சங்க காலக் குடும்பம்
சங்க இலக்கியத்தில் குடும்பம் என்னும் சொல் இடம்பெறவில்லை. இல், மனை, குடி முதலான சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் குடும்பம் என்னும் அமைப்பு முறையை நமக்கு விளக்குகின்றன. திருக்குறளில்தான் குடும்பம் என்னும் சொல் வந்துள்ளது (1029). இல்லறம், மனையறம் முதலான சொற்களும் குடும்ப வாழ்க்கையைத் தெரிவிக்கின்றன.
திருமணப் பொருத்தம்
குடும்ப வாழ்க்கையை எல்லாக் காலங்களிலும் இரண்டு வகையில் பெற்றுள்ளனர். ஒன்று காதலிப்போர் தமக்குள்ளே திருமணம் செய்து கொள்ளும் முறை, இன்னொன்று பெற்றோர் பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து வைக்கும் முறை. இந்த இரண்டு முறையும் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. எனவேதான் திருமணப் பொருத்தமாகப் பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. (தொல்.1219)
பிறப்பு என்பது பிறந்த குடும்பப் பொருத்தத்தையும், குடிமை என்பது பிறந்த குடும்பத்தின் பெருமையையும், ஆண்மை என்பது ஆளுமைத் தன்மையையும், ஆண்டு என்பது வயதின் பொருத்தத்தையும், உரு என்பது உருவப் பொலிவையும் உணர்த்தும். காம வாயில் என்பது இருவருக்கும் இருக்கும் இல்வாழ்க்கைப் பொருத்தத்தையும், நிறை என்பது நிறைவு மனப்பான்மையையும், அருள் என்பது இரக்கப் பண்பையும், உணர்வு என்பது அறிவினாலும் அனுபவத்தினாலும் ஏற்படும் உணர்தல் திறனையும், திரு என்பது செல்வத்தையும் குறிக்கும். இப்படிப் பத்துப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யும் முறை, சங்க காலத்தில் இருந்துள்ளது.
பெரியோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் மட்டுமே இப்படிப்பட்ட பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யும் முறை இருந்துள்ளது. ஆணும் பெண்ணும் தங்களுக்குத் தாங்களே ஏற்பாடு செய்யும் திருமண வாழ்க்கையில் அவர்களாகவே தங்களது தேவைகளை உணர்ந்து செயல்பட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருந்துள்ளது.
களவு மணம்
களவு மணம் புரிந்த ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியில் சென்றுவிட்டனர். மகளைப் பிரிந்த தாய், தன் மகளைத் தேடி, அவள் சென்ற வழியில் செல்கிறாள். மகள்மேல் கொண்ட அளவு கடந்த பாசத்துடன் சென்ற அந்தத் தாய், தனது மகளைக் காணாமல் பரிதவித்தாள். அங்கே வந்த அந்தணர்களைப் பார்த்து, “என் மகளும் வேறு ஒருத்தியின் மகனும் தாங்களாகவே திருமணம் செய்து கொண்டு சென்றதைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறாள்.
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்,
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும! (கலித். 9)
என்னும் இந்த அடிகளை யாரிடம் கேட்டாளோ அந்த அந்தணரின் தோற்றப்பொலிவையும் பாலை பாடிய பெருங்கடுங்கோ கண்முன் நிறுத்தியுள்ளார்.
பாலை நிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தைத் தடுக்கும் வகையில் குடையைப் பிடித்தபடி அந்தணர்கள் நடக்கின்றனர். இன்னொரு கையில் கமண்டலத்தைத் தாங்கிய உறியை ஒரு கம்பில் தொங்கவிட்டபடி தோளில் வைத்துக் கொண்டு செல்கின்றனர். தீய பழக்கம் எதையும் எண்ணிப் பார்க்காமல் பெரியோரின் குறிப்பினை அறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்யும் பண்பு உடையோராகிய அவர்கள், மாலை வேளையில் செய்யும் கடமைகளைச் செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தனர்.
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! (கலித். 9)
என்னும் அடிகளில் சங்க காலத்தில் வாழ்ந்த அந்தணரின் பழக்க வழக்கத்தைத் தெளிவாகப் பாடியுள்ளார்.
