குவிகம் நடத்தும் கவியரங்கம்
குவிந்தோர் பல்லோர் முன்னிலையில்
புவியில் வாழும் பொருள்பேசப்
புளகாகி தந்தான் அடைந்தோமே!
செவிக்கு வார்த்தத் தேனன்றோ
சிந்தை விரித்த சொற்களெலாம்
கவிக்குக் கிடைத்த அண்ணல்தான் (வ வே சு)
காணக் கிடைத்த ஓர்வரமே!
வாழ்த்துகள்!
~ சுரேஜமீ
குவிகம் -கவியரங்கம் – 13/09/2026
(கவியரங்கத்தை அனுபவிக்க அதைக் காதால் கேட்கவேண்டும். அதன் காணொளி கீழே )
தலைப்பு – பேசாதவை பேசினால்
தலைவர் – முனைவர் வவேசு
தலைமைக் கவிதை
எழுத்தாளர் கவிஞர்கள் இலக்கியம் படைப்பவர்கள்
பழகுதமிழ் போற்றும் பல்துறை வித்தகர்கள்
முத்தமிழ்க் கலைகளில் முத்திரை பதித்தவர்கள் எனப்
பேசத் தெரிந்த அத்துணை நண்பருக்கும்
வாசல் திறந்திருக்கும் குவிகம் மேடையிது;
ஆனால் ஒருமாற்றம் இன்றிங்கே நிகழ்கிறது
பேசாமல் கிடக்கின்ற பொருளையெலாம் எழுப்பி
வா பேசு எனச் சொல்லி வாயில் திறக்கிறது;
வவேசு தலைமையிலே வரவேற்புச் சொல்கிறது.
கவிதையில் பேசென்று அன்புக் கட்டளை இடுகிறது.
அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து அரங்கிதிலே
ஆறு பொருட்கள் அணிவகுத்து நிற்பனவால்
கற்பனைச் சிறப்புக்கும் கருத்துப் பொலிவினுக்கும்
உறுதி அளிக்கின்றேன் , உறவுகளே வாருங்கள்;
கவியரங்கம் இதைக் கேட்க
காசு பணம் தேவையில்லை கனெக்டிவிடி போதும்
கவிதை சுவைக்கையிலே கரவொலிகள் மோதும்
கவிஞர்கள் நாவினிலே கற்பனைகள் ஊறும்.
அனைவரும் வந்திடுக அமர்ந்து கேட்டிடுக !
தலைப்பு கடிகாரம் -கவிஞர் பானுமதி
காலம் பிசகாமல் கவியரங்கம் தொடங்கவேண்டும்
என்பதனால்-
முதலில் பேச கடிகாரம் தனை அழைப்பேன்.
பகலிரவைக் காட்டுகின்ற கடிகாரம் போலே
இக் கவிஞர் பெயரிலும்
பகலுமுண்டு இரவுமுண்டு – பானுமதி என்பதனால்
சூரிய சந்திரரைப் பேரில் கொண்டதனால்
நேரம் இவர்க்கடிமை ; எழுதுவதோ நற்கவிதை.
வங்கிப் பணியில் ஓய்வு பெற்றதன் பின்
இலக்கிய வங்கியில் தன் படைப்புகளை
முழுமையாக முதலீடு செய்து
நூறு விழுக்காடு இண்டரெஸ்ட் பெறுபவர்
அன்புச் சோதரி பானுமதி -இதோ
அரங்கில் பாட அனுமதி!
காலம் பருவம் நேரம்
தோற்ற மயக்கச்சுழல்
பருவத்தால் காலத்தை காட்டும் விந்தை
சிவசக்தியாய் இரண்டும் இணைந்து கள்ளச் சிரிப்பு
தெரியாதது என்று ஒரு நினைப்பு
மனிதன் வான் விளக்கை பார்த்தான்
சூரிய ரேகையைப் பார்த்தான் சந்திரப் பாகையைப் பார்த்தான் ஆரம் ஆரமாக சக்கரங்கள் அமைப்பு கணக்கிட்டான் நேரத்தை அளவிட முனைந்தான் காலத்தை
பிறந்தேன் ஒரு கடிகாரம் என சதுரமோ வட்டமோ ஒரு கண்ணாடி கூண்டு
அதன் உள்ளே காலால் ஓடி ஓடி எங்கும் போகாதவன் நான்
யாரிட்ட சாபமோ
ஒரு ரகசியம் உங்களுக்கு தெரியுமா? வெளியில் இருந்து யாரும் என்னை தொட முடியுமா?
