பத்திரிகைகளுக்கானச் செய்திக் குறிப்பு
எழுத்தாளர் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூர்ய, அக்ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட சூர்ய விருது, தமிழ் இலக்கியத்திற்குத் தனது படைப்புகள் மூலம் பங்களித்த ஓர் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட அக்ஷர விருது, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றிற்காக அதன் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சூர்ய படைப்பாற்றல் விருது எழுத்தாளர் திரு.கே.ஆர்.ஏ.நரசய்யாவிற்கு வழங்கப்படவுள்ளது.
சிறந்த புத்தகத்திற்கான அக்ஷர விருது திரு. மஞ்சுநாத் எழுதிய ‘அப்பன் திருவடி’ நூலுக்கு வழங்கப்படவுள்ளது.
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், , பிரபல எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன், வழக்கறிஞரும் சிறந்த பேச்சாளருமான வழக்கறிஞர் திருமதி.கே.சுமதி ஆகியோர் இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த விழாவில் திருமதி சிவசங்கரி எழுதியுள்ள அவரது வாழ்வின் நினைவலைகளான ‘சூர்ய வம்சம்’ நூல்,புரபசர் சச்சிதானந்தம் ,(இயக்குனர்school of languages, Paris) அவர்களால் பிரன்ச்சில் மொழிபெயர்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது. அந்த நூலை மேனாள் இந்திய தூதர் வி. மகாலிங்கம் வெளியிட மியான்மர் நாட்டிற்கான கெளரவ துணை தூதர் பேராசிரியர் ஜே.ரங்கராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
நரசய்யா ஒரு குறிப்பு
கே.ஆர்.ஏ. நரசய்யா என்று அறியப்படும் காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஒரு மூத்த எழுத்தாளர்.
தமிழில் அதிகம் எழுதப்படாத மாலுமியின் வாழ்க்கை, கடல் வணிகம் போன்ற விஷயங்களைத் தமிழில் எழுதி தமிழ்ப் படைப்புலகின் எல்லைகளை விரிவுபடுத்தியவர்.
1964ல் அவர் தற்செயலாக எழுதிய முதல் சிறுகதை ‘தேய்பிறை’ ஆனந்த விகடனில் முத்திரைச் சிறுகதையாக வெளியாயிற்று. முதல் சிறுகதையே முத்திரைக் கதையாக வெளியான சிறப்பைப் பெற்ற எழுத்தாளர் நரசய்யா.
அப்பன் திருவடி

2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் இமயத்தின் மடியில். கேதாரத்தில் இரண்டு நாள்கள் இயற்கை நடத்திய தாண்டவத்தில் ஒரு கிராமமே காணமல் போனது. அந்த வலியும் துயரமும் எளிதில் கடந்து போக முடியாதவை. அந்த வலியை, துயரத்தை, அதன் சாரத்தை, ஒரு குடும்பத்தின், ஒரு மனிதனின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கும் நாவல் அப்பன் திருவடி. அது விவரிக்கும் களமும், செய்தியும் தமிழுக்குப் புதிது. தனித்துவமான நடையின் மூலமும், உத்திகளின் மூலமும் கதையை நடத்திச் செல்கிறார் மஞ்சுநாத். வாசிக்கும் போது இமயத்தின் எழிலையும் குளிரையும், பின்னர் வலியையும் நாமே நேரில் அனுபவிப்பது போன்ற நடை நாவலின் இன்னொரு சிறப்பு.