குடும்ப வறுமை
தலைவனுடன் தானே சென்று வாழும் தலைவி இளமையில் எவ்வாறு எல்லாம் உணவினை வேண்டாம் என்று மறுத்தாள் என்பதையும் இப்போது உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் வருந்துகிறாளே என்பதையும் நினைத்து, தலைவி பாடுவதாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் கபிலர் படைத்துள்ளார்.
தேன் கலந்த பாலைப் பொன் கிண்ணத்தில் வைத்து, ஊட்டும் போது வேண்டாம் என்று ஓடிய சிறுமி என் மகள். அவளை உண்ண வைப்பதற்காக ஒரு கோலைக் கையில் எடுத்து அதன் நுனிப் பகுதியில் பூவைச் சுற்றிக் கட்டிவைத்துக் கொண்டு செவிலியர் ஓங்குவார்கள். அப்போது அவள் முத்து ஒலிக்கும் சிலம்பு அணிந்த காலால் வீட்டின் முன் பகுதியில் ஓடுவாள். அப்படிப்பட்ட என் மகள் இன்று, தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கணவன் வீட்டில் உள்ள வறுமையை உணர்ந்து அங்கே கிடைக்கும் கஞ்சியை உரிய வேளையில் அல்லாமல் கிடைக்கும் வேளையில் உண்ணுகிறாள். இந்தக் குடும்ப வாழ்க்கைப் பண்பை அவள் எங்கே கற்றுக்கொண்டாள் என்று கேட்பதுபோல் பாடியுள்ளார்.
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
‘உண்’ என்று ஓக்குபு பிழைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே! (நற். 110)
வளமான வீடாக, தாய்வீடு இருந்தது. அதற்குப் பழகிய ஒரு பெண், திருமணத்திற்குப்பின், கணவனின் வீட்டிற்கு ஏற்ப, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
சிலம்பு கழி நோன்பு
பெண்களுக்குத் திருமணம் ஆவது வரை அணியும் சிலம்பும் திருமணத்திற்குப் பிறகு அணியும் சிலம்பும் வேறு வேறானவை. திருமணத்தன்றோ அல்லது அதற்கு முந்தைய நாளோ, பெண் அணிந்திருக்கும் கால் சிலம்பினைக் கழற்றும் சடங்கினை நடத்தியிருக்கிறார்கள். இதனைச் சிலம்பு கழி நோன்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள். பெரியோர் ஏற்பாடு செய்யும் திருமண முறையிலேயே இந்த நோன்பினை நடத்த முடியும். தலைவனும் தலைவியும் தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்துகொண்டு செல்லும்போது இந்த நோன்பினை முறையாகச் செய்ய இயலாது. அவ்வாறு தலைவனும் தலைவியும் தாங்களாகவே திருமணம் செய்து கொண்டாலும் தலைவனின் தாய் அந்தச் சிலம்பு கழி நோன்பினை நடத்தலாம்.
தலைவி ஒருத்தி, தலைவனுடன் சென்று திருமணம் செய்துகொண்டாள். தலைவனின் தாய், சிலம்பு கழி நோன்பினை நடத்தவில்லை. சிலம்பு கழற்றப்படாமல் இருந்த தலைவியைப் பார்த்த அவளது தாய் வருந்திப் பாடுவதாக ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று அமைந்துள்ளது.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே, வென்வேல்
மையற விளங்கிய கழல் அடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே! (ஐங்குறு. 399)
எங்கள் பெண்ணின் கால் சிலம்பினைக் கழற்றியபின் திருமணச் சடங்கினை உங்கள் வீட்டில் செய்ய விரும்பவில்லை என்றாலும் நீங்களே சிலம்பு கழி நோன்பினை நடத்திவையுங்கள் என்று சொல்லியிருந்தால் நாங்களே நடத்தியிருப்போம் என்று வருந்துவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தங்கள் மகளின் திருமணத்தை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் என்று பெற்றோர் எண்ணியிருப்பதை ஓதலாந்தையாரின் இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
திருமண முறை
சங்க காலத்தில் திருமண நிகழ்ச்சியை மங்கலப் பெண்களே நிகழ்த்தியுள்ளனர். அகநானூற்றின் 86 ஆம் பாடல் திருமண விழாவைச் சிறப்பாக எடுத்துரைக்கிறது. நல்ல நாள் பார்த்துத்தான் திருமணத்தை நிகழ்த்தியுள்ளனர் என்பதையும் இந்தப் பாடலும் அகநானூற்றின் 136ஆம் பாடலும் தெரிவிக்கின்றன.
