நூலை படி ; சங்கத் தமிழ் நூலை படி.
முறைப்படி நூலை படி ‘ – பாரதி தாசன்
நூல்கள் வாசிப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது.நூல் பல கற்க கற்க அறிவு விரியும் என்பது ஆன்றோர் சொல்.படித்ததை மறக்காமல் வாழ்க்கையில் தகுந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது இன்னும் சிறந்தது.
அப்படி தான் படித்தவற்றை தான் எழுதும் கவிதைகள்,பாடல்கள் இவற்றில் கையாள்வது என்பது ஒரு சிலருக்கே கை வந்த கலை.
கவிஞர் கண்ணதாசன் அப்படிப் பட்டவர்களில் ஒருவர் ; அவர் பெரியபடிப்பு ஒன்றும் படிக்கா விட்டாலும் நூல் பல கற்றவர்; கற்றவற்றை தான் பாடல் எழுதும் திரைப் படங்களில் தகுந்த இடத்தில் பொருத்தி கையாளத் தெரிந்தவர்.
அவர் சங்க இலக்கியங்களையும் குறைவில்லாமல் படித்தவர் .
அவரின் சங்க இலக்கியத்தின் ஆழத்தை அவரது பாடலில் பார்ப்போம்.
‘நள வெண்பா ‘ என்ற சங்க இலக்கிய நூல் புகழேந்தி என்ற ஆசிரியரால் நளன் தமயந்தி வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டது.
நளன் தமயந்தி வாழ்க்கை வரலாறு பொதுவாக எல்லோரும் அறிந்த ஒன்று.சங்க இலக்கியங்களில் இரு அன்புகொண்ட இதயங்களின் ஊடல் ,கூடல் எல்லாம் கவித்துவம் மிகுந்து காணப்படும் .இயற்கையின் உவமான , உவமேயங்கள் மங்கையரின் பல அவையங்களுடன் ஒப்பிட்டு எழுதப் பட்டு இருக்கும்.
நளனும் , தமயந்தியும் ஒரு இனிய மாலைப் பொழுதில் தனிமையில் உரையாடிக்கொண்டு இருக்கும் பொழுது.
நளன் ஒரு அழகான இயற்கைக் காட்சியை தமயந்திக்கு காட்டுகிறான்.
‘ மங்கை ஒருத்தி மலர் கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கையமென் என்று எண்ணிப் படி வண்டைச் _செங்கையால்
காத்தாளக் கைம்மலரை காந்தாள் என பாய்தலுமே
வேர்தாளைக் காண என்றான் வேந்து.’
பெண் ஒருத்தி மலர்கள் நிறைந்த ஒரு சோலையில் அழகான பூக்களைப் பறித்துக்கொண்டு இருப்பதை பார்த்தவண்டு ஒன்று அதை அழகான சிவந்த தாமரை மலர்( பங்கயம்) என்று எண்ணி ஆவலில் ஓடி வந்து ,ரீங்காரமிட்டு சிவந்த அவள் முகத்தை நோக்கி தேன் அருந்த நெருங்க,அதை அவள் தன் சிவந்த கைகளால் புறந்தள்ள ,அவள் தூக்கிய அந்த செந்நிற கைகளைக் கண்டு காந்தாள்மலர் (குறிஞ்சி நிலத்தில் காணப்படும் மலர்) என்று எண்ணி வண்டு அங்கும் சென்று மொய்த்தது.
வண்டு கைமேல் பாய்வதைக் கண்டு பயந்த அந்த பெண் வேர்த்து வியர்க்கும் காட்சியை ,என் தேன் போன்ற இனியவளே நீயும் பார் என்று நளன் தமயந்தியிடம் கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடலின் கவி நயம் அருமை.பெண்கள் விரல்கள் காந்தாள் மலர் போன்றது. கன்னம் சிவந்து தாமரை மலர் போல் உள்ளது.என்ன உவமை!
இந்த வரிகள் நம் கவிஞரை ஈர்த்ததில் வியப்பென்ன!
அவர் எழுதுகிறார்,
‘ பொன் வண்டொன்று மலரென்ற முகத்தோடு மோத
நான் வளைக் கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கரைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..’
‘ நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன். என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…..
இந்தப் பாடல் இடம் பெற்ற படம் : இரு வல்லவர்கள்
உன்னைக் கண்டு மலர் கொடுப்பதற்காக ,நான் தனியாக இங்கு வந்துள்ளேன்; உன்னை காண ஓடோடி வந்த என்னைக் காக்க வைத்துவிட்டாயே என்ற எண்ணத்தில் கூறியதற்கு காதலி கூறுகிறாள் ,ஏன் இவ்வளவு வேகமாக ஓடி வந்தேன் என்று.
இங்கும் அதே பொருள் தான். பொன்னிற வண்டு ஒன்று முகத்தை மலர் என்று நினைத்து அதனுடன் உரசி உறவாட ,அதை கண்டு அச்சம் கொண்டு என்னுடைய வளையல்கள் அணிந்த கைக்கொண்டு மெதுவாக முகத்தை அந்த வண்டு வந்து மொய்க்காமல் மூடிக்கொள்ள ,என்னுடைய கருமையான கூந்தல் மேகங்கள் போன்று நகர்ந்துச் செல்ல ,அந்த பயத்தில் நான் வியர்த்து வேகமா உண்மையை உன்னிடத்தில் கூற ,வியர்க ,வியர்க வந்தேன் என்று காதலி தனக்காக மலரோடு காத்து இருக்கும் காதலனிடம் சொல்வதாக அந்த காட்சிக்கு பொருத்தமாக இந்த நள வெண்பா பாடலை கையாண்டுள்ளது சிறப்பு.
இரண்டு உள்ளங்கள் சங்கமித்தபோது அங்கு வார்த்தைக்கும்,வர்ணனைக்கும் எப்போதும் பஞ்சம் இல்லை.
பெண்களின் இயற்கை குணங்களான அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு போன்றவை அநேக நேரங்களில் உவமையாக கையாளப் படுகிறது.இங்கு அச்சம் வண்டைப் பார்த்து; அச்சம் கொள்வதற்குரிய மென்மையான குணத்தவள் பெண் என்று சுட்டிக் காட்டுகிறார், கவிஞர்.மலருக்கும் ,பெண்ணின் வதநத்திற்கும் வேறுபாடு தெரியாத வண்டு ; பெண்ணின் மென்மை குணம் இங்கே; அழகு இங்கே . பலாப் பழத்திற்கு ஈக்கள் மொய்ப்பது போல் தாமரை மலருக்கு வண்டுகள் ,தும்பிகள் மொய்க்குமாம். அதைப் போல சிவந்த முகப் பெண்ணை தாமரை மலர் என்ற வண்டுகள் மொய்க்க வட்டமிடுகின்றன என்று மலர் போன்றவள் பெண் என. பெண்மையின் மென்மையை சித்தரிக்கிறார்.
புகழேந்தி எழுதிய வரிகளில் இரண்டுதான் கவிஞருக்கு தேவைப் பட்டது. ஆனால் அதை தக்க இடத்தில் நினைவு கூர்ந்து கையாண்டதுதான் அவரது இலக்கிய வளமையை பறைசாற்றுகிறது என்றால் மிகையாகது.
கண்ணதாசன் அடுத்து சந்திக்கப் போவது யார் ? அடுத்த இதழில்.
