ஸ்ரீமத் பகவத் கீதை (விளக்கத்துடன்): Srimad Bhagavad Gita with Commentary  (Tamil) | Exotic India Art

பன்னிரண்டாம் அத்தியாயம் பகவத் கீதையின் நடுப்பகுதியான மத்யம ஷட்கத்தின் (Madhyama Ṣaṭkam) நிறைவுப் பகுதியாகும். பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் பிரதம ஷட்கம் (Prathamā Ṣaṭkam) என்று அழைக்கப்படுகின்றன. ஏழாம் அத்தியாயம் முதல் பன்னிரண்டாம் அத்தியாயம் வரை உள்ள ஆறு அத்தியாயங்கள் மத்யம ஷட்கம் (Madhyama Ṣaṭkam) என்றும், கடைசி ஆறு அத்தியாயங்கள் சரம ஷட்கம் (Carama Ṣaṭkam) என்றும் அழைக்கப்படுகின்றன.

எனவே, 12ஆம் அத்தியாயம் மத்யம ஷட்கத்தின் இறுதி அத்தியாயமாகும்.

முதல் ஆறு அத்தியாயங்களில் ஜீவ ஸ்வரூபம் அதாவது ஜீவனின் உண்மையான இயல்பு — விளக்கப்பட்டது. ஏழாம் அத்தியாயம் முதல் பதினொன்றாம்  அத்தியாயம் வரை ஸ்ரீகிருஷ்ணர் ஈஸ்வர ஸ்வரூபத்தை அதாவது இறைவனின் இயல்பை விளக்கினார்.

இயல்பாகவே, இறைவனின் இயல்பைப் பற்றிய இந்த விளக்கம் இறுதியில் அத்தகைய ஈஸ்வரனிடம் பக்தியில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும். பக்தி என்பது அன்பு அல்லது இறைநேசம். ஆனால் நாம் அறியாத ஒன்றின் மீது உண்மையான அன்பை செலுத்த முடியாது. எனவே, அறியப்படாத இறைவனை நாம் எவ்வாறு நேசிக்க முடியும்?

ஈஸ்வர ஞானம் இல்லாமல் ஈஸ்வர பக்தி சாத்தியமில்லை. அறியப்படாத பொருளைப் பற்றிய பாவனையும் ஏற்படாது. எனவே, பன்னிரண்டாம் அத்தியாயம் முந்தைய ஐந்து அத்தியாயங்களின் இயல்பான விளைவாகவும் நிறைவாகவும் அமைந்துள்ளது.

“பக்தி என்றால் என்ன? உண்மையான பக்தர் யார்? பக்தி எப்படி வளர்கிறது? இறுதியில் பக்தன் எதை அடைகிறான்?” இந்த நான்கு கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் பதில் தருகிறார். ஸ்வாமி பரமார்த்தானந்தரின் விளக்கத்தில், பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையில் மட்டும் அடங்கியது அல்ல. அது படிப்படியாக வளர்ந்து, இறுதியில் ஈஸ்வரனைப் பற்றிய ஞானமாகவும், தன் உண்மையான இயல்பை அறிதலாகவும் நிறைவு பெறுகிறது. இதனாலேயே இந்தப் பன்னிரண்டாம் அத்தியாயம் பக்தி யோகம் எனவும் அழைக்கப்படுகிறது. பக்தி என்பது ஈஸ்வரனை நோக்கிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும். யோகம் என்பதோ மனதை உயர்ந்த இலக்குடன் இணைக்கும் ஆன்மிகப் பயிற்சி. எனவே, பக்தி யோகம் என்பது ஈஸ்வரனை மையமாகக் கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி, இறுதியில் ஆத்மஞானத்தை அடையும் பாதை. ஸ்வாமி பரமார்த்தானந்தரின் கருத்தில், பதினொன்றாம் அத்தியாயம் விஸ்வரூப தரிசனம் மூலம், விராட் பக்திக்கு வழி அமைத்ததால், பன்னிரண்டாம் அத்தியாயம் பக்தியின் பல நிலைகளை விளக்குகிறது.

