ஹரிஹரன்:
எனது ஆருயிர் நண்பனும், பூபாள ஆசிரியருமான கவிஞர் மதுவந்தி எனும் வீரராகவன் இன்று காலை மரணமடைந்தார் என்பதை பெரும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
ஆர்க்கே:
போச்சு.. எல்லாம் போச்சு..!
அந்த கபடமில்லாச் சிரிப்பு போச்சு.!
அந்த களங்கமில்லா மனசு போச்சு.!
அந்த குறைகாண முடியா குணம் போச்சு..!
அந்த உற்சாக வார்த்தை ஊற்று போச்சு..!
அந்த மனதார பாராட்டும் வாய் போச்சு..!
அந்த மித்ரச் சண்டை போச்சு..!
அந்த ஆழ்மனத்து ஆறுதல் போச்சு..!
அந்த அற்புத கவிதைச்சோலை போச்சு..!
அந்த உடுக்கையிழப்பு இடுக்கண் களை நட்பு போச்சு..!
அந்த வாடா போடா நட்பின் வாடாமலர் போச்சு..!
என் தோள் அரவணைத்த அந்தக் கரம் போச்சு..!
“எல்லாம் சரியாய்டும்டா! நீ எப்பவும் இப்படி
சிரிச்சிண்டே இருடா!”ம்பான் என்னிடம்.
இப்ப என்னடான்னா
தொண்டை வரள வரள
என்னைத் தனிமையிலிப்படி
கதற விட்டு விட்டு…
ஒன்றுமே சொல்லாமல்
சொடக்கு போடும் நேரத்தில்
அந்த இரக்கமில்லா
காலனுக்குப் போய்
கவிதை சொல்ல
என்னடா அவசரம்!
என்னடா அவசரம்!
என் ஆருயிர் “சகா”தேவன்
என்னை அரை உயிர் ஆக்கி விட்டு
வானுலக நோக்கி பறந்து சென்றானே!!
மதுவந்தி வீர ராகவா..!
டேய்! டேய்! டேய்!டேய்!
போகிற வயசாடா இது..?
நான் தாங்குகிற
வலி அளவாடா இது ..?
வ வே சு :
இதோ இப்போதுதான் வாட்ஸ் அப் பார்க்கிறேன். ஐயோ! இதென்ன பேரிடி? நான் இச் செய்தியை ஏற்க இயலாமல் அலமலந்து நிற்கிறேன். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல? இறைவா
அழகியசிங்கர்:
வஸந்த மலர் மறைந்து விட்டதா?
வஸந்த மலர் தயாரிப்பதில் முக்கியமான பங்காற்றியவர் மதுவந்தி என்கிற வீரராகவன். வஸந்த மலர் என்ற பெயரை சூட்டியவர் அவர்தான்.
நேற்று மலர் கொண்டு வந்த கொண்டாட்டத்தை நடத்திக் காட்டியவர்.
இவ்வளவு தூரம் மலர் கொண்டுவந்த குதூகலத்தை முழுவதும் கொண்டாடுவதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
உண்மையில் ஹரிஹரனுக்கு வலதுகரமாக இருந்தவர் மதுவந்தி.
நேற்று இரவு சூமில் எங்களுடன் சிரித்து கலகலப்பூட்டியவர் மதுவந்தி என்கிற வீரராகவன்.
என்னுடைய எல்லா வாட்ஸப் குழுவிலும் பங்கு கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தவர் மதுவந்தி.
அவருடைய இழப்பு எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும் மறக்க முடியாத வடுவை உண்டாக்கி விட்டதாக நினைக்கிறேன்.
அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
கிருபானந்தன்:
ஒரு கவிஞர், ரசிகர், நண்பர் பண்பாளர். நொடியில் சிநேகமாகிவிடும் எளிமை, வஞ்சனையேயின்றி பாரட்டும் தன்மை எல்லாம் கலந்து உருவான ஒரு கலவை மதுவந்தி. ஆறு ஆண்டுகளே நண்பர்களாக இருந்திருக்கிறோம். அது போதவில்லையோ எனத் தோன்றுகிறது.
