https://puthaga-golu.anennya383395.chatgpt.site/
புத்தகக் கொலு 9 நவராத்திரி நாட்களிலும் விஜயதசமி நாளிலும் (10 & 11) ஜாலியாக நடைபெற்றது.
11 நாட்கள் 165 புத்தகங்கள் ! (பசித்த மானிடம் புத்தகம் இரண்டு நாட்களில் வந்துள்ளது.)
குவிகம் நண்பர்களின் புத்தகங்கள் 30 நாள் 10 , 11 இல் சேர்த்தோம்
ஒவ்வொரு நாளும் 15 இல் இத்தனை படித்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி!
இத்தனை படிக்கவில்லையே என்ற ஆதங்கம்!
35 நண்பர்களின் 100க்கும் மேற்பட்ட சிறப்பான விமர்சனங்கள்!
நண்பர்கள் காட்டிய உவகைக்கு நெஞ்சார்ந்த நன்றி!
சிறப்பாக விமர்சனம் எழுதிய 10 பேருக்கு 150 ரூபாய் புத்தகம் பரிசு!
யார் அந்த 10 பேர்?
1. அப்புசிவா
2. செல்லம் ஜெரீனா
3. ராஜாமணி
4. இந்திரா ராமனாதன்
5. நாகேந்திர பாரதி
6. புஷ்பா விஸ்வனாதன்
7. பானுமதி வெங்கடேஸ்வரன்
8. உஷா கண்ணன்
9. துரை தனபாலன்
10. ரேவதி ராமச்சந்திரன்
அனைவருக்கும் வாழ்த்துகள்!
ஒரே ஒரு catch
ஜனவரியில் வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விருட்சம் புத்தக அரங்கில் புத்தகங்களை வாங்கும்போது மட்டுமே இந்த 150 ரூபாய்க்கான தள்ளுபடி கிடைக்கும்!
(அடடா! இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே … என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது)
அது சரி! வெளியூரில் இருப்பவர்கள் மற்றும் புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாதவர்களுக்கு என்ன ஏற்பாடு?
அவர்கள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் உறவினர் / நண்பருக்கு இந்தப் பரிசினை endorse செய்யலாம்!!
புத்தகக் கொலுவிற்குப் புத்தகம்தான் பரிசு! பணம் அல்ல!!
பங்கு பெற்ற அனைவருக்கும் புத்தகக் கொலுவிற்கு வடிவம் கொடுத்து சிறப்பாக அமைத்த அனன்யாவுக்கு ஸ்பெஷல் நன்றி!
அவர்களுக்கு டிஜிட்டல் சுண்டல் இதோ!
சில விமர்சனங்களை ( பரிசு பெற்றவர் / பெறாதவர் ) உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறோம்
சாய் கணேசன் :
சிவகாமியின் சபதம்:
இந்த நாவல் அமரர் கல்கி எழுதிய அற்புதமான இன்னொரு வரலாற்றுப் புதினம் மட்டுமல்ல. சிவகாமி என்ற கற்பனைப் பாத்திரம் கொண்ட காதலை விவரிக்கும் அருமையான காதல் கதையும் கூட. பரஞ்சோதியும் நாகநந்தியும் முறையே ஹீரோவைப்போன்றும் , வில்லனாகவும் கதைமுழுவதும் வலம்வருவார்கள். முதற்பாகத்தில் வரும் வஜ்ரபாஹு உண்மையில் யாரென்று பாகத்தில் இறுதி வரியில் சொல்லாமலேயே சொல்லியிருப்பார் ஆசிரியர். ஆயனரின் சிற்பங்களும் சிவகாமியின் நடனமும் கூடவே கல்கியின் கைவண்ணமும் அழகாகப் பரிமளிக்கும் இந்த நாவலை இப்போது படித்தாலும் திகட்டாது
உஷா கண்ணன்
எல்லா புத்தகங்களும் வீட்டில் இன்னும் உள்ளன.
சமீபத்தில் தான் சிவசங்கரி அவர்களின் சூரிய வம்சம் 2 பாகமும் படித்தேன்.
