ஹோட்டல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலை களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டுக் காலிக் கூடையுடன் திரும்பி வந்தான் நாராயணன்.

      வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று அந்த ஹோட்டலின் முன் வந்து நின்றது. சூரியக் கதிர்கள் பட்டு அந்தக் கார் தகதகவென்று மின்னியது. காருக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியாத படியான கண்ணாடி அடைப்புகள். வியர்வை துளிர்க்காமல் நிம்மதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்றவாறான ஏ.சி. அமைந்துள்ள கார்.

      டிரைவர் மடமடவென்று கீழே இறங்கிக் கதவைத் திறந்து பதவிசாகப் பிடித்துக்கொண்டான். காருக்குள்ளிருந்து ஒரு வாட்டசாட்ட மானவர் அனாயாசமாகக் கோட்டைக் கழற்றிக் கையில் தொங்கவிட்டபடி கீழே இறங்கினார். நிதானமாக கவனித்தால் அந்தக் காரின் முன்புறத்தில் சிவப்பு எழுத்துகளில் ‘அரசு வாகனம்’ என்ற எழுத்துகள் தென்படும்.

      கண்ணெதிரே நேர்படத் தோன்றிய கடவுளை பக்தன் கண்ணிமை க்காமல் பார்ப்பதுபோல் அந்த வாட்டசாட்டமானவரை வினோதமாக உற்றுப் பார்த்தான் நாராயணன்.

அவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். உலகம் இன்னும் சரிவரப் புரிபட்டிராத சின்னஞ்சிறுவன். சாப்பிடக் கொஞ்சம் சோர் கிடைக்குமென்று அவனை  அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்துவிட்டிருந்தாள் அவனுடைய அம்மா.

      தன்னுடைய கடமை நினைவுக்கு வந்து விறுவிறுவென்று ஹோட்டலுக்குள் போனான் அவன். கூடையை ஒரு புறம் ஒதுக்கமாக வைத்துவிட்டு, சாப்பாட்டு மேஜைகளைத் துடைக்கும் ஈரத்துணியால் சுத்த ப்படுத்திவிட்டு எச்சில் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு வாளியைத் தூக்கிக்கொண்டு வேலையில் மூழ்கினான்.

      காரிலிருந்து இறங்கிய அந்த வாட்டசாட்டமான ஆளின் பெயர் மோகனராவ். அவர் ஓர் அரசாங்க அதிகாரி. தன்னுடைய அதிகார தோரணையைப் புலப்படுத்திக் கொண்டு காலியாக இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்.

ஓட்டமாக ஓடி வந்த சர்வரிடம் சாப்பாடு கொண்டு வரச் சொன்னார். கண்ணாடித் தம்ளரில் கொண்டு வந்து வைத்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே ஓய்வாகச் சுற்றும் முற்றும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். முனைப்பு எதுவும் இல்லாமல் அவருடைய பார்வை பூச்சி மீது கவனம் செலுத்தும் பல்லியின் பார்வை போல நாராயணன் மீது படிந்தது.

      இதற்குள் சாப்பாட்டு வந்தது. சாப்பிட்டுக்கொண்டே உன்னிப்பாக நாராயணனை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டே இருந்தார். சாப்பிட்டு முடித்து கேஷ் கவுன்ட்டருக்குச் சென்று கையை நீட்டி நாராயணனைச் சுட்டிக் காட்டி, “அவனோட பெயரென்ன?” என்று ஹோட்டல் முதலாளி யிடம் கேட்டார்.

      “நாராயணன், சார்!” என்றார் முதலாளி.

      “அவனுக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார் அந்த அரசாங்க அதிகாரி.

      மௌனம் சாதித்தார் முதலாளி.

      “இந்த வயசிலே அவன் ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சிக்கிட்டு இருக்கணும், இல்லையா? ஆனால் அவன் இப்படிக் க்ளீனர் வேலைக்கு முந்திக்கிட்டு வந்தாலும் நீங்க அப்படிப்பட்டவங்களுக்கு வேலை கொடுக்க லாமா? அவனோட குழந்தைப் பருவம் எவ்வளவு பாழாகுது! குழந்தைகளைக் கூலியாளுங்களாக, தொழிலாளிங்களாக வச்சிக்கக் கூடாதுன்னு அரசாங்கம் எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரிய மாட்டேங்குது. வயித்துக்குக் கொஞ்சம் சாப்பிடக் கிடைச்சா அதுவே போதும்னு அவங்களைப் பெத்தவங்க இப்படி அனுப்பிவச்சிடுறாங்க. அவங்க அத்தனை பேரைப் பெத்தெடுக்கணும்னு யாரு கேட்டுக்கிட்டாங்க? அரசாங்கத்தோட நோக்கங்கள், செயற்பாடுகள் அவங்களுக்குப் புரியற தில்லே. அவங்களோட நல்லதுக்கு இயற்றப்படுகிற சட்டதிட்டங்கள் எப்படி முறைகேடாகுதுன்னு பாருங்க. அரசாங்கத்தோட சட்டதிட்டங்கள் அவங்களுக்குப் புரியாது. அது சரி, உங்களோட பிள்ளையா இருந்தா இந்த மாதிரியான வெட்டிவேலைக்கு அனுப்புவீங்களா?” ஆவேசத்துடன் கேட்டார் மோகனராவ்.