ஆதி நீங்கள் கொடுக்கையில் நிற்கும் என் ஊசல் எனக்குள் ஒரு அசைவின்மை நேரம் அல்லவா? காலத்தை நிறுத்திய வல்லமை ஒரு கால் ஓயாத எண்ணத்தில் நானும் பயணிக்கிறேனோ ஆனால் உங்களை ஓடச் செய்தேன் நல்ல கல்வி தேடி நேரத்தின் அருமை சொல்லி வாழ்வின் பொருளை மறைமுகமாக உணர்த்தினேன் எனக்கு சாவி கொடுப்பதும் ஒரு தவம் அதன் திருகல் விசையில்
என் சிறு அப்போது நிறுத்தப்படும் என் ஊசல் ஒரு காலையும் இழந்தேனோ என்று சிந்திக்க வைக்கும் காலத்தை நிறுத்திமையும் வரும் உங்கள் வரவேற்பறையின் கூவும் கம்பீரம்
தலைப்பு – செருப்பு – கவிஞர் வத்சலா
தலைப்பைச் சொல்லி அழைக்கின்றேன்
தவறாய் எடுத்துக் கொள்ளாதீர் !- செருப்பு
ஒருமையில் செருப்பு எனச் சொன்னாலும்
இது – ஜோடியையே குறிக்கிறது !
ஒற்றையாய் இருந்தால் ஒருவருக்கும் உதவாது;
எப்போதும் இரட்டை -இங்கே கவிதையில் அரட்டை
எண்பதினைத் தாண்டியும் இன்னும் சீற்றம் குறையாமல்
பெண்ணுரிமைப் போராட்டம் பொன்வரியில் பதித்திடுவார்
இவர் கவிதை ஒவ்வொன்றும் அழகிய சிறுகதை.
இன்றைய கதை பாதுகா பட்டாபிஷேகம்
பரதன் சுமந்த பாதுகைக்கு பதினாலாண்டுகள் அதிகாரம்
இவர் சுமக்கும் பாதுகைக்கு பத்து நிமிடமே தரும் நேரம்
இவர் கவிதை ஊற்று பிறக்குமிடம் யாது?
உணர்விலா அறிவிலா உரையுங்கள் வத்சலா
எப்படி இருப்பினும் உங்கள் கவி சுளைப் பாலா!
அருமைக் கவி ஒன்றை அரங்கிலே தருக.
தலைப்பு – சைக்கிள் – நாகேந்திர பாரதி
இரண்டு சக்கர வண்டியிலே
இன்னொரு பாரதி வருகின்றார்!
மிரட்டிப் பார்க்கும் கவிவரிகள்
மின்னலைப் போல் தீட்டிடுவார்
படித்தும் கேட்டும் உள்ளதற்கு
உடனே விமரிசனம் எழுதிடுவார்
உள்ளன்போடு வாழத்திடுவார்!
எழுத்தர் பாடகர் பேச்சாளர்
எப்படிச் சொல்லினும் இனித்திடுவார்
ஏறிய வாகனம் சொல்வதையெல்லாம்
எப்படிச் சொல்லப் போகின்றார் ?
நாகேந்திர பாரதி வருக நல்ல கவி தருக.
தலைப்பு – சைக்கிள் – நாகேந்திர பாரதி
இரண்டு சக்கர வண்டியிலே
இன்னொரு பாரதி வருகின்றார்!
மிரட்டிப் பார்க்கும் கவிவரிகள்
மின்னலைப் போல் தீட்டிடுவார்
படித்தும் கேட்டும் உள்ளதற்கு
உடனே விமரிசனம் எழுதிடுவார்
உள்ளன்போடு வாழத்திடுவார்!