பன்னிரண்டாம் அத்தியாயம் மிகவும் முக்கியமான அத்தியாயமாகும். ஏனெனில், இந்த அத்தியாயத்தில் முழு வேதாந்த உபதேசத்தின் சாரத்தையே ஸ்ரீகிருஷ்ணர் சுருக்கமாகக் கூறுகிறார். வேத பூர்வ பாகம் மற்றும் வேதாந்த பாகம் ஆகிய இரண்டின் சாரமும் வெறும் இருபது சுருக்கமான, ஆனால் ஆழமான சுலோகங்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாயத்தில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன:

  1. பக்தி யோக சாதனம்
  2. பக்தி யோக பலன்— அதாவது பக்தி யோகத்தினால் கிடைக்கும் பயன்.

முழு பிரபஞ்சமே இறைவனின் வடிவமாகக் காணப்படும்போது, அவர் விச்வரூப ஈஸ்வரன் என அறியப்ப்படுகிறார். உலகம் எண்ணற்ற குணங்கள், பண்புகள், தன்மைகள் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. எனவே, உலகையே இறைவனின் வடிவமாகக் காண்பது சகுண ஈஸ்வர உபாஸனை ஆகும். அர்ஜுனன் இதற்கு முன்பே நிர்குண ஈஸ்வரனைப் பற்றியும் கேட்டிருக்கிறான். எனவே அவனுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இவ்விருவரில் யார் உயர்ந்தவர்? சகுண ஈஸ்வரனா அல்லது நிர்குண ஈஸ்வரனா? அதாவது, உருவத்துடன் கூடிய ஈஸ்வரனா அல்லது  உருவமற்ற, அழிவற்ற பரம்பொருளா? பொதுவாக மனிதர்கள் சகுண ஈஸ்வரனிடமே இயல்பாகவே ஈர்க்கப்படுகிறார்கள். ஏனெனில் நிர்குண ஈஸ்வரனை நம்மால் கற்பனை செய்து புரிந்துகொள்வதே மிகவும் கடினம்.

ஸ்ரீகிருஷ்ணர் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை விளக்குகிறார். ஒவ்வொரு சாதகருக்கும் சகுண தியானம் தேவை. ஆனால், இறுதியில் ஒவ்வொரு சாதகரும் நிர்குண தியானத்திற்கே வர வேண்டும். சகுண தியானம் இல்லாமல் நிர்குண தியானத்திற்கு வர முடியாது. சகுண தியானம் என்பது நிர்குண தியானத்தை அடைவதற்கான படிக்கட்டு. அதே சமயம், நிர்குண தியானத்திற்கு வராமல் சகுண தியானத்திலேயே நின்றுவிட்டால், சாதனை முழுமை பெறாது. எனவே, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சகுண ஈஸ்வர பக்தி மனப் பக்குவம், உபாசனை, மன ஒருமுகத்தன்மை, ஞானத்திற்குத் தகுதி – இவை அனைத்திற்கும் வழிகாட்டும். நிர்குண ஞானமோ, “ஈஸ்வரனும் நானும் வேறு அல்ல” என்ற உணர்வைக் கொடுக்கும். இதுதான் அத்வைத வேதாந்தத்தின்  அடிப்படையான முக்கிய விளக்கம். நிர்குண பரம்பொருள்  அழிவற்றது, உருவமற்றது, எல்லா இடங்களிலும் இருப்பது, புலன்களால் அறிய முடியாதது, மாற்றமற்றது, நிலையானது, எங்கும் நிறைந்தது. இப்படிப்பட்ட பரம்பொருளைத் தியானிப்பவர்களும் இறுதியில் இதையே அடைகிறார்கள். ஆனால் அவர்களின் பாதை மிகவும் கடினமானது. உடலோடு வாழும் மனிதனுக்கு உருவமற்ற பரம்பொருளை நேரடியாக தியானிப்பது கடினம். ஏன்? நம்முடைய மனம் பொதுவாக உருவத்தை விரும்புகிறது; பெயரை விரும்புகிறது; குணத்தைப் பற்றிக்கொள்கிறது; தொடர்பை விரும்புகிறது. அதனால் “உருவமற்றது” மனத்திற்கு மிகவும் நுண்ணிய விஷயம். எனவே கிருஷ்ணர் எளிதான படிப்படியான வழியைச் சொல்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் உருவமற்ற பரம்பொருளை அடைய இங்கு ஐந்து நிலைகளைக் கொண்ட பக்தி யோக சாதனைப் பாதையை விளக்குகிறார்.

