அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை
“லட்சுமி, நீ கேட்டபடி உன் கோச்சிங் கிளாசுக்குப் பணம் கட்ட ஆபீஸில் லோனு இல்லாட்டி அட்வான்ஸ் ஏதாவது கிடைக்குமான்னு கேட்டுப் பாக்குறேன் … பார்ப்போம் …”
முனுசாமி தன் மகளிடம் சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினார்.
****
பல வருடம் முன்பு விராலிமலையிலிருந்து இளம் வயதிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் முனுசாமி. புதுக்கோட்டையில் கார் ஓட்ட, கன ரக வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டது இங்கே அரசில் வேலை கிடைக்கக் கை கொடுத்தது.
அலுவலகத்திற்கு முதல் நபராக வந்து சேர்ந்தார். சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டுக் காரைத் துடைத்தார். சற்று நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் சென்று கல்கத்தாவிலிருந்து வரும் முன்னாள் இயக்குனர் வேணுகோபாலை அழைத்து வந்து விருந்தினர் விடுதியில் இறக்கிவிட்டுவிட்டு மரத்தடியில் காத்திருந்தார்.
°°°
கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் தொடர்ந்து ஒலித்த செல்பேசியைப் பார்த்தார். வேணுகோபால் – ஓய்வு பெற்ற முன்னாள் இயக்குனர்!
ரவிச்சந்திரன் தன் சாதுரியத்தால் தன் பெயர் அடிக்கடி வெளியில் வருமாறு செய்துகொண்டவர். அவரது இலக்கு, மாநிலத் தலைமை நிறுவனத்தில் ஒரு முக்கிய உயர்பதவி.
அதற்கு வேணுகோபால்தான் இவருக்கு உரிய ஆலோசனைகளைத் தந்தார், வழிகாட்டினார். வழியை இருட்டுக் குகையின் தலை விளக்கு வெளிச்சமெனக் காண்பித்தார். ரவிச்சந்திரன் கெட்டியாகப் பற்றிக்கொண்டு வளர்ந்தார்.
வேணுகோபால் ஆரம்பத்தில் தமிழகத்தில் வேலை பார்த்தபோது அவருக்கு நல்ல பெயர், புகழ். பொருளாதாரப் புலி அவர். ஐந்து ஆண்டுகள் டெல்லி. அதன் பிறகு கல்கத்தா அலுவலகத்தில் முக்கியப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.
ஒரு வாரம் முன்பே, வேணுகோபால் தனது தமிழகப் பயணத்திட்டத்தை ரவிச்சந்திரனிடம் கூறினார். தன் குடும்பத்துடன் தமிழகம் வந்து சிலநாட்கள் தங்கி, தன் சொந்த ஊர் திருச்சிக்கும் வேறு சில ஊர்களுக்கும் சென்றுவரப் போகிறார். எல்லா ஊர்களிலும் தங்குவதற்கு இட வசதியும் பயணத்துக்கு வாகனமும் மற்ற சகலவிதமான வசதிகளையும் ஏற்பாடு செய்யச் சொன்னார். ரவிச்சந்திரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
***
“ஹலோ, ரவி ! நான் வேணுகோபால்.”
“ஸார், விருந்தினர் மாளிகையில் ரூம் எல்லாம் வசதியா இருக்கா? டிபன் சாப்டீங்களா? நல்லா இருந்ததா? டிரைவர் முனுசாமி உங்களைப் பிக்கப் பண்ணி, கஸ்ட் ஹவுசில் தங்க வச்சுட்ட விவரத்தையும் சொல்லிட்டார். நானே பேசறதுக்கு இருந்தேன். மேடத்திற்கு வேற ஒரு காரோடு ரத்தினம்னு டிரைவர் வந்திடுவார். உங்களை நான் வந்து பார்க்கிறேன்.”
“நீங்க வர வேண்டாம்; நானே வரேன். அவங்களை காஞ்சிபுரம் அனுப்பிச்சிட்டு, உங்களைப் பார்க்க வரேன். ரொம்ப நாள் ஆச்சு நம்ம மாநிலத் தலைமை அலுவலகம் வந்து. பன்னிரண்டு மணிக்கு அங்கே இருப்பேன். சரிதானே?”
“சரி சார். லஞ்ச் என் கூட வச்சுக்கலாமா? எங்கயாவது ஹோட்டலுக்கு …?”
“இன்னைக்கு வேணாம்; லஞ்சுக்குப் பழைய சேர்மென் கூப்பிட்டுருக்காரு. நாம வேறொரு நாள் வச்சுக்கலாம்.”