எழுத்தர் பாடகர் பேச்சாளர்
எப்படிச் சொல்லினும் இனித்திடுவார்
ஏறிய வாகனம் சொல்வதையெல்லாம்
எப்படிச் சொல்லப் போகின்றார் ?
நாகேந்திர பாரதி வருக நல்ல கவி தருக.
சைக்கிள் பேசினால் – கவியரங்கக் கவிதை – நாகேந்திர பாரதி
பாராட்டி மகிழ்வதற்குப்
பரிசொன்று உண்டென்றால் – அதை
வாங்குகின்ற தகுதி என்றும்
வவேசு ஆசானுக்கே
நாங்கள் பேசியதும் எழுதியதும்
பிரம்மாண்டம் ஆக்கி விட்டு
நாங்களா பேசினோம் என்று
பிரமிக்க வைத்துவிட்டு
பாராட்டில் மூழ்க வைக்கும்
பண்புக்குத் தலைவர் அவர்.
இந்தக் கவியரங்கின் தலைவர் அவர்
அந்த ஆசானை வணங்கி விட்டு ,
அனைவரையும் வாழ்த்தி விட்டு
என் சைக்கிளின்
ஆதங்கம் தொடங்குகிறேன்.
இப்போது என் சைக்கிள் பேசுகிறது , என்னைப் பார்த்து
அடேய் பையா
அரை ட்ரவுசர் பையா
என்னடா முறைக்கிறாய்
சூட்டும் கோட்டும் போட்டு
காரும் பிளைட்டுமாக
உன் காலம் மாறினாலும்
எனக்கு என்றும் நீ
அரை ட்ரவுசர் பையன்தான்
உனக்கு என்றும் நான்
ஓட்டை சைக்கிள் தான்
பத்து பைசா வாடகைக்கு
ஒரு மணி நேரம் எடுத்து
இந்த ஓட்டை சைக்கிளேறி
ஓடின ஓட்டமெல்லாம்
உள்ளே இருக்குதாடா
செயின் கழன்றதுவும்
விழுந்து எழுந்ததுவும்
மாட்டும் முயற்சியிலே
கையெல்லாம் கருப்பாகி
கண்ராவி ஆனதுவும்
வீட்டில் திட்டு வாங்கி
விளையாட்டு நின்றதுவும்
திரும்ப ஆரம்பிக்கக்
காசு திருடியதும்
உள்ளத்தின் உள்ளே பார்
குற்றப் பக்கங்களில்
கொஞ்சம் அதுவும்தான்
ஏற்றிவிட்டு தள்ளி விட்டு
பிடித்தபடி ஓடிவந்து
தெரியாமல் கையை விட்டு
நீ தெளிவாக ஓட்டுவதை
பார்த்து ரசித்தானே
பழைய நண்பன் அவன்
பின்னாளில் ஒருநாளில்
கிராமம் திரும்பிவந்து
அவனைத் தேடிப் போய்
அவலச் செய்தி கேட்டு
அழுது புலம்பினாயே
மறந்தா போயிருப்பாய்
என்னை மறந்தாலும்
அவனை மறக்க மாட்டாய்
உன் அன்பு உள்ளத்தை
அறிந்ததால் சொல்லுகிறேன்
ஓட்டை சைக்கிள் போய்
ஒழுங்கான சைக்கிளாய்
என்னையும் வாங்கினாய்
வேலைக்குப் போவதற்கு
வெண்ணாற்றுப் பாலம் மேல்
நீ விரைந்த வேகத்திற்கு
துணையாய் இருந்தவன் நான்
துள்ளி உருண்டவன் நான்.