முதல் நிலை: சகாம கர்ம பிரதான கர்ம யோகம். இதனை கர்ம யோகம் – நிலை 1 என்று அழைக்கலாம். இதுவே ஆரம்ப நிலை. இதனை அனைவரும் எளிதாகத் தொடங்க முடியும். இந்த நிலையில் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக கர்மங்களைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் எண்ணற்ற ஆசைகளுடன் பிறக்கிறான். முந்தைய பிறவிகளிலிருந்து கொண்டுவரப்படும் பல்வேறு வாசனைகள் மற்றும் ஆசைகள் அவனிடம் உள்ளன. எனவே, காம்ய கர்மங்கள் இருப்பது இயல்பானதே. சாஸ்திரம் ஆரம்ப நிலையில், ஒருவரது வாழ்க்கை யோக-க்ஷேமத்தை மையமாகக் கொண்டதாக இருக்கலாம் என்று கூறுகிறது. யோகம் என்பது இல்லாததைப் பெறுதல். க்ஷேமம் என்பது பெற்றதைப் பாதுகாத்தல்.

அதாவது, வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் ஒருவர் தன்னுடைய யோக-க்ஷேமத்திற்காக உழைக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள  வேண்டும். எது நடந்தாலும் அதன் விளைவை இறைவனுடைய சங்கல்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது நிலை – நிஷ்காம கர்ம யோகம்: ஒருவர் படிப்படியாக மனப்பக்குவம் அடைகிறார். அப்போது அவர் புரிந்துகொள்கிறார். “யோக-க்ஷேமம் என்பது முடிவில்லாத ஒரு ஓட்டம்.” ஒரு தேவையை நிறைவேற்றியவுடன் இன்னொரு தேவை தோன்றும். ஒன்றைப் பெற்றவுடன் மற்றொன்றைப் பெற வேண்டும் என்ற எண்ணம் எழும். எனவே, தனது யோக-க்ஷேமக் கவலையில் ஒரு பகுதியை இறைவனிடம் ஒப்படைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான திறன். நமது யோக-க்ஷேமப் பொறுப்பில் ஒரு பகுதியை இறைவனிடம் ஒப்படைத்தால்தான், மனதில் ஓய்வு மற்றும் அமைதி ஏற்படும். அப்போதுதான் மற்றொரு முக்கியமான பணிக்குத் தேவையான தரமான நேரமும் அமைதியான மனமும் கிடைக்கும். அந்தச் செயல்கள் சித்த சுத்திக்காக செய்யப்படுகின்றன. எனவே இரண்டாவது நிலை சித்த சுத்தி பிரதான கர்மம் அல்லது நிஷ்காம கர்ம பிரதான கர்ம யோகம். இந்த நிலையில் நான் “இறைவா, எனக்கு இதைத் தா; அதைக் கொடு” என்று தொடர்ந்து கேட்பதில்லை. மாறாக “இறைவா, நீ எதைக் கொடுத்.தாலும் அதை ஏற்றுக் கொண்டு அதனுடன் வாழக் கற்றுக்கொள்கிறேன்.” என்ற பாவனை வரும்

