விஜயநகரப்பேரரசு-2

ராஜராஜ சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜராஜன் என்று வந்தது போல, “ஹரிஹர புக்கர்” இருவரின் வாரிசுகளும் இரண்டாம் ஹரிஹரன், இரண்டாம் புக்கர் என்று தொடர்ந்தனர். அந்தக் காலத்தில், சோழனுக்குப் பகையாக பாண்டியனிருந்தான். பல்லவனுக்குப் பகையாக சாளுக்கியனிருந்தான். அது போல, விஜயநகர மன்னர்களுக்குப் பகையாக பாமினி சுல்தான்கள் இருந்தனர். பகைகளும், போர்களுமே சரித்திரம் என்று ஆனபின், வேறு எதைச் சொல்வது? கதை தொடர்கிறது.
கி.பி. 1379: ‘முதலாம் புக்க ராயர்’ காலமானான். புக்கரின் மகன் ‘இரண்டாம் ஹரிஹர ராயர்’ அரியணையில் அமர்ந்தான். தனக்குத் தானே அவன் புதிய பட்டங்களைச் சூட்டிக்கொண்டான்: “ஸ்ரீ மகாராஜாதிராஜ! ராஜபரமேஸ்வர! சர்வலோக சரண்ய!” இப்படி பல பட்டங்கள்! இருபது ஆண்டுகள், போர் எதுவுமின்றி, நாடு அமைதியாக இருந்தது. வடக்கே குல்பர்காவைத் தலைநகராகக் கொண்ட பாமினி சுல்தானகத்தில் நடந்தவற்றைப் பார்ப்போம்.
பாமினி சுல்தான் இரண்டாம் முகமது மறைந்தான். பிறகு, அவனது பதினேழு வயது மூத்த மகன் கியாஸ்-உத்-தீன் அரியணை ஏறினான். ஒரு துருக்கிய அடிமை, ஒரு விருந்தின் போது இளம் சுல்தானைத் தந்திரமாகச் சிறைபிடித்து, கொடூரமான பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஊசியால் சுல்தானின் இரு கண்களையும் குத்திக் குருடாக்கினான்! சுல்தானின் ஆட்சி, வெறும் ஒரு மாதத்தில் முடிந்தது. அதன்பின் அவனது தம்பி ஷம்ஸ்-உத்-தீன் பொம்மை சுல்தானாக அமர்த்தப்பட்டான். ஐந்து மாதங்கள் கழித்து, மறைந்த சுல்தான் தாவூத்தின் இரண்டாவது மகனான ஃபிரோஸ் கான், தனது தம்பி அகமது கானுடன் சேர்ந்து, தலைநகரைக் கைப்பற்றினான். அவன் முதலில் செய்த காரியத்தை நீங்கள் ஊகித்திருக்கக் கூடும். ஷம்ஸ்-உத்-தீனின் கண்களைப் பறித்து சிறையிலடைத்தான். கி.பி. 1397 நவம்பர், சுல்தான் ஃபிரோஸ் ஷா பாமினி என்ற பெயருடன் அரியணை ஏறினான்.
விஜயநகரத்தின் மன்னன் இரண்டாம் ஹரிஹரர் அப்போது வயது முதிர்ந்திருந்தான். அவனது மூத்த மகன் இரண்டாம் புக்க ராயர், அவனது இளம் மகனும், களம் காணத் துடித்தனர். கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட ராய்ச்சூர் மற்றும் முட்கல் கோட்டைகள் எப்போதுமே இரு அரசுகளுக்கும் இடையே தீராத பகைக்குரிய நிலப்பகுதியாக இருந்துவந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பாமினி வசமான அந்தப் பகுதிகளை மீட்டெடுக்க இதுவே சரியான சமயம் என்று புக்கர் கருதினான். இங்கு, ‘பாகுபலி’ போன்ற ஒரு திரைக்கதையை சரித்திரம் காட்டுகிறது.
