சில நாட்களாக, ஜோஸின் தூக்கத்தில் மாற்றங்கள். உணவு பிடிக்காமல் போவது, சுறுசுறுப்பாக இல்லாதது இவையெல்லாம் கூடி வருவதினால் மனச்சோர்வோ என ஜோஸுக்குத் தோன்றியது. இதைப்பற்றி நான் எழுதிய சிலவற்றைப் படித்திருந்ததால் என்னை ஆலோசிக்க முடிவெடுத்து வந்தார்.
ஜவுளி வடிவமைப்பாளரான முப்பது வயதான ஜோஸ் தம்மிடம் கவனித்து வந்த இதுபோன்ற பல மாற்றங்களை விவரித்தார். ஆரம்பத்தில் தம்மை ஊக்கப்படுத்திக் கொள்ளச் சிரமப் பட்டதாகவும், நாள் முழுவதும் தளர்ந்திருப்பது கடந்த பல மாதங்களாக ஓய்வு நாள் ஏதும் எடுக்காததாலும் என்று எண்ணி விட்டார்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் வருவது அபாயச் சின்னம் என்றும் தாமதமின்றி மனநல மருத்துவரை அணுகியாக வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.
நாட்கள் நகர, எதைச் செய்தாலும் உற்சாகம் இல்லை. உந்துதல் குறைந்திருப்பதை உணர்ந்தார். ஒவ்வொரு செயலும் இமய மலை ஏறுவது போலத் தோன்றியது.
இவையெல்லாம் அதிகரிக்கும் நிலையில், வார இறுதிகளில் நண்பர்களுடன் விரும்பி செய்துவந்த வெகு தூரம் சைக்கிளில் போவதும் நீச்சலும் ஒதுக்கிவிடப்பட்டது. நண்பர்கள் அழைப்பையும் நிராகரித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக ஜோஸ் விவரித்தார்.
சமீபகாலமாக ஜோஸ் வேலைக்குக் கிளம்புவதைச் சுமையாகக் கருதினார், எதைச் செய்தாலும் தரம் குறைவாகச் செய்வதாக எண்ணினார்.
இந்தப் போக்கைக் கவனித்த டீம் லீடர் தொடர்ந்து உரையாடலில் மருத்துவரை அணுகப் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்டார் ஜோஸ். மருத்துவர் உடல் நலம் சரியாக உள்ளதாகக் கூறி மனச் சஞ்சலங்களைச் சரிசெய்யச் சொன்னார். மனநலம் பற்றி ஜோஸ் படித்திருந்ததால் என்னிடம் ஆலோசிக்க வந்தார்.
ஜோஸின் அணுகுமுறை நலனின் மேல் அக்கறையைக் காட்டுகிறது! இவர் போன்றவர்கள் ஸெஷனில் முழு கவனமும் தெரப்பியில் ஒத்துழைப்பும் தருவதால் இன்னல்களைப் புரிந்துகொண்டு, வளங்களைப் பிரயோகித்துக் கொள்ளும் வழிமுறையை மேற்கொள்வார்கள்.
ஆராய்ச்சியும் இவற்றை நிரூபித்ததுண்டு! மனநல சிகிச்சைக்கு முழு மனதுடன் வருவோரின் பங்கேற்பு முழுமையாக இருக்கும். பலன் அடைவார்கள். இன்னல்களை இருப்பதை ஏற்றுக்கொள்வதில், சிக்கல்களைத் தீர்ப்பதில் தெரப்பி உதவும்.
ஜோஸைக் கடந்த மாதங்களில் நேர்ந்த பிரச்சினைகளை, தேடிய தீர்வுகளைப் பற்றி விவரிக்கச் சொன்னேன். ஒவ்வொரு கட்டத்திலும் ஜோஸ் மீண்டும் மீண்டும் கூறியது, ஆதரவான குடும்பமும் நண்பர்களையும் பற்றி. எந்த அசம்பவமும் நடக்கவில்லை என உறுதியாகக் கூறினார். தன்னையே கோபித்துக் கொண்டார்.
ஸெஷனை ஜோஸ் அனுபவித்திருக்கும் இன்னல்களிலிருந்து ஆரம்பித்தேன். இந்த நிலை மற்றும் அவற்றின் சுற்றம் சூழலைப் பற்றி அறிந்துகொள்ளத் தகவல்களைச் சேகரித்தேன். இதன் மூலமாக ஜோஸ் ரிஸ்கின் விசையூட்டி எவை என்பதைப் புரிந்து கொண்டார். இது துப்பறியும் சாயலில் உள்ளதாகச் சொல்லி நகைத்தார்!
ஜோஸை தன் பலத்தை அறிய, கடந்த மூன்று மாதங்களாக எவ்வாறு இருந்தார் என்றதை முதலில் முன்வைக்கச் சொன்னேன். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பைச் சார்ந்த விவரங்களையும் நினைவூட்டிக் கூறச் சொன்னேன். முழு மனதோடு ஜோஸ் செய்து வருகையில் தமக்கு ஏற்பட்ட உதாசீனத்தின் காரணங்களும் அவற்றின் சூழலும் புரிந்தது.