      ஹோட்டல் முதலாளிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மொத்தத்தில் அவர் என்ன பேசுகிறாரென்றே உள்ளுக்குள் வாங்கிக்கொள்ள முடியவில்லை. நாராயணன் அங்கே வேலை பார்ப்பது அவருக்குப் பிடிக்க வில்லை என்பது மட்டும் முதலாளிக்குப் புரிந்தது.

      அந்த முரட்டு ஆசாமி தன்னைப் பற்றி முதலாளியுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனித்தான் நாராயணன். ஆனால் அது எதனால் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

      “அப்படீன்னா அவனை வேலையை விட்டு அனுப்பிடச் சொல் றீங்களா?” சந்தேகப்பட்ட நிலையிலேயே கேட்டார் முதலாளி.

      “ராமாயணம் விடிய விடியக் கேட்டிட்டு, ‘சீதை ராமனுக்கு என்ன உறவு?’ அப்படீன்னு கேட்டானாம் ஒருத்தன். இதுவரைக்கும் நான் சொன்னது என்னவாம்? ஏதாவதொரு வேலை செய்யணும்னா, அதுக்குன்னு ஒரு வயசு வேணும். இப்படிச் சின்னஞ்சிறுசுங்களை வேலைக்கு வச்சிக்கக் கூடாதுன்னு அரசாங்கச் சட்டமே இருக்குது. இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகுது! ஏதோ மிச்சம் மீதியானதை அவனுங்களுக்கு விட்டெறிஞ்சா போதும் கிறதுதானே உங்க எண்ணம்? நினச்சதை சாதிச்சிக்கிடலாம் என்கிறதுதானே உங்க எண்ணம்? வேலை என்கிறது முக்கியமில்லே, அய்யா, வேலை செய்கிறவன் யாரு என்கிறது முக்கியம். இப்படிப்பட்ட சின்னஞ்சிறுசுகளை வேலை வாங்குறது பாவம்னு உங்களுக்குத் தோணலியா? மொதல்லே அவனை வேலையிலேருந்து போகச்சொல்லிட்டு, தன்னோட குழந்தைப் பருவத்தை எப்படி அனுபவிக்கணும்னு சொல்லிக்கொடுங்க. ஆடியும் பாடியும் திரிய வேண்டிய வயசிலே இப்படி உங்களுக்கு சேவகம் பண்றது எவ்வளவு கொடுமை! வேலையைவிட்டுப் போகச் சொல்லிட்டீங்கன்னா அவன் ஒழுங்கா ஸ்கூலுக்குப் போவான். நாலு எழுத்து படிச்சிக்குவான். அவனோட எதிர் காலம் நல்லா இருக்கும்.”

      எந்த சச்சரவும் இல்லாமல் தன் வேலையைச் சீராகச் செய்து கொண் டிருக்கும் நாராயணனை வேலையை விட்டுப் போகச் சொல்ல முதலாளிக்கு விருப்பமில்லை. ஆனால் இவரென்னவோ பார்ப்பதற்கு ஆபீசர் மாதிரி இருக்கிறார். மறுத்துப் பேசினால் என்னென்ன இடைஞ்சல் வருமோ?

வேறு போக்கில்லாமல் முதலாளிக்காரர் சொடக்குப் போட்டு நாராயணனைப் பக்கத்தில் வரச் சொன்னார்.

      கைகளைத் துடைத்துக்கொண்டு முதலாளிக்கு அருகில் வந்து நின்றான் நாராயணன்.

      “இந்தாப்பா, இந்த நூத்தி ஐம்பது ரூபாயை வச்சிக்கோ. நீ வேலை செய்ய வேண்டாம். வீட்டுக்குக் கிளம்பு” என்று சொல்ல முடியாமல் சொன்னார் முதலாளி.