மணப்பந்தலில் மணமகன் வீற்றிருக்கிறான். வீட்டில் இருக்கும் மணப்பெண்ணை அழைத்து வரும்போது நிறைகுடத்துடன் பெண்கள் முன்னால் சென்றுள்ளனர். புதிய பானைகளுடன் மேலும் சில பெண்கள் பின்னால் சென்றுள்ளனர்.
மணப்பந்தலில் பெண்ணை அமரச் செய்து மங்கலப் பெண்கள் – குழந்தை பெற்ற பெண்கள் வந்து திருமணச் சடங்கினைச் செய்துள்ளனர். மணப்பெண்ணின் மேல் நெல்லையும் பூவையும் தூவியுள்ளனர். அதன் பிறகு ‘கற்பு நெறியில் தவறாமல் இல்லற வாழ்க்கையில் இணைந்து ஈடுபடுங்கள்’ என்று வாழ்த்தினர். இவ்வளவுதான் திருமணம்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வாகப் நாள் பார்த்தல், பந்தல் அமைத்தல், புதுமணல் பரப்புதல், பூமாலை கட்டித் தொங்க விடுதல் முதலான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். திருமணத்தை அதிகாலையில் நிகழ்த்தியுள்ளனர். வீடு முழுவதும் விளக்குகளை வரிசையாக வைத்து ஒளியேற்றியுள்ளனர்.
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்
”கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!” என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை (அகம்.86)
என்னும் அகநானூற்று அடிகள் இதனைத் தெரிவிக்கின்றன. வதுவை என்னும் சொல்லுடன் நல்மணம் என்னும் சொல்லும் சேர்ந்து திருமணத்தைக் குறிக்கின்றன. வதுவை என்பது திருமணச் சடங்கையும் நல்மணம் என்பது திருமணத்தையும் குறித்துள்ளது.
திருமுருகாற்றுப்படையில் முருகனின் திருமணத்தை நக்கீரர் ஒரே அடியில் தெரிவித்துள்ளார். முருகனுக்குப் பன்னிரண்டு கைகள் என்றும் அந்தக் கைகளில் ஒன்று தெய்வானையைத் திருமணச் சடங்கின் மூலம் ஏற்றுக்கொண்டது என்று பாடியுள்ளார்.
வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட (அடி 117)
என்னும் அடி, வான்அர மகளான-தேவ மகளான தெய்வானைக்குத் திருமண மாலை சூட்ட என்று பாடியுள்ளார்.
திருமண விருந்து
திருமண விருந்தாகச் சங்க காலத்தில் உழுந்தஞ்சோறு வழங்கியுள்ளனர். இதே விருந்தினைத் தற்காலத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண விருந்தில் வழங்குவது உண்டு.
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப (அகம். 86)
நன்றாக வெந்த உழுந்துடன் கலந்த சோற்றுடன் திருமண விருந்து வழங்கப்பட்டதாக இந்த அடிகள் தெரிவிக்கின்றன.
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி (அகம். 136)
என்னும் அடிகளும் திருமண விருந்தினைக் குறிக்கின்றன. இந்த விருந்தில் புழுங்கல் அரிசிச் சோற்றை நன்றாக வேகும்படி சமைத்து அதனுடன் நெய்யை மிகுதியாகக் கலந்து நெய்ச்சோறு வழங்கினர் என்றும் அதனை அளவில்லாமல் கொடுத்தனர் என்றும் தெரிவிக்கிறது.
தலை நாள் இரவு
திருமணம் ஆன அன்றே மணமக்களை இல்வாழ்க்கையில் இணைக்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்திருக்கிறது. இவ்வாறு இல்வாழ்க்கைக்கு அனுப்பிய நாளைத் தலைநாள் இரவு என்று சங்க இலக்கியம் தெரிவித்துள்ளது. தலைநாள் என்பது முதல்நாளைக் குறிக்கும். அந்தப் பொருளில்தான் தற்காலத்திலும் முதல் இரவு என்று குறிப்பிடுகிறோம்.
