அழைப்பு ஓட்டுநர்

Moorthy Supremacy: Namo Narayana's Jailer 2 Comedy Role as Rajinikanth's Driver

ஆங்கிலத்தில் “கால் டிரைவர்” என்று அழைக்கும் சொல்லை “ அழைப்பு ஓட்டுநர் “ என்று நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன். ( வாடகை ஓட்டுநர் என்பது கண்ணியமாக இல்லை).  இது தமிழில் மட்டுமல்ல , எல்லா மொழிகளிலுமே புதிய சொல்.  சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல்படத் தொடங்கிய ஒரு சேவை இது என்பதால் புதிய பெயர்ச்சொல் தேவைப்படுகின்றது.

முன்பெல்லாம் கார் உள்ளவர்கள், தானே ஓட்டுவார்கள் அல்லது டிரைவர் வைத்துக் கொள்வார்கள். கார் இல்லாதவர்கள் வாடகைக் காரில் செல்வார்கள். கார் வாங்குவதும், பாராமரிப்பதும் ,டிரைவர் வைத்துக் கொள்வதும் அத்தனை எளிதல்ல. இப்போது பெருகியுள்ள “நுகர்வோர் கலாச்சாரம்” இதையெல்லாம் எளிதாக்கிவிட்டது. வங்கிக் கடன் வசதிகளும் இதற்குத் துணை நிற்கிறது மாதம் இ எம் ஐ பத்தாயிரம் கட்ட முடிந்தால் ஏதேனும் புது மாடல் கார் ஒன்றை வாங்கிவிடலாம். பல “ ஹையர் மிடில் கிளாஸ் “ குடும்பங்களுக்கு கார் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்.

எல்லா நகரங்களிலும் கார்கள் பெருகிவிட்டன. வாங்குவோர் அனைவருக்கும் கார் ஓட்டத் தெரியாது என்பதால் “ஓட்டுநர்” தேவை அதிகரித்துவிட்டது. ஆனால் எல்லோராலும் “நிரந்தரமாக” ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதி இருப்பது அரிது. மேலும் ஒரு மாதத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்களே காரைப் பயன்படுத்தும் இல்லத்தார்களுக்கு “முழு நேர டிரைவர்” வைத்துக்கொள்வது வீண் செலவுதானே!

எனவே அழைக்கின்ற நேரத்தில் மட்டும் வந்து செல்லும் டிரைவர்கள்,  எத்தனை மணி நேரங்களுக்கு வேலை செய்தார்களோ அதற்கு ஏற்ப பணம் கொடுக்கும் விதிமுறை, என்ற அடிப்படையில் ஒரு புதிய சேவை நகரங்களில் தொடங்கப்பட்டுவிட்டது.

இந்தப் பீடிகை இருந்தால்தான் . “அழைப்பு ஓட்டுநர் “ சேவை மூலம் நான் பெற்ற அனுபவங்களை நீங்கள் முழுமையாகப் படித்து இரசிக்க முடியும்.

கல்லூரிப் பணியில் இருக்கும் போதே நான் கார் வாங்கிவிட்டேன். முதல் கார் வாங்கும் போது எனக்கு வயது நாற்பது. அது ஒரு “செகண்ட் ஹாண்ட் “ பியட் மாடல். ஸ்டியரிங்கிலேயே “கியர்” இருக்கும். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு பழைய ஆனால் மிகக் குறைவாக ஓடியிருந்த “பிரீமியர் பத்மினி” பியட் வாங்கினேன் . டார்க் மேரூன் கலர் ; வெல்வெட் மேலுறைகள்; ஃபுளோர் கியர். அதன் பின் புதிதாக வாங்கியது மாருதியில் அறிமுகம் செய்யப்பட்ட “அல்டோ”. போஸ்ட் ஆபீஸ் ரெட் கலர். நான் நிறைய ஓட்டி மகிழ்ந்த கார். “பிரின்சிபால்” வண்டி எனக் கல்லூரியில் அடையாளம் காணப்பட்ட பெருமை அதற்கு உண்டு. அதன் பின் “வாகனார்” . அதன் பின் ஆட்டோமேடிக் கியர் உள்ள புதிய வாகனார் மாடல்.