***
வேணுகோபால், குடும்பத்தினரை அனுப்பிவிட்டு, அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார்.
முனுசாமி ஓடி வந்து கார்க் கதவைத் திறந்துவிட்டார். ஓசையின்றிக் கார்க் கதவைச் சாத்தினார்.
“ஐயா ! கிளம்பலாமா?”
“ம் ம் … ஹெட் ஆபீஸ்க்குப் போ!”
முனுசாமி மிதமான வேகத்தில் பக்குவமாக ஓட்டினார்.
***
நேற்று இரவு வீட்டில், பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடித்துள்ள தன் மூத்த மகள் லட்சுமியின் உயர்கல்வி பற்றிப் பேச்சு எழுந்தது. கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று, நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேரவேண்டும் என்பது மகள் மற்றும் மனைவியின் கனவு. ஆனால், பணத் தேவையில் வந்து நின்றது விஷயம்.
முனுசாமி முழு நேர ஓட்டுனராக வேலையில் சேர்ந்து பத்து வருடங்கள் ஆகிறது. அவரது சம்பாத்தியம் கைக்கும் வாய்க்கும்தான் சரியாக இருக்கிறது. மூன்று குழந்தைகள், மனைவி, தான் என்று ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் இவர் ஒருவர் சம்பளம் மட்டுமே ஆதாரம் – பொருளாதாரம். நெசப்பாக்கத்தில் அரை க்ரவுண்ட் இடம் வாங்கி வைத்துள்ளது மட்டுமே இவரது சொத்து. கொசுராக ஒரு சைக்கிள். அசோக் நகரில் வாடகை வீடு. அங்கிருந்து தனது பணியிடத்திற்குச் சைக்கிளில் அல்லது பேருந்தில் வந்து செல்வார். சில நேரங்களில் தன் கிளை அலுவலகம் சார்ந்து இல்லாமல், இப்படி வெவ்வேறு அதிகாரிகளின் பயணத்திற்கும் வண்டி ஓட்ட வேண்டிவரும். தன் நேரடி அதிகாரி சாம்பசிவம் இட்ட பணியைத் தலைமேல் சுமந்து சுத்தமாகச் செய்து முடிப்பதே இவர் வழக்கம்.
***
கடற்கரைச் சாலையில் தலைமையகம் வாயில் அருகே கார் வந்தவுடன் வேணுகோபால் “ம்… நேரா லிப்ட் கிட்ட போர்டிகோவுக்குப் போ!” என்றார் .
போர்டிகோவில் நிறுத்திய முனுசாமி அவசரமாகக் கீழிறங்கி அதிகாரிக்குக் கதவு திறந்தார். வேணுகோபால் கம்பீரமாக இறங்கினார்.
“ஆமா, உம் பேரென்ன சொன்னே?”
“ஐயா, நா முனுசாமிங்கய்யா.”
“ம்… அரை மணில வருவேன். வந்து போன் பண்றேன். வண்டிய போர்டிகோவுக்குக் கொண்டு வந்துடு.”
“சரிங்கய்யா.”
முனுசாமியின் பதிலைப் பொருட்படுத்தாமல் லிஃப்ட்டுக்குச் சென்றார் வேணுகோபால்.
****
வாகன நிறுத்துமிடத்தில் மரத்தடி நிழல் தேடி, காரை நிறுத்தினார் முனுசாமி. செல்போனை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். வேப்பமரக் காற்று இதமாக இசைத்தது. புகைப் பழக்கம் கிடையாது. தேனீர்ப் பழக்கம் மட்டும் தொற்றிக் கொண்டது. மர நிழலிலேயே சிறிது நேரம் நடந்தார்.
வளாகத்தின் அடுத்த பகுதியில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்தச் சென்றார். கூட்டம் நிரம்பி வழிந்தது. காத்திருந்து டோக்கன் வாங்கிக் கொண்டு கவுண்டருக்குச் சென்றார். டீ மாஸ்டர் இல்லை.
“உள்ளே போயிருக்கார். பால் தீர்ந்து போச்சு. புதுப் பால் கொண்டு வரப் போயிருக்கார்.”
கடிகாரத்தைப் பார்த்தார். 20 நிமிடம் ஆகி இருந்தது. இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது – கல்கத்தா அதிகாரி திரும்பி வர. ஐந்து நிமிடம் பார்த்துவிட்டுத் திரும்பி விடலாம்; அதற்குள் டீ வராவிட்டால் டீயைத் தியாகம் செய்ய வேண்டியது தான்.
டீ மாஸ்டர் வந்துவிட்டார்.
“பால் கொதிக்கணும். டீ, காபிக்குப் பத்து நிமிஷம் ஆகும் சார்.”