முதல் இரண்டு நிலைகளான கர்ம யோகத்தை கடந்து வந்தவுடன், ஒருவர் மூன்றாவது நிலைக்குத் தயாராகிறார். அது இஷ்ட தேவதா உபாஸனை. இங்கும் இது பக்தி யோகமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல் நிலையில் பக்தி தேவை. இரண்டாவது நிலையிலும் பக்தி தேவை. மூன்றாவது நிலையில் அது இன்னும் ஆழமான உபாஸனையாகிறது. முதல் நிலையில் மனம் முழுவதும் யோக-க்ஷேமக் கவலையால் நிரம்பியிருக்கும். அத்தகைய மனத்தால் தியானத்தில் அமர முடியாது. அமர்ந்தாலும் என்ன நடக்கும்? யோகத்தைப் பற்றியோ க்ஷேமத்தைப் பற்றியோ தான் சிந்தித்துக்கொண்டிருக்கும். எனவே, தியானம் உண்மையில் நிகழாது. ஆனால் ஒருவர் தனது யோக-க்ஷேமக் கவலையை இறைவனிடம் ஒப்படைக்கக் கற்றுக்கொள்ளும்போது, மனத்தில் உள்ளே ஒரு ஓய்வு உருவாகிறது. அப்போதுதான் குடும்பம், எதிர்காலம், பணம் போன்ற வெளிப்புறக் கவலைகளிலிருந்து சிறிது நேரம் மனதை விலக்கி, உள்ளே திருப்ப முடியும். இதுவே இஷ்ட தேவதா உபாஸனை. இது வெளிப்புற விஷயங்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை உள்நோக்கித் திருப்புவதற்குப் பயிற்சி அளிக்கிறது.

நான்காவது நிலை – விச்வரூப தியானம்: இஷ்ட தேவதா உபாஸனையில் மேலும் முன்னேறும்போது, ஒருவர் தனது இஷ்ட தேவதையை வெறும் ஒரு குறிப்பிட்ட உருவமாக மட்டும் பார்க்காமல், அந்த இஷ்ட தேவதையே விச்வரூப ஈஸ்வரன் என்று பார்க்கக் கற்றுக்கொள்கிறார். அப்போது நமக்கு பல கடவுள்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஒரே இறைவன்; பல நாமங்கள்; பல ரூபங்கள். இறைவன் எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்தாலும் கட்டுப்பட்டவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். இதனால் மனம் விரிவடைகிறது. இதற்கு சித்த விசாலதா என்று கூறலாம். இந்த நான்காவது நிலையையே விச்வரூப தியானம் அல்லது  அநேக ரூப தியானம் என்பர்.

ஐந்தாவது மற்றும் இறுதி நிலை – ஞான யோகம்: இந்த நான்கு நிலைகளையும் கடந்து வந்தவுடன் ஒருவர் ஐந்தாவது நிலைக்குத் தயாராகிறார். அப்போதுதான் அவரிடம் சாதன சதுஷ்டய சம்பத்தி ஏற்படுகிறது. இங்கு ஒரு மிக முக்கியமான கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்: பக்தி என்பது ஆத்ம ஞானத்திற்கான மனப்பக்குவம். இந்த ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்கான ஐந்தாவது மற்றும் இறுதி நிலையே ஞான யோகம். எனவே, ஸ்ரீ ஆதிசங்கராசாரியார் விவேகசூடாமணியில்:

ஸ்வஸ்வரூபானுசந்தானம் பக்திரித்யபிதீயதே” என்று கூறுகிறார். அதாவது:

தனது உண்மையான இயல்பான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடாமல் விசாரித்து அறிதலே பக்தி என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

ஞான யோகம் மூன்று முக்கியமான சாதனைகளைக் கொண்டது. ஒன்று ஶ்ரவணம் அதாவது வேதாந்த சாஸ்திரங்களை முறையாகக் கேட்டு அறிதல். அடுத்தது மனனம்; அதாவது கேட்ட உபதேசத்தைப் பற்றி சிந்தித்து, சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டு, அறிவை உறுதிப்படுத்துவது; கடைசியில் நிதித்யாசனம் அதாவது அறிந்த உண்மையை ஆழமாகத் தியானித்து, வாழ்க்கையில் முழுமையாக நிலைநிறுத்துதல். எனவே, ஒரு தகுதியான ஆசாரியரின் வழிகாட்டுதலின் கீழ், வேதாந்த சாஸ்திரங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் நீண்ட காலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஶ்ரவணம், மனனம், நிதித்யாசனம் ஆகியவற்றின் மூலம் இந்த வேதாந்த உபதேசத்தை நாம் உள்ளார்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்..

