மூன்றாம் புத்தகத்தில் சில உருமாற்றங்களை – காட்மஸ், ஆக்டேயான், நார்சிசஸ், எக்கோ போன்றோரின் கதைகளைப் பார்த்தோம்.

இப்போது நான்காம் புத்தகத்தில்  சில காதல் கதைகள் நம்மைக் கவர வருகின்றன.

தீப்ஸ் நகரத்தில் இளம் பெண்கள் சிலர் ஒன்று கூடி அவர்கள் முன்பே கேட்டிருந்த காதல் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருத்தி  அல்சிதோ. அவள் காதல் கதைகள் சொல்வதில் வல்லவள்.

அவள் சொன்ன முதல்  கதை தான் பிரமஸ் மற்றும் திஸ்பேயின் சோகக் காதல் கதை.  உலகப் புகழ் பெற்ற ரோமியோ – ஜூலியட்   கதை இதிலிருந்துதான் வந்திருக்கக்கூடும்.

1. பிரமஸ் –  திஸ்பே காதல்

Pyramus and Thisbe | Greek Myth by Bulfinchபாபிலோன் நகரத்தில் அடுத்தடுத்து இருந்த இரண்டு வீடுகளில் பிரமஸும் திஸ்பேயும் வாழ்ந்தார்கள்.

இருவரும் இளம் வயதினர். ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அந்த முதல் பார்வையிலேயே அவர்கள் காதலில் விழுந்தார்கள்.

ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தக் காதலை ஏற்கவில்லை.

அவர்கள் சந்திக்கவே கூடாது என்று தடை விதித்தார்கள்.

ஆனால் காதலுக்கு எல்லைகள் ஏது?

இருவருடைய வீடுகளையும் பிரித்த சுவரில் ஒரு சிறிய விரிசல் இருந்தது.

அந்த விரிசல் வழியாகத்தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

“கண்ணே ! நீ என் அருகிலேயே இருக்கிறாய். ஆனால் உன்னைத் தொட முடியவில்லை!” பிரமஸ் சுவரை முத்தமிட்டுவிட்டுக் கூறுவான். 

“இந்தச் சுவராவது நம் இருவருடைய காதலைக் கேட்கிறதே!” என்று திஸ்பே  சிரித்துக் கொண்டே  சொல்லி வாழ் பக்கம் இருக்கும் சுவரை முத்தமிடுவாள்.

கடைசியில் இருவரும் “நாம் வீட்டைவிட்டு வெளியேறி, நகரத்துக்கு வெளியே இருக்கும்  கல்லறை அருகே சந்திப்போம்.” என்ற  முடிவுக்கு வந்தார்கள்.

அந்த இரவு திஸ்பே முதலில் அங்கு வந்தாள்.

அவள் ஒரு மல்பெரி மரத்தின் கீழ் நின்று பிரமஸுக்காகக் காத்திருந்தாள்.

அப்போது ஒரு பெண் சிங்கம் அங்கே வந்தது. அதன் வாயில் இரத்தம் படிந்திருந்தது.

பயந்த திஸ்பே ஓடிவிட்டாள்.

ஓடும்போது அவளுடைய முகத்திரை கீழே விழுந்தது.

சிங்கம் அதை வாயால் கவ்வி விளையாடியது. அதன் இரத்தக் கறை அந்தத் துணியில் படிந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு பிரமஸ் அங்கு வந்தான்.

தரையில் கிடந்த திஸ்பேயின் முகத்திரையையும், அதன் மேல் இருந்த இரத்தத்தையும் பார்த்தான்.

“திஸ்பேயை சிங்கம் கொன்றுவிட்டது!” என்று நினைத்தான்.

தாங்க முடியாத துயரத்தில் தனது வாளால் தன்னைத்தானே குத்திக்கொண்டான். அவன் இரத்தம் மரத்தின் வேர்களை நனைத்தது.

அப்போது திஸ்பே திரும்பி வந்தாள்.