துண்டால் துடைத்து விட்டும்
தூய்மை ஆயில் போட்டும்
பார்த்துப் பார்த்து என்னைப்
பராமரித்த காலம் அது
உன்னை மறப்பேனா
உன் பாசம் மறப்பேனா
அத்தோடு நின்றதுவா
உன் அன்பின் ஆழம்
ஊற்று நீராகப்
பொங்கியதே பின்னாலே
உந்தன் மகளுக்கும்
பின்னாளில் பள்ளி செல்ல
எந்தன் மகளொருத்தியை
ஏந்திச் சென்றாயே
இருவருக்கும் நோகாமல்
சைக்கிள் பழக்கி விட்டு
பள்ளி செல்லும் அழகை
பார்த்து ரசித்திருந்தாய்
அன்பின் வரலாறு
அத்தோடு முடிந்ததென்று
அழுது காத்திருந்தேன்
காத்திருப்பு வீணில்லை
கனவு பலித்தது
குறிஞ்சி பூத்தது
குளிர்ந்தது உள்ளம்
உனக்கும் பேத்தி பிறந்தாள்
எனக்கும் பேத்தி வந்தாள்
பிறகென்ன
இருவரின் விளையாட்டு
உன் வீட்டு மொட்டை மாடியில்
உன் துணையோடுதான்
சக்கரங்கள் இருப்பதால்
ஓடுவதை உணர்ந்தவன் நான்
ஆம், காலம் ஓடியது
ஒவ்வொரு காலத்திலும் வீட்டின்
ஓரத்தில் ஒதுங்கிய நாங்கள்
ஒருநாள் காணாமலும் போனோம்
ஸ்கூட்டர், கார் என்று உன்
வாகனங்கள் மாறின .
வாழ்க்கை மாறியது
வசதியும் மாறியது
வேக வாழ்க்கையில் இருந்து
ஒருநாள் உனக்கு
விடுதலையும் வந்தது
இப்போது
நீயும் கனவு உலகத்தில்
நானும் கனவு உலகத்தில்
எனக்கு என்றும் நீ
அரை ட்ரவுசர் பையன் தான்
உனக்கு என்றும் நான்
ஓட்டை சைக்கிள் தான்
நாம் மட்டுமா அங்கே
அதோ
உன்னை ஏற்றி விட்டு
என்னைத் தள்ளி விட்ட
அவனும்தான்
வா வா
குவிகம் வாய்ப்பளித்த
இந்தக் கவியரங்கக் கனவுலகில்
கண்மாய்க் கரையோரம்
பழைய மண் ரோட்டில்
பழகிப் பார்த்திடுவோம்
அந்தப் பழைய வாழ்க்கையை
தலைப்பு – கை பேசி – கவிஞர் சாய் கணேசன்.
கையில் என்னை வைத்துக் கொண்டே
காலம் எல்லாம் பேசுகிறீர் !
எனக்கும் பேச வேண்டும் என்றே
ஏக்கம் எனக்குள் இருக்காதா ?
சார்ஜில் போடா நேரம் தவிர
“சாட்”டும் பாட்டும் கூத்தும் தான்
பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டேன்
என்னைப் பேச வைப்பதற்கு ஒருவரை
அழைத்துள்ளீராம் நன்றி பல !
சாய் கணேசன் எனும் கவிஞர் சத்திய வேழம்
அரபுக் குதிரை ஓட்டம் போல
மரபுக் கவிதை எழுதுபவர் -திரைப்
பாடல் எழுதும் விஞ்ஞானி -எனைப்
பாட வருகிறார் நீ கவனி !
கைபேசி பேசினால் ! – .— ‘சத்ய வேழன்’ H சாயிகணேசன்
விநாயகர் துதி
(நேரிசை வெண்பா)
கணகணக்கை பேசுமெமைக் கண்டால் கணேசா!
தொணதொணக்கைப் பேச்சைத் தொலைப்பாய்! – கணபதிநின்
தும்பிக்கை பேசத் துயர்தீரும் வாழ்விலே
நம்பிக்கை பேசுவோம் நாம்.
(அறுசீர் விருத்தம்)
(அரையடி: மா மா காய்)
என்றன் பெயர்தான் கைபேசி-
இன்றென் பணியைச் சிறிதோசி
என்பாட் டன்தான் தொலைபேசி
என்றும் மறவா தெமைநேசி
என்றோ மோட்ட ரோலாவில்
இஞ்சி னீயர் பணிசெய்தே
என்னைப் படைத்த பிரம்மாவோ
இனிய மார்ட்டின் கூப்பர்தான். 1.
கம்பி வழியே செய்திகளைக்
கண்டம் கடந்தும் நூற்றாண்டாய்ச்
செம்மை யுடனென் பாட்டனுமே
சேர்த்தார் சிறிய தடங்கலுடன்.