அறிவு முழுமையாக உள்ளீர்ந்தவுடன், இந்த அறிவு வெறும் அறிவுசார் மாற்றமாக மட்டும் இருக்காது. அது உணர்ச்சி நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமது பெரும்பாலான பிரச்சினைகள் உணர்ச்சிகளாலேயே உண்டாகின்றன. ராகம், த்வேஷம், காமம், குரோதம், பயம் போன்ற உணர்ச்சிகளினால். சம்சாரம் என்பது உணர்ச்சி நிலையில் அனுபவிக்கப்படுகிறது. எனவே, வேதாந்த ஞானம் நமது உணர்ச்சிசார் ஆளுமையையும் மாற்றும். அந்த மாற்றம் முழுமையாக ஏற்படும் வரை நிதித்யாசனம் தொடர வேண்டும். இவ்வாறு ஶ்ரவணம் + மனனம் + நிதித்யாசனம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஐந்தாவது நிலையான ஞான யோகமாக அமைகின்றன.

இந்த ஐந்து நிலைகளையும் கடந்து சென்ற ஒருவர் ஞானியாகவும், ஸ்திதப்ரஜ்ஞராகவும் ஆகிறார். இந்த ஐந்து நிலைகளில் முதல் நான்கு நிலைகள் – வேத பூர்வ பாகத்தைச் சார்ந்தவை. ஐந்தாவது மற்றும் இறுதி நிலையான ஞான யோகம், வேதாந்த பாகத்தைச் சார்ந்தது. இந்த ஐந்து நிலைகளைக் கொண்ட பக்தி யோகம் பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாம் சுலோகம் முதல் பன்னிரண்டாம் சுலோகம் வரை விளக்கப்படுகிறது.

பதிமூன்றாம் சுலோகம் முதல் பத்தொன்பதாம் சுலோகம் வரை பக்தி யோக பலன் விவரிக்கப்படுகிறது. ஒருவர் பக்தி யோகத்தின் அனைத்து நிலைகளையும் கடந்து சென்றுவிட்டால், அவர் நான் பூர்ணமானவன்.” “அஹம் பூர்ணஃ அஸ்மி” — நான் முழுமையானவன்” என்ற ஆத்ம ஞானத்தை அடைகிறார். இந்த ஆத்ம ஞானம்  அஞ்ஞானத்தை நீக்குவதாகும். ஆங்கில அறிவைப் பெற்றால் ஆங்கிலம் பற்றிய அறியாமை நீங்குவதைப் போல ஆத்ம ஞானத்தைப் பெற்றால் ஆத்மாவைப் பற்றிய அறியாமை நீங்குகிறது. எனவே, ஆத்ம ஞானத்தின் நேரடியான பலன் அறிவுசார் நிலையிலேயே ஏற்படுகிறது. அதாவது “நான் என்னைப் பற்றிய அறியாமையிலிருந்து விடுபட்டேன்.” உணர்ச்சிசார் பலன்கள் நேரடியான பலன்கள் அல்ல; அவை மறைமுகப் பலன்கள் அல்லது தொடர்ச்சியான விளைவுகள் ஆகும்.

“நான் பூர்ணமானவன்” என்பதை அறியாததால், நாம் இயல்பாகவே ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம். “நான் குறைவானவன்; முழுமையற்றவன்.” என்று.

வேதாந்தத்தின் தொழில்நுட்ப மொழியில் அஞ்ஞானம்  அத்யாஸத்தை உருவாக்கும். அதாவது அறியாமை தவறான முடிவை உருவாக்குகிறது. உண்மை தெரியாதபோது, அதற்குப் பதிலாக வேறு ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்கிறோம். “நான் முழுமையற்றவன்” என்ற அறிவுசார் நிலையிலிருந்து உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுவதே ஆசை போன்ற உணர்ச்சிப் பிரச்னைகள்.

ஒரு குழந்தைக்கு ஒரு பொம்மை கிடைத்தால் தான் முழுமையாவேன் என்று தோன்றுகிறது. வளர்ந்த பிறகு “திருமணம் நடந்தால்தான் நான் முழுமையாவேன்.”

“இந்தப் பொருள் கிடைத்தால்தான் நான் முழுமையாவேன்.” “பணம் கிடைத்தால்தான் நான் முழுமையாவேன்.” “இந்தப் பதவி கிடைத்தால்தான் நான் முழுமையாவேன்.” என்று மனிதன் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறான்.

