புத்தகம் :  ரஸவாதி கதைகள்

தொகுப்பு:  ரேவதி பாலு

Published by : விருட்சம்

 பக்கங்கள் : 445

விலை : ரூ. 400

 

புத்தகக் கடைகளுக்குச் சென்றாலே தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகள் நம்மை வா வா என்று அழைக்கும் விதமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பிரபல எழுத்தாளரின் படத்தை முகப்பில் தாங்கி, குண்டு குண்டாக இருக்கும் அந்தத் தொகுதிகள் நம் கண்ணைப் பறிக்கும். இந்த எழுத்தாளரின் தொகுதி நம்முடைய புத்தகச் சேகரிப்பில் இருக்கிறதா, வாங்கி விடலாமா என்று நம்மை சிந்திக்க வைக்கும்.

அப்படி என் கண்ணைப் பறித்த இந்த “ரஸவாதி கதைகள்” என்ற ரேவதி பாலு அவர்களின் தொகுப்பு நூலை மிக நேர்த்தியாக வடிவமைத்து வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள் விருட்சம் பதிப்பகத்தார். ரேவதி பாலுவுக்கும் விருட்சத்திற்கும் நாம் நிச்சயம் நன்றி சொல்லலாம்.

“ரஸவாதி” என்ற புகழ்பெற்ற எழுத்தாளரைப் பற்றி பலரைப் போல நானும் கேள்விப்பட்டிருந்தாலும், அவருடைய படைப்புகளை நான்  சிறிதளவே வாசித்திருக்கிறேன். அதுவும் விருட்சம், குவிகம் போன்ற இலக்கிய அமைப்புகளின் தொடர்பில் இருப்பதால்தான். மகள் தந்தைக்காற்றும் உதவியாக 1992 இல் வெளிவந்த ரஸவாதியின் கதைகளின் முதல் தொகுதியை மீண்டும் 2021-ல் ரேவதி பாலு அவர்கள் விருட்சத்தின் மூலம் நமக்காக மிகச் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். இதன் தொடக்கத்தில் உள்ள என்னுரை, முன்னுரை, வாலியின் அணிந்துரை, கன்னட எழுத்தாளர் ஃபிலாசஃபியின் அணிந்துரை ஆகியவற்றைப் படிக்கும்போதே நமக்கு ரஸவாதி என்ற எழுத்தாளுமையைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் பல விஷயங்கள் பிடிபட்டு விடுகின்றன. இந்தக் காலத்து வாசகர்களான நமக்கு இந்த நுழைவாயில் வழியாக புத்தகத்தில் நுழையும் போது நாம் அந்தக் காலத்துக்குள் பிரவேசிக்க பரவசத்துடன் தயாராகி விடுகிறோம்.

மொத்தம் 37 சிறுகதைகள். நான் இப்போது பாதி தூரம்தான் கடந்து இருக்கிறேன். அவசரத்தில் படிக்காமல், ஆற அமர உட்கார்ந்து, ரசித்து, ருசித்துப் படிக்கும் விதத்தில்தான் இந்தக் கதைகள் அமைந்துள்ளன. அவை வேறு ஒரு நிதானமான, பரபரப்பில்லாத காலத்துக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன.

ரஸவாதி ஒரு தேர்ந்த கதை சொல்லி என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும், இந்தக் காலத்தில், எல்லா வாசகர்களும் எல்லாவற்றையும் படித்தவர்களாக இருப்பதில்லை என்பதே என் அனுபவ அறிவு. ஒரு பழைய எழுத்தாளர்தானே, நடை ஆமை நடையாக இருக்குமோ, விறுவிறுப்பு என்ன இருந்துவிடப் போகிறது என்றெல்லாம் இன்றைய சில வாசகர்கள் சந்தேகப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், இது அனைத்தும் ரஸவாதியின் இந்தக் கதைகளைப் படிக்கத் தொடங்கும் முன்னால்தான். படிக்கத் தொடங்கியவுடன், ஒவ்வொரு கதையும் இந்தக் கற்பனை பிம்பத்தை உடைத்துப் போடுகிறது. கதைகளின் முடிவில் சிறுகதைக்குரிய எதிர்பாராத திருப்பங்கள் ஒவ்வொரு முறையும் இல்லை என்றாலும், ஒரு திருப்தியுடனும் புன்னகையுடனும்தான் படித்து முடிக்கிறோம்.

ஒவ்வொரு கதையையும் பற்றிக் குறிப்பிட இந்த நூல் அறிமுகத்தில் இடமில்லை. அது ஒரு முடிவில்லாத தொடர்கதையாகி விடும். ஆனால் “சங்கராபரணம்” என்ற தலைப்பிட்ட வித்தியாசமான சிறுகதையைப் பற்றி குறிப்பிடத் தோன்றுகிறது. தினம் தினம் நடக்கும் விஷயங்களை மையப்படுத்திய சமூகச் சிறுகதைகளே அதிகம் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதியில், சிவனையும் பார்வதியையும் ஒரு பக்தனையும் வைத்து பின்னப்பட்ட இந்தச் சிறுகதை என் மனதை விட்டு அகல மறுக்கிறது. “சங்கராபரணம்” என்ற இதன் தலைப்பின் காரணம் என்ன என்பது புரியும்போது நிஜமாகவே புல்லரிக்கிறது.

இந்த ஒரு கதைக்காகவே மொத்தத் தொகுதியையும் படிக்கப் பரிந்துரைக்கிறேன். ரஸவாதியின் இந்த சிறந்த சிறுகதை விருந்தைத்  தவறவிட்டு விடாதீர்கள் நண்பர்களே !