கம்பி யில்லா வழியாம்மின்
காந்த அலையின் துணைகொண்டே
நம்ப முடியா ததிசயமாய்
நானும் தொடர்ந்தேன் குலத்தொழிலை. 2.
கைக்குள் பேசும் கருவியெனக்
கணமும் உறைதல் என்கடமை!
பைக்குள் வைத்துக் கொண்டாலும்
பட்டென் றாரோ கூப்பிட்டால்
சைக்கிள் மணியின் ஒலிசெய்தே
சட்டென் றும்மை யெழுப்பிடுவேன்!
வைக்கும் இடம்நீர் மறந்தாலும்
வழிகாட் டிடுவேன் வெற்றழைக்க. 3.
( வெற்றழைத்தல்= missed calling)
பேச மட்டு மில்லாமல்
பிறர்க்கும் எளிதில் குறுஞ்செய்தி
காசில் லாமல் அனுப்பிடலாம்
கையில் அழகாய் நானிருந்தால்.
ஆசை யான யென்தம்பி
அதிகத் திறன்கொள் திறன்பேசி
ஈசன் கூட வியப்படைய
என்ன வெலாமோ செய்வானே. 4.
எதிர்காண் நிகழ்வைப் படம்பிடிக்கும்
இருமப் படமி அவனுள்ளில்
அதிகம் கேட்கும் வானொலியும்
அவனுக் குள்ளே பண்பலையில்
மதியால் கடினச் செயல்கள்பல்
வகையில் செய்யும் செயலிகள்கொள்
கதியில் ஆணை சரியாய்ச்செய்க்
கணனி யாவே அவனானான். 5.
(இருமப் படமி = digital camera)
உள்ளங் கைக்குள் இருந்தாலும்
உலகம் முழுதும் அவனுள்ளில்.
வெள்ளித் திரையில் பார்த்ததையும்
வேகம் கண்முன் காட்டிடுவான்.
பள்ளிக் கூடம் போகாமல்
பாடம் சொல்லித் தந்திடுவான்.
அள்ளக் குறையா அமுதெனவே
அவனும் அளிப்பான் அறிவினையே. 6.
பாட்டி விற்கும் கீரையினைப்
பணமில் லாமல் வாங்கிடவும்
ஓட்டில் போடும் பிச்சையையும்
ஒருகா சின்றிக் கொடுத்திடவும்
காட்டத் துலங்கற் குறியிருந்தால்
கணத்தில் பண்டம் விற்றிடவும்
நோட்டில் லாத வியாபாரம்
நொடியில் செயவும் உதவிடுவான். 7.
(துலங்கற் குறி = QR code)
எங்கும் தொடர்பை யேற்படுத்தும்
இணையம் இப்போ தவனுள்ளில்
வங்கிப் பணியும் அவன்மூலம்
வசதி் யாக முடித்திடலாம்!
அங்கும் இங்கும் உதிக்கின்ற
வனைத்து நிகழ்வும் அப்பொழுதே
தங்கு தடையில் லாயிணையத்
தளத்தில் பதிப்பாய்ப் பார்த்திடலாம்! 8.
மஞ்சள் நிறம்கொள் ஏடுகளில்
மறைத்துப் படிக்கும் விடயத்தைக்
கொஞ்சம் கூடப் பொறுப்பின்றிக்
கொடுப்பார் சிலபேர் குலக்கேடாய்.
அஞ்சல் வேண்டாம் அதையெல்லாம்
அடுத்த நிமிடம் மறைத்திட்டால்
நஞ்சைப் போன்றச் செய்திகள்தான்
நாளும் நம்மை நாடாதே. 9.
எ்ல்லாக் கேடும் இன்றுலகில்
எம்மா லென்பார் ஒருசாரார்!
கல்லார் சொல்லும் இவையெல்லாம்
காண்போர் பார்வைப் பிழையன்றோ?
கல்லாய்க் காணின் நாயில்லை
கல்லில் லையெனில் நாய்தானே!
பொல்லாப் பழியை யினிமேலும்
போடா தீரிங் கெம்மேலே. 10.
