போட்டிக் கதைகள்

இப்போது விற்பனையில்!!!!!!! #kumudam #kumudammagazine #kumudamdigitalகுமுதம் | எழுத்தாளர் ஜெயமோகன்

 

எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே, எந்தப் பத்திரிகையில் எந்தப் போட்டி வைத்தாலும் கலந்து கொள்வது ரத்த்திலேயே ஊறிப்போன விஷயம். எழுதிப்போடுவதோடு சரி. பரிசு கிடைக்காதது பற்றியெல்லாம் இந்த ஜென்மம் கவலைப்பட்டதேயில்லை.

கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிகைகளிலும் மூன்றில் ஏதாவது ஒரு பரிசு வந்துவிடும். அப்போதெல்லாம் தபாலையே நம்பி இருப்போம். ஆரம்ப நாட்களில் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று கடிதம் வரும். அதன்பிறகுதான் பரிசுகள் வர ஆரம்பித்தேன்.

பிறகு கல்கி போன்ற பத்திரிகைகளிலிருந்து போன் வரும். “நீங்கள் இந்த முறை எங்கள் போட்டிக்குக் கதை எழுதியிருக்கிறீர்களா?”  என்று கேட்பார்கள். இல்லை என்று சொன்னால் சந்தோஷமாகிவிடுவார்கள்.

ஏன்?

கட்டுக்கட்டாகப் போட்டிக் கதைகள் அனுப்பித் தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். ‘கல்கி’க்கெல்லாம் 700 அல்லது 800 கதைகள் வரும். நாலு பேரிடம் பிரித்துக் கொடுப்பார்கள். ஆளுக்குப் பத்துக் கதைகள் எடுப்போம். பிறகு ஃபைனல் செலக்ஷனைப் பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள் செய்து, அப்புறம் கடைசியில் பிரபல நடுவர்கள் மூன்று கதைகளையும் பிரசுரத்துக்குப் பத்துக் கதைகளையும் தேர்ந்தெடுப்பார்கள்.

கடைசியில் அந்த மூன்று நடுவர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறோம் சில பத்திரிகைகளில்.

பொதுவாக இந்த முதல் ரவுண்ட் செலக்ஷனை யார் செய்தார்கள் என்ற தகவலே வெளியே வராது. நாங்களும் சொல்ல மாட்டோம் (இத்தனைக்கும் “என்னுடையதை ஏன் தேர்ந்தெடுத்து முதல் பரிசு கொடுக்கவில்லை?” என்று கேட்கும் வழக்கம் அப்போதெல்லாம் கிடையாது. இந்த வியாதி சமீபத்தில் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது)

கல்கியில் ரமணன் எடிட்டர் ஆனபோது எங்கள் பெயரையும் போட்டோவையும் வெளியிட்டு கௌரவப்படுத்தினார்.

எப்போதுமே எந்தப் பத்திரிகையும் இதற்குச் சன்மானம் கொடுக்கத் தவறியதே இல்லை.

சில கதைகள் வாசிக்கப்படுவதற்காக இல்லை, உணரப்படுவதற்காக பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் உங்கள் சொற்களை உலகம் கேட்க இந்த போட்டி ஒரு அழகான ...குமுதத்தில் போட்டிகள் வைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். படத்துக்குப் பொருத்தமான கதை. முதல் வரியைக் கொண்டு எழுதும் கதை எனப் பல வகையான போட்டிகள் அறிவித்திருக்கிறார்கள்.

 ஆயிரக் கணக்கான கதைகள் குவிந்துவிடும். (அவற்றில் பல ஒரு ஊரில் குமார் என்ற பெயரில் ஒருவன் இருந்தான் … என்பது மாதிரியான முதல் வரியைக் கொண்டு துவங்கும்.)

நாங்கள் இணைந்த பிறகு அவர்கள் ஒருபக்கச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்தார்கள். அந்த முறை 7500 கதைகள் வந்தன. நான் எழுதவில்லை என்பதால் என்னிடமும் பல கதைகள் வந்தன. படித்துத் தேர்ந்தெடுப்பது சுவாரஸ்யமான வேலையாக இருக்கும்.

மாவட்டச் சிறுகதைப் போட்டி என்று ஒன்று வைத்தார்கள். ஒவ்வொரு முறையும் கோ-ஆர்டினேட்டராக பாமா கோபாலன் செல்வார். இந்திரா சௌந்தர்ராஜன், மகரிஷி, போன்றவர்கள் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களானார்கள்.