மேற்சொன்ன என் வண்டிகளை என்னைத் தவிர வேறு யாரும் ஓட்டியது  கிடையாது. உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் என்னைப் பற்றித் தெரியும். என “காரை” யாருக்கும் இரவல் கொடுக்க மாட்டேன்.

“பண்ணையாரும் பத்மினியும்” போல இருந்த இந்த நடைமுறையில் நான் “ரிடையர்ட் “ ஆண் பிறகு சில மாறுதல்கள் வந்தன. நான் ஆரம்பித்த “கம்பெனி” சார்பாக இந்தியாவில் பல மாநிலங்களுக்கும், ஆண்டுக்கு இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டி இருந்ததால் வீட்டில் நான் இல்லாத நேரத்தில் குடும்பத்தார், காரைப் பயன்படுத்த “டிரைவரை அழைக்கத் தொடங்கினார்.

நான் ஊரில் இருந்தால் நான்தான் கார் ஓட்டுநர். என துணைவியார் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஒதுங்கிவிட்டார். பையனும் படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டான்.

மேற்படி சூழலில் வயது ஆக ஆக கார் ஓட்டுவது கொஞ்சம் கடினமாக ஆகிவிட்டது. சாலை நெரிசல்களில் கார் ஓட்டுவது எனக்கு என்றும் கடினமாக இருந்தது இல்லை; என்றாலும் நீண்ட பயணங்களில் “சிக்னல்களில்” நின்று நின்று போவது ஒரு “சோர்வை” ஏற்படுத்தியது. அதுவும் குறித்த நேரத்துக்குள் ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் “டென்ஷன்” அதிகமாகிவிடும்.

மேலும் சென்னைக் கடை வீதிகளில் ஷாப்பிங் செல்லும் போது “பார்க்கிங்” பெரிய பிரச்சினை ஆக மாறிவிட்டது.

எனவே எனது  “நிகழ்ச்சிகளுக்கு” போகும் போதும், வீதிகள் “பிஸி” ஆக இருக்கும் போதும் “அழைப்பு ஓட்டுநர் “ சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.

முதல் நாள் என்னமோ மாதிரி இருந்தது. என் காரில் நான் பயணம் செய்கிறேன். டிரைவர் சீட்டில் வேறு யாரோ! டிரைவர் சீட் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டே வருகிறேன். இந்த நிலை மாற சில மாதங்கள் பிடித்தன. இப்போதெல்லாம் காரில் அமைதியாக அமர்ந்து கொண்டு ஓட்டுநர் ஓட்டட்டும் என்று சும்மா இருக்கிறேன்.

“அழைப்பு ஓட்டுநரில்” தான் எத்தனை வகைகள்; சிலவற்றையாவது உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிலர் பதிவு செய்த நேரத்துக்கு பத்து அல்லது ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வந்து காரை வெளியே எடுத்து, கதவுகளைத் திறந்து சீட் கண்ணாடி எல்லாம் துணி கொண்டு சுத்தம் செய்வார்கள். பத்தில் ஒருவர் அப்படி அமைவது அரிது.  

சிலர் குறித்த நேரத்துக்கு சரியாக வந்து நின்று காலிங் பெல் அடிப்பார். தவறு ஒன்றும்இல்லை. உழைக்கும் நேரத்தைப் பொறுத்தல்லவோ அவர்களுக்கு ஊதியம் கிடைக்கின்றது. எனவே நான் எப்போதும் அரைமணி நேரம் முன்னதாக வரும் வகையில் “புக்” செய்துவிடுவேன்।

ஸ்டாண்டர்ட் நிறுவனங்களில் இருந்து வரும் ஓட்டுநர்கள் முறையான உடை அணிந்திருப்பார்கள். வந்தவுடன் தமது அடையாளச் சீட்டைக் காட்டுவார்கள். நம்பிக்கையானவர்கள். பொதுவாக வண்டி ஒட்டிக் கொண்டிருக்கும் போது “போன்” பேச மாட்டார்கள். காத்துக் கொண்டிருக்கும் நேரங்களில் வண்டியை விட்டு வேறிடம் செல்லமாட்டார்கள். வண்டியில் விட்டுச் செல்லும் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும்.