சுரேஷ் ராஜகோபால் :
மதுவந்தி, இனிய நண்பரை இழந்துவிட்டோம்
டாக்டர் பாஸ்கரன்:
ஈடு செய்ய முடியாத இழப்பு. துயரத்தில் வார்த்தைகள் வரவில்லை. பூபாளத்திற்குப் பேரிழப்பு. மதுவந்தி சாருக்கு என்ன அவசரம் இப்போது? இறைவன் இருக்கிறானா? மனது கேட்கவில்லை….ஓம் சாந்தி.
நெஞ்சம் மறப்பதில்லை….
“Every man’s life ends the same way. It is only the details of how he lived and how he died that distinguish one man from another.” — Ernest Hemingway.
மதுவந்தி – பெயருக்கேற்ற இனிமையான பண்பாளர். முகத்தில் எப்போதும் பிரகாசிக்கும் அகச் சிரிப்பு. வெள்ளந்தியான மனிதர். வெளிப்படையான பேச்சில் எல்லோரையும் கவர்ந்துவிடும் எளிமையான மனிதர். தாராளமாகப் பாராட்டும் ரசிகர். தான் ரசித்ததைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்ட நல்ல நண்பர். கவிஞர்.
எனக்கு ஆர்க்கே, ஹரி மூலம் அறிமுகமானவர். முதல் சந்திப்பு(கள்) குவிகம் இணயவழிக் கூட்டங்களில்தான். பின்னர் சென்னை வந்தபோதுதான் நேரடி சந்திப்பு. வீட்டிற்கு வந்து இயல்பாகப் பேசி, சிரித்து மகிழ்ந்தார். தன் கவிதைப் புத்தகங்களைக் கொடுத்தார்.
நாங்கள் 7 பேர் ஏழு புத்தகங்களை ஒன்றாக வெளியிட்ட போது, அவரது மகிழ்ச்சியும், குதூகலமும் இன்னும் என் மனத்திரையில் அழியா ஓவியமாக உள்ளன. ‘ஒரே மாதிரி உடை அணிந்துகொள்ளலாமா?’ எனக் கேட்ட குழந்தை உள்ளம் நிழலாடுகிறது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து அலைபேசியில் அவருடன் பேசியது மறக்க முடியாதது.
அவரது கவிதைகள் வாழ்வியலை அழகாகச் சொல்லும். மனதில் ஆழமாகச் சென்று லேசாக அசைத்துப் பார்க்கும். சமயத்தில் உதட்டைப் பிரித்து புன்னகைக்க வைக்கும். யாருடைய கவிதையானாலும் அதனை ரசிக்கும் அவரது பார்வை வித்தியாசமானது. எப்போதாவது நான் கிறுக்கும் கவிதைக்கு (அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும் அது கவிதை என்று!) ஒரு அர்த்தமும் சொல்லிப் பாராட்டுவார், பெரிய மனம் படைத்தவர்.
இலக்கியக் கூட்டங்களில் உரைகளின் மையக் கருவை ஒட்டிச் சொல்வதற்கு எப்போதும் ஏதாவது ஒரு சுவாரஸ்யம் அவரிடம் இருக்கும்!
வைத்தீஸ்வரன் ஆவணப்படம், குவிகம் குறும்புதினம், சிறுகதைப் போட்டி, அளவளாவல் என எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பில்லாத ஒரு பங்களிப்பு இருக்கும். வைத்தீஸ்வரன் ஆவணப்படத்தின் ஆரம்பப் புள்ளியே மதுவந்திதான் என்பது என் எண்ணம். மூவர் கொண்டுவந்த தீபாவளி மலர், வசந்த மலர் இரண்டிலும் அவரது பங்கும், ஆற்றலும் போற்றுதலுக்குரியது.
