ஆட்டோவில் வந்து இறங்கியதும் எனக்குள் ஏதோ பதற்றமாக இருந்தது. கைகடிகாரத்தைப் பார்த்தேன் காலை மணி பத்து என்று காட்டியது.
கோடை வெயில் இன்னும் கொதிக்கத் தொடங்கவில்லை. தெருவின் இருபுறமும் நெருக்கமாக அடுக்கப்பட்டது போல் வீடுகள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நேர்த்தியாக வளர்க்கப்பட்ட மரங்களின் நிழல்கள் படர்ந்துகிடந்தன.
அக்கம் பக்கத்து வீடுகளில் சில பெண்கள் ஆடைகளை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். காற்றில் ஆடும் வண்ண வண்ண ஆடைகள் அழகாய்த் தெரிந்தன. கொஞ்சம் தெம்பு வந்தது போல் உணர்ந்தேன்.
சில வீடுகளில் தொலைக்காட்சி சத்தம் கேட்கிறது.
சற்றுத் தொலைவில் சிறுவர்கள் பந்து விளையாடியபடி, சிரித்துக்கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
வலது பக்கம் ஒரு வீட்டின் முன்னால் அடர்ந்த புங்கை மரம். அந்த மரத்தின் நிழல், மஞ்சள் பூக்களின் மணம் கலந்து அந்த வீடு அமைதியாய் சுவாசித்துக்கொண்டிருப்பது போலிருந்தது. ரம்மியமான சூழல்.
சிறிய காம்பவுண்டு சுவர், பளபளப்பாகப் பூசப்பட்ட கதவு, மூடியிருக்கும் ஜன்னல். வாசலுக்கு முன்னால் ஒழுங்காக அடுக்கப்பட்ட செடிப்பானைகள்.
“அங்கிள் சொன்ன வீடு இதுவாதான் இருக்கும்” என்று மனதில் நினைத்தபடி முன்கேட்டுக்குப் பக்கத்தில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினேன்.
காம்பவுண்டுக்குள் எங்கோ மல்லிகைச் செடிகள் இருக்க வேண்டும். நாசியில் மெதுவாக மணம் ஏறியது. என் கண்கள் மல்லிகையைத் தேடின. சின்னச்சின்னப் பானைகளில் கற்றாழை, துளசி என ஏதேதோ செடிகள்தான் கண்களுக்குத் தெரிந்தன.
பெல் அடித்த சில வினாடிகளிலேயே கதவைத் திறந்து ஒரு பெண் எட்டிப்பார்த்தாள்.
“யார் நீங்க?” அவளின் குரலும் விழிகளும் ஒன்றாய்க் கேட்டன.
“நா… நான் சங்கமித்ரா.” ஏனோ பேசத் தயங்கினேன்.
அந்த வீட்டில் ராகவன் என்று ஒரு பெரியவர்தான் இருப்பார் என நாராயணன் அங்கிள் சொல்லியிருந்தார்.
“ஓ, நீ தானா? உள்ள வாம்மா” என்று கூறிக்கொண்டு அந்தப் பெண்மணி வெளியில் வந்து, புன்னகை சிந்தியபடியே கேட்டைத் திறந்துவிட்டுத் திரும்பி நடந்தாள்.
நீளமான கூந்தல், அழகான பின்னல். சற்று பருமனான உடல், மாநிறம், குண்டுக்கன்னம், அழகாய் பூ வேலை செய்த நூல் சேலை கட்டியிருந்தாள். நடிகை சரிதாவை நினைவுபடுத்தும் உருவம்.
“இங்க ராகவன் சார்னு?” கேட்டேன்.
“உள்ளதான் இருக்கார்” என்று திரும்பி என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ராகவன் சார் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று என்னை விட்டுவிட்டு சமையல் அறையை நோக்கிப் போய்விட்டாள்.
அப்பா இந்த வேலையைப் பற்றி சொன்னபோது எனக்குக் கோபம்தான் வந்தது.
நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்றால் பரவாயில்லை. ஆனால் ஒரு நாளுக்கு எட்டு மணிநேரம் முதியோர்களிடம் பேசிக்கொண்டு மட்டும் இருக்க வேண்டும் என்பது ஒரு வேலையா?, அதற்கு இந்தப் பட்டப்படிப்பு எதற்கு?
நாராயணன் அங்கிள் சொன்னாராம்.
“சில வீடுகளில் பிள்ளைகள் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவார்கள். ஆனால் சிலர் சொந்த வீட்டிலேயே தனிமையில் இருப்பார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்க ஒருவரை வேலைக்கு வைப்பார்கள். தினசரி எழுநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளமாம்.”
அப்பா,”படிப்புக்கு ஏற்ற அனுபவம் நிறையக் கிடைக்கும்” என்று சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தினார்.
அம்மாவும், “ரெண்டு நாள் போய்த்தான் பாரேன்டி. பிடிக்கலைன்னா வந்துடு. யாரும் உன்னை கட்டாயப்படுத்தல.” என்றதால் ‘சரி’ என்று நானும் ஏற்றுக்கொண்டேன்.