கி.பி. 1398: புக்க ராயர், முப்பது ஆயிரம் குதிரைப்படையுடனும், பெரிய காலாட்படையுடனும் வடதிசை நோக்கிப் புறப்பட்டான். அவனுடன் அவனது மகனும் ஒரு தளபதியாகச் சென்றான். விஜயநகரப் படைகள் கிருஷ்ணா நதியின் தென்கரையை அடைந்தன. குல்பர்காவில் இந்தச் சேதி கேட்ட சுல்தான் ஃபிரோஸ் ஷா, உடனே போருக்குப் புறப்பட்டான். தன் படைகளுடன் தெற்கு நோக்கி விரைந்தான். நதிக்கரையை அடைந்த இரு படைகளுக்கும் இடையே கிருஷ்ணா நதி இருந்தது. கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தென்கரையில் புக்க ராயர் தன் பெரும் பாசறையை அமைத்திருந்தான். நதியின் அனைத்துப் படகுத் துறைகளிலும், ஆழம் குறைந்த பகுதிகளிலும் விஜயநகரத்தின் வில்லாளிகளும் வேல் ஏந்திய காலாட்படைகளும், பலத்த பாதுகாப்பு அரண்களை அமைத்துக் காவல் காத்தனர். வடகரையில் வந்து நின்ற பாமினிப் படைகளால் மறுகரைக்கு ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.
இரவு சூழ்ந்தது. சுல்தான் ஃபிரோஸ் ஷா தன் தலைமைத் தளபதிகள், அமீர்களை அழைத்து மந்திராலோசனை செய்தான். “தளபதிகளே! மறுகரையில் பகைவர்களின் படை, நதியை அரணாகக் கொண்டு நிற்கிறது. இந்த வெள்ளத்தைக் கடக்க முயன்றால் நமது வீரர்கள் அம்புகளுக்கு இரையாவார்கள். என்ன செய்யலாம்?” என்று சுல்தான் கவலையுடன் வினவினான். தளபதிகள் ஒவ்வொருவரும் ஒரு யோசனை கூறினர்; ஆனால் எதுவும் நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றவில்லை. அப்போது கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது: “மன்னா! தங்கள் அனுமதி கிடைத்தால், நான் ஒரு சிறிய குழுவுடன் நதியைக் கடந்து சென்று, அந்த விஜயநகர அரசனை அல்லது அவனது மகனை அவனது சொந்தப் பாசறையிலேயே தீர்த்துக்கட்டிவிட்டு வருகிறேன்!”. அனைவரின் பார்வையும் அந்தக் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியது. அவ்வாறு பேசியவன் காஜி சிராஜ் என்ற படைத்தலைவன். சுல்தான் வியப்புடன், “சிராஜ்! ஆயிரக்கணக்கான எதிரிகள் சூழ்ந்திருக்கும் பாசறைக்குள் நீ எவ்வாறு நுழைவாய்? வெள்ளத்தை எப்படிக் கடப்பாய்?” என்று கேட்டான்.
சிராஜ் வஞ்சகப் புன்னகையுடன் தன் திட்டத்தை விவரித்தான்: “சுல்தான்! நாம் பகிரங்கமாகப் போரிட்டு அவர்களை வெல்ல முடியாது. ஆனால் இந்துக்கள் கொண்டாட்டப் பிரியர்கள். போர்க்களத்திலும் ஆடலும் பாடலும் அவர்களைச் சுற்றிலும் இருக்கும். ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு இருக்கும். நான், எனது ஏழு தோழர்களுடன், துறவிகள் போல வேடமிட்டு நதியைக் கடப்பேன். எதிரியின் பாசறையில் உள்ள நாட்டியப் பெண்கள் குடியிருப்புக்குள் நுழைந்து, எவ்வாறாவது இளவரசனின் கூடாரத்திற்குள் செல்வேன். அங்கு என் வேலை முடிந்ததும், பாசறையில் பெருங்குழப்பம் வெடிக்கும். நள்ளிரவில், அந்தக் குழப்பத்தில், நமது படைகள் நதியைக் கடந்து தாக்கினால், வெற்றி நமது!”
ஃபிரோஸ் ஷா மகிழ்ந்தான். உடனடியாக நூற்றுக்கணக்கான தோல் மூடிய மூங்கில் கூடைப் பரிசல்கள் இரகசியமாகத் தயார் செய்யப்பட்டன. காஜி சிராஜ், தன் ஏழு தோழர்களுடன், பரதேசித் துறவிகளைப் போல உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்து அந்தத் தோல் பரிசலில் கிருஷ்ணா நதியைக் கடந்து, இருளில், தென்கரைக்கு நகர்ந்தான்.
