வாலி வதைப் படலம்

மாயாவி என்னும் அரக்கன் வாலியைப் போருக்கு அறைகூவி அழைத்தான். வாலியும் அவனோடு போரிடச் சென்றான். வாலியின் வலிமைக்கு முன் நிற்க முடியாத மாயாவி, ஒரு குகைக்குள் சென்று, புகுந்துக் கொண்டான். வாலி தன் தம்பி சுக்ரீவனிடம்,’நான் குகைக்குள்  சென்று, மாயாவியைக் கொன்று திரும்பி வருவேன். அதுவரை, நீ வாசலில் எனக்கு காவலாக இரு’ என்று கூறிவிட்டு குகைக்குள் புகுந்தான்.

ஆனால், 28 மாதங்களாகியும், வாலி  குகையை விட்டு வெளியே வரவில்லை. இவ்வளவு காலம் ஆகியும் வாலி திரும்பாததால், அவன் இறந்திருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதினர். எனவே, அமைச்சர்கள் சுக்ரீவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் சுக்ரீவன் இதை விரும்பவில்லை.  ஆனால், அமைச்சர்கள் சுக்ரீவனுக்குக் கடமையை உணர்த்தி, அவனை வற்புறுத்தி அரசாட்சியை ஏற்கச் செய்தனர்.

இதற்கிடையில், ஒரு வேளை மாயாவி உயிரோடு இருந்தால், அவன் வெளியே வராமல் இருக்க, குகையின் வாயை வானரர்கள் பாறைகளை வைத்து மூடிவைத்தனர். ஆனால் மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே  வந்த வாலி, குகையின் வாய்ப்பகுதி பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு சினம் கொண்டான்.

வாலி பாறைகளை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தான். அவனைக் கண்ட சுக்ரீவன் அவன் காலடியில் விழுந்து வணங்கி, விருப்பமில்லாமல் அரசாட்சியைத் தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்த நிலையை விளக்கினான். தன் தவற்றினை பொறுத்தருள வேண்டினான். இதனை நம்பாத வாலி, கோபத்தில்  அவனை அடிக்கத் தொடங்கினான். வாலியை சமாதானப்படுத்த முயன்ற அனுமனின் முயற்சியும் பலிக்கவில்லை. வாலியின் அடி தந்த வலியின் வேதனையில் ஓடத் தொடங்கினான்      சுக்ரீவன். அவனை வாலியும்  பின் தொடர்ந்து   பிடித்துக் கொல்ல முயன்றான்.

வாலி, ஒருமுறைத் துந்துபியை இரத்தம் சொட்டச் சொட்ட தூக்கி வீசி எறிந்தான். அந்த உடல் பம்பை நதிக்கரையில் உள்ள மதங்க முனிவர் வழிபாட்டிற்குச் சுத்தப்படுத்தியிருந்த இடத்தை அசிங்கப்படுத்தியதோடு இரத்தத் துளிகள் அவர் மேலும்பட்டது. உடனே கோபம் கொண்ட முனிவர் தன் ஞானதிருட்டியால், இந்த உடலை எறிந்தவன் வாலி என்பதை அறிந்து ’என் ஆசிரமத்தைச் சுற்றி, ஒரு காத தூரம் சுற்றளவுக்குள்ள இடத்தில், வாலி வரக்கூடாது அப்படி வந்தால், தலை வெடித்து இறந்து விடுவான்’ என சபித்தார். சுக்ரீவன் வாலியிடமிருந்து தப்பிவிட, அவன் வர முடியாத இந்த ரிசிய முக பருவதத்தில் ஒளிந்து கொண்டான்.பிறகு வாலி, சுக்ரீவனுடைய மனைவியான ருமையையும், அரசாட்சியையும்   கவர்ந்து கொண்டான்.

இராமனைத் துணையாகப் பெற்ற சுக்ரீவன் திரும்ப வாலியிடம் வந்து, போருக்கு அறைகூவல் விடுத்தான்.அப்போது, வாலி தன் மனைவி தாரைக் கூறியதையும் மதிக்காமல், சுக்ரிவனுடன் போர் செய்யத் துணிந்தான் வாலி.

போருக்குத் தயாரான வாலியைக் கம்பன்,

“ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும்

தோற்றனர் எனையவர் சொல்லற் பாலரோ

கூற்றம் என் பெயர் சொலக் குலையும் ஆர் இனி

மாற்றவருக்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார்”

(வாலி வதைப் படலம் 254)” என்று மாற்றான் வலிமையை அறிய விடாமல் அவன் கொண்ட செருக்குத் தடுத்து விடுகிறது என்கிறான் கம்பன்.

போரில் அம்பு பட்டதால் ஏற்பட்ட வலியினால் வாலி துன்பப்பட்டான். அவன் இராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். வாலியின் கேள்விகளுக்கு விடையளிக்கும் படியாக இராமன், ’உன்னிடம் அடைக்கலமாக வந்த சுக்ரீவனை ஏற்றுக்கொள்ளாமல், அமைச்சர்களின் விருப்பத்திற்கே அரச பதவியை  ஏற்றுக்  கொண்ட சுக்ரீவன், அதனை உன்னிடம் வந்து கூறி, அதற்காக மன்னிப்பும் கேட்டான். அதன் பிறகும், அவனை நீ துரத்திச் சென்று, கொல்லும் நோக்குடன் அடித்தாய், அவன் மனைவி ருமையும் நீயே கவர்ந்து கொண்டாய்’ என்று இராமன், வாலி மேல் குற்றம் சாட்டினான்.