ஜோஸின் தெய்வபக்தியைக் காதலியான மேரி கேலி செய்வாள். அதனால் மிகவும் சங்கடப்பட்டார்.
நாளடைவில் நான்கு வருடப் பழக்கத்தை மேரி தயக்கமின்றி வெட்டி விட்டாள். ஜோஸின் அக்காவும் இதே நேரத்தில் பதவி உயர்வு பெற்று இடம் மாற்றலாகி வெளியூர் சென்றாள்.
நமது வாழ்க்கையில் இதுபோன்ற திடீரென சம்பவங்கள் தோன்றினால் அதனால் தாக்கம் நேரலாம். திறன்கள் தளரலாம், தைரியம் குறையலாம். மனம் தளர்ந்தார் ஜோஸ்.
குடும்பத்தின் பக்க பலமான அக்கா சென்று விட்டதால் அந்த இடைவெளியை நிரப்ப முடியாது என எண்ணி விட்டார் ஜோஸ். பிரியமானவள் உதறி விட்டதும் வாட்டியது.
உளவியல் ரீதியாகப் பார்க்கப் போனால் வாழ்க்கையின் சில திருப்பங்கள் நம்மைப் பாதிக்கும். அதே சமயத்தில் சூழலுக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டால் எதிர்கொள்ள நமக்கு இருக்கும் வளங்களை உபயோகிப்போம்.
ஜோஸ் இதை அறிவதற்கு ஸெஷன் தேவையானது. பல ஸெஷன்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில் தன் உணர்வை ஒப்பிடும்போது ஒன்று தெளிவானது. மேரியின் பேச்சினால் நேர்ந்த காயத்தை இப்போதுதான் பார்த்தார். இதுவரை, மேரி பேசியது அநாகரீகம் மற்றும் தவறு செய்தாள் என்ற எண்ணம் மனதை வாட்டியது. மனம் நோகச் செய்த செயலால் மனதில் நிழலாடிய கோபத்தையும் வேதனைப்படுத்தியதையும் உணரவில்லை, அடையாளம் காணவில்லை.
மேரியின்மேல் இருந்த அன்பினால் தமக்கு ஏற்பட்ட காயத்தைப் புதைத்து விட்டார். தெரப்பியில் இதை ஆழ்ந்து பார்க்க, தன் நற்குணத்தை உணர்ந்து, குற்ற உணர்ச்சி இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
உறவில் கேலி ஒரு சொட்டு இருக்கலாம். அதுவே படர்ந்து இருந்தால் உறவின் வலிமை முறிந்து விடும். இதுதான் ஜோஸ் அனுபவித்தது.
மேரி உறவை முறித்ததை எடுத்துக் கொண்டோம். பலர் முன் ஜோஸை ஏளனமாகப் பேசுவாளாம் மேரி. பலர் முன் “ஏய் வாங்கிண்டு வா” எனச் சொல்வது. கூப்பிட்டதும் வரவில்லை என்றால் தகாத வார்த்தைகளால் ஏதோ சொல்வது. வீட்டினர், நண்பர்களிடமும் சர்ச் பாதிரியாரிடமும் ஜோஸைப் பற்றி கேலியாகப் பேசுவது.
சமீபகாலமாக ஏற்றப்பட்ட சங்கடங்களை ஒவ்வொன்றாகப் பகிர்ந்தார். போகப்போக ஒரு நிலையில் மேரி இவ்வகை செயல்பாட்டிற்கு ஈடுகொடுக்க மனம் வரவில்லை. இதை யாரிடமும் பகிரவில்லை. வீட்டினருடனும் நண்பர்களுடனும் இதைப்போல் விஷயங்களைப் பகிர்ந்தது கொள்வதே உறவிற்குக் கொச்சை என்ற எண்ணம் மனதிற்குள் புதைந்திருப்பதை வெளியிட்டார். அதனால் மனம் மேலும் வருடியது.
மேரியின் செயலால் ஜோஸ் மீது ஏற்பட்ட பாதிப்பை ஆராய்ந்தோம். மேரியின் செயல்பாட்டில் உணர்வு மற்றும் சமூக வன்முறை வடிவங்கள் உள்ளது எனப் புரிந்து கொண்டார்.
பலமுறை நாமே நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். இதைத்தான் அவளிடமிருந்து பிரிவு செய்தது என்று ஜொஸிற்கு இப்போது தெளிவு கிடைத்தது!
இந்த புரிதல் இல்லாததால் மனம் தளர்ந்த நிலை நேர்ந்தது. இந்த நிலையில் சரியாகச் செயல்பட மாட்டோம். முயன்றால் முடியும் என்ற வற்புறுத்தல் ஊக்கத்தை வரவழைத்து விடாது.
