பொருட்களின் மீது ஆர்வம் என்பது தனி மனித விருப்பங்கள் தான். பலர் பொருட்களை வெளியேற்றாமல், எதிர்காலத்தில் ஒருவேளை தேவைப்படலாம் என்று சேர்த்து வைப்பார்கள். பரண் என்று சொல்லப்படுகின்ற அறைகளில் இருக்கும் மேலடுக்குகள் இதற்கென்று உருவாக்கப்பட்டது. அப்படியே பொருட்களை கயிற்றால் கட்டியும், அட்டைப்பெட்டிகளில் பொதிந்தும் பொதியாமலும் வைத்து விடுவார்கள். வீடு வெள்ளையடிக்கும்போது கண்களில் படும். அதுவரை அந்த பொருட்களுக்கு விமோசனம் என்பது இல்லை.
என்னுடைய மாமனார் பொருட்களை எளிதில் வெளியேற்றாமல் பத்திரமாக சேர்த்து வைப்பார். பெரும்பாலும் கருவிகள் அதிகம் இருக்கும். ஏன் என்றால் ரிப்பேர் வேலைகள் செய்வதில் அவர் கில்லாடி. டெலிவிஷன், சைக்கிள், மோட்டார் பைக் என்று எதை வேண்டும் என்றாலும் முயற்சி செய்து சரியாக்கி விடுவார். கடைசி சில வருடங்களாக படுத்த படுக்கையாகி விட்டார். ஒரு நாள் இறந்து விட்டார். அவரிடம் இருந்து நான் எடுத்து வைத்துக்கொண்டது அந்த டூல்ஸ் தான். அது மட்டுமல்ல – ஏகப்பட்ட சட்டைகள், பேண்டுகள், பனியன்கள், உள்ளாடைகள், வேஷ்டிகள் மற்றும் லுங்கிகள்; இவை போக போர்வைகள் – அவற்றை எவரும் எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை. அபார்ட்மெண்ட் வாட்ச்மேன்களை கூப்பிட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள சொன்னேன். மீதியுள்ளவற்றை டிஸ்போஸ் செய்தேன்.
சிறிது யோசித்து பார்த்ததில், ஒரு அறையின் எண்பது சதவீத இடத்தை அவை எடுத்துக்கொண்டு இருந்தன.
அதன் பிறகு நான் என்னுடைய பொருட்களை குறைக்கும் வேலையில் இறங்கினேன் . அடுத்த தலைமுறையினருக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பது – மினிமலிசத்திற்கு கண்டிப்பாக பொருந்தும். ஒரு காலத்தில் நாற்பது வருடங்களாக சேமித்து வைத்த சம்பள பட்டியல்கள், முக்கிய காகிதங்கள் என்பனவற்றை ஒரு நாள் முத்துவதும் யோசித்ததில், இவை இனிவரும் காலங்களில் எனக்கும் பயன்படாது; மேலும் என்னுடைய குழந்தைகளுக்கும் பயன்படாது என்று திட்டவட்டமாகத்தெரிந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பொருட்களை குறைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளேன்.
- என்னிடம் ஐம்பது சட்டைகள் இருந்தன. தற்போது இருப்பது பத்து மட்டுமே; பேண்டுகள் இருபதில் இருந்து ஆறாக குறைத்து விட்டேன். அதே மாதிரி வேஷ்டிகள் இருபதில் இருந்து நான்காக குறைத்து விட்டேன். இரண்டு பெட் ஷீட்டுகள், இரண்டு தலையணைகள்; ஒரு ஸ்வீட்டெர் – இவை தான் இன்றைய இருப்பு.
- தினமும் ஒரு ஆங்கில பத்திரிகை வீட்டிற்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று தமிழ் பத்திரிகைகள் வாங்குகிறேன். மாதம் இருமுறை, அவற்றை எடைக்கு போட்டுவிடுவதால், அன்றைய தின பத்திரிகையை தவிர வேறு இருப்பதில்லை. ஒரு காலத்தில் ஆறு மாத பத்திரிகைகளை அடுக்கி வைத்திருந்தேன்.