தேனீர் வேண்டாமெனத் தீர்மானித்து வெளியேறி டோக்கனைத் துப்புரவுப் பணிப்பெண்ணிடம் தந்தார்.
சிறுநீர் கழித்துவிட்டு முகம் கை கால் கழுவி வர, கழிவறையை நோக்கி நடந்தார்.
‘ஐயோ என்ன இது? வாயிலை மறித்து சவுக்கு மரம் கட்டி இருக்கிறார்களே?’
அருகே சென்றார். கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. முண்டாசுக் கொத்தனார் சொன்னார்:
“ரிப்பேர் வேலை நடக்குதுய்யா. அப்படியே பொறத்தாலே போனீங்கன்னா பழைய பாத்ரூம் இருக்கு, அங்க போங்க.”
கழிவறை சென்று வந்தார். முகத்தில் நீர் அடித்துக் கழுவி வந்தது புத்துணர்ச்சி தந்தது. வேக நடையில் காரை வந்தடைந்தார். பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். வலது பக்கம் அழுத்தினார். உறங்கிக் கிடந்தது செல்போன். மீண்டும் மீண்டும் அழுத்திப் பார்த்தார். விழிக்கவில்லை. பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டது.
‘ஐயோ ! கல்கத்தா ஆபிஸர் ஃபோன் பண்ணி இருப்பாரோ? போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்!’ பதை பதைப்புடன் ஓடினார்.
போர்டிகோவை ஒட்டிய வராந்தாவில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார் வேணுகோபால்.
“எங்கய்யா போய்த் தொலைஞ்சே? கால் மணி நேரமா போன் பண்ணிக்கிட்டுருக்கேன்.”
“போன்ல சார்ஜ் இல்லைய்யா. இப்பதான் பார்த்தேன், ஓடி வர்றேன். மன்னிச்சிக்குங்க ஐயா.”
“போன் செத்துப் போயிடுச்சுன்னா நீயாவது இங்கே வந்து நின்னு தொலைக்க வேண்டியதுதானே? நீயுமா செத்துப் போயிட்டே?”
“தப்புதான்! பாத்ரூம் போயிட்டு வந்தேன் ஐயா. அதுதான் …”
“சே … ஸ்கூல் பசங்க மாதிரி சால்ஜாப்பு சொல்லிக்கிட்டு … பொறுப்பு வேண்டாம், ட்ரைவருக்கு?”
“ஐயா! ரெண்டு நிமிஷத்துல வண்டி கொண்டு வந்துடறேன் ஐயா.”
முனுசாமி வேகமாகத் திரும்பி ஓடிச் சென்று காரை போர்ட்டிகோவுக்குக் கொண்டு வந்தார். இறங்கி, வேணுகோபாலுக்குக் கதவு திறந்தார். கோபமாக வந்து அமர்ந்தார் வேணுகோபால்.
“அண்ணா நகர் டவருக்குப் போ!”
***
மனதில் கவலை முழுமையாய்க் கவிழந்து கனத்தாலும், முனுசாமி நிதானமாகவே வண்டியை ஓட்டிச் சென்றார்.
‘காலையில் போன் பேட்டரி அளவு பார்க்காமல் கிளம்பியது என் தவறுதான். நேற்று இரவு வீட்டில் நீட் பயிற்சியின் செலவைப் பற்றிய மன வேதனையின் நீட்சி காலையிலும் இயல்பு வாழ்க்கையைக் குழப்பிவிட்டது. ஹம் … நல்ல வேளை, பேண்ட் பாக்கெட்டில் சார்ஜர் இருக்கிறது. ஆனால் காரில் சார்ஜ் போட்டுக் கொள்ளும் வசதி இல்லை. அண்ணா நகரில் இறக்கிவிட்ட பிறகு அங்கேயே எங்காவது சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். ’
வேணுகோபால் போனில் பேசிக் கொண்டிருந்தார்:
“ரவி! ஆமாம், நான் இப்போ அண்ணா நகர் போய்க்கிட்டு இருக்கேன். இந்த மாதிரி ஆளுங்களை இப்படியே விடக்கூடாது. எனக்கு இன்னைக்கு இது நடந்திருக்கு. ஆனா இதே மாதிரி வேற கஸ்ட் யாருக்கும் நடந்துடக் கூடாது இல்ல? ஆபீசுக்குக் கெட்ட பெயர் ஆயிடும். அதான் எனக்குக் கோபம். நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடுங்க. அதுதான் மத்தவங்களுக்கும் ஒரு பாடமா இருக்கும். சரி ரவி, தூக்கிடுங்க!”