“நீ யாரும்மா?” கரகரவென்ற குரலில் கேட்டார் ராகவன் சார்.
“நான்… சங்கமித்ரா.” எனக்கு குரல் நடுங்கியது.
“என்ன விஷயம்?” என்று கேட்டதும், என்ன சொல்லுவது என்று குழம்பினேன்.
நாராயணன் அங்கிள் கொடுத்த பிரணவ் என்பவரின் எண்ணுக்குப் போன் செய்து, அவரிடம் பேச வைத்தேன். பிரணவ் ராகவன் சாருடைய மகன்.
பேசிவிட்டுப் போனை திருப்பிக் கொடுத்தவர், “ஆமா, சொன்னான்.மறந்துட்டேன்” என்றார்.
கண்ணாடிக்குள் தீர்க்கமாகத் தெரியும் விழிகள். நரைத்திருந்தாலும் அடர்த்தியாக இருக்கும் முடி. வெள்ளை அரைக்கை சட்டை, சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தார். காபியுடன் வந்தாள் அந்தப் பெண்.
“இவ பேரு நளினி”ராகவன் சார் அந்தப் பெண்ணைக் காட்டிக் கூறினார்.
அவள் மெலிதாய் சிரித்தாள். நானும் பதிலுக்கு சிரித்தபடி தலையாட்டினேன்.
“நளினி, சமையல் செய்துட்டுப் போய்டுவா. அப்புறம் நான் தனியாத்தான் இருப்பேன். நைட்டு தூக்க மாத்திரை போட்டுக்கிட்டு நல்லா தூங்கிடுவேன். எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி இருக்கு.
பிரணவ், அவன் கூட வந்து இருக்கச் சொன்னான். ஆனால் நான் இந்த வீட்டைவிட்டு வரமாட்டேன்னு உறுதியா சொல்லிட்டேன்.
ஆனா பத்மினி, மகன் தான் முக்கியம்னு அவன் கூடப் போயிட்டா. அவ என் கூட இருந்த வரைக்கும் நான் ராஜா மாதிரி இருந்தேன்”
பேசிக்கொண்டிருக்கும்போது ராகவனின் குரலில் ஒரு சிறிய நடுக்கம். “டாக்டர் சொன்னாராம், யாராவது கூட இருந்து பேசிக்கிட்டிருந்தா நான் குணமாகிடுவேனாம். குணமாக என்ன இருக்கு? நான் என்ன பைத்தியமா? இப்போ நல்லாத்தானே பேசிட்டு இருக்கேன்?”
அவர் சிரிக்க முயற்சி செய்தார். அந்த சிரிப்பால் அவருக்குள் அடங்கிய வலியை மறைக்க இயலவில்லை.
நளினி சென்றதும் அவர் சிறுகுழந்தை போல் பேச ஆரம்பித்துவிட்டார்.
சிறு வயது நினைவுகள், அவருடைய அம்மா பற்றிய ஏக்கங்கள், அப்பாவின் வேலை பற்றிய கதைகள் என்று ஏதேதோ ஆனால் மிகவும் சுவரஸ்யமாகப் பேசினார்.
பொக்கை வாயில் ஒரு பிள்ளைத்தனச் சிரிப்பு. நான் அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கிறேன் என்பதை உணர்ந்த அவர் முகத்தில் ஒரு குதூகளிப்பு.
அவர் மகனைப் பற்றிப் பேசும்போது இப்போது கூட ஒரு குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு, கொஞ்சுவது போல் இருந்தது அவரது பாவனை.
அடிக்கடி மனைவியின் நினைவு வந்து கலங்கிவிடுகிறார். சமையலறை நோக்கி, “பத்மினி.., ஏய் பத்தூ…” என்று குரல் கம்மக் கத்துகிறார்.
“ச்சே, இப்படி பிரியமாய் இருக்கும் ஒருத்தர விட்டுட்டு மகன்தான் முக்கியம்னு போக எப்படித்தான் அந்த அம்மாவுக்கு மனசு வந்துச்சோ?” என்று எனக்குள் புலம்பிக்கொண்டேன்.
நான் அவரிடம் பேசியதை விட அவர் தான் என்னிடம் அதிகம் பேசினார்.
அன்று மாலை சரியாக ஆறு மணிக்கு என்னைக் கிளம்பச் சொல்லிவிட்டார்.
நான் வெளியில் வந்து பிரணவ்விற்குப் போன் செய்து சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
வாசல் தாண்டுவதற்குள் என் வங்கிக் கணக்கில் எழுநூற்றி ஐம்பது ரூபாய் சேர்ந்து விட்டதற்க்கான குறுஞ்செய்தி வந்து என் செல்போனுக்குள் விழுந்தது.
அடுத்த சில நாள்களில் எனக்கு ராகவன் சார் பழகிப் போனார். ஆனால் ஒரு தடுமாற்றம் என்னை முதல் முறையாகப் பார்ப்பது போல், “யார் நீ?” என்று நித்தமும் கேட்பார். சில நிமிடங்களில் நினைவுக்குத் திரும்பியவராய்ப் பேசுவார்.