வாலி, துன்பத்தால் மாறிய மனதைக் கொண்டவராய் அறநெறி அழியுமாறு, நீ ஒரு செயலை செய்ய மாட்டாய் என்பதை, மனதில் எண்ணி அடங்கி, இராமனைத் தலையால் வணங்கிச் சொல்லலானான். ’’நல்ல வழியின் படி நீ நோக்கும் நன்முறையை, நாயைப் போன்ற எளியவரான எங்களால் குற்றம் இல்லாமல் அறிய முடியுமோ, எம் தீமையைப் பொறுத்துக் கொள்வாயாக’’ என்றான். (வாலி வதைப் படலம் 352)

”உன்னிடம் வேண்டிப் பெறக்கூடியது ஒன்று உண்டு. அது யாது என்றால், என் தம்பி சுக்ரீவன் மதுவைக் குடித்து அறிவு மாறுபடும் போது, தீமை செய்வானானால் அவன் மீது சினம் கொண்டு, இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய எமனைச் செலுத்தாதிருக்க வேண்டும்” என்று வேண்டினான்.

“தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்

ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்”

(வாலி வதைப் படலம் 360)

அனுமனின் ஆற்றல் குறித்தும் இராமனிடம், வாலி உயர்வாகப் பேசினான்.

சுக்ரீவனைக் கட்டி அணைத்துக்கொண்டு, ”தம்பி உனக்கு நான் சொல்லக்கூடிய நன்மை ஒன்று உள்ளது. அதைக் கேட்டறிந்து, உள்ளத்தில் கொண்டு நடப்பாயாக. என் இறப்புக்காக நீ வருந்த வேண்டாம்” என்றான். ”இராமன் பரம்பொருள். அவன் கட்டளையை ஏற்று, உள்ளத்தில் சஞ்சலம் ஏற்படாதபடி, அந்தக் குற்றேவல் செய்தலில் நிறுத்தி, மூன்று உலகங்களிலும் மேன்மை அடைவாயாக. அவனுக்கு வேண்டிய உதவியை மறக்காமல் மனதிலே கொண்டு செய். வேண்டிய சமயத்தில் உயிரையும் கொடுப்பாயாக. அரிய பிறப்புகளை எளிதில் நீங்கப் பெறுவாயாக. மன்னர்கள், அடிமைகள் செய்யும் குற்றங்களைப் பொறுப்பர் என்று எண்ணக்கூடாது.”(367,370) என்று அறிவுரை கூறினான். மேலும்,இராமனிடம்,’சுக்ரீவனைக் காப்பாயாக’ என்று சொல்லி வாலி, இராமனிடம் அடைக்கலப்படுத்தினான்.

வாலி, இராமனின் அம்புபட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டான் அவனின் மகன் அங்கதன்.அவன் பலவாறு புலம்பி அழுதான். அதைக் கண்ட வாலி, அங்கதனை நோக்கி, ’இனி நீ வருந்த வேண்டியதில்லை’ என்று கூறி, தன் மார்புடன் அணைத்துக் கொண்டு, ’எல்லாவற்றிற்கும் தலைவரான இராமன் செய்த நல்வினையின் பயன் இது’ என்று கூறித் தேற்றினான்.

மேலும்,”நான் முன் செய்த தவத்தால் இத்தகைய மரணம் எனக்கு வந்தது. இராமனே என்னிடம் வந்து, எனக்கு வீடு பேற்றைத் தந்தான். இராமனே மயக்கத்தைச் செய்யும் பிறப்புகளாகிய நோய்களைப் பற்று இல்லாமல் ஒழிப்பதற்கு ஏற்ற மருத்துவன்.அவனை வணங்குவாயாக. இராமன் என் உயிருக்கு இறுதியை உண்டாக்கினான் என்று சிறிதும் நீ எண்ணாதே. இவன் பகைவருடன் போர் செய்ய நேர்ந்தால், நீ துணையாகச் செல். தர்மத்தை ஆதரித்து நிலை பெற்று வாழும் உயிர்க்கெல்லாம் நலத்தைச் செய்பவனான இராமனின் மலர் போன்ற அடியை வணங்கி வாழ்வாயாக” என்று வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறினான்.(வாலி வதைப் படலம்382)

வாலி வளம் பல பெற்ற நாடான கிட்கிந்தையின் அரசன். என்றாலும், வரங்கள் பல பெற்றிருந்த போதிலும், அமைச்சர்கள் அறிவுரையைக் கேட்காமல், கோபம், பிடிவாதம், தன் செயலே சரி எனல், தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், தன் வீரத்தின் மீது அளவுகடந்த தற்பெருமை கொள்ளுதல், ஆணவத்துடன் இருத்தல், எதிரியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடல், மனைவியின் சொல்லை மதிக்காமை போன்ற தீய குணங்களால் இராமனின் அம்புபட்டு அவன் இறந்தான்.

மாயாவி, துந்துபி போன்ற மாபெரும் அரக்கர்களை வென்றவன். பரம்பொருளான இராமனின் அம்பு பட்டதால் உயிர்த் துறந்தாலும், அமரரானான் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு கம்பன் வாலியின் வீழ்ச்சியையும், மாட்சியையும் திறம்பட கம்பர் இராமாயணத்தில் திறம்பட விவரிப்பதை நம்மால் காண முடிகிறது.