      முதலாளி என்ன சொல்கிறாரென்று அவனுக்குப் புரியவில்லை. தான் என்ன தப்பு செய்துவிட்டதாகத் தன்னை வேலையிலிருந்து போகச் சொல் கிறாரென்று புரியவில்லை. பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் பெரியவரின் விஷயத்தில் தான் எதுவும் தப்பு செய்யவில்லையே! பின்னே எதற்காகத் தன்னை வேலையிலிருந்து போகச் சொல்கிறார்?

      அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.

      “அய்யா, என்னை வேலையைவிட்டுப் போகச் சொல்லாதீங்கய்யா. இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன். வேலையை ஒழுங்காச் செய்றேன்” என்று தன் முதலாளியிடம் கெஞ்சலாகச் சொன்னான் நாராயணன். சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத நாராயணனைப் பார்க்க முதளிக்குப் பாவமாக இருந்தது.

      வெளியேறிக்கொண்டிருந்த மோகனராவைச் சுட்டிக் காட்டி, அவரிடம் கெஞ்சிக் கேட்கும்படிச் சொன்னார் முதலாளி. நாராயணன் மடமடவென்று அவரை நோக்கி வெளியே ஓடினான். அப்போதே அவர் காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.

      தானாகவே கைகுவித்து ஏதோ சொல்ல முயன்றான் நாராயணன்.

      “போ… வீட்டுக்குப் போய் ஒழுங்காகப் படி…” என்று அவனுடைய தோளைத் தட்டிச் சொன்னபோது அவனுக்கு ஆக்ரோஷம் பொங்கிக் கொண்டு வந்தது.

      இதற்குள்ளாகக் கார் புறப்பட்டது. சட்டைப் பையிலிருந்த கூலிங் க்ளாசை எடுத்துக் கண்களில் மாட்டிக்கொண்டார் மோகனராவ். கார் வழக்கம் போல் வேகமெடுத்தது. கண்களைத் திரையிட்டுக்கொண்டு தப்பிச் செல்லும் திருடனைப் பார்ப்பதுபோல் அந்தக் காரை அநாதரவாகப் பார்த்தபடி நின்றிருந் தான் நாராயணன்.

தவிப்பு மனதுடன் சாலையில் ஓரமாக அவன் நடக்கத் தொடங்கினான்.

      அவனுக்கு அம்மா, அப்பா நினைவுக்கு வந்தார்கள்.

      கையில் கிடைத்த இந்த நூற்றி ஐம்பது ரூபாயைக் கொண்டு நான் கைந்து நாட்கள் கழித்தாலும் அதற்குப் பிறகு கஞ்சி குடிப்பதற்கு என்ன செய்வது? எப்படியாவது அடுத்து ஒரு வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும். உடனுக்குடன் அவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?

      அன்றைக்கு எவ்வளவு முயன்றும் தூக்கம் பிடிக்கவில்லை. மறுநாளி லிருந்து அவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? அந்தச் சிந்தனைதான் அவனுக்கு.

      வெளிறிய நிலையில் விடிந்தது. நாராயணன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். தரையில் புரண்டபடி அம்மா ராஜம்மா மகனுக்கு அருகில் வந்தாள். வற்றிய கிணற்றில் தண்ணீர் வந்திருக்கிறதோ என்று ஆசையுடன் பார்க்கும் விவசாயியைப் போல மகனைப் பார்த்தாள். களைத்து வாடிப்போ யிருந்தது அவனுடைய முகம். இதயம் துணுக்குற்றது அவளுக்கு. ‘பகலெல்லாம் அந்த ஓட்டலில் எவ்வளவு  கஷ்டமான வேலை களைச் செய்கிறானோ? அந்த ஆண்டவன் தங்களுக்குச்செய்த அநியாயத்திற்கு, பாவம், குழந்தை பலியாகிவிட்டான். வயிறு நிறையச் சாப்பாடு கிடைக்குமென்று, தயாரித்த பண்டங்கள் மிகுந்துவிட்டால் வீட்டிற்குக் கொண்டு வருவானென்று நினைத்துத்தான் அவனை ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்தது. ஒரு நாளைக்குப் பதினைந்து ரூபாய் கொடுப்ப தாகவும் சொன்னார்கள். அப்பா கஷ்டப்பட்டதை மகன் ஈடு செய்ய வேண்டியிருக்கிறது.’… ராஜம்மாவுக்கு துக்கம் தொண்டை வரை வந்து கண்வழி கண்ணீராக வழிந்து நாராயணனின் நெற்றியில் விழுந்தது. மகனுடைய உடம்பைத் தடவிக்கொடுத்துத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