விஜயநகரத்தின் பாசறை ஒரு தற்காலிக நகரத்தைப் போலக் காட்சியளித்தது. கடைவீதிகள், பட்டறைகள், கூடாரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. பாசறையின் ஒரு பகுதியில், படைவீரர்களையும் பிரபுக்களையும் மகிழ்விப்பதற்காக வந்திருந்த நாட்டிய மங்கையரும், கணிகையரும் தங்கியிருந்த கூடாரங்கள் அமைந்திருந்தன. காஜி சிராஜ், தன் தோழர்களுடன் அந்தக் கணிகையர் பகுதிக்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு நாட்டியப் பெண்ணின் கூடார வாசலில் நின்றுகொண்டு, அவளது அழகில் பித்துப் பிடித்தவனைப் போல நாடகமாடினான். அந்தப் பெண், ஆடை ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். சிராஜை ஏளனமாகப் பார்த்து, “விலகிப் போ பரதேசியே! இன்றிரவு விஜயநகர இளவரசனின் கூடாரத்தில் மாபெரும் கலை விருந்து நடக்கிறது. நான் அங்கே ஆடச் செல்ல வேண்டும். உன்னை என்னுடன் அழைத்துச் செல்லவும் முடியாது. அங்கே இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக்காரர்களுக்கும் மட்டுமே அனுமதி!” என்று சொன்னாள்.
சிராஜ், “பெண்ணே! உன் கையில் இருக்கும் அந்த ‘முந்தல்’ (Mundal – நரம்பு இசைக்கருவி) வாத்தியத்தை என்னிடம் கொடு. நான் மீட்டுவதைப் பார்!” என்றான். அவள் அலட்சியமாகத் தன் இசைக்கருவியை அவனிடம் வீசினாள். ஆனால், சிராஜ் அதில் வாசித்த அந்த நாதத்தைக் கேட்டு அந்த நாட்டியப் பெண் மெய்சிலிர்த்துப் போனாள். “அற்புதக் கலைஞனே! நீ என்னுடன் வா. இளவரசர் உனக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவார்!” என்று கூறி, அவனைத் தன் குழுவுடன் சேர்த்துக்கொண்டாள்.
சிராஜும் அவனது தோழர்களும் தங்களது உடைகளுக்குள் விஷம் தோய்த்த கூரிய குறுவாள்களை மறைத்து வைத்துக்கொண்டு, முகத்தில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு புறப்பட்டனர். பாசறையின் நடுவில், கூடாரத்தில், பஞ்சணையில், இளவரசன் அமர்ந்திருந்தான். விளக்குகளின் பொன்னொளியில் ரத்தினங்களும், நவமணிகளும் மின்னின. சுற்றிலும் தளபதிகளும் பிரபுக்களும் மது அருந்தி உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தனர். பல நாட்டியக் குழுக்கள் வரிசையாக வந்து ஆடிப் பாடி இளவரசரை மகிழ்வித்தன. நள்ளிரவு தாண்டியது. மதுவின் மயக்கத்தால் அவையிலிருந்த பலரின் கண்களும் சொக்கின. அந்த நாட்டியப் பெண், இளவரசன் முன் வந்து தலைவணங்கி, “இளவரசே! தக்காணத்திலேயே இணையற்ற ஒரு வாள் நடனக் கலைஞனை அழைத்து வந்திருக்கிறேன்; தங்கள் உத்தரவு வேண்டும்” என்றாள். இளவரசனும் கையசைத்து இசைவு தந்தான். கூடாரத்தின் திரை விலகியது. பெண்களைப் போலப் பட்டாடைகளை உடுத்திக்கொண்டு, முகத்தில் ஒய்யாரப் புன்னகையுடனும் நளினமான அசைவுகளுடனும் காஜி சிராஜும் அவனது தோழன் ஒருவனும் உள்ளே நுழைந்தனர். சிராஜ் தன் கையிலிருந்த முந்தலை லாவகமாக மீட்டினான். பெண்ணைப் போலத் தன் இமைகளை அசைத்து அபிநயம் பிடித்தான். அவனது நடனத்தைக் கண்டு மயங்கிய இளவரசன், தன்னை மறந்து, கைதட்டி ரசித்தான்.