அனுபவங்கள் பலவிதம் ; ஒவொன்றும். ஓரு விதம் என்பது போல் பலவித நிகழ்வுகள். விமானத்தில் மறைந்த பிரதமர் மந்திரி ராஜிவ் அவர்களுடன் கொண்டாடிய பிறந்த நாளை சொல்வதா? வீட்டில் வளர்த்த ‘ சியாமா ‘ நாயின் மேல் உள்ள பாசத்தை சொல்வதா?
விழுப்புரம் நாட்களை சொல்வதா?
எதை விட.
அவர் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் அழகாக எழுதி உள்ளார்.
புஷ்பா விஸ்வநாதன் :
வாஷிங்டனில் திருமணம்
“சாவி”யின் முழுநீள நகைச்சுவைப் புதினம் இது. ராக்ஃபெல்லர் தம்பதிகள் வாஷிங்டனில் ஒரு ஐயர் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். சாஸ்திரிகள், அப்பளம் இடும் மாமிகள் எல்லோரும் விமானத்தில் வாஷிங்டனுக்கு வருகிறார்கள். அப்பளம் உலர்த்தும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகட்டும், ஜாங்கிரியின் ஆரம்பம் எது முடிவு எது என்று ஆராய்வதாகட்டும், அப்பளத்தை உடைக்காமல் சாப்பிடுவது எப்படி என்று தவிப்பதாகட்டும், சிரித்துச் சிரித்து மாளாது. இடைச் செருகலாக ஒரு காதல்கதை வேறு. திருமண நிகழ்வுகளை ஆதியோடந்தம் அந்நிய நாட்டில் நடத்தி வைத்தது மட்டுமன்றி, ஒவ்வொரு நிகழ்வின் தாத்பர்யம், முக்கியத்துவம், உள்ளர்த்தம் எல்லாவற்றையும் எளிமையாக சாஸ்திரிகள் வாயிலாகச் சொல்ல வைத்ததுதான் ரியல் ஹைலைட்.
கணேஷ்ராம் :
18 வது அட்சக்கோடு
(அசோகமித்திரன்)
அதீதமான புத்திசாலித்தனம் நிறைந்த வர்ணனைகளைக் கொண்ட வாக்கியங்கள் இல்லாமலும், முதல் முயற்சியில் புரியாத சொற்கட்டுகளைக் கையாண்டு எழுதப் படாமலும், படித்தவுடன் கவலைக்கிடமாகாத எளிமையான ஆனால் ஒவ்வொரு இழையிலும் பின்னிப் பிணைந்து நீளும் இயல்பான நகைச்சுவையையும் அடிநாதமாகக் கொண்டது. அசாதாரணமான எழுத்தாளனால் எழுதப்பட்டதனால் மட்டுமல்ல, ஆதவன் முன்னுரையில் சொல்வது போல, அந்தப் பதினெட்டில் புதைந்து கிடக்கும் குறியீடுகளையும் தாண்டி இந்தக் கதை ஹியூமர் ஒவ்வாமை கொண்ட சிடுமூஞ்சிகளுக்கு ஹ்யூமரையும், எழுதினால் நல்ல கதையாக எழுத வேண்டும் என்ற சங்கல்பத்தில் இருப்பவர்களுக்கு, எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஏற்கெனவே எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் “இந்த மாதிரி ஒரு கதையை எழுத முடியவில்லையே“ என்ற ஏக்கத்தையும் முதல் வாசிப்பிலேயே ஏற்படுத்த வல்லது.
இதுவொரு சிறுவனின் கதை, நகரத்தின் கதை, அகதிகளின் கதை, வீம்புக்காக உதார் விடுபவர்களின் கதை, முரட்டுப் பணக்காரர்களின் கதை, கட்டுப்பெட்டியான மத்தியதர வர்க்கம் புலம் பெயர்ந்து வாழும் சிரமங்களின் கதை எல்லாம் தாண்டி அரசியல் அவசியம் இல்லாமல் ஆனாலும் அதனால் பெருவாரியாகப் பாதிக்கப் படும் பரம ஏழைகளின் கதை.
பதினெட்டு வயதில் படிக்கும் போது இருந்த அதே பிரமிப்பு இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் நீடிப்பது என்பது சங்கப் பலகையில் எதிர்நீச்சல் போட்டு வரும் இலக்கியங்களுக்கே சாத்தியம்.