அங்கே உயிர் விட்டுக் கொண்டிருந்த பிரமஸைப் பார்த்தாள்.

“என்னால் அல்லவா இது நடந்தது?” என்று கதறினாள்.

அவளும் அதே வாளால் தன்னையும் மாய்த்துக்கொண்டாள்.

அவர்களுடைய இரத்தத்தால் அந்த மரத்தின் வெள்ளை நிறப் பழங்கள் சிவப்பு நிறமாக மாறின.

மல்பெரிப் பழத்தின் நிறமாற்றத்திற்கு இந்தக் காதலர்  கதையே காரணம் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.  

2. சூரியனின் காதல் 

Leucothea Greek sea goddess of transformationஅடுத்ததாக  அல்சிதோ  மற்றொரு கதையைச் சொன்னாள். இது கிட்டத்தட்ட நம் அனார்கலி கதை மாதிரி இருக்கும்.

சூரியதேவன் ஒருநாள் அழகான இளம்பெண் லியூகோத்தோய் மீது காதல் கொண்டார்.

அவளுடைய தந்தை மிகக் கடுமையானவர்.

சூரியதேவன் அவளை அடைவதற்காக அவளுடைய தாயின் உருவத்தில் அவளுடைய அறைக்குள் நுழைந்தார்.

பின்னர் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தினார்.

லியூகோத்தோய் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் அவளைப் பார்த்து பொறாமைப்பட்ட அவள் தோழி   கிளைட்டி இந்த விஷயத்தை அவளுடைய தந்தையிடம் சொல்லிவிட்டாள்.

கோபமடைந்த தந்தை லியூகோத்தோயை உயிரோடு புதைத்துவிட்டார்.

அவளைக் காப்பாற்ற சூரியதேவன் முயன்றும் முடியவில்லை.

அவள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மணமிக்க தாவரம் முளைத்தது.

அது குங்குமப்பூ மாதிரி  நறுமணப் பிசின் தரும் மரமாக மாறியது.

 

அவள் தோழி கிளைட்டிக்கு என்ன நடந்தது?

அவள் சூரியனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.

ஒன்பது நாட்கள்.

அவள் உணவையும் மறந்தாள்.

இறுதியில் அவளுடைய கால்கள் வேர்களாகி, உடல் ஒரு மலராக மாறியது.

சூரியனை நோக்கித் திரும்பும் அந்த மலரே சூரியகாந்தி என்று பின்னாளில் அழைக்கப்பட்டது.

3. ஆண்–பெண் இரு உருவங்களையும் அனுபவித்த சீர்சியஸ்

அடுத்து அல்சிதோ சொன்ன கதை சற்று வித்தியாசமானது.

சல்மசியஸ் (Salmacis) என்ற நீர் தெய்வம் ஒருநாள் அழகான இளைஞன் ஹெர்மாஃப்ரொடிடஸ் என்பவனைப் பார்த்தாள்.

அவனைப் பார்த்தவுடன் காதலில் விழுந்தாள்.

ஆனால் அவன் அவளைக் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அவன் அந்த நீரில் குளிக்க இறங்கினான்.

சீர்சியஸ் அவனை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“நம்மை ஒருபோதும் பிரிக்க முடியாதபடி செய்துவிடு!” என்று தெய்வங்களிடம் வேண்டினாள்.

அவளுடைய வேண்டுதல் நிறைவேறியது.

இருவருடைய உடலும் ஒன்றாகக் கலந்தது.

ஆண் மற்றும் பெண் இருவருடைய உறுப்புகளும்  ஒரே உடலில் இணைந்த உருவம் தோன்றியது.

அந்தக் கலப்பு உருவம் பின்னாளில் இருபாலினம்   என்ற சொல்லுக்கே காரணமானது.( இந்த இரு பாலினம் தாவரங்கள், சிலவகை மீன்களில் மட்டும் காணப்படும். மனிதர்களில் இது கிடையாது)

4. கடவுள் பாக்கஸை அவமதித்த பெண்கள்

இவ்வாறு காதல் கதைகளைக் கேட்ட பெண்கள் மயக்கம் தரும் கடவுள் பாக்கஸைக் கிண்டல் செய்து ஆடிப் பாட ஆரம்பித்தார்கள்.