பெண்ணின் உறவினர், மணப்பெண்ணிற்குப் புது நூல் புடவையை அணிவித்து அவளை, மணமகனுடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனுப்பினர். அந்தப் புடவையை அவள், தன் உடல் முழுவதும் போர்த்தியிருந்தாள். அது புதிய ஆடை என்ற காரணத்தால் கசங்காமல் நின்றது. அதனாலும் அச்சத்தாலும் அவளது நெற்றி வியர்த்திருந்தது. “உனது நெற்றியில் உள்ள வியர்வையைத் துடைத்து விடுகிறேன். உனது ஆடையை விலக்கு” என்றான் மணமகன். அவள் ஆடையை விலக்காமல் அப்படியே இருந்தாள். அவளின் கசங்காமல் இருந்த அந்த மேலாடையை விலக்கினான். அப்போது அவளது உடல் பளீர் என்று மின்னி ஒளி வீசியது. அதை உடனே மூட இயலாமல் ‘ஒய்’ என்று வெட்கக் குரல் எழுப்பியபடி தனது ஆம்பல் மலர் சூடிய நீண்ட கூந்தலால் மறைத்துக்கொண்டாள் என்பதை விற்றூற்று மூதெயினனார் என்னும் புலவர் பின்வரும் அடிகளில் பாடியுள்ளார்.
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என,
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே (அகம். 136)
இந்தப் பாடலிலிருந்து திருமணச் சடங்கு, பெண் வீட்டில்தான் நடைபெற்றிருக்கிறது என்பதையும் முதல் இரவு என்னும் தலைநாள் இரவு நிகழ்ச்சியும் பெண் வீட்டிலேயே நிகழ்ந்திருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதன்பிறகு அவர்கள் எங்கே சென்று வாழ்ந்தார்கள் என்பதை உடன் போக்கு என்னும் நிகழ்விலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள இயலும். தலைவனுடன் செல்லும் தலைவி, தன் வீட்டைத் துறந்து செல்வதால் சங்க காலத்தில் தாய்வழிக் குடும்ப அமைப்பு முறை இல்லாமல் தந்தைவழிக் குடும்ப அமைப்பே இருந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள இயலும்.
குழந்தை பெற்ற பெண்
தலைவனுடன் தலைவி நடத்திய இல்லற வாழ்க்கையின் பயனாக அவள் குழந்தையைப் பெறுகிறாள். அந்தக் குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு, தலைவனும் தலைவியும் இரண்டு பக்கத்திலும் படுத்திருக்கிறார்கள். இந்தக் காட்சியை ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
செவிலித் தாய் இந்தக் காட்சியைக் கண்டு, தலைவியின் தாயிடம் தெரிவிக்கிறாள். நீல வானத்தால் மூடி இருக்கக் கூடிய இந்த உலகத்திலும் தேவர்கள் உலகத்திலும் இப்படிப்பட்ட அரிய காட்சியை நம்மால் காண இயலாது என்று அவள் கூறுவதுபோல் பேயனார் பாடியுள்ளார். மகளும் மருமகனும் இனிய இல்லறம் நடத்துவதைப் பார்த்து, பெற்றோர் மகிழ்ந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே (ஐங்குறு. 401)
என்னும் இந்தப் பாடலில் அந்தக் காலத்தில் குடும்ப அமைப்பு முறை எப்படி இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
பெண்களை மனைக்கு விளக்கு என்று போற்றும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. மனையுறை மகளிர் என்று குறுந்தொகை (135) போற்றும். இவ்வாறு போற்றும் தன்மையைப் புறநானூற்றின் 314ஆம் பாடல் தெளிவுபடுத்துகிறது.
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
என்னும் அடியில் கணவன் அறிமுகம் செய்யப்படுகிறான். பெண்ணின் கணவன் என்று அறிமுகம் செய்வதிலிருந்தே பெண்ணுக்கு அந்தக் காலத்தில் வழங்கியிருந்த முதன்மையை நாம் அறிந்து கொள்ள இயலும்.
