மகாகவி பாரதியார் நவீன தமிழ்க் கவிதையின் தந்தையாகக் கருதப்படுபவர். அவர் தன் கவிதைகளின் உள்ளடக்கத்திலும் மொழியிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி தமிழ் இலக்கியத்தை நவீன காலத்திற்கு அழைத்துச் சென்றவர்.
அதுவரை அறிஞர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் கடினமான தூய தமிழ் நடையில் இருந்த கவிதைகளை, சாமானிய மக்களும் படித்து உணரும் வகையில் எளிய தமிழ் நடைக்கு மாற்றியவரும் அவரே ஆவார்.
புலவர்கள் அரசர்களையும், கடவுள்களையும் மட்டுமே பாடிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் கவிதையில், நாட்டுப்பற்று, சமூக விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சாமானிய மனிதர்களின் உணர்வுகள் போன்றவற்றைப் பற்றி முதன்முதலாகப் பாடியவரும் பாரதியாரே.வசன கவிதை வடிவத்தை தமிழில் அறிமுகப்படுத்தி, பிற்காலத்தில் தமிழில் ‘புதுக்கவிதை’ இயக்கம் மலருவதற்கு அவரே வழிவகுத்தார்.
ரஷ்யப் புரட்சி (ஆகஸ்ட் பாட்டு) மற்றும் பெல்ஜியம் நாட்டின் வீழ்ச்சி போன்ற உலக நிகழ்வுகளையும் சர்வதேச நிகழ்வுகளையும் உடனுக்குடன் தன் கவிதைகளில் பதிவு செய்தார்.
மகாகவி பாரதி தெய்வ பக்தி நிறைந்தவர்.ஆனால்,அது மூடநம்பிக்கை அற்றது. அறிவுபூர்வமானது. தேச பக்தியுடன் இணைந்தது. அவர் சக்தியைத் தாயாகவும் கண்டவர். அதனால், அவரின் பாடல்களில் சுதந்திர வேட்கையும், மனிதநேயமும் விரவிக் கிடந்தன.
பாரதி காளியை தன் குலதெய்வமாக வணங்கினார். அவளின் அருளையும் வீரத்தையும் தன் பாடல்களின் மூலம் வேண்டினார்.அதே நேரத்தில், கண்ணனை தன் சேவகனாகவும், அரசனாகவும், சீடனாகவும், காதலனாகவும் பல வடிவங்களில் கண்டு மகிழ்ந்து பாடினார். விநாயகர் நான்மணிமாலை போன்ற நூல்கள் மூலம் கணபதியையும் முருகனையும் எளிமையாகத் தொழுதுபக்தியில் திளைத்தார்.
கடவுளுக்குப் பயப்படுவதை விட, தீமைக்குப் பயப்பட வேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற வரிகள் அவரது வீர பக்திக்கு சான்றுகளாய் நிற்கின்றன.
பராசக்தியைப் பற்றிப் பாடும் பாரதி,
‘அல்லினுக்கும் பெருஞ்சுடர் காண்பவர்,
அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்.
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,
புல்லினுள் வயிரப்படைக் காணுங்கால்,
பூதலத்தில் பராசக்தி தோன்றுமே’
என்று பாடுகிறார். இவ்வரிகள் அவர் பராசக்தியின் மேல் வைத்திருந்த பக்திப் பரவசத்தை வெளிப்படுத்துகின்றன.
‘பராசக்தி’ என்ற கவிதையில், பாரதி கூறுகிறார்:’ நாட்டு மக்கள் பிணியும், வறுமையும் களையப்’ பாட நான் நினைத்த போது,’கூட்டி மானுடச் சதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுவதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்ட ‘நான் முற்படும்போது, ‘அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்’
பாரதியைப் பொறுத்தவரை பாரத தேசமே அவரது தெய்வம். நாட்டு விடுதலைக்காக உழைப்பதே நமது உண்மையான வழிபாடு என்றவர். மக்கலின் மதச்சடங்குகளை விட அன்பையும் மனிதநேயத்தையும் பெரிதாக மதித்து வந்தவர் பாரதி.
பராசக்தியிடம் உணர்ச்சி வெள்ளத்தில் முழுகியே போய் விட்ட பாரதி அவளிடம்,
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
எனப்பாடி முடிக்கிறார்.
இங்கே அவன் பராசக்தியிடம்,’தன்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டு, புழுதியில் எறிந்து விட்டது நியாயமா?’ என்று உரிமையுடன் கேட்பதைப் பார்க்கிறோம்.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
“யாதுமாகி நின்றாய், காளீ ! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மையெல்லாம் நின் செயல்களன்றி இல்லை,
போதும் இந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே , என்மீது அருள் புரிந்து காப்பாய் “
என்ற காளியை தொழுதுபாடுகிறார்.