- வாராந்திர பத்திரிகைகள், மாதாந்திர பத்திரிகைகள் – போன்றவை நிறைய வாங்குகிறேன். மாதம் ஒரு முறை கடைசி இதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை நூலகத்தில் அல்லது நண்பர்களுக்கு தந்து விடுகிறேன். ஒரு காலத்தில் அலமாரியின் இரண்டு அறைகளை அடைத்துக்கொண்டு இருந்த பத்திரிகைகள் தற்போது ஒரு கையில் மட்டுமே அடக்கம். வீட்டில், என்னைத் தவிர மற்றவர்கள் பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், இந்த முடிவுக்கு வந்து விட்டேன்.
- ஐம்பது பேனாக்கள் ஐந்தாக குறைந்து விட்டன; கைவசம் இருப்பது இரண்டு பென்சில்கள், ஒரு சார்பேனர், ஒரு eraser மட்டுமே. இப்படி தினமும் ஒரு ஏரியாவை மட்டும் குறி வைத்து குறைந்த பட்சம் எவ்வளவு தேவைப்படும் என்று மதிப்பிட்டு மீதியை தேவைப்படுபவர்களுக்கு தந்து விடுகிறேன். வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வாங்கி சென்று விடுவார்கள்.
- வங்கியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக என்னிடம் கிட்டத்தட்ட 100 பைல்கள் இருந்தன. சம்பள பட்டியல் விபரங்கள், லீவு சமாச்சாரங்கள், முக்கியமான தகவல் பரிவர்த்தனைகள் போன்றவற்றை, தனித்தனியாக பைல் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள் நினைவுக்கு வந்தது. இவற்றால் எதிர்காலத்தில் எனக்கோ வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்த பயனும் இல்லை என்று. அனைத்தையும் டிஸ்போஸ் செய்தேன். என்னுடைய நினைவிற்காக, Appointment லெட்டர்; retirement லெட்டர் – இவற்றை மட்டும் வைத்துக்கொண்டேன். எதிர்காலத்தில் தேவைப்படும் என்று வருமான வரி தாக்கல் செய்த படிவங்கள் அடங்கிய பைல் மட்டுமே இருக்கிறது. ஆக, 100 பைல்கள் தற்போது ஐந்தாக குறைந்து விட்டது.
- தற்போது என் கண்களை உறுத்துவது – புத்தகங்கள் தான். கிட்டத்தட்ட ஒரு நூலகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், 3000 புத்தகங்களை சேர்த்து வைத்து இருக்கிறேன். நிச்சயம் 2700 புத்தகங்களை எதிர்காலத்தில் நான் படிக்கப்போவதில்லை. வீட்டில் உள்ளவர்களும் படிக்கப்போவதில்லை. எனவே அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் தேவைப்படும் 300 புத்தகங்களை தவிர்த்து மீதி உள்ளவற்றை நூலகத்திற்கு அல்லது நண்பர்களுக்கு தந்து விடும் திட்டம் கைவசம் தயாராக இருக்கிறது.
- மற்றபடி அன்றாடம் பயன்படுத்தும், பற்பசை, சோப்பு, சீப்பு, டூத் பிரஷ் போன்றவை எப்போதும் தேவைக்கு அதிகமாக என்னிடம் இருப்பதில்லை.
பயணங்களின் போது சொல்லுவார்கள் – “Less luggage – More comfort” என்று.
அதே வகையில் மினிமலிசம் ஒரு சிறந்த கான்செப்ட். அடுத்த ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை நமக்கு இருக்காது என்றால், அந்த பொருள் நமது பொறுப்பில் இருந்து விடுபடவேண்டியது தான் முக்கியம். இல்லாவிட்டால், அதற்கு வீட்டின் ஒரு பகுதியை தரவேண்டியது வரும். இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரிவியூ செய்யும்போது தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு சிரமங்கள் வெகுவாகக்குறையும் – நமக்கும் குறையும்.