பூபாளத்தின் நான்கு தூண்களில் ஒன்றென்றாலும், எல்லா வகையிலும் தூக்கி நிறுத்தும் வலிமையான தூண்போல் செயல்பட்டவர் மதுவந்தி. அனைத்து படைப்புகளையும் முழுமையாகப் படித்து, பிழை திருத்தம் சொல்லி, தம் கருத்தையும் சொல்வார். எந்தப் படைப்பையும் முழுமையாக அவர் நிராகரித்ததாக எனக்கு நினைவில் இல்லை.
பூபாளத்தின் நால்வரும் சிறுவயது முதலே பழகியவர்கள் – ‘வாடா’ ‘போடா’ நட்பு எனிலும் வாடாத நட்பு! பூபாளத்தின் ஆலோசகனாக ஏற்றுக்கொண்டார்கள் – வயதின் காரணமாக இருக்கலாம்! இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் மதுவந்தி. சென்ற வாரம்தான் பத்திரிகையாளர் வாஸந்தி அவர்களை என் கேள்விகளுடன், பூபாளத்திற்காகச் சந்தித்து வந்தார். அந்தச் சந்திப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது கடைசி குவிகம் – வசந்த மலர் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த என்னை உள்பெட்டியில் வாயார வரவேற்றவர் மதுவந்தி. யாரையும் தவிர்த்துவிட மாட்டார். நெறியாளர் மறந்துவிட்டாலும், நினைவுபடுத்தி உரிய வாய்ப்பினை வழங்கச் செய்வார்.
அவரது திடீர் மறைவு, அதிர்ச்சியளிக்கிறது. வாழ்வின் நிலையாமை ஒரு நொடியில் நிலைகுலையச் செய்கிறது. ‘என்ன அவசரம்’ என மனது புலம்பிக்கொண்டே இருக்கின்றது. குடும்பத்தில் ஒருவரை – ஆம், குவிகம் குடும்பத்தில் ஒருவர்தான் – இழந்தது போன்ற துக்கம் நெஞ்சை அடைக்கின்றது.
“The life of the dead is placed in the memory of the living.” என்பான் மார்க்கஸ் டுல்லியஸ் சிசேரோ. உண்மைதான், எங்கள் மனதில் உங்கள் நினைவுகளை மிக ஆழமாகப் பதிந்து விட்டுப் போயிருக்கிறீர்கள் மதுவந்தி!
போய்வாருங்கள் கவிஞரே – உங்கள் மலர் முகம் கண்டு, கவிதைகளை ரசிக்க அங்கு ஒரு பிரபந்த உலகமே காத்திருக்கிறது!
நாகேந்திர பாரதி:
How can we forget his smiling face and encouraging words in all our zoom meetings. He never switched off his video in zoom meetings throughout the meet sending encouraging and appreciative gestures through his face and text continuously . A real motivator to all of us
சதுர்புஜன்:
Shocking! Heartfelt condolences!
கிரிஜா பாஸ்கர் :
OMG, so shocking. I am unable to digest this sad news. என்னாச்சு Hari sir?
மஞ்சுளா சுவாமினாதன்:
Omg! Shocking! No words to say
ராய செல்லப்பா:
என்ன, நமது வீரராகவன் என்னும் கவிஞர் மதுவந்தியா? அவருக்கா மரணம்? நமபவே முடியவில்லை. குவிகத்தின் பூபாளத்தின் புதுடில்லி முகமாக இருந்தவர். இறைவா, உனக்கு ஏனிந்த அவசரம்?
மீ விஸ்வநாதன்:
பேரதிர்ச்சி. நேற்று இரவு 11.30 மணிவரை குவிகம் (சியாட்டல்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அருமையான கவிஞர். நல்ல மனிதர். பண்பாளர். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி:
மீனாக்ஷி பாலகணேஷ் :
His ever smiling cheerful countenance will ever stay in my mind. He was the first one to scan and send me my Tamizhmani articles.