சிலிர்ப்புற்றுக் கண்களைத் திறந்து பார்த்தான் நாராயணன். அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு விழிப்பு தட்டியது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அம்மா அவனைத் தழுவிக்கொண்டாள். விழித்துக்கொண்டவன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு தனக்கான பழைய சோற்றைச் சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்த நிலையில் வெளியே கிளம்ப இருந்தவன் கட்டிலில் படுத்திருந்த அப்பாவின் பக்கம் போனான். புயல் காற்றுக்குச் சாய்ந்துவிட்ட மரமாகக் கட்டிலில் முடங்கிப் படுத்திருந்தான் அவனுடைய அப்பா. பேச முயன்ற அப்பாவுக்குப் பேச்சு வரவில்லை. அப்பா அப்படி முடங்கிக் கட்டிலில் படுத்து ஆறு மாதங்களாகி விட்டன.

      நடந்தது இதுதான்…. மனைவியை ஒரு நாள் தன்னுடைய ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டிருந்தபோது பின்னல் வந்த லாரி ஒன்று முட்டி மோதி விபத்து ஏற்படுத்தியதில் உடம்பு நொறுங்கிப் போயிற்று. மனைவி ராஜம்மாவுக்கு இரண்டு கால்களும் முறிந்து பயனற்றுப்போயின. ஒருவர்க்கொருவர் நொந்துகொண்டு ஆறுதல் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

      தான் வேலைக்குப் போய்விட்டு வருவதாக அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லிவிட்டு நாராயணன் வெளியே கிளம்பினான். எங்கேயாவது, ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று அங்கங்கே தேடிக்கொண்டே இருந்தான். அலைந்து தேடியதன் விளைவாக நான்கு நாட்கள் கழித்து ஓரிடத்தில் வேலை கிடைத்தது. யாரோ ஒரு முதலாளி நான்கு மாடிக் கட்டடம் கட்டிக்கொண்டிருந்த இடத்தில் கூலி வேலை கிடைத்தது. அது தனக்குப் பழக்கமில்லாத வேலை என்றாலும் நாராயணன் பின்வாங்கவில்லை.

      அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்த முதலாளி காரிலிருந்து கீழே இறங்கினார். அவர் வேறு யாருமல்ல…மோகனராவ்தான்! அவரைப் பார்த்ததும் வேலைகள் துரிதமாக இயங்கத் தொடங்கின. சுறுசுறுப் பாக இயங்கும் கூலியாட்களைப் பார்த்து நிறைவாகத் திருப்தியடைந்தார் மோகனராவ்.

      இந்த நிலையில் அவருடைய பார்வை நாராயணனின் மீது விழுந்தது.

“அட, இவன் எங்கே இங்கே வந்தான்?” என்று எங்குமில்லாத கோபம் அவருக்கு வந்தது. மேஸ்திரியை வரச்சொல்லி கட்டளையிட்டார்.      மேஸ்திரியிடம் அவர் எரிந்து விழுந்தார். “என்னய்யா வேலை பார்க்கிறே நீ? வேலைக்கு உனக்கு வேறே ஆளே கிடைக்கலையா? சிறுபிள்ளைகள் கிட்ட வேலை செஞ்சுகிட்டு இருக்க”

      “இல்லீங்க சார், ரொம்பக் கெஞ்சினான். ஏதோ சின்னச் சின்ன வேலைகளை செய்யச் சொல்லலாமே அப்படின்னு சேர்த்துக்கிட்டேன்” என்று இழுத்தவாறு பதில் சொன்னார் மேஸ்திரி.

      “என்னய்யாச் சின்ன வேலைங்க? இந்த மாதிரி ஆட்களை வச்சிக்கிட்டு நீங்க எப்போ வேலையை முடிக்கிறது? ஒரு பக்கத்திலே அய்யரு கிருகப் பிரவேசத் தேதியைக்கூடக் குறிச்சிட்டாரு. இனி பதினைஞ்சி நாள்தான் இருக்கு. சின்னஞ்சிறுசுகளை வச்சிக்கிட்டு எப்போ முடிப்பீரு? மொதல்லே இந்த மாதிரியானவங்களை நிறுத்திட்டு வாட்டசாட்டமானவங்களை வரச் சொல்லி வேலையை முடிக்கப் பாரும்” என்றார் எரிச்சலுடன் மோகனராவ்.

      மேஸ்திரி நாராயணன் இருந்த பக்கம் போனார்.

      “டேய், நீ இங்கே வேலை பார்க்கக் கூடாதாம்ப்பா. உன்னை வீட்டுக்கு அனுப்பச் சொல்றாருப்பா எங்க முதலாளி” என்றார், எட்டத்தில் நின்றிருந்த மோகனராவைச் சுட்டிக் காட்டி.

