![]()
ஆர்மீனியச் சம்பக மரம் – மஹாஸ்வேதா தேவி
வங்கமொழியில் எழுதப்பட்ட அருமையானதொரு நாவல், நிர்மல் காந்தி பட்டாசார்ஜி அவர்களால் ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என் கைவசமிருந்த இந்த நாவலை சமீபத்தில் திரும்ப வாசித்துச் சிலிர்த்தேன். இது சிறுவர்களுக்கான புதினம் எனப்படுகின்றது. ஆனாலும் பெரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. இதன் சரளமான நடை, மனதைத் தொட்டு வருடிச் செல்கின்றது. பின்னே சும்மாவா? மஹாஸ்வேதா தேவி ஞானபீட பரிசு பெற்றவரல்லவா?
கதைக்குள் போகலாமா? மிக எளிமையான குழப்பங்களே இல்லாத கதை. வங்க நாட்காட்டியின் ஆண்டு 1176, கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. எப்போதும் பஞ்சகாலத்தில் நடப்பவையே இப்போதும் நடந்தன. மக்கள் கிடைத்ததையெல்லாம், உண்ணக்கூடியவற்றையெல்லாம், நெல், அரிசி, பருப்பு வகைகள், இலைகள், மரங்களின் வேர்கள் எல்லாவற்றையும் உண்டார்கள். தங்கள் உடமைகளையெல்லாம், வீட்டின் பாத்திரம் பண்டங்கள், பசுக்கள், அனைத்தையும் ஒவ்வொன்றாக விற்றார்கள். கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்களுக்குக் குடியேறினார்கள். கொத்துக் கொத்தாக இறந்தும் போனார்கள்.
கொல்கத்தா அப்போதொன்றும் பெரிய நகரமாக இருக்கவில்லை. நிறையக் காடுகளும், சதுப்பு நிலங்கள் எல்லாம் இருந்த இடம் அது. காளிகாட்டில் நரபலி கூட ரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கதை மாடோ எனும் சிறுவனையும் ஆர்மீனியன் தேவாலயத்தின் வளாகத்திலிருந்த மலர்கள் நிறைந்த சம்பக மரத்தைப் பற்றியும்தான். தாளமுடியாத வெப்பத்திலும், மார்க்கெட்டின் நெரிசலிலும், கூச்சல்களிலும், அழுகின காய்கறிகள், மீன் வாசனை இவற்றையும் மீறி அந்த மரத்து மலர்கள் பிரமிக்க வைக்கும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும்.
குளிர்காலத்தின் நிலாப்பொழியும் இரவுகளில் பனியானது பாகீரதி நதியின் நீரின்மீது படியும்போது அந்த சம்பக மரம் ஒரு விநோதமான உருவை அடைந்திருக்கும். சில பொழுதுகளில் ஒரு சிறுவன் கைகளைக் கூப்பியவாறு அமர்ந்திருப்பதுபோல இருக்கும். வேறு சில பொழுதுகளில் வெள்ளை ஆடை அணிந்த பாதிரியார் ஒருவர் கரங்களை நீட்டியவாறு நிற்பதுபோல இருக்கும்.
————-
பூனோ குலத்தவர் அப்பகுதிகளில் வாழ்ந்தனர். மாடோ எனும் சிறுவன், அவனுடைய அர்ஜுன் எனப்படும் ஆட்டுக்குட்டி இவைதான் கதையின் முக்கியப் பாத்திரங்கள்.
அந்த வருடத்துப் பஞ்சம் மிகமிகக் கொடுமையானது. மனிதர்கள் ஈசல்களைப் போலச் செத்து மடிந்தார்கள். அந்த ஊரிலிருந்த ஜானகிசிங் என்பவன் தனது தானியக் கிடங்கைத் திறந்துChampa tree (1) அனைவருக்கும் நெல்லை விநியோகித்தான். அவன் கருணை உள்ளம் கொண்டவன் என அனைவரும் போற்றினர்.
அவன் ஒரு வெற்றுக் காகிதத்தில் கட்டைவிரல் பதிவை மட்டுமே வாங்கிக் கொண்டான்! மாடோவின் அம்மா மட்டும் அது எதற்காக என்று கேட்டாள். மழுப்பலாகப் பதில் சொன்னான் ஜானகிசிங். அடுத்த ஆண்டு விளைச்சல் கண்டதும், அவனுடைய ஆட்கள் வந்து நின்றுகொண்டு சென்ற வருடம் கொடுத்தகடனை எல்லோரிடமிருந்தும் வட்டியும் முதலுமாக வசூலிக்க முயன்றனர். இப்போது மக்கள் எதிர்க்கலானார்கள். மாடோவின் அண்ணனான சிபிலாஸ் ஒரு இரவுக் கொள்ளைக்காரன். அவன் ஜானகிசிங்கை ‘ஒருகை’ பார்த்து விடுவேன் என்று பயமுறுத்தினான்.