சங்ககால வீடு
சங்க காலத்தில் குடும்பம் நடைபெற்ற ஒரு வீட்டின் கூடத்தை நம் கண்முன் காட்டுகிறார் மாங்குடி கிழார். எருமைக் கன்றுகளை வீட்டுக் கூடத்தில் உள்ள தூண்களில் கட்டியுள்ளனர். அகன்றதாகவும் தூண்களைக் கொண்டதாகவும் அந்தக் காலத்தில் வீடுகள் இருந்த தன்மையையும் கன்றுக்குட்டிகளை வீட்டின் உள் பகுதியில் கட்டும் நடைமுறையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்இல் (நற். 120)
இந்தப் பாடலில் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் இருந்தாலும் விருந்தினரை வரவேற்று உணவுபடைக்கும் தன்மையும் கூறப்பட்டுள்ளது.
தலைவியின் சமையல்
திருமணம் செய்துகொண்டபின் தலைவி, தன் கணவனுடன் தனியாக வாழ்கிறாள். அந்த வேளையில் அவளது தாய், தன் மகள் எவ்வாறு குடும்பம் நடத்துகிறாளோ என்ற கவலையுடன் இருக்கிறாள். தலைவியைக் காண்பதற்காக வந்த செவிலித் தாய் அவளது சமையல் திறத்தைப் பார்த்து வந்து, தலைவியின் தாய்க்குச் சொல்வது போல் அமைந்துள்ள குறுந்தொகைப் பாடலில் தலைவியின் சமையல் திறம் காட்டப்பட்டுள்ளது.
கட்டித் தயிரைத் தனது காந்தள் போன்ற மென்மையான விரலால் பிசைந்தாள். அதில் மோர்க்குழம்பு செய்தாள். தயிர் பிசைந்த கைகளைக் கழுவாமல் தன் ஆடையிலேயே துடைத்துக் கொண்டாள். அடுப்பில் மோர்க் குழம்பு கொதிக்கும்போது அவளது கண்களில் புகை நிறைந்தது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டு தன் கணவனுக்காகத் தலைவி சமைக்கிறாள். அந்தச் சமையலை உண்ட தலைவன், ‘மிகவும் சுவையாக இருக்கிறது’ என்று பாராட்டியதும் அவளது முகத்தில் புன்னகை அரும்பியது என்று கூடலூர் கிழார் பாடியுள்ளார்.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. (குறுந். 136)
இதுவரை சமைத்துப் பழகாதவள் தலைவி என்பதை ஆடையில் கையைத் துடைத்த தன்மையிலிருந்தும் புகையைக் கண்ணுக்குள் ஏற்றுக் கொண்டதிலிருந்தும் உணர்த்தியுள்ளார்.
தனிக்குடும்பம்
தனிக்குடும்ப அமைப்பு முறையிலேயே சங்க காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். மேலே கூறிய ஐங்குறுநூற்றுப் பாடலில் தலைவன், தலைவி, குழந்தை என்னும் சிறிய குடும்பமாக வாழ்ந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. இந்தக் குடும்ப அமைப்பில் பெற்றோர் உடனிருந்தாலும் தனிக்குடும்பமாகவே கருதப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பின்வரும் புறநானூற்றுப் பாடலில் தந்தை, மகள் – கணவன் – குழந்தை என அனைவரும் ஒரே வீட்டில் தனிக்குடும்பமாக வாழ்ந்த தன்மையைக் காணமுடிகிறது.
கெடுக சிந்தை! கடிதுஇவள் துணிவே!
மூதின் மகளிர் ஆதல் தகுமே!
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்ஐ,
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே!
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே!
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! (புறம். 279)
என்னும் இந்தப் பாடலில் ஒரு பெண்ணின் வீரத்தை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த போரில் இவளது தந்தை, யானையை வீழ்த்திவிட்டு அந்தக் களத்திலேயே உயிர் துறந்தான். நேற்று நடைபெற்ற போரில் இவளது கணவன், பகைவனின் பெரும்படையைப் பிளந்து சென்று போரிட்டு மடிந்தான். இன்றும் போர்ப்பறை ஒலிக்கக் கேட்டதும் தன் ஒரே மகனின் கையில் வேல் கொடுத்து அவனது குடுமியில் எண்ணெய் பூசி முடித்து, வெள்ளை உடை உடுத்திப் போர்க்களத்திற்கு அனுப்புகிறாள். இவளது இந்த வீரத் துணிவு எல்லோருக்கும் வருவது அல்ல என்று வியந்து பாடியுள்ளார். இவ்வளவு வீரம் நிறைந்த இந்தப் பெண் மூதின் மகளிர் என்னும் தகுதியைப் பெறுவதற்குத் தகுதியுடையவள் என்றும் கூறியுள்ளார்.
