றது. வருபவர்கள் தங்குவதற்கான அறைகள், பெரிய ஹால்கள், வராந்தாக்கள் உள்ள வீடுகள் உள்ளன.

இந்தக் கிராமத்தில் ஒரு அழகிய சிவன் கோயிலும் – ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – உள்ளது.

கேட்டவரம்பாளையத்திலிருந்தே, அருகிலிருக்கும் பர்வத மலையைத் தரிசிக்க முடியும். இரண்டு கிமீ தொலைவில் உள்ள மலைக்கோயிலில் – 192 படிகள் – பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள் சந்நதிகள் உள்ளன. கோயிலைச் சுற்றி, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சை பசேலென்ற வயல்களும், மரங்களும், அரண் போன்ற மலைகளும் கண்ணுக்கு விருந்தாக உள்ளன. பெருமாளின் அருள், குளிர்த்தென்றலாய் மலைமீது நம்மைத் தழுவிச் செல்வது பேரானந்தம்! வேங்கடேசப் பெருமாளும் கேட்ட வரத்தை அருள்பவனே!

காஞ்சி மஹா பெரியவர் ஒரு முறை பர்வத மலை வலம் வரும்போது, கேட்டவரம்பாளையம் பற்றிக் குறிப்பிட்டதாகச் செய்திகள் உண்டு. அப்போது பிரபல எழுத்தாளராயிருந்த அநுத்தமா அவர்களை, கேட்டவரம்பாளையத்தில் நடக்கும் ஶ்ரீராமநவமி உற்சவம் பற்றி எழுதச்சொன்னதாகவும், அதை வைத்தே, ‘கேட்டவரம்’ நாவலை அநுத்தமா எழுதியதாகவும் கூறுவர். கதையுடன், பத்து நாட்கள் நடக்கும் ராமநவமி உற்சவத்தைப் பற்றியும் எழுதியிருப்பார் – வாசிக்கவேண்டிய நல்ல நாவல் அது!

மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, இந்த மண்டபத்திற்காக தங்கள் வீட்டைக் கொடுத்தவர்களின் சந்ததியினர் எங்களுக்குக் குடும்ப நண்பர்கள். அவர்கள் சொல்லியே, கேட்டவரம்பாளையம் பற்றி நான் அறிந்துகொண்டேன். இந்த வருடம் சீதா கல்யாணம், இராமர் பட்டாபிஷேகம் காணும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றேன். இராமனுடைய அனுக்கிரகத்தால், இம்முறை இராம கலச தீர்த்த அபிஷேகமும் செய்விக்கப்பட்டோம் – எல்லாம் அவன் செயல் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? 

வாழ்க்கையில் ஒரு முறையேனும் கேட்டவரம்பாளையம் சென்று வருவது அவசியம் என்பர் பெரிய மகான்கள்!

ஜெய் ஶ்ரீராம்!