வானம் கீழே வந்தால் என்ன?
சென்ற இதழில் : பழங்கால எகிப்திய கடவுள்கள் மற்றும் கார்னாக் கோயில் வளாக ஆச்சரியங்கள்.
இனி:
லக்சர் கோயில்
ஒரு காலத்தில் பண்டைய எகிப்தின் தலைநகராக இருந்த லக்சர், நம் காஞ்சி நகரைப் போல, கலைச் செல்வங்கள் மிகுந்தது. எகிப்தியப் பேரரசர்களான அமென் ஹெடப் – III, ராம்செஸ் – II, துடன்கமூன் போன்றவர்கள் ஆண்ட பகுதி இது.
இங்கு உள்ள சிற்பங்கள், அந்நாளில் நடந்த உள்ளூர் கிராம திருவிழாக்களைச் சித்தரிக்கின்றன. இங்குள்ள 21 அடி உயரம் கொண்ட 28 தூண்கள் பிரபலமானவை.
கி.மு 1330 காலத்தைச் சேர்ந்த இக்கோயிலை புதுப்பிக்கும் பணி 1960 ஆம் ஆண்டு துவங்கியது. நாங்கள் பார்த்தவரை இன்னும் பல்வேறு இடங்களில் புதை பொருள் ஆராய்ச்சியும் நடந்தபடி உள்ளது. தோண்ட தோண்ட புதிய பொருள்களும், சிலைகளும், அதன்மூலம் புதிய சரித்திரங்களும், வந்தபடி இருக்கின்றன.
போதுமான நிதி உதவி இருந்தால் கூட, முழுவதும் கண்டறிய இன்னும் குறைந்தது 100 ஆண்டுகளாவது தேவைப்படும் என்றார், ஓர் உள்ளூர் எகிப்தியர் – சற்றுப் பெருமையாக.
லக்சர் கோயிலை விட்டு வெளியே வந்ததும்,
“வாருங்கள் லக்ஸரின் புகழ்பெற்ற அங்காடியான எல் சௌக் (El SOUK) செல்லலாம்” என்றார் அமுன். நைல் நதியை ஒட்டிய அழகிய நடைபாதையில் சென்றோம்.
வெயில் தெரியாமல் இருக்க மார்க்கெட்டில் மேற்கூரை இட்டிருந்தார்கள். எகிப்தியப் பருத்தியில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட துணிகள், டி-ஷர்ட்கள், பெண்களுக்கான நளின உடைகள், கார்பெட்டுகள், கம்பளிகள், லேடீஸ் ஹேண்ட் பேக், அழகான சுவரோவியங்கள் – என்று எதைப் பார்க்க? எதை விட? என்றே தெரியவில்லை.

இதைத் தவிர, நடைபாதையில் நினைவுச் சின்னங்கள், கைவினைப் பொருட்கள் எனப் பல விற்றுக் கொண்டிருந்தார்கள். பித்தளை, மார்பிள், மரம், இரும்பு எனப் பல்வேறு பொருட்களில் ஆன கலைப்பொருட்கள் இவை. இதைப்போல், நிறைய அரேபியன் ஸ்பைஸ் வகைகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன.
பொருள்களை வாங்குவதற்கு முன் நிறைய பேரம் பேச வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும். குட்டியாகப் பல உணவகங்கள் உள்ளன. நாங்கள் விரும்பிக் குடித்தது, சற்றே வித்தியாசமான நுபியன் காஃபி.
டாக்டர் எதிரில் வந்தார். மூன்று பிரமிடுகளின் மாடல்களை வாங்கி இருந்தார், பளபளவென்று அழகாக இருந்தது.
“நீங்கள் என்ன வாங்கினீர்கள்?” என்று டாக்டர், வெங்கட் மாமாவிடம் கேட்க,
கையில் இருந்ததைக் காட்டினார். அது, கிளியோபாட்ராவின் சிலை!
அன்று இரவு திரும்பி மீண்டும் கப்பலிலேயே தங்கினோம்.