யார் மூலமாவது கேள்விப்பட்டோம் என்று அறிமுகமில்லாத தனி நபர்களை வண்டி ஓட்ட அழைப்பது தேவையற்ற ரிஸ்க். நல்லவர்களும் இருப்பார்கள். எனினும் எதற்காக வலிந்து ஒரு தெளிவற்ற வழியைத் தேட வேண்டும்.

சில நேரங்களில் “சார் எங்களிடம் அனுப்புதற்கு டிரைவர் இப்போ இல்லை” என்று  சொல்லிவிட்டுக் கைகழுவி விடுவார்கள். பெரிய நிறுவனம் என்றால் கடைசி நேரத்தில் ஒரு டிரைவர் , ஏதோ காரணங்களுக்காக வரவில்லை என்றாலும், வேறு ஒருவரை உடனே அனுப்பி வைப்பார்கள்.

சிலர் வண்டி சாவியைக் கொடுக்கும் போதே “ எங்க போகணும் சார்” என்று கேட்டுக் கொள்வார்கள். சிலர் வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகே மரியாதையுடன் மெல்லக் கேட்பார்கள். என் அனுபவத்தில் இவர்களில் யாரும் ‘கேப் டிரைவர்’ போல கூகிள் மேப் உபயோகிப்பதில்லை.

சிலர் பொதுவான செய்திகள் சினிமா டிராஃபிக் பற்றியெல்லாம் பேசிக் கொண்டே வருவார்கள்; சிலர் நாம் கேள்வி கேட்டால் தவிர வாயே திறக்க மாட்டார்கள். அரசியல் பேசினால் மட்டும் நான் அனுமதிப்பதில்லை. ( பேசும்படியாகவா இருக்கிறது !!)

பொதுவாகவே, ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் பெரிய மால்கள் ஆகிய இடங்களில் உள்ள பார்க்கிங் நெறிமுறைகள் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். சிலமுறை பிரச்சினை வருவதுண்டு. அப்படி ஒருமுறை நேர்ந்த போது அந்த இளவயது “ஓட்டுநர் பையன்”

“ சார்! மன்னிச்சுக்குங்க! நான் சென்னைக்கு புதுசு. விழுப்புரத்தில்தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு சிடியில் ரெண்டாவது நாள். வேற யாரும் இல்லைன்னு என்ன அனுப்பிச்சுவிட்டாங்க !”என்றான்.

அண்மையில் இன்னொரு பயணம். பெருங்களத்தூரில் இருந்து போகவேண்டும். புதிய கால் டிரைவர் சென்டர் . அங்கிருந்து ஓர்  இளவயது டிரைவரை அனுப்பி வைத்தனர்.    வண்டியை எடுத்த உடனே சடக் என்று பிரேக் போட்டான் மறுபடியும் சடாரென்று பிரேக் போட்டான்.

“என்ன தம்பி ! ஆட்டோமேடிக் கியர் ..ஓட்டி பழக்கம்  இல்லையா என்றேன்.

“ இல்ல சார்! நான் பிரைவேட் ஃபயர் சர்வீஸ் ல் ஃபயர்இஞ்ஜின் ஓட்டுறவன். இன்னிக்கு சண்டே லீவு அதனால் வந்தேன்.  அதுல நல்லா அழுத்தினால்தான் பிரேக் பிடிக்கும்.. இதுல தொட்டாலே நிக்குது “ என்றான்.

நான் அதிர்ந்து போய் “சரி தம்பி .. நகரு .. எனக்கு ஓட்டத் தெரியும் நான் டிரைவ் பண்ணறேன் “ என்றேன்.