உலகில் பிறந்த யெல்லோர்க்கும்
ஒருநாள் தோன்றும் சந்ததியாய்ப்
பலரும் கணிக்கும் விரல்பேசி
பாங்காய் வருமோ யெம்பின்னால்?
நலங்கள் விளைக்கும் அறிவியல்தான்
நன்றாய் எழுதும் தொடராலெம்
குலம்தான் தழைக்கும் குறையின்றிக்
குவல யத்தில் நெடுநாளே! 11.
(என்றன் பெயர்தான் கைபேசி
இன்றென் பணியைச் சிறிதோசி
என்பாட் டன்தான் தொலைபேசி
என்றும் மறவா தெமைநேசி)
தலைப்பு -கட்டில் – ராய. செல்லப்பா
இவரைக் காட்டி அழைக்கும் தலைப்பு
மழலையில் கதகதப்பு
இளமையில் கிளுகிளுப்பு
முதுமையில் முணுமுணுப்பு
இந்த
முக்கட்டில் எக்கட்டில் எதுவேண்டு மானாலும்
இவர் பாட்டில் அமையட்டும்.- எனை மட்டும்
இக்கட்டில் சேர்க்காமல் இங்கிதமாய் இருக்கட்டும் !
என் நண்பர் இவரப்பா! கவி ராய செல்லப்பா !
பல்லாண்டு முன்னரே பாட்டரங்கில் நாங்கள்
பரிச்சயம் ஆனவர்கள் ; கவிதைகள் பகிர்ந்து கொண்டவர்கள்
செல்லப்பா –
பாவெல்லாம் நல்லப்பா வெல்லப்பா அப்பப்பா !
இன்றிங்கே கட்டில் கதை சொல்லப்பா!
கட்டில் – இராய செல்லப்பா
கட்டியவன் இல்லத்தில் கன்னியவள் முதல் இரவு…
“நாலறை வீடு- நமக்கென்றே ஓர் வீடு!
பார் இங்கே, உனக்கெந்தப் படுக்கையறை பிடிக்குமென்று
சொல் கண்ணே” என்றான்.
“எல்லா அறைகளிலும் எழிலான கட்டில் உண்டு!
தேக்கு மரக்கட்டில், செம்மரத்தில் கட்டில் உண்டு! சிறிதும் வளையாத
கருங்காலிக் கட்டில் உண்டு!
உன்னை விட மென்மையதாய் உயர்ந்த மெத்தையுண்டு!
கண் கவரும் உறைகளுடன் கதை பேசும் தலையணைகள்-
எல்லாம் உண்டிங்கே! வேறேதும் வேண்டும் என்றால்
நாளை வாங்கிடுவோம், சரிதானா கண்மணியே?”
“போங்களத்தான்” என்றாள் அவள்.
“எட்டு மணி முகூர்த்தம் எழுந்திரடி என்றென்னை
மூன்று மணிக்கே முழிக்க வைத்தாள் பாட்டியவள்!
உடனே தலை குளித்து ஒப்பனைகள் தொடங்கி விட்டு
நகராதே என்று நட்டு வைத்தார் கைதியென!
தோழியர் வந்து தொட்டுக் கிசுகிசுத்து
அலங்காரம் செய்வதாய் அலங்கோலம் செய்திட்டார்!
பசி என்று கேட்டால் பாலன்றி வேறில்லை,
தாலி கட்டும் வேளைவரை
பாவி நான் பட்டினி தான்!
ஓர் இலையில் நாம் இருவர்
உண்ட பின்பு கண் மயங்கி
ஓய்வெடுக்கப் பார்த்தால் ஒவ்வொன்றாய்ச் சடங்கு வரும்!
அப்புறம் வரவேற்பு அடுத்தடுத்து கைகுலுக்கல்!
உடம்பெல்லாம் வலிக்கிறது, கால் எல்லாம் கெஞ்சுதத்தான்!
இக்கட்டில் அக்கட்டில் என இக்கட்டில் தள்ளாதீர்!
ஏதோ ஒரு கட்டில்! என்னை விடுங்கள்!
காதல் வேண்டாம் எனக்கு கண்ணுறக்கம் வேண்டும்” என்றாள்.
அள்ளி அவளை அழுத்தி ஒன்றானான்.