வாழ்க்கை முழுவதும். இதையே காமம் என்கிறது வேதாந்தம். ஒரு ஆசை நிறைவேறாமல் போனால் கோபமும், நிறைவேறிய பின்பு மீண்டும் வேண்டும் என்று தோன்றுவதே குரோதமும் லோபமும். இதிலிருந்து கிடைக்கப் படும் பாடம்,

ஒரு பொருளைப் பெற்றதால் நான் உண்மையில் பூர்ணமாகி விடுவதில்லை.

ஆசை நிறைவேறியதும் இன்னும் அதிகமாக வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

நிறைவேறாத காமம் குரோதமாகவும், நிறைவேறிய காமம் லோபமாகவும், அதிலிருந்து காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் போன்ற பல்வேறு உணர்ச்சிப் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே பிரச்சினையின் வேர் அறிவுசார் நிலையில்தான் உள்ளது. அதனால் பிரச்சினையை உணர்ச்சி மட்டத்தில் மட்டும் தீர்க்க முடியாது. வேதாந்த சாஸ்திரத்தைப் படித்து “நான் பூர்ணமானவன்” என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அந்த அறிவு படிப்படியாக நமது உணர்ச்சிசார் ஆளுமையையும் மாற்றும். நான் பூர்ணமானவன் என்பதை அறிந்தவுடன் “என்னிடம் இது இருந்தால்தான் நான் முழுமை” என்ற எதிர்பார்ப்பு குறைகிறது. எதிர்பார்ப்பு இல்லாததால், ஏமாற்றம் இல்லை.

ஏமாற்றம் இல்லாததால், குறை கூறுதல் இல்லை. இவ்வாறு மனம் அமைதியடைகிறது.

நாம் உலகத்துடன் மூன்று விதமான பாத்திரங்களின் மூலம் தொடர்புகொள்கிறோம். செயல்களைச் செய்யும் கர்த்தாவாக; அனுபவங்களைப் பெறும் போக்தாவாக;  உலகத்தை அறிந்து மதிப்பீடு செய்யும் ஒரு பார்வையாளனாக. பக்தி யோகத்தின் முழுமையான சாதனையின் விளைவாக இந்த மூன்று நிலைகளிலும் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

  1. கர்த்தாவாக: முன்பு “நான் அபூர்ணன்; எனவே இதைச் செய்து என்னை முழுமையாக்கிக் கொள்ள வேண்டும்.” என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன்.

ஆனால் ஞானத்திற்குப் பிறகு நான் பூர்ணமானவன் என்ற புரிதலுடன் செயல்படுகிறேன். எனவே மன அழுத்தமும் பதற்றமும் குறைகிறது. மேலும், பூர்ணமான மனம் இயல்பாகவே அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும்.

எனவே செயல்கள் அன்பிலிருந்து, கருணையிலிருந்து, எதிர்பார்ப்பின்றி

வெளிப்படுகின்றன. இதனால் செயல்களின் தரமும் உயர்கிறது. மனம் குழப்பமின்றி இருப்பதால் செயல் சிறப்பாக அமைகிறது.

  1. போக்தாவாக: ஒருவர் நான் பூரணமானவன் என்ற உள்ளார்ந்த வலிமையுடன் வாழும்போது, வெளிப்புற நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. கோபம், திடீர் உணர்ச்சி வெடிப்பு, அவசரமான எதிர்வினை போன்றவை அவரை எளிதில் ஆட்கொள்ளாது. அவரிடம் பொறுமை, உணர்ச்சி நிலைத்தன்மை, அவசர எதிர்வினையின்மை, மனத் தாங்கும் சக்தி ஏற்படுகின்றன.
  2. பார்வையாளராக: அவருடைய உலகப் பார்வையில் சமத்வம் ஏற்படுகிறது.

அதாவது மானம் – அவமானம், சுகம் – துக்கம், சீதம் – உஷ்ணம், சாதகம் – பாதகம்

போன்ற இருமைகளிலும் மனம் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்கிறது. அவர் ராகம் மற்றும் த்வேஷத்திற்கு, அதாவது விருப்பு வெறுப்பிற்கு அடிமையாக இருப்பதில்லை.