அமுன் வந்து, “நாளைக் காலை, கப்பலைக் காலி செய்துவிட்டு, மரணப் பள்ளத்தாக்குச் செல்லப் போகிறோம், அங்குதான் நீங்கள் காஸ் பலூனில் பறக்கப் போகிறீர்கள்” என்றார்.
“என்னவோ மரணப் பள்ளத்தாக்கு? என்கிறார்களே, நாம் பறக்கலாமா வேண்டாமா ஜானு?” என்று வெங்கட் மாமியிடன் கேட்க,
“அதெல்லாம் பணம் கொடுத்தாச்சு. நாம ஒண்ணா சேர்ந்துதான் பறக்கப் போகிறோம். எதுனாலும் இரண்டு பேருக்கும்தான். ஏன் கவலைப் படறேள்?”
என்றார் ஜானு மாமி.
நாள் – 7
விடியற்காலை 4 மணிக்கே எழுப்பி விட்டார்கள். துறைமுகத்திலிருந்து ஸ்பீட் போட் மூலம் அரசர்கள் பள்ளத்தாக்கு எனும் வேலி ஆஃப் கிங்ஸ் (VALLEY OF KINGS) பகுதிக்கு வந்தோம்.
ஹாட்ஏர் பலூன்ல் ஏறி நைல்நதி தீரத்தில் சூரிய உதயத்தைக் காணப் போகிறோம்.

அப்பொழுதே நிறைய சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
தரையில் கிடந்த பலூனை நிமிர்த்தி அதில் உள்ள நெருப்பு பர்னரைப் பற்ற வைத்து, காற்றாடிகள் மூலம், சூடு காற்றை உருவாக்கி பலூனுக்குள் இருக்கும் காற்றின் அடர்த்தியைக் குறைத்தால், பலூன் பறக்கும்.
இதிலுள்ள ப்ரோபேன் காஸ் பர்னரின் சூட்டைக் கண்ட்ரோல் செய்து பலூனை உயரே பறக்க வைக்கிறார்கள். சூடு காற்றை மெதுவாக வெளியேற்ற பலூன் இறங்குகிறது. இதுதான் தத்துவம்.
எங்களுக்கான பலூன் தயாரானதும், அதில் ஏறினோம். நாங்கள் ஆறு பேர் மற்றும் பர்னரை இயக்கும் பைலட் ஒருவர். அதைத்தவிர ஹாட் ஏர் பலூன் ஏஜென்சியின் கைடு ஒருவரும் பலூன் கூடைக்குள் இருந்தோம்.
மெதுவாகக் கிளம்பிய ஹாட்ஏர் பலூன், ஜிவ்வென்று மேலே பறக்கத் துவங்கியது. ஒரு தென்னைமர உயரம் வரைக்கும்தான் சற்று பயம். பிறகு இனி எது ஆனாலும் நம் கையில் ஒன்றுமில்லை, என்கிற தெளிவு பிறந்து விடுவதால், பயம் விலகி சுற்றுப்புறத்தில் மனம் லயிக்கிறது.
ஆதவனை வரவேற்கும் வானம், நைல் நதியைப் பொன் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தது. விடியற்காலை குளிர் மனதிற்கும், உடலுக்கும் இன்பம் அளித்தது. பைலட் பர்னர் தீயின் வேகத்தை அதிகரிக்க, பலூன் மேலும், மேலும் எழும்பி புதிய உயரத்தைத் தொட்ட வண்ணம் இருந்தது.
ஹாட்ஏர் பலூன் நிறுவனத்தின் கைடு, கீழே அரசர்கள் பள்ளத்தாக்கை காண்பித்து பல விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தார்.
சிறிய மணற்பாங்கான மலைகளும், பெரிய பாறைகளும் பல தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களுமாக, உயரேயிருந்து பார்க்கும் பொழுது (Birds eye View) பல நூற்றாண்டுகளுக்குப் பின்சென்று பறப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டது.
தூரத்தில் தெரிந்த பாலைவனம், மேலும் இயற்கை வனப்பைச் சேர்த்தது. இயற்கையில், பசுமைமட்டும்தான் அழகா? பாலைவனம் கூட அழகுதான்!