ஒரு முறை குமுதம் ஒரு பக்கச் சிறுகதைப் போட்டிக்கு நான் ஆர்வமாய் நான்கு கதை எழுதிப்போட்டேன் (ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம் என்று அறிவிப்பில் கண்டிருந்ததால்.)

அப்போது துடிப்பான இளைஞரான பிரியா கல்யாணராமன் துணை ஆசிரியராக இருந்தார். பிற்பாடு அவர் குமுதம் ஆசிரியரானார் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரியும்.

ஒரு நாள் அவரிடமிருந்து போன். “வாழ்த்துகள்” என்று சொல்லி டக் கென்று போனை வைத்துவிட்டார்.

உண்மையில் என்னவென்று புரியவில்லை.

நானே மறுபடியும் போன் செய்து என்னவென்று கேட்டேன். அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது. ஆபரேட்டருக்கு நம்பர் போட்டு பிரியா கல்யாணராமனின் எக்ஸ்டென்ஷன் நம்பர் சொல்லி அழைக்க வேண்டும்.

அப்படி அழைத்து என்னவென்று கேட்டபோது ”அப்புறம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டார்.

எனக்கு மண்டை குடைய ஆரம்பித்துவிட்டது. பிறகு வீட்டுக்குப் போய் போன் செய்து “ஒரு பக்கப்போட்டியில் உங்களுக்கு முதல் பரிசு” என்றார். அலுவலகத்தில் பெரிய விஷயங்கள் பேச மாட்டார்.

அந்த முறை பெரிய தொகையை அறிவித்திருந்தார்கள். சந்தோஷத்தில் தூக்கம் வரவில்லை. அன்றைக்கு என் கணவர் வீட்டுக்கு வந்தபோது “சொல்லவேயில்லையே” என்று கேட்டேன்.

“எனக்கே தெரியாதே” என்றார்.

இரண்டே நாட்களில் பிரகாஷிடமிருந்து போன் (பிரியா கல்யாணராமனின் நிஜப்பெயர் பிரகாஷ். பிரியா அவரின் தங்கை பெயர். சின்ன வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டவள். கல்யாணராமன் அப்பா பெயர்). “ஸாரிங்க..” என்று சொல்லி டக்கென்று போனை வைத்துவிட்டார்.

அன்றைக்கு மாலை என் கணவர் வந்தபோது “முதல் பரிசு என்று வேறு பெயர்  போட்டிருந்தாங்க. உன் பெயர் லிஸ்ட்டில் இல்லையே?” என்றார்.

முதலிலிருந்தே எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்காது. கம்பர் ஸ்டைலில் சொன்னால் கண்ணிலான் பெற்றிழந்தான் போன்றிருந்தது.

முதலில் அப்படி ஏன் சொன்னார், பிறகு ஏன் மாறிற்று ஒன்றுமே புரியவில்லை.

அந்த இதழில் பரிசு அறிவிப்பு வந்துவிட்டது. பரிசு ஏதும் பெறவில்லை. போதாக்குறைக்குத் தேர்ந்தெடுத்த கதைகளில்கூட இல்லை.

ஏமாற்றங்கள் மனசுக்குப் பழகுவதற்குச் சில நாட்கள் போதுமே. அப்புறம் மறந்தேவிட்டேன். எனினும் பிரகாஷிடம் எதுவும் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார் என்று தெரியும் என்பதால் கேட்கவும் இல்லை.

சில காலம் கழித்து ஜ ரா சுந்தரேசனிடம் (அதாவது அப்புசாமி சீதாப்பாட்டியைக் கதாநாயகன் மற்றும் நாயகியாக்கிச் சாதனை படைத்த பாக்கியம் ராமசாமியிடம்) பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது ஆயுளுக்கும் மறக்காத விஷயம்.

“உண்மை தெரியுமா கோபாலன்.. ஒரு பக்கக் கதைப் போட்டியில் உங்கள் மிஸஸ்ஸுக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சிருக்கணும். ஃபைனல் லிஸ்ட் எடிட்டர் மேஜைக்குப் போச்சு.

“வேதா கோபாலன் என்பது நம்ம பாமாகோபாலனின் மனைவிதானே?” என்று கேட்டார்.

ஆமாம் என்றவுடனே சத்தம் போட்டுவிட்டார், (அவர் சத்தம் போட்டால் அந்தக் குரல் அவருக்கே கேட்காது என்பது வேறு விஷயம்).