இந்த ஐந்து நிலைகளையும் கடக்க வேண்டியது அவசியம் இந்தப் பலனை அடைவதற்கு எந்தக் குறுக்கு வழியும் இல்லை. ஒருவர் முழுமையான பக்தி மூலம் யோக பலனான ஜீவன் முக்தியை அடைய வேண்டுமானால், இந்த ஐந்து நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும்.

“இந்த வேலையை நான் செய்கிறேன்; ஆனால் அதன் பலன் என்னுடைய தனிப்பட்ட வெற்றிக்காக மட்டும் அல்ல. இதை ஈஸ்வரனுக்குச் சமர்ப்பிக்கிறேன்.” இந்த அணுகுமுறையினால், மனத்தில் அகங்காரம் குறையும், பதற்றம் குறையும், பலன் பற்றிய பயம் குறையும், மனம் பக்குவமடையும். “நான் செய்கிறேன்” என்ற உணர்வு,  “நான் கருவியாகச் செயல்படுகிறேன்” என்று மாறுவதே பக்தியின் முக்கியமான மாற்றம். ஆரம்பத்தில் “நான் செய்கிறேன்.” என்ற மனம், பக்தி வளரும்போது “ஈஸ்வரன் கொடுத்த சக்தியால் நான் செய்கிறேன்.” என்று சொல்லும். மேலும் “இந்தச்  செயலை ஈஸ்வரனுக்கே அர்ப்பணிக்கிறேன்.” எனும்போது ஈஸ்வரார்ப்பண புத்தி வருகிறது. அதாவது, உணர்ச்சியாலும் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்; அறிவாலும் ஈஸ்வரனைப் புரிந்துகொள். மனதை எப்பொழுதும் கடவுளிடம் வைத்திருக்க முடியாமல் போனால், அப்யாசம் என்ற ஆன்மீகப் பயிற்சி செய் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அதுவும் முடியாவிட்டால் ஈஸ்வரனுக்காகச் செயல்படு. அதுவும் முடியாவிட்டால் செயல்களின் பலனைத் தியாகம் செய். இதனை சுருக்கமாக மனநிலைநிறுத்தல் என்கிறார்.

ஒரு உண்மையான பக்தர் வெறுப்பு இல்லாதவர்; அனைவரிடமும் நட்பான மனோ நிலை கொண்டு பழகுபவர்; பிறரின் துயரத்தினை உணரும் கருணை உடையவர்; என்னுடையது என்ற பற்று அற்றவர்; அகங்காரம் இல்லாதவர்; சமநிலை உடையவர்; பொறுமை உடையவர்; எந்த நிலையிலும் திருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பவர்; மனக் கட்டுப்பாடும், திட நிச்சயமும் உடையவர்; பயம், கவலை பதற்றம் அற்றவர்; சுத்தமானவர், திறமையானவர்; விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இருமைகளில் சமநிலை வகிப்பவர்; தேவையற்ற பேச்சிலிருந்து விடுபட்டு மௌனமாய் இருப்பவர்;

ஸ்ரீகிருஷ்ணர் அத்தியாயத்தை இவ்வாறு நிறைவு செய்கிறார்:

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥ १२.२० ॥

அதாவது, “இந்த அழிவற்ற தர்மத்தை நம்பிக்கையுடன் பின்பற்றி, என்னையே உயர்ந்த இலக்காகக் கொண்டவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.” என்கிறார்.

இங்கு தர்ம்யாம்ருதம்” என்ற சொல் மிகவும் முக்கியமானது. தர்ம்யம் என்பது வைதிக தர்மத்திற்கு ஏற்ப அமைந்தது. அம்ருதம் என்பது அழிவற்ற உண்மையை அளிப்பது. எனவே, இங்கு ஸ்ரீகிருஷ்ணர் பன்னிரண்டாம் அத்தியாயத்தை வைதிக தர்மத்தின் சாரமாகவும், அமிர்தமாகவும் குறிப்பிடுகிறார்.

பக்தி என்பது வெறும் கடவுளை வழிபடுவது அல்ல; ஈஸ்வரனை மையமாகக் கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி, இறுதியில் தன் உண்மையான இயல்பை அறிந்து நிறைவை அடைவதாகும்.

 

**************************