Always shared unusual music clips with me which I used to reciprocate. Was planning to meet him if and when I ever go to Delhi.
A great soul.
ரேவதி பாலு:
என்ன சார் இது நம்பவே முடியலையே நேத்தி ஜூம் மீட்டிங்ல உக்காந்து அப்படி சிரிச்சு பேசிட்டு இருந்தாரு
அன்னபூரணி:
Shocking. ஈடு செய்ய முடியாத இழப்பு.
அதிகம் பழக்கமில்லை என்றாலும் என் உடல்நிலை பற்றி அன்புடன் விசாரித்து நல்ல வார்த்தை சொல்லி ஆறுதல் படுத்தியவர்.
என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நான் மீண்டு வந்து எழுத்தில் கவனம் செலுத்த அவரும் ஒரு பெரிய காரணம்.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி
தென்காசி கணேசன்:
மிக மிக அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, நம்ப முடியாத செயதியும் கூட. தோற்றத்தில் , உரையாடல்களில், புன்னகையில் என எல்லாமே இளமை என இருந்தவரா, மறைந்துவிட்டார்? பலமுறை அவராகவே அழைத்துப் பேசுவார். எனது பதிவுகளை, புத்தகங்களை பாராட்டுவார். சென்ற வாரம், பூபாளம் இதழுக்கு சந்தா நினைவூட்டி, உடன் நானும் செலுத்தினேன். வசந்தம் என்று வரும் பாடல்கள் பற்றிய கட்டுரைக்காக பேசினார். நல்ல கலா ரசிகர். பிறரைப் பாராட்டுவதில் கர்ணனாக இருந்தவர். என்னால் நம்பவே முடியவில்லை. இந்த செய்தி பொய்யாகி, அவர் மீண்டு விட மீட்டாரா என்றே மனம் துடிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலை அளிக்கட்டும். ஓம் சாந்தி!
ராஜேந்திரன்:
கவிஞர் மதுவந்தியின் மறைவு பேரதிர்ச்சி. கடைசி மூச்சு வரை இலக்கியத்தை சுவாசித்தவர். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கேள்விக்காரன் சந்திரசேகரன் :
கருத்துக் கவிஞன்
கள்ளமில்லா
பிள்ளைச் சிரிப்புக்காரன்!💐🙏🏻
அலை பேசி
அழைப்பை
பொறுப்பாய்
மதிக்கும் சீலன் !💐🙏🏻
பேச்சினூடேயே
உடனடி
கவிதை நெய்யும்
வரக் கவிஞன் !💐🙏🏻
கரகரப்புக் குரல்
கார்ன்
கரும்புச்சவை
கருத்துக்காரன் !💐🙏🏻
இட்ட தலைப்பில்
இன்னிசை
சொல் மீட்டி !💐🙏🏻
மறுதலிப்போர்
ஈட்டா
மெய் வாக்குச்
சொல்காரன்!💐🙏🏻
மதுவந்தி
நீ
மெய் சொல்
ஏந்தி
உன்க்கேது
என்றும்
சுடும் தீ !💐🙏🏻
நீ எங்கள்
உள்ளதில்
என்றென்றும்
கோயில் மணி
தீப சொல் சோதி💐🙏🏻
பணிவுடன்💐🙏🏻
கேள்வி…
ராஜகோபாலன்:
வீரராகவனின் இழப்பு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்த என் போன்ற பலருக்கு, எந்த வார்த்தைகளும் ஆறுதல் அளிக்க இயலாது 😢😥
வாழ்க்கையில் நாம் சற்று முன்னராகவே சந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் நண்பர்களில் ஒருவராக வீரராகவன் இருந்தார். அவரது ஆன்மா சத்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அதிரன்:
மதுவந்தி அவர்கள் மிகச் சிறந்த நண்பர்
பண்பாளர்; கலா ரசிகன்
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் …..