அப்பு சிவா:
ஜே ஜே சில குறிப்புகள்
நாவல் என்ற வடிவத்தை முழுதாக கலைத்துப் போட்டு, இப்படியும் எழுதலாம் என உணரவைத்த நாவல். அதேநேரம் ஒரு கலைஞனின் வாழ்வை இவ்வளவு அழகாக மனதில் தைக்கும்படி எழுத முடியுமா என வியக்கவைத்த நடை. வளரும் எழுத்தாளர்கள் வாசிக்கவேண்டிய படைப்பு.
ரேவதி ராமச்சந்திரன் :
தரையில் இறங்கும் விமானங்கள் எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. இந்துமதியின் புகழ்பெற்ற நாவல். நடுத்தர வர்க்க குடும்பத்தின் கனவுகளையும் எதார்த்தமான வாழ்க்கைப் போராட்டங்களையும் இப்படைப்பு பேசுகிறது.
விஸ்வம் என்ற இளைஞன் ஒரு பட்டதாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. கவிதைகள் மற்றும் இயற்கையின் அழகை நேசிக்கும் ஒரு கனவுலக வாசி. ஆனால் குடும்ப பொறுப்புகள் மற்றும் வறுமை அவனுக்கு நிதர்சனமான உண்மைகளை உணர்த்துகின்றன. வானத்தில் பறக்கும் விமானம் போல பெரிய கனவுடன் வாழும் மனிதர்கள் இறுதியில் எதார்த்தத்தின் தரைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதை இத்தலைப்பு ஆழமாக உணர்த்துகிறது.
உணர்வுகளை மிகச் சிறப்பாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாகவும் வெளிப்படுத்தும் எளிய நடை கொண்டது விஸ்வம் பாத்திரத்துடன் வாசிக்கும் பழக்கம் உள்ள நம்மைப் போல உள்ள யாரும் பொருத்திப் பார்க்க முடியும்.
உஷா ராமசுந்தர்
கேட்டவரம்பாளயம் என்ற சிற்றூரில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ராமநவமி விழாவை பின்னணியாகக் கொண்டு எழுதபபட்ட புதினம். உண்மை நிகழ்ச்சிகளும் கற்பனையும் கொண்டு அநுத்தம்மா அவர்கள் தனக்கே உரிய சரளமான எழுத்தாளுமைக் கொண்டு நம்மை கிராமத்து அக்ரஹார விழாச்சூழலில் ஒரு காதல் கதையை இணைத்து வழங்கியுள்ளார்.
ராஜாமணி:
ஜெயகாந்தனின் “ஜய ஜய சங்கர”
காந்தியச் சிந்தனையில் ஈடுபாடு கொண்ட ஆதி, மகாலிங்க ஐயர், அவரது மகள் சுதந்திரதேவி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் உறவுகள் வழியாகச் தீண்டாமை, சடங்குகள், ஆன்மிகம், மனித சமத்துவம், காந்தியம் இவை பற்றி அருமையாக நாவல் விவாதிக்கிறது. ஆதி சிறுவயதில் சந்தித்த சங்கரனுடனான நட்பு, பின்னாளில் சங்கரனின் ஆன்மிகப் பயணமும் ஆதியின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று இணைகின்றன.சங்கரர் என்ற ஆன்மிகப் பிம்பத்தின் வழியாக மனிதர்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து நிற்கும் ஒருமை உணர்வை ஜெயகாந்தன் ஆராய்கிறார்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
கொலையுதிர் காலம்
பெயரைப் போலவே மிகவும் வசீகரமான துப்பறியும் நாவல் கொலையுதிர்காலம். இதில் அமானுஷ்யம், அறிவியல் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து தந்திருப்பார் சுஜாதா.
1980களின் துவக்கத்தில் குமுதத்தில் தொடராக வந்தது. அந்த காலத்தில் நமக்கு பரிச்சயம் ஆகாத ஹாலோக்ராஃபி என்பதை இதில் கையாண்டிருப்பார்.