“சிவதலா எனும் இடத்திலிருந்து காபாலிகன் வந்து சொல்லியிருக்கிறான், விரைவில் அடுத்த வருஷம் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று,” என்று அவன் சொல்ல, அனைவரும் திடுக்கிட்டனர். “ஆம், நதிகள் பத்மாவும் பாகீரதியும், நமது சிறு நதியான கோரேயும் பெருக்கெடுத்து கடலைப்போல அலைகளை எழுப்பும் என்றான்.”
“இன்று வந்து அதற்குப் பரிகாரம் சொல்லுவான். நாம் அனைவரும் நிறையப் பாவங்கள் செய்திருக்கிறோம்.” சொல்லிவிட்டு சிபிலாஸ் திரும்பவும் உறங்கச் சென்றுவிட்டான்.
மாடோவின் தாய் ஒரு பயங்கர உழைப்பாளி. பூனோ குலத்தார் அவளை, ‘புலிப்பெண்மணி’ என்பர். பூனோ குலத்தாரின் பணிகள் இன்றியமையாதவை. விழாக்காலங்களில் நூற்றுக் கணக்கான பேருக்கு உணவளிக்க இவர்கள் தாம் காய்கறிகளைக் கூடைகூடையாக எடுத்துச் செல்வார்கள். ஆடுமாடுகளைப் பராமரித்து, நீரும் உணவும் அளிப்பார்கள். சாலைகள் / பாதைகளை அமைப்பார்கள்; கிணறுகளைத் தோண்டுவார்கள். இதற்கான கூலிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவு செய்பவள் மாடோவின் தாய்தான்.
இப்படிப்பட்ட பெண்மணிக்கு, மாடோ போன்ற ஒரு பையன். தைரியம் போதாது; இரத்தத்தைக் கண்டால் பெயம். பூனோ குலத்தாரின் காரியங்கள் ஒன்றிலும் திறமை கிடையாது. பொம்மைகள் செய்வதே அவனுக்குப் பிடித்தது. அவனுடைய இணைபிரியாத துணை அர்ஜுன் என்னும் ஆட்டுக்குட்டி; அது அர்ஜுன மரத்தடியில் பிறந்ததனால் அந்தப் பெயரை வைத்தான். அதுவோ மிகுதியான விஷமங்களைச் செய்யும் ஆட்டுக்குட்டி.
அன்று மாலை ஒரு ஹோமம் செய்யப்படும் எனும் அறிவிப்பு வந்தது. அதற்கான பழங்கள், பூக்கள் என்ற பொருள்களெல்லாம் குவிக்கப்பட்டன. தாந்திரீக காபாலிகன் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் ஹோமத்தில் நெய்யை வார்த்துக் கொண்டிருந்தான். மதியம் அவனுடைய ஆவேசம் உச்சத்தை அடைந்தது. “பெரிய்ய பாபம்!” என்று கூவினான். “என்ன அது ஐயா?” என்றான் ஜானகிசிங்.
“நான் மூன்று தினங்கள் இந்த யாகத்தைத் தொடர்ந்து நடத்துவேன். முடிவில் பூஜைசெய்து ஒரு மிருகபலி கொடுக்க வேண்டும். ஒரு சிறிய ஆடு, கருப்பும் பழுப்பும் கலந்த நிறம்; அதுவே துரதிர்ஷ்டத்தை உங்கள் கிராமத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கங்கையில் வெள்ளப்பெருக்கு நிகழும். ஹா ஹா ஹா…..”
சுற்றுப்பட்டு கிராமங்களில் இருக்கும் எல்லோருக்கும் அது மாடோ என்னும் பூனோவின் ஆட்டுக்குட்டிதான் என்று நன்கு தெரிந்திருந்தது. அதுவே துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
இதனைக் காளிமாதா காபாலிகனுக்குக் கனவில் தெரிவித்துள்ளாள் என்று அவனே கூறியுள்ளான்.
கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் அது மாடோவின் ஆட்டுக்குட்டி எனத் தெரிந்திருந்தது. அவனுடைய அண்ணன் சிபிலாஸ் கூட பயந்தான். நல்லவேளை, தன் தம்பியை நரபலியாகக் காளிமாதா கேட்கவில்லை; கேட்டிருக்கக் கூடும்! அவனுடைய ஆட்டுக்குட்டியைத் தான் கேட்டிருக்கிறாள். “நாளைக் காலையில் முதல் வேலையாக அதனைக் கொண்டுபோய் கோவில் வாசலில் கட்டிவிட்டுவா,” என்றான் அவன்.
இரவுச் சாப்பாட்டின்போதும் மாடோ சிந்தனையிலாழ்ந்திருந்தான். அனைவரும் உறங்கச் சென்றதும், அவர்கள் நன்றாகத் தூங்கியதும், ஒரு பெரிய துப்பட்டியை எடுத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குப் போய், நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அர்ஜுனை, ஆட்டுக்குட்டியை அதில் இறுகச் சுற்றிக்கொண்டு மெல்ல நழுவிக் காட்டினுள் நுழைந்தான். அர்ஜுன் மாடோவின் மார்பில் சுகமாக முடங்கிக் கொண்டது.
மாடோ மெல்ல ஒரு வலியைத் தன் மார்பில் உணர்ந்தான். அவன் பலமான சிறுவனல்ல என வைத்தியர் அவனுடைய தாயிடம் சொல்லியிருந்தார். ஆனால் அவனுடைய அர்ஜுனை பூஜையில் பலியிடப் போகிறார்களே!
அவன் எங்கே போக வேண்டும் என முடிவு செய்து கொண்டிருந்தான். அந்தக் கபட காபாலிகன் காணமுடியாத இடத்திற்கு, அந்த ஆர்மீனியன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டால் அர்ஜுன் காப்பாற்றப்பட்டுவிடும். அங்கு ஒரு சம்பக மரத்தில் நிறையச் சின்னஞ்சிறு மலர்கள் பூத்திருக்கும். அவன் அந்தப் பாதிரியாரைப் பார்த்திருக்கிறான். அந்தத் தேவாலயத்தின் வளாகத்தினுள் அவன் நுழைந்துவிட்டால் பின்பு எதனைப் பற்றியும் பயப்பட வேண்டாம். அது நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ளது.
உடனே போக முடியாவிட்டால் வழியில் எங்காவது ஒளிந்து கொள்ளலாம். மோதிராயின் மடம் இருக்கிறது; அங்கு ஒளிந்து கொள்ளலாம். யாரும் அங்கு வர மாட்டார்கள். மோதிராய் ஒரு ஜமீந்தாராக இருந்தவர்; இங்குவந்து இறந்துபோனார். அவரை எரித்த இடத்தில் மடத்தைக் கட்டியுள்ளார்கள். அங்கு பேய்கள் உலாவுவதாக வதந்தி. பகலில்கூட யாரும் போக பயப்படுவார்கள்.
மாடோ அங்கு அர்ஜுனுடன் ஒளிந்துகொண்டு சிறிது உறங்கவும் செய்தான். அதிகாலையில் எழுந்ததும் தாரை தப்பட்டைகளின் ஒலி கேட்டது. உற்றுக் கேட்டதும் அவன் புரிந்துகொண்டான். ஊரார் காணாமல்போன அவனையும் அவனுடைய ஆட்டுக்குட்டியையும் தேடுகிறார்கள். பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு தங்க நாணயம் பரிசும்கூட! கூட்டம் நெருங்கி வருகிறது. ஆட்டுக்குட்டியை இறுகத் துப்பட்டியில் சுற்றிக்கொண்டு தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறான் மாடோ.
உணவு, தண்ணீர் இல்லை; உடல் வேறு அவ்வளவு ஒத்துழைக்கவில்லை; சீக்கிரம் அவனுக்குக் களைப்பெடுக்கிறது. ஆனால் கூட்டம் அவனைக் கண்டு விட்டுத் துரத்துகிறது. இந்த விவரங்களை அறியாத ஒரு மாட்டு வண்டிக்காரனிடம் சவாரி கேட்டுச் சிறிது தொலைவு செல்கிறான். பின்பு வியர்க்க, விறுவிறுக்கக் களைத்துவிட்ட அவனை அவர்கள் கண்டுபிடித்துத் துரத்த, நீரில் குதிக்கிறான். எப்படியோ அர்ஜுனையும் இழுத்துக்கொண்டு நீந்தினான். ஆர்மீனியன் தேவாலயம் அதன் மலர்கள் நிறைந்த சம்பக மரத்துடன் சிறிது தொலைவில் காணப்படுகிறது. “ஓ, கடவுளே!” என்றபடி அவன் நீரில் மிதக்கலானான்.
