![]()
வாசகர் கேள்வி கேட்க பத்திரிகை ஆசிரியர் அல்லது ஒரு குழு பதில் சொல்வது வெகு காலமாக நடைபெற்று வருவது.
மதர் இந்தியா (பாபு ராவ் படேல்) , குண்டூசி கோபால், தமிழ்வாணன் , குமுதம் அரசு , கி வா ஜகந்நாதன் , ஜூனியர் விகடன் மதன்/ சுஜாதா, துக்ளக் சோ, சாவி, கண்ணதாசன் , தினமலர் அந்துமணி, தினத்தந்தி குருவி –
இன்னும் எத்தனையோ பிரபலங்கள் இதனைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.
நம் குவிகத்திலும் ‘வ வே சு அவர்களைக் கேளுங்கள்’ என்ற பகுதி கேள்வி பதிலாகவும் ஆடியோ வடிவிலும் வந்தது.
இப்போது இந்தக் கேள்வி பதிலை புதிய வடிவத்தில் கொண்டுவருகிறோம். எப்படி?
வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
“சாய்”
பதில் சொல்லப்போகிறார் .
யார் அந்த சாய்? நிச்சயமாக நம் சாய் கோவிந்தன் இல்லை சாய் கணேசனும் இல்லை.
குமுதம் ‘அரசு’ மாதிரி இதுவும் ராணுவ ரகசியம்.
கேள்விகள் சினிமா -அரசியல்- இலக்கியம் – அறிவியல்- விஞ்ஞானம் இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கேள்வியில் கிண்டல். நக்கல் இருக்கலாம்.
சாயின் பதில்களிலும் அதே கிண்டல் – நக்கல் – கோபம் – கலாய்ப்பு இருக்கலாம் கேள்வி கேட்ட நண்பர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது.
கேள்விகளைக் கேட்கும் வாசகர்கள் மாதாமாதம் வரும் இந்தப் பகுதியில் உள்ள கமெண்ட்ஸ் பத்தியில் தங்கள் பெயருடன் பதிவிடலாம்.
நேரடியாக குவிகத்திற்கு 94425252191 எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலல் அனுப்பலாம்.
குவிகம் இலக்கியத் தகவலில் பதிவிடலாம்.
மின்னஞ்சலிலும் (editor@kuvikam.com) அனுப்பலாம்.
சில கேள்விகளை குவிகமே கேட்கலாம்.
சாய் ரெடி ! நீங்கள் ரெடியா?
![]()
![]()
இந்த மாதம் குவிகம் சுந்தரராஜன் கேட்ட 5 கேள்விகளுக்கு சாயின் பதில்கள் இதோ!
கேள்வி: இலக்கியவாதிக்கும் காதலருக்கும் பிடித்த ஒன்று?
சாய் பதில்: பருவ இதழ்கள்.
கேள்வி: ஒரு நல்ல புத்தகத்தின் சிறந்த நண்பன் யார்?
சாய் பதில்: வாங்குபவன் அல்ல. படிப்பவன் அல்ல; எழுதியவன் நிச்சயமாக இல்லை. ஓசியில் வாங்கிப் போய் திருப்பித் தராதவன்தான் புத்தகத்தின் சிறந்த நண்பன்.
கேள்வி: கிரிக்கெட்டில் மிகவும் வேகமாக ஓடுவது யார்?
சாய் பதில்: ரன் அவுட் ஆகப்போகிறோம் என்று தெரிந்தும் ஒடுகிறானே அந்த பேட்ஸ்மன்தான்! அதைவிட அதுக்கு மீம்ஸ்தான் அதிகமா ஓடும். ஞாபகமிருக்கா? பாலுக்கு ஒரு ரன் அடிச்சா போதும்னு சொன்னா இந்தப் பசங்க ஆளுக்கு ஒரு ரன் அடிச்சுட்டு அவுட்டாகி வர்ரானுக!
கேள்வி: உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் “வாகனம்” எது?
சாய் பதில்: “வாய்”! தினமும் அதில் பயணிக்கும் வார்த்தைகளுக்கு கணக்கே இல்லை! சட்டசபை ரீல்ஸ் பாக்கலே ? இன்னிக்கு தேதிக்கு சூப்பர் காமெடி அதுதான். உங்கள் கேள்விக்குப் பதில் கேள்வி! சட்டசபையில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை – ‘மாண்புமிகு’ வா ‘உட்காருங்க’வா?

கேள்வி: மமிதா பைஜூ ??
சாய் பதில் : ரேவதி , நதியா, அசின் போல மல்லு நாட்டிலிருந்து வந்தவர். மலையாளம் தமிழ் இரண்டிலும் கலக்குகிறார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஹீரோ சூர்யாவைப் பல இடங்களில் ஓவர்டேக் செய்கிறார். ஜனநாயகனில் செல்லப்பொண்ணு இவர்தான். தனுஷின் ‘கர’ , பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ ஹிட் ஹீரோயின் இவர்தான். பிரேமலு , பெத்லேகாம் போன்ற மலையாளப் படங்களிலும் பேர் சொல்லும்படி நடித்தவர். இன்றைய தேதிக்கு தமிழில் டாப் லக்கி ஹீரோயின்?