எனது கவிதைகளின் முதல் ரசிகர்
விடாது என்னை கவிதை எழுத ஊக்குவித்தவர்
எனது முதல் கவிதை தொகுப்பான “அம்மாவின் பூனை”யில் உள்ள அனைத்து கவிதைகளயும் தேர்ந்தெடுத்துத் தந்தவர்
எப்பொழுது அழைத்தாலும் அன்போடு அளவளாவி நலம் விசாரித்து . ” ஏன் சில நாட்களாக கவிதை அனுப்பவில்லை” என்று உரிமையோடு கேட்ப்பார்
குவிகம் நடத்திய ” கவிதைக்குள் கதை ” என்ற நிகழ்வில் நான் வெளியூர் பயணத்திலிருந்ததால் எனக்காக எனது ” காட்சி” என்ற கவிதையை வாசித்ததை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்
கடந்த மாதம் அலுவலக வேலையாக டெல்லி சென்றிருந்த பொழுது தொலைபேசியில் அழைத்து பேசினேன் உடனடியாக மதிய உணவுக்கு சந்திப்போம் என்று கூறி சொன்னப்படியே மதிய உணவை என்னோடு சேர்ந்து அருந்தி சிறிது நேரம் உரையாடிவிட்டு
புகைப்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டோம்
அன்னாரின் மறைவு எல்லோரையும் மீளா துயரில் ஆழ்த்திவிட்டது
இந்திரா ராமநாதன்:
கடைசி நடை
————————
திறந்த வெளி -நடக்க
நிறைந்த காற்று -இழுக்க
-இருந்தும் விரைந்துங்களை விரையச் சொன்னது யார் !
வையாபுரி வேங்கடவனை விரும்பினீர்!
வைகுந்தபுரி விலாசம் யார் தந்தது ?
வசந்த மலர் 🌷 விநியோகிக்கவா வானோரிடம் ?
குவிகம் கூட்டம்தான் நேற்றே முடிந்ததே!இன்றென்ன எமர்ஜென்சி மீட்டிங் எமலோகபுரியில் !
சிரிப்புக்குப் பஞ்சமாம் மேலுலகில்
பிரித்தெடுத்திடத் தஞ்சமோ
உம் முகத்தில் !வர
மறுத்திடத் தெரியாதோ ?
மறந்து விட்டீரோ எம் முகத்தை !
உசரத்தில் போய் நின்று விட்டால்- இனி
அசராது பாராட்டுவோர் யாரய்யா?
விசனத்தில் விண்டு போனது பாரய்யா பாசத் தோழர்களின்
பரிதவிக்கும் மனசு !
எங்கு சென்றால் தான் என்ன எண்ணங்களில் என்றும் உம் பூபாளம் தான் !
கணேஷ்ராம் :
ஒரு முறை கூட சந்தித்ததே இல்லை. அவர் book release function ஐ நான் attend பண்ண வேண்டும் என்று மிகவும் விரும்பினார். என்னால் அப்போது முடியவில்லை. நான் தில்லி சென்ற இரண்டு முறையும் அவரைப் பார்க்க முடியவில்லை. அன்றைக்கே திரும்பும் நிர்ப்பந்தம்.
அடிக்கடி நானும் அவரும் எங்கள் personal window வில் உரையாடுவது வழக்கம்.
எவ்வளவு அற்புதமான மனிதர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவரோடு போய் விட்டது அவரது அழகான புன்னகை ததும்பும் முகம்.
காலனைக் கொடூரமானவன் என்று தூற்றுவதைத் தவிர நம்மிடம் வேறு என்ன இருக்கிறது?
வசந்தம் வந்ததை அழகாக வர்ணித்தவருக்குக் காலன் வந்தது தெரியாமல் போய்விட்டதே? என்னவொரு சோகம்?