பின் கரையை அடைந்து இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருப்பதை உணர்ந்து மலைத்தான். அவன் ஓட, அவனைத் துரத்துபவர்கள் ஓட, மிகுந்த களைப்பில் அவன் தேவாலயத்தின் மதிலை அடைந்துவிட்டான். அதனை வெகு பிரயாசையுடன் தாண்டிக் குதித்தும் விட்டான். சப்தத்தைக் கேட்டுப் பாதிரியார் வெளியே வந்தார். அவருக்கு நிலைமை விளக்கப்பட்டது.
“நான் எக்காரணம் கொண்டும் அவனை உங்களிடம் ஒப்படைக்க மாட்டேன். அந்த ஆட்டுக்குட்டியும் உங்களுடையதல்ல,” என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார் பாதிரியார். மிகுந்த தயக்கத்துடன் அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.
பின்பு மாடோவிற்கும் அர்ஜுனுக்கும் என்னவாயிற்று என அறிய விரும்புகிறீர்களல்லவா?இருவரும் பாதிரியாருடன் அங்கேயே தங்கி விட்டனர்.
ஆனால் ஆறுகள் பெருக்கெடுக்கவும் இல்லை, கிராமங்கள் அழியவுமில்லை.
ஒருநாள் மாடோவின் தாய் பாதிரியாரிடம் வந்து தன் மகனைப் பற்றிக் கேட்டாள்.
“ஓ அது உன் மகனா, அம்மா?”
“ஆம் ஐயா, அவன் உள்ளே நுழைந்ததுமே ஒரு தெய்வப் பெண்மணி தன் கரங்களை நீட்டி அவனை அணைத்துக் கொண்டாளாமே? அது உண்மையா?”
பாதிரியார் அவளை உள்ளே அழைத்துச் சென்று எல்லா விவரங்களையும் கூறினார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றாள்.
——————————————
அந்த ஆர்மீனியன் சம்பக மரத்தில் நீண்ட நாட்களின்பின்பு நிறைய மலர்கள் பூத்து உதிர்ந்துவிடும். ஊர் பெரிதாகியும் கூட, மரம் மட்டும் அங்கேயே நின்றுகொண்டு மிகுதியாகப் பூப்பூத்துக் கொண்டிருந்தது.
குளிர்கால இரவுகளில் நிலா பனிமூட்டத்துடன் கலந்துவிடும்போது தோன்றும் நிழல் ஒளி, ஒரு சிறுவனைப் போலக் காணப்படும். அவன் மண்டியிட்டுக் கைகளை உயர்த்தி வானை நோக்கிப் பிரார்த்திப்பதைப் போல இருக்கும்.
சில வேளைகளில் அந்த மரம் வயதான பாதிரியாரைப் போலக் காணப்படும். அமைதியாகத் தலைகவிழ்ந்து நின்றுகொண்டு, தமது கரத்தை யாருடைய தலையிலோ வைத்திருப்பதனைப்போல….
ஆனால் சூரிய ஒளியில் காட்சி மாறிவிடும். இளம்பச்சை நிற இலைகளும் வெளிர்மஞ்சள் நிறப் பூக்களுமாக, யாரோ அதனை எதையோ சொல்லி நன்றாகச் சிரிக்க வைப்பதனைப்போல ……..
—————————–
கதை முடிந்துவிட்டது;
அற்புதமான எழுத்து; படித்து முடித்ததும் உணர்ச்சியில் நெஞ்சை அடைத்தது. மற்றவர்களின், அதுவும் சிறுவர்களின் மனநிலை புரியாமலே நாம் வாழ்க்கையைக் கடந்து சென்றுவிடுகிறோம். கையில் பணமும் அதிகாரமும் பதவியும் இருந்தால் எல்லாரையும் அடக்கி ஆளலாம் எனும் நிலைமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. இங்கு உணர்வுகளுக்கும், ஆசாபாசங்களுக்கும் இடம் ஏது? தொண்டையை அடைக்கிறது.
அருமையான பிரமிக்க வைக்கும் நாவல், கட்டாயமாக சிறுவர்களுக்கானதல்ல; பெரியவர்களுக்கானதே! நாம் சிந்திப்பதற்காகவே எழுதப்பட்டதோ என்னவோ!
[மீண்டும் சந்திப்போம்]