***
முனுசாமி, தான் கார் ஓட்டும்போது காரில் பயணிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களது உரையாடலையோ போன் பேச்சுக்களையோ தன் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார். கவனம் முழுவதும் சாலையிலும் வாகனத்திலும்தான். தன்னைப் பெயர் சொல்லி அழைத்தாலும் டிரைவர் என்று அழைத்தாலும் மட்டும்தான் திரும்பிப் பார்ப்பார். இன்றும் இங்கும் அப்படியே .
அண்ணா நகர் பூங்கா அருகே இடதுபுறம் செடிகள் அடர்ந்த சாலையில் கார் சென்றது. பெரிய வீட்டின் வாசல் அருகில் நிறுத்தச் சொன்னார். காவலர் வாயிலின் இரட்டைக் கதவைத் திறக்க ஓடி வந்தார். ஜன்னல் கதவை மட்டும் திறந்து, ‘கதவு திறக்க வேண்டாம். வண்டி வெளியே நிற்கும்’ என்றார் வேணுகோபால்.
முனுசாமியிடம், “ஏய் … இப்பவும் எங்கேயாவது போய்த் தொலைஞ்சிடாதே. நான் வர முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகும்” என்று கடுகடுத்தார்.
“சரிங்க ஐயா! இங்கேயே இருப்பேன்.”
***
ரசகுல்லா டப்பாவுடன் உள்ளே சென்றார் வேணுகோபால்.
தெருவில் நிழலைக் கவிழ்த்து நின்றது பூவரச மரம். காரை ஓரமாக நிறுத்திவிட்டு, முனுசாமி, வீட்டுக் காவலரிடம் செல்போன் சார்ஜ் செய்து கொள்ள இயலுமா என்று கேட்டார். காவலர், தான் தங்கும் கூண்டின் உள்ளே பிளக் பாயிண்ட்டில் சார்ஜரைப் பொருத்தி செல்போனையும் அருகே வைத்தார்.
“இங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்றிங்களா?”
“வேண்டாம்; நன்றிங்க.”
எதிர் பிளாட்பாரத்தில் அசோக மர நிழலில் செய்தித்தாளை விரித்து அமர்ந்தார். மனதில் நிம்மதியற்ற சலனம் சலசலத்தது. மாத நாவலைப் படிக்க ஆரம்பித்தார். இருபது பக்கங்கள் ஓடின. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார். ஒரு மணி, முப்பது நிமிடம். எழுந்து சென்று வாயில் காவலரிடம் கேட்டார்
“நான் அங்கே எதுத்தாப்புல உட்கார்ந்து சாப்பிடலாமா?”
“அங்கேயும் சாப்பிடலாம்; ஏன் இங்கேயே என் ரூம்லயே உட்கார்ந்து சாப்பிடுங்களேன்.”
இதமான அழைப்பு. ஆனாலும் நன்றி சொல்லி மறுத்தார்.
“போய்ச் சாப்பிடுங்க. பத்து நிமிஷத்துல பாட்டரி முழுசா சார்ஜ் ஆயிடும்.”
மர நிழலில் அமர்ந்து டிபன் பாக்ஸைத் திறந்தார். மோர் சாதமும் நடுவில் எலுமிச்சை ஊறுகாயும் ! சாப்பிட்டு முடித்து டிபன் பாக்ஸைக் கழுவி டிக்கியில் வைத்து மூடினார்.
வீட்டின் காவலர் செல்போன் மற்றும் சார்ஜருடன் வந்தார்.
“சார்ஜ் ஆயிடுச்சு, இந்தாங்க.”
“ரொம்ப நன்றிங்க.”
செல்போன் ஒலித்தது. முனுசாமியின் மேலதிகாரி சாம்பசிவம் அலுலகத்திலிருந்து அழைத்தார். பரபரப்புடன் எடுத்தார் முனுசாமி.
“சாயங்காலம் கல்கத்தா ஸார் வேலை முடிச்சவுடனே வண்டியோட நேரா நீங்க ஆபீசுக்கு வாங்க. நான் இருப்பேன்.”
“சரி சார்! வணக்கம்.”
அங்கேயே நடைபாதையில் அமர்ந்து மாத நாவலில் மூழ்கினார். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். செல்பேசி ஒலித்தது. கல்கத்தா சார்தான் !
ஓடிச்சென்று கார்க் கதவை திறந்து நின்றார். வீட்டுக் காவலர் வாசல் கதவு திறந்து வணங்கினார். வேணுகோபால் வெளியே வந்தார். காவலரின் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல் காரில் அமர்ந்தார் .
