இதென்னடா புதுக்கதை என்று பார்க்கிறீர்களா? பார்க்கப்போன படத்திற்கேற்ப அதனைப் பார்த்தவிதமும் சுவாரசியமாக இருக்க வேண்டாமோ? எனக்கு அப்படி அமைந்தது.
ஒடிஸி திரைப்படம் பெங்களூரில் வந்த நாளிலிருந்தே கணவர் கேட்க ஆரம்பித்துவிட்டார்: “டிக்கட் ரிசர்வ் செய்யட்டுமா?” என்று. இத்தனைக்கும் நாங்கள் திரைப்படம் பார்க்கும் வழக்கமே இல்லாதவர்கள். (இதன் விளைவைப் பின்னால் காண்பீர்கள்!!) புத்தகங்கள் மட்டுமே படிப்பவர்கள்!! ஆனால், இது வேறே லெவல் படமல்லவா? பார்த்துவிட வேண்டும் என நிச்சயித்தாயிற்று.
நானும் நமது ஆசிரியர் சுந்தரராஜனின் ஒடிஸி பற்றிய கதையை முந்தின இரவு விடிய விடியப் படித்து விட்டுத் தயாராக இருந்தேன். முன்பே தெரிந்த கதைதான். இருந்தாலும் ஏதாவது நுணுக்கமான காட்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்ற கவலைதான்! அற்புதமான தயார்நிலையில் இருந்தோம்.
கணவர் வெகு உற்சாகமாக ஒரு Inox தியேட்டரில் மிக உயர்ந்த வகுப்பு – 4 D – யாம் – புக் பண்ணிவிட்டார். மதியம் 3 மணிக் காட்சி! 2 மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டோம். வழியில் எங்காவது டிராஃபிக் நெரிசலில் அகப்பட்டுக்கொண்டு நேரம் ஆகிவிடக் கூடாதே என்ற கவலை!! அது என்ன 4 D? எங்களுக்கும் புரியவில்லை. சில ஆண்டுகள் முன்பு ‘பொன்னியின் செல்வன்’ பார்த்த ஒரு நண்பர் படுத்தவாக்கில் காலை நீட்டிக்கொண்டு, வசதியாகச் சாய்ந்துகொண்டு பார்த்தோம் எனக் கூறியிருந்ததனால் இதுவும் அதுபோல வசதியான நாற்காலி என எண்ணிக்கொண்டோம்.
மணி 2.45. தியேட்டர் உள்ளேபோகும் வழி திறந்திருந்தது. தடுக்க எவருமில்லை, டிக்கட் செக் பண்ணுபவர் தவிர!! உள்ளே போனதும் புரிந்தது. படத்தின் முந்தைய காட்சியின் கடைசி சில நிமிடங்கள் சென்றுகொண்டிருந்தன. வாட்கள் மோதும் சத்தமும் உரத்த உரையாடல்களும்!! நான் அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி விழாமல் திரும்ப வெளியே செல்ல எத்தனித்தேன். கணவரோ, “பரவாயில்லை, உட்காரலாம்,” என்று காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் (நாங்கள் ரிசர்வ் செய்திருந்த வகுப்புதான்) அமர்ந்துவிட்டார். வேறு வழியின்றி நானும் உட்கார்ந்தேன். இப்போது “டக், டக்,’ என்று திரையில் தரையில் யாரோ தட்டினார்கள். என்னுடைய நாற்காலி பலமுறை குலுங்கி என்னையும் குலுக்கியது. எனக்கோ ஒரே குழப்பம். ‘என்னவோ ஆகிவிட்டது’ என்னுடைய நாற்காலிக்கு என்று பயந்து விட்டேன். உரக்க ஒருவரோடொருவர் திரையில் பேசும்போதெல்லாம், வாட்கள் மோதிக்கொள்ளும் போதெல்லாம், என்னுடைய நாற்காலி பயங்கரமாக ஆடியது. ஒரு கட்டத்தில் இது என்ன? காட்சிகளின் ஓசையின் அதிர்ச்சி தாங்காமல் நாற்காலிகள் மரை கழன்று விட்டனவோ, இல்லை ஏதாவது பூகம்பமோ என்ற விபரீத எண்ணம் எழுந்தது. கணவரிடம் மெல்லக் கேட்டேன். “ஆம், நாற்காலிதான் ஆடுகிறது,” என்று சுரத்தில்லாமல் பதிலிறுத்தார். கொஞ்ச நேரம் படத்தைப் பார்க்க முயன்றேன். மனதில் பதியவில்லை. ஆடும் நாற்காலிகள் இடைவிடாது ஆடியபடியே இருக்க, எனக்கு மெல்லத் தலைசுற்றுவது போலிருந்தது. வயிற்றைப் புரட்டி வேதனை செய்தது. சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் இளவயதுக் காரர்கள் போலும். பாப்கார்னையும் நாச்சோ சிப்சையும் (nacho) கொறித்தபடி படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது புரிந்துவிட்டது, இதுவே 4 D என்று. என்னால் உட்கார முடியாது. இப்படியே பார்த்தால் மூன்றுமணி நேர முடிவில் ஆம்புலன்சில் ஏறி ஆஸ்பத்திரிக்குத்தான் போவோம் என்பது மனதில் உறுதிப்பட்டது. ஆனால் கணவரின் உற்சாகத்தைக் குறைக்கக் கூடாதே, என்ன செய்வது என்று யோசித்தேன். கண்களை மூடியபடி அமர்ந்திருந்தேன். ஆனால் ஆட்டம் குறையவில்லை, நிற்கவில்லை. ஒருவழியாகப் படம் நிறைவுற்றது.
கணவர் சொன்னார்:: “என்னால் இப்படி உட்கார்ந்து 3 மணி நேரம் பார்க்க முடியாது. எனது இடுப்பும் முதுகும் உடைந்து விடும்,” என்று. நானும் உடனே அதனை வழிமொழிந்து, இருவரும் வெளியேவந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். டிக்கட்டுக்கான செலவு ‘போன ஜன்மாந்தரக் கடன்’ என்று எண்ணிக்கொண்டோம். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடோடிச் சென்று நிம்மதியாக ஒரு காபி அருந்தினோம்.
வீடு வந்ததும், திரும்ப ஆராய்ந்து வேறொரு தியேட்டரில் சாதாரண 2 D சீட்டுகள் ரிசர்வ் செய்துவிட்டு, சென்று மகிழ்ச்சியாக ஒடிஸியைக் கண்டு களித்தோம். அருமையான படம், சூப்பர் டெக்னாலஜி இயக்கம். ஒரு நிமிடம் கூடச் சலிப்பே ஏற்படவில்லை. மகிழ்ச்சி பொங்க, அருமையான படம் பார்த்த களிப்பில் வீடு சென்றோம்.
எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஏனெனில் அடுத்தவாரம், எனது தோழி ஒருத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதனால் அவளுடனும் சென்று இரண்டாம் முறையாகவும் கண்டு களித்தேன்.
அப்பாடா! பூகம்பத்திலிருந்து தப்பித்தோம்; இதனை நண்பர்களிடம் சொல்லிச்சொல்லி இன்றளவும் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
—————————————