“பாமா கோபாலன் நம் ஸ்டாஃப். வேதா கோபாலனுக்கு இங்கே உத்யோகம்னு கொடுக்கலையே தவிர அவங்களும் நம் பத்திரிகைக்கு மட்டுமே வேலை பாக்கறாங்க. கிட்டத்தட்ட ஸ்டாஃப்தான். ‘ஒரு பக்கச் சிறுகதைக்கான போட்டி’ அறிவிச்சபோது என்ன கண்டிஷன் போட்டிருந்தோம்? குமுதம் ஸ்டாஃப்கள் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தோமே?” என்றார்

… என்று ஜ ராசு சொன்னபோது எனக்குச் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. இதைவிட முதல் பரிசு வேண்டுமா என்ன?

இன்னொரு நல்ல விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதன் பிறகு நான் கிட்டத்தட்ட ஸ்டாஃப் மாதிரி என்று அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதால் “நான் மற்ற பத்திரிகைகளுக்கும் மற்றவர்களின் போட்டிகளுக்கும் எழுதலாமா?” என்று அனுமதி கேட்டேன்.

அவர்கள் “தாராளமாக” என்று சொல்லிவிட்டார்கள்.

1985 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் நாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். அந்த ஆண்டுநான் புதிதாக அம்மாவாகியிருந்ததால் எழுதுவதையே நிறுத்தியிருந்தேன். எழுதுவதை என்ன.. பத்திகைகள் படிப்பதையே நிறுத்தியிருந்தேன். படிப்பதை என்ன.. பார்ப்பதையே…

போட்டி அறிவிப்பு வந்திருப்பதைக்கூட என் கணவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். முழுக்க முழுக்கக் குழந்தை வளர்ப்பு என்னும் சவாலில் ஈடுபட்டிருந்ததால், போட்டி பற்றி நினைத்துப் பார்க்கும் நிலையிலேயே இல்லை.

ஒரு பக்கக் கதையாய் இருந்தாலே எழுதியிருக்க மாட்டேன். அது நாவல் போட்டி. 350 பக்கம் கையெழுத்தில் வர வேண்டுமாம். எனவே கனவில்கூட நினைப்பதாக இல்லை.

ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்.

போட்டிக்கான கடைசி நாளே தாண்டியபிறகு அதன் எடிட்டரிடமிருந்து போன் “அந்தப் போட்டிக்கு இரண்டே நாவல்கள்தான் வந்தன. இரண்டுமே நன்றாக இல்லை. கற்றுக்குட்டிகள் எழுதியிருக்கிறார்கள். உடனே ஒரு நாவல் எழுதுங்கள். நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பதால் பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு. பத்து நாட்களுக்குள் வேண்டும்” என்றார் அந்த எடிட்டர்.

மிகவும் சிரமம். ஆனால் என்ன ஒரு அருமையான வாய்ப்பு. மனதுக்குள் கதை உருவாகிவிட்டது. ராப்பகலாய் டைப் செய்தால் 10 நாட்களில் சாத்தியம்தான். (தமிழ் டைப்ரைட்டர் வைத்திருந்தேன்)

அன்றைக்கு ஆபீசிலிருந்து என் கணவர் வந்தவுடன் விஷயத்தைச் சொன்னேன்.

அடுத்த நிமிஷம் உறுதியான குரலில் சொன்னார் “இந்தப் போட்டிக்கு நீ கதை எழுதக்கூடாது. கடைசி நாளுக்குள் மாய்ந்து மாய்ந்து எழுதியவர்கள் இருக்கையில் நீ அந்த நாளைத் தாண்டி எழுதுவது விதி மீறல்- அதன் எடிட்டரே சொன்னால்கூட.. இதற்குப் பரிசு கிடைத்தால்  அது உனக்குப் பெருமையே கிடையாது. உலகத்துக்கு உண்மை தெரியாவிட்டாலும் உன் உள்மனசுக்குத் தெரியும்தானே? பிறகெப்படி எழுதுவாய்? அந்த எடிட்டருக்கு போன் செய்து மறுத்துவிடு. துணிவிருந்தால் உண்மையான காரணத்தைச் சொல்லு. இல்லாவிட்டால் குழந்தையை கவனித்துக் கொண்டு எழுதுவது சிரமம்னு சொல்லு. ஒரு வகையில் அதுவும் உண்மைதானே?” என்றார்.

அந்த முறை எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. “நல்ல கதைகள் வராததால் யாருக்கும் பரிசு இல்லை” என்று அறிவித்தார்கள்.

இருந்தாலும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவியது நிஜம்.