அமானுஷ்யம், விஞ்ஞானம், வசந்த் மூலம் நகைச்சுவை, “வதனத்தின் இன்றைய ஸ்பெஷல் கண்கள், மையின்றி, பொய்யின்றி இரண்டு கரிய சலனங்கள” போன்ற ரசிக்கக்கூடிய வர்ணனைகள் இவையெல்லாம்தான் கொலையுதிர்காலம்
ரேவதி பாலு :
இதில் திருவரங்க உலா தினமணி கதிரில் தொடராக வந்த போது படித்த ஞாபகம். அறம் போன வருடம் படித்தது. அதில் வரும் யானை டாக்டரின் சகோதரர் எங்களுடன் குடித்தனம் இருந்திருந்தார் .அவர் தன் சகோதரரை பற்றி கதை போல் நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார். 90களின் ஆரம்பத்தில் யானை டாக்டர் இறந்தபோது அவரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை குமுதத்தில் வந்து அதை படித்த ஞாபகம் இருக்கிறது
. எல்லாமே ஒரு தரம் திரும்ப படித்தால் தான் விமர்சனம் சரியாக துல்லியமாக எழுத முடியும் என்று தோன்றுகிறது. என் ஞாபக சக்தி அவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்
Ashok kumar
Naalai matrumoru naale, by G Nagarajan is one of the best novels I have ever read. Normal day to day happenings, existential issues, deception, innocence, benevolence – all captured within one story. It reminds of Albert Camus’ The Stranger to some extent. Sad that GN never received the reverence that he deserved. His Kurathi Mudaku and Terlin sattayum, ettumuzha vettitum anindha manidhar are two other exceptional stories.
PS: pardon my review in English, I find it convenient to type in English
துறை தனபாலன் :
வாழும் வள்ளுவம்
மிகச்சிறந்த ஆய்வு நூல். அறிவியல் அறிஞர் குழந்தைசாமி அவர்கள், திருக்குறளை இலக்கியக் கண்ணோட்டம் இன்றி, அறிவியல் கண்ணோட்டத்தில் பகுத்தாய்ந்த அற்புதமான நூல். வள்ளுவம் காலத்தை வென்று வாழும் காரணத்தை மிக நுட்பமாக அவர் ஆய்ந்து, அறிந்து, விளக்கி இருக்கும் மாண்பு வியப்புக்குரியது. சிறிய நூல் எனினும் சீரிய நூல்.
உலக மொழியியல் அறிஞர் அனைவரும் வியந்து போற்றும் திருக்குறளின் சிறப்பை, என் சிற்றறிவிற்கேற்ப விளக்கி இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளேன். இன்னும் பல்வேறு கோணத்தில் பலரும் ஆய்ந்து எழுத, வற்றாத அறிவினை வழங்கிக் கொண்டே இருக்கும் வள்ளண்மை உடையது வள்ளுவரின் முப்பால். மதம் பரப்ப வந்த அயலரையும், அறிஞரையும், தமிழின் மணம் பரப்ப வைத்த மாபெரும் இலக்கியம்.
உலக மொழிகளிலேயே மதச்சார்பு இன்றியும், மறுக்கவொண்ணா அறத்தை, மனங்கவரும் மொழித் திறனோடு அறிவுறுத்திய அழகிற்காகவே, மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் உலகப் பொதுமறை மட்டுமே ஆகும்.
தென்காசி கணேசன் :
தெய்வத்தின் குரல்
காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் உரைகளை ரா.கணபதி அவர்கள் உரைநடையாக்கியிருக்கிறார். ஹிந்து மத சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் போன்றவகைகளுக்கு விளக்கங்கள் அளித்திருப்பதோடு மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும்் கூறியிருப்பதோடு, நாம் நம்பும் சில சரித்திர நிகழ்ச்சிகள் அப்படி அல்ல என்று ஆதாரத்தோடு நிரூபித்திருப்பார். உதாரணமாக பரஞ்சோதியான சிறு தொண்டரின் வரலாறு. பிராமணர்க ளை கடுமையாக சாடியிருப்பதையும் காண முடியும்.