காதலை உதறிவிட்டுச் சென்று விட்டாள் மேரி. முறிவின் தாக்கத்தால் மற்ற உறவுகளிலிருந்தும் ஜோஸ் விலகினார். மனநிலை பலவீனமாயிற்று.
ஒன்றுக்குப் பின் ஒன்று நேர்ந்ததில் அவற்றையே சிந்தனையில் வட்டமிட்டதால் மனச்சோர்வு நீடித்தது. மற்றொரு காரணம், நேர்ந்ததற்கெல்லாம் தாமே பொறுப்பு எனத் தன்னையே கண்டித்துக் கொண்டது.
ஸெஷன்களில் இவற்றின் சூழலை மறுபரிசீலனை செய்ததும் ஜோஸிற்கு சூழலால் தனிமைப் படுத்திக் கொண்டது விளங்கியது.
மனத்தெளிவு வரவர, ஜோஸின் மனநலம் சுதாரித்தது! நிலை நீடித்திருக்கப் பல திட்டங்களை ஜோஸ் தீட்டினார்.
ஆராய்ச்சியில் கூறியிருப்பது, பிடித்தமானவற்றைச் செய்தால் பயன் பெறுவோம்; தொடர்ந்து செய்வோம்! ஜோஸ் எவற்றைச் செய்தால் தாம் விரும்பும் நிலைமையை அமைக்கும் என்றதை ஆராய்ந்து தேர்வு செய்யத் தொடங்கினார். அத்துடன் குறிக்கோளுடன் செயல்படத் தொடங்கினார். உற்சாகம் அதிகரித்தது. உணவு பிடித்தது. சங்கடமில்லாமல் தூங்கினார்! மனச்சோர்வும் மறைந்தது!
தன்னை அறியாதவர்களுக்கு உதவுவது என்றென்றும் ஜோஸிற்குப் பிடித்தமானது. ஆர்வத்துடன் மனம் மகிழ்ந்து ஜோஸ் செய்தார். உத்வேகம் கூடியது. இதை ஜோஸ் ஆராய்ந்ததில் புரிந்தது, எதிர்பார்ப்பின்றிச் செய்வதால் ஆத்ம திருப்தி அளித்ததென்று!
குடும்பத்தினரிற்கு ஆதரவளிப்பதற்கு ஏதோ ஒன்றைச் செய்ய முடிவானது. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு Action speaks louder than words (“செயலே வார்த்தைகளை விட உரக்கப் பேசும்”)! முடியும் போதெல்லாம் சமையலில், தோட்டத்தில், அவர்களுடன் நேரம் கழிப்பது எனப் பல. முன்னேற்றங்கள் ஏற்பட்டன!
நண்பர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து தன் நிலையை விளக்கினார். அவர்களுடன் தனக்கு பிடித்தமான நீண்ட நடை, நீச்சல், கால்பந்து விளையாட்டை ஆரம்பித்தார். மாத இறுதியில் மலையேற்றம், நீண்ட பயணங்கள் எனப் பல கூடியது!
இந்த நிலையில் வேலையில் அதிகப் பங்களிப்பு, மற்றவர் செயல்படுவதைப் பார்வையிடுவது இவை துவங்கியது. இதன் பின்னோட்டத்தைப் பார்வையிட்டோம். தன்னைத் தாழ்த்தி நினைக்க, அந்த சிந்தனையின் பொருளின் உண்மையை ஆராயாமல் நம்பியதால் மனம் தளர்ந்திருந்தார். இனி, இவ்வாறு நேரும் போது அதனுள் உள்ளதை ஆராய, எத்தனை அதில் சரி எவை தேவையற்றவை என்று பிரித்துப் பார்த்துச் செயல்பட முடிந்தது.
முழு மனதோடு செய்வதை டீம் லீடர் பலமுறை புகழ்ந்தார். வேலையின் தரம் உயர்ந்ததை ஜோஸ் கவனித்தார். உடல் நலனின் தாக்கத்தை மனமும் உணர்வும் காண்பிக்கும்! மனத்தின் வலிமையை பல்வேறு முறைகளில் காண்பிப்பதை ஜோஸ் புரிந்து கொண்டார். இவற்றை அனுபவத்தினால் உணர்ந்தார். முக்கியமாகத் தன்னைத் தானே இரக்கமுள்ள கண்ணோட்டத்தில் கருதியதால் பெற்ற பலன் என்றதையும் உணர்ந்தார்.
தான் கடந்து வந்த நிலையையும், தாக்கிய நிலையையும் கடந்து வந்த பாதையையும் மதிப்பாய்வு செய்தோம். மருத்துவரைச் சந்தித்தபோது அவர் ஜோஸ் நன்றாக நலம் பெற்றதைக் கூறினார். ஜோஸ் மகிழ்ச்சியடைந்தார்!
மனச்சோர்வை அடையாளம் கண்டுகொண்டு
ஸெஷனால் மன வலிமை பெற்றார்
மீண்டும் மனோதிடம் பெற்றார்!
*******************************