வஸந்த மலர் மறைந்து விட்டதா?
முத்து சந்திரசேகரன் :
என்ன கொடுமை இது.!! மலர்ச்சியான வதனத்துடன் எல்லோரையும் ஊக்குவித்து பாராட்டும் நல்லுள்ளம் கொண்டவரை ஏன் இவ்வளவு விரைவில் அழைத்துக்கொண்டாய் இறைவா? எனக்கு கோவை நிலவன் என்று பெயரிட்ட, அன்பான, நான் இதுவரை நேரில் சந்திக்காத, நண்பர். என் உடல் பதைபதைத்து அதிர்கிறது, நண்பனே உன்னை சந்திக்க இனி வாய்ப்பில்லை என்ற உணர்வால். நண்பனே பல ஆத்மாக்களை அன்பால் கட்டிப்போட்டவன் நீ. உன் ஆத்மா சாந்தியடைய பிரார்தனை செய்வதைத் தவிர வேறன்ன செய் இயலும் எங்களால் இனி?
யாரோ ராமமூர்த்தி :
இனிய வார்த்தைகள். சிரித்த முகம். ஆழ்ந்த கவிதைகள். அன்பு நெஞ்சம். மகிழ்ச்சியைப் பரப்பும் நண்பர். மதுவந்தி. உங்களை இழந்து வாடுகிறோம். ஆண்டவனே அவரைப் பாதுகாத்துக் கொள்..
துரை தனபாலன் :
என்ன… நம்ம மதுவந்தியா… இப்போது வந்த வசந்த மலருக்குப் பெயர் வைத்து, அதை வைத்தே ஒரு புதுக்கவிதை எழுதித் தன் மகிழ்வை நம்முடன் பகிர்ந்து கொண்டாரே.. ஐயோ… நம்ப முடியாத, அதிர்ச்சியான செய்தி. நானும், அவரும், எங்கள் கவிதை நூல்களோடு, நல்ல நட்பையும் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
ஜும் மீட்டிங் எல்லாவற்றிலும் அனைவருடனும் அன்பாக, அருமையாகப் பேசும் அவரது பண்பு அனைவரையும் கவரக் கூடியது. ஆழமான, ஆனால் நன்கு புரியக்கூடிய மிகச் சிறந்த புதுக் கவிதைகளை எழுதிய கவிஞர் அவர். அண்மையில் நடந்த வினாடி வினா விளையாட்டிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டார். நல்லதொரு நண்பரை நாம் இழந்து விட்டோம். அவரது பிரிவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
இந்திரநீலன் சுரேஷ்:
நேற்று பின்னிரவு நடந்த வசந்த மலர் அமெரிக்க வெளியீடு Zoom நிகழ்ச்சியில், சாட் பாக்ஸில் எழுதிய என் கமெண்டிற்கு உடனே பதில் மெசேஜ் செய்தார்.
அதுதான் அவர் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜாக இருக்கும் என்பதை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க இயலவில்லை.
படைப்பாளர்கள் அனைவரையும் மனம் திறந்து தாமதமின்றி பாராட்டுவார். We lost a rare diamond
எஸ் வி வேணுகோபாலன்:
அய்யய்யோ
அய்யய்யோ
போச்சே
அன்பும் ஆருயிரும்
அரவணைப்பும்
அள்ளி அள்ளி
ஆர்ப்பரித்த
ஆச்சரிய சொற்களும்
எல்லாம் போச்சே
என்ன சொல்வோம்
இனிய தோழா
எல்லாம் போச்சே
மோகன் ஜி:
மிகத் துயரமான செய்தி. நண்பரின் ஆன்ம சாந்திக்கு ஐயப்பனை வேண்டுகிறேன்
ஆர் வத்ஸலா:
மதுவந்தி என் தோழன்
என்னடா அப்படி ஒரு அவசரம்
உனக்கு
என்னை முந்திக் கொள்ள
உன்னை விட பெரியவளடா
நான்
காலன்தான் இரக்கமற்றவன்
என்றால்
நீயுமா?