அப்போது  அந்தப் பெண்களின் வீட்டுக்குள் திடீரென்று  சில வினோதமான செயல்கள்  நடைபெற்றன.

அவர்களுடைய  இல்லங்களிலிருந்த துணிகள்  தானாகவே பச்சை இலைகளாக மாறின.

சுவர்களில் திராட்சைக் கொடிகள் படர்ந்தன.

வீடு முழுவதும் காதல்  திருவிழா போல மாறியது.

அந்தப் பெண்கள் பயந்து ஓடினார்கள்.

ஆனால் அவர்களுடைய உடல்களும் மாறத் தொடங்கின. சிறகுகள் முளைத்தன. கைகள் சிறகுகளாகின.

அவர்கள் வவ்வால்களாக மாறி இருளில் பறந்து சென்றார்கள்.

5. வீரன் பெர்சியஸ் 

Perseus – Mythology Unbound: An Online Textbook for Classical Mythologyஇதற்குப் பிறகு கதை வேறு இடத்துக்குச் செல்கிறது.

பெர்சியஸ்,  என்ற வீரனுக்கு அதீனா என்ற கடவுளிடமிருந்து ஒரு பெரிய கட்டளை  கிடைத்தது. மெதூசா என்ற அரக்கியின்  தலையை வெட்டி எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்பதே. அது.  அவள் தலையை யார் பார்த்தாலும் அவர்கள் அப்படியே கல்லாகிவிடுவார்கள்.  பெர்சியஸ் சாமர்த்தியமாக  அவள் முகத்தை நேரில் பார்க்காமல் அவள் உருவத்தை கேடயத்தில் பார்த்து அவள் தலையைக் கொய்தான். அந்தத் தலையை ஒரு பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டான்.

அந்தத் தலையை அதீனாவிற்குக் கொடுக்க  விண்ணில் பறந்து கொண்டிருந்தான்.

அப்போது கடற்கரையில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டான்.

ஆண்ட்ரோமெடா. என்ற அழகிய பெண் இளம் பெண் பாறையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாள்.

அவளுடைய தாய்  தன் மகள் கடல் தெய்வங்களைவிட அழகானவள் என்று பெருமைப்பட்டிருந்தாள்.

அதற்குத் தண்டனையாக கடல் தெய்வங்கள் ஒரு பயங்கரமான கடல் அரக்கனை அனுப்பியிருந்தன.

ஆண்ட்ரோமெடாவை அதற்கு பலியாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெர்சியஸ் அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் காதலில் விழுந்தான்.

அவளுடைய தந்தையிடம், “இவளை எனக்கு மணம் செய்து கொடுத்தால், நான் இந்த அரக்கனை அழிக்கிறேன்!” என்றான்.

அரக்கன் கடலிலிருந்து பாய்ந்து வந்தான்.  பெர்சியஸ் மிகப் பயங்கரமாகப்  போரிட்டான். அரக்கனை வெல்ல முடியாத நிலையில், அவன் தான் கண்களி மூடிக்கொண்டு  தனது மிகப் பெரிய ஆயுதமான மெதூசாவின் தலையை வெளியே எடுத்தான்.

அரக்கன் அந்த முகத்தைப் பார்த்ததும்  உடனே கல்லாக மாறினான்.

ஆண்ட்ரோமெடா காப்பாற்றப்பட்டாள்.

பெர்சியஸ் அவளை மணந்தான்.

அதற்கு பிறகும் கூட  பெர்சியஸ் தன்னைத் தாக்க வரும் கொடிய அரக்கர்களை  மெதூசாவின் தலை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கல்லாக மாற்றினான். கல்லாக மாறியவர்கள் முகத்தில் பயத்தின் வடிவம் அப்படியே தெரிந்தது. 

இன்னும் நிறைய இருக்கிறது.