பாத்திர விளக்கம் -4
நீளும் களப்பணி ( Post- operative procdure )
பாத்திரங்களைக் கழுவி முடித்தபின், “ஆஹா ஹூஹூ” என்று பரவசமாக , பரிட்சை எழுதி முடித்த பத்தாம் வகுப்பு மாணவனைப் போல வெளியே ஓடிவந்து விடாதீர்கள்.
இன்னும் பணி இருக்கிறது.
கழுவிய பாத்திரங்களை தண்ணீர் வடியக் கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு எடுத்துத் துடைத்து அததற்கான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். இதுவும் நாமா செய்யவேண்டும் என்று அம்மாஞ்சித்தனமாகக் கேள்வி கேட்கக் கூடாது ( பாத்திரம் தேய்க்கிறவாதான் இதையும் பண்ணனும்..இதுக்குன்னு தனியா ஒரு ஆளை வைப்பாளா ..? – எதிரொலிக்கும் வாய்ஸ் மெஸேஜ் )
தினமும் பயன்படுத்தும் எட்டு கரண்டிகளையும், பத்துப் பன்னிரண்டு தட்டு வகையறாக்களையும், காபி டபரா, டம்ளர், சாம்பார் ரஸப் பாத்திரங்கள், பொறியல் செய்யும் வாணலி, பால், தயிர் பாத்திரங்கள், இலுப்பச் சட்டிகள் என்று பழக்கப்பட்ட பாத்திரங்களை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும்.
ஷெல்ஃபில் மேல் தட்டுக்கு பதில் கீழ் தட்டில் வைத்துவிட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
சாத்துக் கரண்டியை அதனிடத்தில் காணவில்லையென்றால் அதை நாம் சஹாரா பாலைவனத்தில் தூக்கி எறிந்தது போல இடி இடிக்கும்; குரல் முழங்கும் ( ஒரு வேலைய செய்யச் சொல்லிட்டு நிம்மதியா வேற வேலை பாக்க முடியறதா ? அப்படி எங்கதான் கொண்டு ஒளிச்சு வைக்கறேளோ ) இது நாம சொல்ல வேண்டிய டயலாக்… என்ன பண்ணறது..!
அடுத்து “தேய்ப்பான்களையும்” சோப்பு, வாஷிங் லிக்விட் ஸ்க்ரப்பர், பிரஷ் போன்ற இத்தியாதிகளையும் தாறுமாறாகப் போடாமல், நாடார் கடை ஸ்டாண்ட் போல சரியா அடுக்கி வைக்கணும்.
“சுத்தம் செய்யற இடம் சுத்தமா இருக்க வேண்டாமா ?) என்று “ஓஷோ” போல சுருக்கமா பிரபஞ்சத்தையே அளக்கற ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு நகரும் மனைவி நகர்ந்த பிறகு, நமக்கு மினிமம் அரைமணி
நேரம் இந்த “ஷட் டவுன்” வேலை தொடரும்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு , கையில் விளக்குமாறோடு. கடைசியில் வரும் கிளைமாக்ஸ் வில்லன் போல் காட்சி தரும் கட்டம் இது.
சமையலறையை ஒட்டிய வராண்டாவில் சொகுசாக வாளித் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு ஆர அமர பாத்திரம் தேய்க்கும் கனவான்கள் “களத் தூய்மை” என்ற இக் கடினப் பணியில் ஈடுபட வேண்டும்.
நின்று கொண்டே “சிங்”கில் பாத்திரம் கழுவும் சீமான்களுக்கு இக்களப் பணி ஸீன் விலக்கு.
இலக்கியப் பாத்திரங்களைப் பட்டிமன்ற மேடைகளில் “கழுவி ஊத்தியதற்குப்” பரிகாரமாக, சமையலறை மேடையில் பத்துப் பாத்திரங்களைக் கழுவிய –கழுவிக் கொண்டிருக்கும்- அனுபவச் சுவைகளை ( சுமைகளை) உங்களோடு கொஞ்சம் பகர்ந்து கொண்டதில் மனம் கனம் இறங்கிக் கொஞ்சம் இலேசாகிவிட்டது.
சார்! இதெல்லாம் ரொம்ப இண்டரெஸ்ட் ஆக இருக்கே ! இன்னும் எழுதுங்கள் என்பவர்க்கு ஒரு கண்டிஷன் ..
ஆண் சிங்கங்களே ! உங்கள் வீட்டில் பாத்திரம் விளக்கும் பணியில் நூறு மணி நேரங்கள் செலவிட்டவர்க்கே முது நிலை “பாத்திர விளக்கம்” பற்றிய கட்டுரை அனுப்பப்படும் .
பின் குறிப்பு : இத்தனை செய்தும் வீட்டில் “நல்ல பேர்” எடுக்க முடியவில்லையே என்று எட்டாக்கனிக்கு ஏங்காமல் அடுத்த பாத்திரத்தை அலம்பப் பாருங்கள்