அடுத்து
“அகத் அகத் அகத்தினிலே உள்நின்றாள் அவள்
அம்மை அம்மை எம்மைநாடு பொய் வென்றாள்
தகத்தக நமக்கருள் புரிவாள் தாளொன்றே
சரணமென்று வாழ்திடுவோம் நாமிங்கே“
என்று மேலும் பராசக்தியிடம் வேண்டுகிறார் பாரதி .
மேலும்,
“புகப்புக புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது
குழந்தையதன் தாயடிக் கீழ் போலே “
எனப் பாடுகிறது அவரது சக்திக் கூத்து.
மேலும்,
“வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான் “
என்ற அவரின் வரிகளில் ஒருமைத்தத்துவ ஞானத்தின் தேவையை நமக்கு உணர்த்துகின்றன.
“நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்“என்றும் பாடும் பாரதி,
இந்தப் பொய்யை, மாயையை நடத்துபவன் நானே தான் என்று உணர்ந்த பின் எந்த ஒருவனும் ஞானச்சுடர்வானில் மட்டுமே செல்லுவார்கள் என்கிறார்.
மேலும் விநாயகர் நான்மணி மாலையில் அதன் 37 வது கண்ணியான வெண்பாவிலோ தவம் என்கிற வார்த்தையின் முழுமையான அர்த்தத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான் பாரதி..
எனவேதான்,
“செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே!
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் –
வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை,
அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’
என்று பாரதி பாடுகிறான்
“ஞானா காசத்து நடுவே நின்றுநான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்!
“எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்
கேளாய் கணபதி. மனத்திற் சலனமில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுனநிலை
வந்திடநீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவயது
இவையுந் தர நீ கடவாயே”
அவன் கேட்ட வரங்கள் மனதில் சலனமில்லாமை, மதியில் இருளே தோன்றாமை, அவன் நினைத்த பொழுதே கணபதிராயனின் மௌனநிலை போன்றவையே ஆகும்.
“ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள். “
துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை அன்பு வழியில் அறங்கள் நடத்திட“
எனப் பாடி முடிக்கின்றான்.
கண்ணம்மாவைச் சரணடைந்தேன்,
சாவுமங்கே அழிந்து மரணமுமில்லை!
அவளை நினைத்த அக்கணமே
நான் பண்ணிய பாவங்களெல்லாம்
பட்டென நசிந்து அழிந்தனவே !
“பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய் ! “
“நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். “
“தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் “
என்றும் பாஞ்சாலி சபதத்தில் பாடுகிறார்.
அவர் சொன்னதில் இரு கருத்துகள் நினைத்து, உள்வாங்கி, கடைப்பிடிக்க வேண்டியவை.“ தெளிவு தர மொழிந்திடுதல் “ எனும் பதத்துக்கு அவர் சொன்னது.”இதற்கு நேரடியான பொருள் கேட்போருக்குத் தெளிவு தரச் சொல்லுதல். ஆனால் இன்னொரு பொருளும் இருக்கிறது. அது சொல்பவருக்கும் தெளிவு தரச் சொல்லுதல். ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொண்டால் , அதையே இன்னொருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது , அந்த விஷயம் பற்றி நமக்கும் இன்னும் தெளிவு பிறக்கிறது.
ஞானம் என்கிற சொத்து பகிரப் பகிர வளர்ந்து கொண்டே இருப்பது. என் ஞானத்தை உனக்கு பகிர்ந்து அளித்தால், உன்னிடமும் என்னிடமும் என இருமடங்கு ஆகிவிடுகிறது. அதுதான் தெளிவு தர மொழிந்திடுதல்’என்கிறார்.
வினயம் என்பதனை பணிவு, அடக்கம், ஒழுக்கம் என கொள்ளலாம். இது நம் நடத்தையை சீரமைக்கிறது. விவேகம் என்பது நம் சிந்தையை சீரமைக்கிறது. ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு இந்தப் பண்புகள் அவசியம்.
பாரதியார் பராசக்தியிடம் நாட்டு விடுதலைக்காகவும்,தனது மன அமைதிக்காகவும் வேண்டுதலை அன்னாரின் பல பாடல்களில் நம்மால் காணமுடிகிறது. அவை தன்னலமற்றவை.பராசக்தியின் அருள் அவர் கேட்டபடி அவருக்கு பரிபூரணமாகக் கிடைத்திருக்கின்றது.எனவேத்தான் அவன் புகழினை நாம் பாடி மகிழ்ந்து வருகிறோம்.எனவே, மானுடம் உள்ள அளவும் பாரதியின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகில் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.தமிழ் கூறும் நல்லுலகில் அவன் புகழை நாம் தொடர்ந்து பாடிக் கொண்டே இருப்போம்.இதுவே நாம் அந்த மகாகவிக்கு அளிக்கும் உண்மையான சமர்ப்பணமாக இருக்க முடியும்.