“ராயப்பேட்டை இ ஏ க்குப் போ!”
போனார்கள். கூட்டம் அதிகம் இல்லை. திறந்த வெளியிலேயே இடம் கிடைத்தது. நிறுத்தினார். ஒன்றும் சொல்லாமல் வேணுகோபால் இறங்கிச் சென்றார். காரின் அருகிலேயே தவமிருந்தார் முனுசாமி.
ஒரு மணி நேரம் ஆகி இருக்கும். மாலை மணி ஐந்து . வேணுகோபால் வந்தார். காரில் ஏறிக்கொண்டார். வாங்கி வந்த பொருள்களையும் கைப் பையையும் தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.
“கெஸ்ட் ஹவுஸ் போ!”
விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர். முனுசாமி வண்டியை நிறுத்தி, இறங்கி வேணுகோபாலுக்குக் கதவு திறந்தார். அதிகாரி இறங்கினார்.
நான் கொண்டு வரட்டுமா சார்?”
“நோ. நீ போலாம் …”
“நாளைக்கு சா“ர்?”
பதிலேதும் சொல்லாமல் பொருள்களுடன் வாயிற் படிகளில் ஏறிச் சென்றார் வேணுகோபால்.
***
வரண்டு இருந்த தொண்டையைச் செருமிக் கொண்டு எச்சிலை விழுங்கினார் முனுசாமி.
‘டீ குடிச்சா தேவலாம் … வேணாம். ஆபிஸ் கிட்ட போய்க் குடிச்சுக்கலாம். சாம்பசிவம் சார் வரச் சொல்லி இருக்காரே… ’
***
அலுவலகத்திற்குச் சென்று காரை நிறுத்தினார். பணி செய்த பறவைகள் எல்லாம் பறந்து விட்டன. வெறிச்சோடிக் கிடந்தது வளாகம். டிக்கியில் இருந்து தனது பையை எடுத்துக் கொண்டார். மேலதிகாரியின் அறைக்குச் சென்றார்.
உள்ளே மேலதிகாரி சாம்பசிவமும் மேலாளரும் மட்டுமே இருந்தனர் .
“வணக்கம் சார்!”
“யெஸ்… அங்கே ஹெட் ஆபீசிலே என்ன ஆச்சு முனுசாமி? … நீங்க பொறுப்பானவர்ன்னுதானே உங்களை அனுப்பிச்சேன். நீங்க பாட்டுக்குப் பொறுப்பில்லாம எங்கேயோ போயிட்டீங்களாம்?…”
“ஐயா ! கேன்டீன்லே பால் காய லேட் ஆகுதுன்னு டீயக் கூடக் குடிக்காம, பாத்ரூம் போயிட்டு வந்தேன்… பத்து நிமிஷத்துல திரும்பி வந்துட்டேன் ஐயா!”
“ப்ச… ரவிச்சந்திரன் சார் போன் போட்டுக் கத்து கத்துன்னு கத்திட்டாரு … இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர்…”
நெருப்பை மிதித்தவரானார் முனுசாமி.
“ஐயோ ! என்னங்கையா!”
“ஒன்னும் சொல்ல முடியல; செய்ய முடியலை. ஹெட் ஆபீசில் இருந்து டைரக்டர் ரவிச்சந்திரன் சார் சொல்லிட்டார். நான் பேசிப் பார்த்தேன்; அவர் கேட்கலை. வேற வழியில்லை.”
“ஐயா, நான் எந்தத் தப்பும் பண்ணலையே …”
“இந்தாங்க புடிங்க ; கையெழுத்துப் போடுங்க.”
“நான் என்னய்யா செய்வேன் – நகல் ஆணையில் கையெழுத்துப் போட்டுக் கொண்டே பேசினார் முனுசாமி.
“நாலு நாள் கழிச்சு வாங்க, ஏதாவது பார்க்கலாம்…”
சாம்பசிவத்தின் குரலும் தழுதழுத்தது.
முனுசாமி சட்டைப் பையில் இருந்து கார் சாவியை எடுத்து மேசையில் வைத்தார். தற்காலிக வேலை நீக்க ஆணை நகலில் கையெழுத்து இட்டு சாம்பசிவத்திடம் கொடுத்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட பணி நீக்க ஆணையைச் சுருட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கலங்கிய கண்களுடன் இருவரையும் வணங்கி விட்டுத் தளர் நடையில் ஒடுங்கியபடி வெளியேறினார் முனுசாமி.
இருண்ட வானத்தில் மகள் லட்சுமியின் முகம் விஸ்வரூபம் எடுத்தது தொலைவில்
*****