“அதெல்லாம் வேணாம் சார் ஒரு நிமிஷத்துல பழக்கமாயிடும்” என்று சொல்லி கவனமாக ஓட்டத் தொடங்கி, பிறகு சூப்பராக ஓட்டினான்.

பயணம் செய்யும் போது நடுவே நிறுத்தி உணவு விடுதிகளுக்கு சென்றாலோ அல்லது திருமண விழாக்களுக்குச் சென்றாலோ நான் ஓட்டுநரையும் உடன் அழைப்பேன். சிலர் வருவார்கள். சிலர் மறுத்துவிடுவார்கள்.

இந்த விஷயத்தில் எனக்கு அடிக்கடி வரும் டிரைவர் ஒருவர் நினைவு வருகின்றது .      (பெயர் வேண்டாமே ! ) அவர் எப்போதுமே பந்தியில் என்னை முந்திவிடுவார். நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒருமுறை ஒரு பஃப்ஃபே டின்னரில் நான் உணவை முடித்த பிறகு திரும்பினால் அவர் கையில் ஐஸ்கிரீம் கிண்ணத்தோடு அருகில் வந்து “ எடுத்துக் கொள்ளுங்கள் “ என்று உபசாரமே செய்தார். அதிலும் ஒரு சௌகரியம். சாப்பிட்டு முடித்தபின் உடனே கிளம்பலாம். இன்னும் டிரைவர் சாப்பிடவில்லை எனத் தாமதம் ஆகாது.

என்னோடு எனது இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வரும் டிரைவர்களிலும் வெவ்வேறு வகைகள் உண்டு.

“தம்பி ! நிகழ்ச்சி முடிய இரண்டு மணி நேரம் ஆகலாம். நீ வண்டியிலேயே இரு.. இல்ல மேடைப் பேச்சு கேக்கற பழக்கம் இருந்தால் உள்ளே வந்து கேளு” என்பேன். சிலபேர் வருவார்கள். சிலர் வரமாட்டார்கள்.

ஒருமுறை ஒரு ஓட்டுநர் “ சார் ! ஒங்க பேச்சை முழுசும் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது ,,நான் யுட்யூப்ல கூட ஒங்களக் கேட்டிருக்கேன் “ என்றார்.

“அட ! இலக்கியத்துல எப்படி இவ்ளோ ஈடுபாடு?”

“ சார் இந்த வேலைக்கு முன்னால் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் இருந்தேன் அப்ப பிறைசூடன் சாரை அழைப்பதற்கு போய் வருவேன் அவரோட பேசுவேன்  அங்க டிஸ்கஷன்ல கூடக்  கலந்துப்பேன் “ என்றார். நான் அன்று மேடையில் பேசிய உரையை மிக விவரமாக வருணித்தார். ஆச்சரியப்பட்டேன்.

இவர் போல இன்னும் பலர் , வேறு துறைகளில் முன்னேற வாயப்பின்றி இந்தத் தொழிலில் பணி புரிவதை நான் கண்டுள்ளேன். காலமகள் கண் திறவாமல் வாழ்க்கையில் வெற்றி காண முடியாது என்று உணர்ந்த தருணங்கள் அவை.

இன்னொரு டிரைவர், இவர் கொஞ்சம் கெடுபிடியாக இருந்தார். முறைப்பாக வண்டி ஒட்டிக் கொண்டு வந்தார், என்  நிகழ்ச்சி முடிந்து நான் வெளியே வந்தேன். அவர் நான் வருவதைப் பார்த்துவிட்டு , விரைவாக வண்டியின் அருகே வந்து , கார் கதவைத் திறந்து விட்டு பவ்யமாக “ மெள்ள பாத்து உக்காருங்க ஐயா !” என்றார். நான் கொஞ்சம் ஆச்சரியமாக அவர் முகத்தைப் பார்த்தேன்.

“ ஐயா உங்க பேச்ச கேட்டேன் சூப்பர் ! கூட்டத்துல நெறைய பேர் கை தட்டுனாங்க” என்று உற்சாகமாகச் சொன்னார்.

நினைத்தால் இனிக்கும் கணங்கள் அவை.

(தொடரும்)