Nநாகேந்திரபாரதி :
பல படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் கதைகளைப் பற்றியும் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதப்பட்ட புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் கிடைத்த ‘நண்பர் கிருபானந்தன் ‘ அவர்களின் ‘ சில படைப்பாளிகள் ‘ இரண்டு புத்தகங்களையும் படித்து ஏற்பட்ட ஆர்வத்தில் ( ஆர்வக் கோளாறில் 😃) சாஹித்ய அகாடெமி வெளியீடான ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் ‘ வெளியீடுகளை வாங்கிக் குவித்து வழக்கம் போல்
இந்திரா ராமநாதன்
“ஸ்ரீமத் நாராயணியாம்மிருதம் “ ஒரு வலிநிவாரணி செய்ய முடியாததைச் செய்த சஞ்ஜீவினி . postcancer வலியில் அந்தக் கடைசிப் பாடலை மட்டும் மீண்டும்மீண்டும் படிக்க , யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத வலியை இனிய தமிழும் , அதன் பிழம்பான குருவாயூரப்பனும் ஏந்திக் கொண்டதை உணர முடிந்தது . அப்புத்தகத்தை நினைத்தவுடனேயே குருவாயூரப்பன் கைகளில் ஏந்திய அந்தத் தாமரையின் குளிர்ச்சியும், மலர்ச்சியும் நெஞ்சில் படரும் . அது ஒரு “நம்பிக்கையாமிர்தம் “
ஐம்பது சொற்கள் தேவையில்லை !
அது “அமிர்தம் “ அவ்வளவுதான் !
இந்திரநீலன் சுரேஷ் :
குவிகம் கடைசிப் பக்கம் – ஜெ.பாஸ்கரன்
பக்தியில், திருமுகம் போல திருவடியும் எவ்வாறு ஆராதிக்கப்படுகிறதோ, பத்திரிகை இலக்கியத்திலும், தலையங்கம் போல கடைசிப் பக்கத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. கண்ணதாசனும், சுஜாதாவும் இதற்குப் பெருமை சேர்த்தவர்கள்.
குவிகத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் ‘கடைசி பக்கம்’ எழுதுவது சாதனை! பழைமையான எழுத்தளர்களின் படைப்புகள் உட்பட பல்வேறு இலக்கிய, பயண, நகைசுவை கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. Dr.பாஸ்கரன் இதற்காக திரட்டிய தகவல் சார்ந்த உழைப்பின் விளைவாக நவமணிகள், நல்மணிகளாக விளைந்திருக்கின்றன.
செல்லம் ஜெரினா
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
எழுதியவர் அம்பை.
தலைப்பே வித்தியாசம் எடுத்துக் கொண்ட கருக்களும் வித்தியாசம். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு.
காதுகேளாத பெண்ணின் மனநிலையை மனப் போராட்டத்தைக் கூறும் கதை. மொழியைக்கடந்த அன்பு நிறைந்த சைகைமொழியே போதும் என்கிறது கதை.13சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் எல்லாமே வித்தியாசமானவைதான்
அம்பையின் எழுத்து சுயத்தை மீட்டெடுக்கும் பெண்களை வன்மையோடு காட்டும்.
இந்நூல் 2021 ல் சாஹித்ய அகாடெமி விருது பெற்றது.
வள்ளி :
கள்ளிக்காட்டு இதிகாசம்…
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இணையற்ற காவியம் …
கரிசல் மண்ணின் வலி கூறும் வாழ்க்கையின் பதிவு. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் வைகை அணை. அதன் பெருமையும், பயனும் பலப்பல.
காலத்தின் கட்டாயத்தில் அணை கட்டுவது அவசியமாக,அந்த அணையின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எத்தனை எத்தனை கிராமங்கள்.. எத்தனை புதையுண்ட பேயத் தேவர்கள்… புதையுண்டது அவர்கள் மட்டுமல்ல அவர்கள் உணர்வுகளும் தான். இதனை இக்கதை அழகாக உணர்த்துகிறது .
பேயத் தேவரையும், மொக்கராசுவையும் ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது.கரிசல் மண்ணின் விதைகள்.
மலைக்கள்ளன்
மகாத்மாகாந்தியின் சத்யாகிரகத்தின் போது கவிஞரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எழுதியவற்றில் மலைக்கள்ளனும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எளிமையான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை படிக்க மிகவும் சுவாரசியம் நிறைந்தது.
சூழ்நிலைத் திருடன் ஒருவன், நல்லவனாகவும் இருக்கிறான். மலைமீது குடியிருப்பதால், மலைக்கள்ளன். திருந்தி, உறவுகளுடன் சேர்ந்து, சுபமாக முடியும் கதை.