      மோகனராவை அடையாளம் கண்டுகொண்டான் நாராயணன். அவரைப் பார்த்த உடனேயே அவனுடைய முகம் சிவந்தது.

      ‘யாரால் தான் முன்பு வேலை இழக்க நேர்ந்ததோ, அந்த ஆளே இப்போதும் தன்னுடைய வயிற்றில் மண் அள்ளிப்போட வந்திருக்கிறார். காரணமில்லாமல் தன்மீது எதற்காக வஞ்சம் தீர்க்கிறார்? எதற்காகத் தன்னை இப்படி வேட்டையாடி அலைகிறார்? தான் என்ன தப்பு செய்துவிட்டதாகப் பின்தொடர்கிறார்?’ அவனுக்கு விளங்கவில்லை.

      “அவன் ஏன் இன்னும் இங்கே நின்னுக்கிட்டிருக்கிறான்? ஒரு அஞ்சோ, பத்தோ ரூபாயைக் கையில கொடுத்து இங்கேருந்து போகச் சொல்லும்” என்று இரைந்தார் மோகனராவ்.

      மேஸ்திரி பத்து ரூபாயை எடுத்து அவனுடைய கையில் கொடுக்கப் போனார்.

      “அய்யா, என்னை வேலையிலேருந்து போகச் சொல்லிடாதீங்கய்யா!” கைகளைக் கூப்பிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான் நாராயணன்.

      “நீ இங்கே வேலை செய்யக்கூடாதுன்னு அய்யா சொல்றதைக் கேட்டியா, இல்லையா?”

      “நான் வேலை செய்யலேன்னா எங்கம்மாவும் அப்பாவும் செத்துப் போயிரு வாங்கய்யா….” இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

      அந்த நேரத்தில் மோகனராவே அங்கே வந்துவிட்டார்.

      சடக்கென்று அவருடைய கால்களில் விழுந்து பற்றிக்கொண்டான்.

      “அய்யா, நான் உங்க காலைப் பிடிக்கிறேன். என்னை வேலையை விட்டுப் போகச் சொல்லாதீங்கய்யா!” தீனமான குரலில் மன்றாடினான் நாராயணன்.

      “சொல்றது உன் கிட்டதானே….போ….போ இங்கேருந்து.”

      அவனை பலவந்தமாக அந்தப் பக்கமாகத் தள்ளினார் மோகனராவ். அந்தத் தள்ளலில் அவன் கீழே விழுந்தான். முழங்கைகள் இரண்டும் சிராய்த்து ரத்தம் வழிந்தது.

      “ராஸ்கல், மறுபடியும் எங்கேயாவது வேலை செய்றதைப் பார்த் தேன்னா, ஜெயில்லே பிடிச்சிப் போட்டிருவேன், ஜாக்கிரதை!” தன்னுடைய அடாவடித்தனத்தைக் காட்டியவாறு பயமுறுத்தினார் மோகனராவ்.

      தலையைத் தூக்கி மோகனராவ் இருந்த பக்கம் பார்த்தான் நாராயணன். இனி அவரைக் கெஞ்சிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்பதுபோல் கண்களைத் துடைத்துக்கொண்டான். நெஞ்சை திடப்படுத்திக்கொண்டான்.

      மோகனராவ் அசத்தலாகப் போய்க் காரில் உட்கார்ந்தார். நாராயணனின் நெஞ்சு எரிமலைபோல் கிளர்ந்து எரிந்தது.

      டிரைவர் காரை ஸ்டார்ட் செய்தார். விறைப்பாக எழுந்து நின்றான் நாராயணன். ஆவேசமாக உள்ளங்கையை இறுக்கிக்கொண்டான். அந்தக் கைப்பிடிக்கு ஏற்ப ஒரு கல்லை எடுத்தான். கார் அங்கிருந்து கிளம்பியது. தன்னுடைய ஆவேசத்தையெல்லாம் சேர்த்து அவன் அந்தக் கல்லை எறிந்தான். அவ்வளவுதான்! மடாரென்று கார்க்கண்ணாடி உடைந்தது.

என்ன நடந்ததென்று மோகன் ராவ் கிரகிப்பதற்குள் நாராயணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். விடாமல் ஓடினான். வலுவையெல்லாம் திரட்டிக்கொண்டு ஓடினான். திரும்பிக் கூடப் பார்க்காமல் ஓடினான்….

அந்த ஓட்டம் அவனை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்குமோ?

————–000————