“கொஞ்சம் பொறு கண்ணே!
குளிர் நிலவும் தென்றலதும்
உன்னைப் பார்க்க ஓடோடி வந்திருக்கும்
மொட்டை மாடிக்கு
முதல் வருகை தாராயோ?”
என்றான்.
வங்கி ஒன்றின் கருணையினால் வாங்கியதோர் தனி வீடு!
வாழையும் வாதுமையும்
வானுயரத் தென்னையதும்
கன்னியிவள் முகம் பார்க்கக்
காத்துக் கிடந்ததனவே!
அங்கே ஓர் மூலையிலே
அலங்காரம் சிதைந்ததுவாய்
கால் நான்கும் மூங்கில்,
கயிற்றாலே மெத்தை என
அந்த நாள் கட்டில் ஒன்று
அவளைக் கண்டதுவே!
“நான் பிறந்த கட்டில்” என்றான்
நாயகனும் நாணமுடன்.
கன்னத்தில ‘இச்’சிட்டுக்
கண்சிவந்தாள் கன்னியவள்!
கால் தளர்ந்(து) அக்கட்டிலிலே கைமடிந்து சாய்ந்திட்டாள்!
சீதை இருக்கும் இடம் மிதிலை யன்றோ! இவனும் அச்
சின்னக் கட்டிலிலே உடல் பதித்தான்!
மெல்லத்தான் நிலவு வர மெல்லியதாய் தென்றல் வர
கண் நான்கும் மூடிக்
கன்னங்கள் இழைந்து விட,
காதல் போதையிலே
காஞ்சிப் பட்டவிழ,
உள்ளிருந்த நாணம் உருகி மறைந்து விட,
காற்றின் ஓசையன்றிக்
காதலரின் ஓசை இல்லை!
‘இம்’ மென்று ஒரு மூச்சு,
‘அம்’ வென்று ஒரு மூச்சு,
இருவர் துடிப்பினிலே
கட்டிலுக்குப் பெருமூச்சு!
நாலில் ஒருகால்
நலமில்லாப் பழங்கட்டில்,
காதல் வேகத்தின் கனம் தாங்க முடியாமல்
மெல்ல முனைகி மெதுவாய்ச் சரிந்து விட,
ஓவென்(று) அலறி ஓர் உடலில் ஈருயிர்கள்
அப்படியே தரையில் அசைவின்றி அமிழ்ந்து விட,
போதை தெளியாமல்
பூவுலகையே மறந்து
அவ்விருவர் கிடந்தார்….
அப்புறமாய்க் கண் விழித்தார்!
வெள்ளி முளைக்கும் என்ற
விவரம் தெரிந்தவுடன்
மெல்ல எழுந்தாள் மனையாள்!
“அக்கட்டில் வேண்டுமா இக்கட்டில் வேண்டுமா,
எக்கட்டில் என்றீரே அத்தான்! இந்த
இக்கட்டிலும் நமது
இன்பம் கலையாமல்
தரைக்கட்டில் அன்றோ
தாங்கியது பார்த்தீரா?
ஆனாலும் வேகம்
ஆகாது உங்களுக்கு!
நீர் பிறந்த கட்டிலை
நெஞ்சொடியச் செய்வதா?
இன்றே அதனைச்
சீராக்கி எடுத்து வைப்போம்,
அடுத்த தலைமுறைக்கு
அதுவே நம் காணிக்கை!”
என்றாள்.
சீதை சொல்லி விட்டால்
இராமன் மறுப்பதுண்டோ?
தலைப்பு – நாட்காட்டி – மீ. விசுவநாதன்
நாட்காட்டி ஒருநாள் என்னிடம் கேட்டது
தினம் தினம் வந்து என்னைக் கிழிக்கிறாய்!
தினம் தினம் நீ வேறென்ன கிழிக்கிறாய்?