எப்படியடா
என்னை விட்டுப் போக
மனம் வந்தது?
கண்ணுக்குள் முட்டி நிற்கும் கண்ணீர்
வடிய மறுக்கிறது
இதயத்தை இறுக்கிக் கொண்டு
இது ஒரு குரூரக் கனவு
என்று என்னை நம்ப வைத்துக் கொண்டு
என்னடா அப்படி ஒரு அவசரம்
உனக்கு
என்னை முந்திக் கொள்ள
உன்னை விட பெரியவளடா
நான்
காலன்தான் இரக்கமற்றவன்
என்றால்
நீயுமா?
எப்படியடா
என்னை விட்டுப் போக
மனம் வந்தது?
கண்ணுக்குள் முட்டி நிற்கும் கண்ணீர்
வடிய மறுக்கிறது
இதயத்தை இறுக்கிக் கொண்டு
இது ஒரு குரூரக் கனவு
என்று என்னை நம்ப வைத்துக் கொண்டு
ஆர் வத்ஸலா
ராஜாமணி :
மதுவந்தி வீரராகவனுடன் சுமார் 45 ஆண்டு கால பழக்கம்.he was an EGO less person. கோபப்பட்டோ, உரத்து பேசியோ இதுவரை நான் பார்த்ததில்லை. நிகழ்ச்சியில் பாராட்டுவது மட்டுமின்றி தனியாகவும் அலைபேசியில் அழைத்துப் பாராட்டுவார். 100 பேர் கொண்ட கூட்டமாக இருந்தாலும்,இரண்டு மூன்று பேர் முன்னிலையில் தன் கவிதைகளை படிக்க வேண்டி இருந்தாலும் ஒரே விதமான உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும் கவிதைகளை படிப்பார். அறிமுகமான அனைவரின் மனதிலும் சற்றெண்டு இடம் பிடித்துவிடுவார். knowledge kills innocence என்பதை பொய்யாக்கியவர். வெள்ளை மனதுடன்..மலர்ந்த முகத்துடன்… மற்றவர்களுக்கு உற்சாகத்தை தரும் அழகான சிரிப்புடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர். குவிகம் விருட்சம் அமைப்புகளில் பல புதிய முயற்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முதலில் ஆலோசனை வழங்கி புதிய முயற்சிகளுக்கு வித்திட்டவர்.மதுவந்தி .மதுவந்தி நம்மிடையே இல்லை என்ற செய்தி இன்னும் மனதில்… சிந்தனையில் பதியவில்லை. More than his presence,His absence will be felt. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இப்படிப்பட்ட நல்ல மனிதனோடு பழக்கமும், நட்பும் கிடைத்தது ஒரு வரம் தான்.
மதுவந்தி ராகவா!!
நீ இல்லை என்பது தெரிந்தும் இனிவரும் நிகழ்வுகளில் தொடுத்திரை யில் உன் முகத்தை கண்கள் தேடுமே… யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது…….
மந்திரமூர்த்தி:
OMG. அருமையான மனிதர். சென்னைக்கு வரும் போது எல்லாம் நெருக்கமாக இருந்தார். எப்போதும் தொடர்பில் இருந்தோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
Very very shocking & unbelievable. He used to be the first person to join Kuvikam Zoom meetings. சாவே உனக்கு ஒரு சாவு வராதா? என்றுதான் தோன்றுகிறது. அவருடைய ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்
சுந்தரராஜன்:
கடவுளே! கடவுளே! தாங்க முடியவில்லையே! மிக மிக நல்ல மனிதரை ஏன் இவ்வளவு விரைவில் அழைத்துக்கொண்டாய்? நல்ல நண்பர்! நேற்றிருந்தார்! இன்று இல்லையே! ஏனிந்தக் கொடுமை?