“அதோ பறக்கிறது பாருங்கள், அதுதான் ‘ஹூட்ஹூட்’ பறவை! அது ஒரு பாலைவனப் பறவை. காதல் புறா போல செய்திகளை தூது கொண்டு செல்லும் பறவை. இது பார்த்தால் சுபசகுனம் என்பார்கள். இன்று உங்களுக்கு எல்லாம் நலமாகவே அமையும்” என்றார் கைடு.
அப்படி மேலிருந்து பார்த்துகொண்டு வரும்பொழுது கீழே நெடிய சிலை ஒன்றை கைடு காண்பித்து,
“இது சமீபத்தில் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது யாருடைய சிலை? என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?” என்றார்
நாங்கள் விழிக்க “நன்றாக கவனித்து பாருங்கள், இது எங்கள் எள்ளு தாத்தாவின் சிலை” என்று சொல்ல, ஒரே சிரிப்பு!
இப்படி நகைச்சுவையாக பேசிக்கொண்டே வந்தார் அவர்.
“உங்களுக்கு அதிர்ஷ்டம் இன்று. வானிலையும், வீசும் காற்றும் சாதகமாக இருப்பதால் நாம் 1000 அடிக்கு மேல் உயருகிறோம்” என்றார் பைலட். மிக மகிழ்வானத் தருணம் அது!!
கிட்டத்தட்ட 50 நிமிடம் பாலைவனப் பகுதிகளில் மேல் பறந்தோம். உலகின் பிரதிபெற்ற பழங்கால நாகரீகத்தின் எச்சங்களை, உச்சியிலிருந்து பார்க்கும் வாய்ப்பு இது. மறக்க முடியாத நிமிடங்கள் அவை.
நாம் இப்போது கீழே இறங்கப் போகிறோம் என்று சொன்ன பைலட், சூடு காற்றை வெளியேற்ற ஆரம்பித்தார், பைலட் பலூன் மெதுவாக இறங்கியது.
மனம் மட்டும் இறங்க மறுத்தது.
கீழே பலூன் நிறுவனத்தின் அலுவலர்கள் நின்றுகொண்டு எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
அதைவிட சுவாரஸ்யம் பாலைவனத்தின் நடுவே மேய்ந்து கொண்டிருந்த கழுதையின் முதுகின் மேல் நின்று கொண்டு, எங்களைப் பார்த்துக் கை ஆட்டிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. உண்மையிலேயே இது ஒரு வாழ்நாள் அனுபவம்தான்.
“எப்படி சார் இருந்தது பலூனில் பறக்கும் அனுபவம்? என்று வெங்கட் மாமாவைக் கேட்டேன். உடனே;
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சில் துணிவிருந்தால்,
நிலவுக்கும் போய் வரலாம்
சாந்தி நிலையம் படத்தில் வரும் கவியரசர் கண்ணதாசனின் பாடலை வாய் விட்டுப் பாடினார்.
“ஹுக்ம்.. நேத்திக்குப் பயந்துண்டு வரமாட்டேன், என்று அடம் பிடித்தீர்களே? இப்ப என்னவாம்?” என்று ஜானு மாமி கலாய்க்க,
“பின்ன என்ன ஜானு, அமுன் ஏதோ ‘மரணப் பள்ளத்தாக்கு’ மேல, பறக்கப் போறேன்னு சொன்னாரே, அதான் பயந்துட்டேன், இப்ப என்னடான்னா பெயரை மாற்றி ‘கிங்ஸ் வேலி’ என்கிறாரே?”
அமுன் குறுக்கிட்டு “இரண்டும், ஒன்றுதான் வெங்கட் சார், அரசர்கள் இறந்தவுடன் புதைக்கும் இடம்தான் இது”
அரசர்களைப் பிரமிட்களில் வைத்துத்தானே புதைப்பார்கள். இங்கு எப்படி?” என்று மடக்குக் கேள்வி கேட்டார் லக்ஷ்மி.
எகிப்திய பழமொழி :
“நேற்று நம் கைகளில் இல்லை; நாளை நம் கண்களுக்குள் மறைந்திருக்கிறது. இன்று மட்டுமே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது”
(அடுத்த இதழில் முடியும்)