ஒரு மாலை, அவர் ஆல்பங்களை எடுத்துக் காட்டினார். பழைய கருநிறப் படங்களில், பத்மினி அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ராகவனின் முகத்தில் அந்தப் படம் ஒரு பிரகாசத்தை ஏற்றியது. அந்தப் பிரகாசம் சில வினாடிகள் தான்.
“அவளும் நானும் பேசிப் பத்து வருடங்கள் ஆச்சு” என்றார்.
“ஏன்?” என்று கேட்டேன்.
அவரின் பார்வை ஜன்னல் வழியாக வானத்தை நோக்கியது. “பிஸ்னஸ் காரணமா நான் ஊர் ஊரா சுத்தினேன்.
என் பிஸ்னஸ் எதிரிங்க, ஒரு பெண்ணை நடிக்க வைத்து பத்மினியிடம் என்னைப் பற்றி தப்பாக கதை கட்டிவிட்டார்கள். அது உண்மை என்று நம்பி, பத்மினியும் என்னை வெறுத்துவிட்டாள்.” சொல்லிக்கொண்டே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக்கொண்டார்.
ஒருநாள், ‘இது அவளோட கல்யாணப் புடவை” என்றவரின் குரல் மெதுவாகத் தணிந்தது. மௌனம். அந்த மௌனத்தில் அவரது கடந்த காலத்தின் பாரத்தை உணர்ந்தேன்.
ஒரு வாரம் ஆகியிருந்தது. என் தோழி காயத்ரி அழைத்தாள். ஒரு பெரிய இயக்குனரிடம் அவளுக்கு உதவி இயக்குனர் வேலை கிடைத்திருப்பதாகவும், எனக்கும் பேசி வைத்திருப்பதாகவும் சொன்னாள்.
எனக்கு மனதளவில் மகிழ்ச்சிதான், ஆனால் ராகவன் சாரின் முகம் நினைவுக்கு வந்தது.
மூச்சுக்கு மூச்சு, பத்மினி பற்றியே பேசும் அந்த முதியவர். “அவள் வந்து பேசினால் இன்னும் பத்து வருடம் நான் நலமாக உயிரோடு இருப்பேன்” என்று சொல்வார்.
ஆனால் அவரது மகனின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.
“அவர் மகனிடம் இது பற்றி நாம் பேசினால் என்ன?” என்று எனக்குத் தோன்றியது.
அன்று மாலை பிரணவ்விற்கு நானே போன் செய்து தைரியமாகக் கேட்டேன்.
“சார், உங்க அம்மா, அப்பா இப்படி கடைசி காலத்துல பிரிஞ்சி இருக்குறது உங்களுக்கே நியாயமாப் படுதா?”
சில நொடிகள் அமைதி. பின்னர், “அவர் அம்மாவுக்கு துரோகம் செய்தவர். அம்மா பண்ணது சரிதானே?” என்றார்.
நான் விடவில்லை. “ப்ளீஸ்… உங்க அப்பாவுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறேன். அவர் பாவம்.”
அவர் பெருமூச்சு விட்டார்.
“மிஸ் சங்கமித்ரா… நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது. ஏன்னா?, எங்க அம்மா இறந்துபோய் ரெண்டு வருஷம் ஆச்சு. அத மறந்து அந்த மனுஷன் ஏதேதோ பேசிக்கிட்டிருக்காரு.
அவருக்கு எந்த வைத்தியத்தாலயும் குணப்படுத்த முடியாத ஒருவித மனஅழுத்த நோய். அதுக்கு தான் உங்கள வேலைக்கு வச்சிருக்கோம். புரிஞ்சுக்கோங்க.”
அதிர்ந்தேன். என் கைகள் நடுங்கின. நான் கேட்ட கேள்வியே தவறா? போனை மெதுவாகத் துண்டித்தேன். அந்த நொடியிலேயே, ராகவன் சார் பற்றிய நினைவுகள் வந்து மோதியது.
உயிரோடு இருந்தும், ஒரு மௌன உலகில் சிக்கித் தவிக்கும் மனிதர். நினைவுகளும், பிழைகளும், இழப்புகளும் ஒருங்கே திணித்த துயரம்.
வீடு திரும்பும் வழியில், என் மனதில் ஒரு கசப்பான உணர்வு.
அப்பாவிடம் எல்லாம் சொல்லி அழுதேன். “நீ வேலைக்குப் போவதும், போகாததும் உன் விருப்பம்” என்றார்.
அந்த இரவு, காயத்ரி மீண்டும் அழைத்தாள். என்னால் போனை எடுக்க முடியவில்லை.
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தேன். புங்கை மரத்தின் நிழல், மல்லிகையின் மணம் எல்லாமே ராகவன் சாரின் மௌனத்தில் கலந்து என் உள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
இனி ராகவன் சார் இருக்கும் காலம் வரை, அவர் நினைவின் நிழலோடு நானும் இணைந்திருப்பதே என் கடமை


மனம் கனத்துப் போகிறது. அருமையான கதை
LikeLike