நாட்காட்டி
நகரும் நாட்களின் பயணத்தை
இங்கிதமாய்க் காட்டும் இலவசக் கண்ணாடி
இந்தக் காலத் தேவதையைக் கைபிடித்து அரங்கிற்குள்
மெய்யுணர்ந்து பாட வரார் மீ. விசுவநாதனார்
அருமைக் கவிதைகளின் வித்தைக்காரர்
குருவருளின் முழுமைக்கு பந்தக்காரர்
என்றன் ஊர் சொந்தக்காரர்
எந்த –
யாப்பினிலும் பாப்புனையும் என் இனிய நண்பா !
நாட்காட்டி உருவத்தில் பாட்டெடுத்து நீ வா !
“நாட்காட்டி” – (மீ. விசுவநாதன்)
(பாவகை: கலிவெண்பா)
பேசிப் பொழுதினை வீணே கழிக்காமல்
பேசாமல் நாளின் குணநலன் கூறுமெனை
நாட்காட்டி என்றேதான் நாட்டில் அனைவருமே
பாட்டில் கவிதையில் பண்போடு போற்றுகிறார்;
முன்னோக்கி மட்டும் முனைப்பாகச் செல்கிற
தன்நோக்கில் வேண்டிய வேண்டாமை யில்லாத
கர்மதேவன் காலக் கணக்கின்றிப் பாய்கிற
தர்மத்தேர்ப் பாதைக்குப் பகலிர வென்றுபேர்
வைத்தவன் ஆற றிவாளன்; மனத்துளே
தைத்தான் தினக்குறிப் பாக்கபற் செய்தி;
வராகி மிகிரரும் ஆர்யபட்டா வும்தான்
வராதிருந் தாலின்று வானியல் சாத்திர
ஞானமே இத்தனை ஆழ விரிவுமாய்
ஆனதோர் நாட்காட் டியமைந் திருக்குமா?
ஆண்டிற்கு முன்னூற் றறுபத்தைந் தாம்தினங்கள்
வேண்டும் மொழியில் கிழமையும் மாதமும்
நட்சத் திரமுமாய் நன்றாக வைத்தனர்
சிட்டாய்ப் பறக்கும் சிலமணி நாளிற்கு!
ஒவ்வொரு நாளிலும் ஓடி மறைவது
அவ்வொரு நாளின் அரிய பொழுதன்றோ!
உலக உயிர்கள் உறங்கி விழித்து
கலகல வென்றே அதிகாலை வேளை
உழைக்கத் தொடங்கும் ஒளிமிகு கால
பழமை, புதுமை நிகழ்ச்சிகள் யாவும்
சிறியதோர் காகிதம் செய்தியாய்ச் சொல்லும்
அரிய பதிவெனை நாட்காட்டி என்றனர்;
வெட்டிப் பொழுதாய் விரய மாக்காமல்
திட்ட மிடவும் சரியான நேரத்தில்
வெற்றிக் கனியை விரும்பிச் சுவைக்கவும்
கற்றுத் தருவது நானெனச் சொல்லுவேன்;
அருவுரு வில்லா அல்லும் பகலும்
திருவுருக் கொண்டு தினந்தினம் தோன்றி
மறைகிற மின்னற் மகத்துவங் கூறும்
முறையென்நாட் காட்டி முகம்”.
நன்றி.
தலைவர் நிறைவுரை :
கவியங்கம் முடிந்தாச்சு கால நேரம் கழிந்தாச்சு
பேசாப் பொருளெல்லாம் பேசிக் களைத்தாச்சு !
பாடிய தலைப்புகளை ஒன்றாக்கிச் சொல்வதென்றால்
கடிகாரத்தைப் பார்த்து மணி ஆகி விட்டதென்று
கட்டிலில் இருந்து எழும் போது கைபேசி
ஒலிக்க , நாட்காட்டித் தாளைக் கிழித்துவிட்டு
செருப்பு போட்டுக்கொண்டு
சைக்கிளில் ஏறி வெளியே சென்றான்.
நல்ல கவியரங்கம் நாம் இரசித்த கவியரங்கம்
முற்றுப் பெறுகிறது; முத்தாய்ப்பாய் ஒரு வார்த்தை –
இன்று நாம் பெற்ற இன்பம்
இணை இல்லா இணைய இன்பம்.
கவிதைத் தேன் பருக வந்த
வண்டுகளே மலர்த் தொகுப்பே வாழிய நீர் பல்லாண்டே !