மூதின் மகளிர் என்னும் சொல் குடும்ப அமைப்பில் மூத்த பெண்களைக் குறிக்கும் சொல். மூதின் மகளிர்க்கு இணையான மூத்த பெண் இல்லை இவள். ஒரே ஒரு மகனைப் பெற்றவள். எனவே இவள் இளம்பெண்தான். இந்த இளம்பெண், தனது வீர நெஞ்சத்தால் குடும்பத்தில் மூத்த பெண்ணுக்கு இணையானவள் ஆகிவிட்டாள் என்று குறிப்பிடும் இந்தப் பாடலில் வெள்ளை உடுத்தல் என்னும் செய்தியும் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை உடுத்தல் என்பது இறந்தோர்க்கு உடுத்தப்படும் துணியைக் குறிக்கிறது. தன் மகனுக்கு வெள்ளை உடை உடுத்தி அனுப்புகிறாள் என்றால் அவன், இனிமேல் உயிருடன் திரும்பி வரவில்லை என்றாலும், அவனுக்கு அணிவிக்க வேண்டிய வெள்ளை உடையைப் போர்த்திவிட்டேன் என்னும் பொருளை இங்கே உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தக் குடும்பத்தில் பெற்றோரும் பெண்ணின் கணவனும் மகனும் மட்டும் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கும் இந்தக் குடும்பத்தைக் கூட்டுக் குடும்பம் என்று கருதக்கூடாது. இதுவும் தனிக்குடும்பமே ஆகும்.
கூட்டுக் குடும்பம்
கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், கணவன்-மனைவி என்னும் குடும்பத்துடன் கணவனின் உடன்பிறந்தோர் முதலானோர் திருமணம் செய்து கொண்ட பிறகும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கூட்டுக் குடும்பமாகும். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் பெற்றோர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அக்குடும்பம் கூட்டுக் குடும்பம் ஆகாது. இந்தக் கூட்டுக் குடும்ப நடைமுறையைச் சங்க இலக்கியம் குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடவில்லை.
கூட்டம் கூட்டமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் சென்று பாடிக் குடும்பம் நடத்தும் பாணர் குழுவிலேயே இந்தக் கூட்டுக் குடும்ப முறை இருந்த தன்மையைக் காணமுடிகிறது.
வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! (பெரும்பாண். 17-22)
என்னும் அடிகளில் பாணர்கள் குழுவினருடன் சேர்ந்து பாலை நிலத்தில் தங்கியிருந்த தன்மையை உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார். கூட்டுக்குடும்பம் என்பது பாதுகாப்புத் தொடர்பானதாக இருந்திருக்கிறது. தங்கள் குடும்பம் முழுவதையும் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். மற்றவர்கள் தனிக்குடும்பங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
சங்க காலத்தில் இரண்டு வகையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவை காதல் திருமணம் என்னும் களவு மணம், பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்னும் கற்பு மணம் ஆகும். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண முறையில் மங்கலப் பெண்களே திருமணச் சடங்குகளை நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு, சிலம்பு கழி நோன்பு என்னும் சடங்கினையும் நடத்தியுள்ளனர். திருமணம் நடைபெற்ற அன்றிரவே தலைநாள் இரவாக முதல் இரவு நடைபெற்றிருக்கிறது. சங்க காலக் குடும்பச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகவே இருந்துள்ளது. குடும்ப அமைப்பானது பெரும்பாலும் தனிக்குடும்ப அமைப்பாக இருந்துள்ளது. பாணர் முதலான கூடி வாழும் இயல்பு கொண்டோர் பாதுகாப்புக் கருதி, கூட்டுக் குடும்பத்தைப்போல் குழுவினராக வாழ்ந்துள்ளனர். அவர்களும் தங்கள் தங்கும் இடங்களில் தனிக்குடும்ப நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். கணவன், மனைவி, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் என்பது தனிக்குடும்பமாகவே இருந்துள்ளது.