திடீரென, இசையின் வேகம் அதிகரித்தது. தாளத்திற்கு ஏற்ப, சிராஜும் அவனது தோழனும் தங்களது ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த இரண்டு பளபளக்கும் குறுவாள்களை உருவினர்! முன்னும் பின்னுமாகச் சுழன்று, காற்றில் வாள்களை மின்னல் வேகத்தில் சுழற்றிப் பல வித்தைகளைக் காட்டினர். இளவரசரும் தளபதிகளும் வியப்பின் உச்சிக்கே சென்று மெய்மறந்து நின்றனர். அடுத்த கணம் —கண்ணிமைக்கும் நேரத்தில், சுழன்று ஆடிக்கொண்டிருந்த சிராஜும் அவனது தோழனும் மின்னல் வேகத்தில், இளவரசனின் மார்பில் தங்களது இரு குறுவாள்களையும் ஆழமாகப் பாய்ச்சினர்! குருதி பீறிட்டது! இளவரசன் சாய்ந்தான்!
அருகிலிருந்த தளபதிகள் சுதாரிப்பதற்குள், கூடாரத்திற்கு வெளியே காத்திருந்த சிராஜின் மற்ற தோழர்கள் பட்டுத் திரைகளை வாள்களால் கிழித்துக்கொண்டு உள்ளே பாய்ந்தனர்! மதுமயக்கத்தில் இருந்த மற்ற பிரபுக்களையும் அவர்கள் வெட்டி வீழ்த்தினர். சிராஜ், கூடாரத்தில் எரிந்துகொண்டிருந்த அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, கிழிந்த திரையின் வழியாக இருளுக்குள் பாய்ந்து பாசறைப் பெருங்கூட்டத்தோடு கலந்தான்.
“இளவரசன் கொல்லப்பட்டான்!” என்ற மரண ஓலம் பாசறையெங்கும் காரிருளில் காட்டுத்தீயைப் போலப் பரவியது. ‘நடந்தது என்ன’ என்பது யாருக்கும் புரியவில்லை. “சுல்தான் நதியைக் கடந்துவிட்டான்!” என்று சிலர் கத்தினர். தளபதிகள் தங்கள் கூடாரங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதற்கிடையில், நதிக்கரையில், திட்டமிட்டபடி காத்திருந்த நான்கு ஆயிரம் பாமினி வீரர்கள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த தோல் பரிசல்களிலும் மிதவைகளிலும் ஏறி அமைதியாக நதியைக் கடந்தனர். பாசறையில் எழுந்த அலறலையும் பீதியையும் கண்டு, துறைகளைக் காவல் காத்து நின்ற விஜயநகரக் காலாட்படை நிலைகுலைந்து ஓடியது.
சூரியன் உதிக்கும் வேளையில், சுல்தான் ஃபிரோஸ் ஷா தன் முழுக் குதிரைப்படையுடனும் காலாட்படையுடனும் நதியைக் கடந்தான். நிலைகுலைந்து கிடந்த விஜயநகரப் பாசறையின் மீது இடிபோல் பாய்ந்தான்! மகன் நெஞ்சில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடப்பதை இரண்டாம் புக்க ராயர் கண்டான். மகனின் உடலைக் கைகளில் எடுத்துக்கொண்டு, எஞ்சிய படைகளுடன் தலைநகர் விஜயநகரத்தை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கினான். பாமினிப் படைகள், பின்வாங்கிய வீரர்களை வேட்டையாடின. பாதையெங்கும் உடல்கள் குவிந்தன; பாசறையில் இருந்த கணக்கிலடங்காப் பொன்னும் பொருளும் சுல்தானின் கைவசமாயிற்று.
தன் மகனின் உடலோடு விஜயநகரத்தை அடைந்த புக்க ராயர், நகரின் கோட்டை மதில்களுக்குப் பின்னால் படைகளுடன் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டான். சுல்தான் ஃபிரோஸ் ஷா, விஜயநகரத்தின் எல்லைவரை வந்து பாசறை அமைத்தான். விஜயநகரத்தின் தெற்கே அமைந்திருந்த செழிப்பான கிராமங்களையும் நகரங்களையும் சூறையாடினான். பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிறைபிடித்தான். அவர்களைக் குல்பர்காவுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்ல ஆயத்தங்கள் நடந்தன. இச்செய்தியைக் கேட்டு விஜயநகர மக்கள் கதறினர். சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் முதிய பேரரசன் இரண்டாம் ஹரிஹரரின் கால்களில் விழுந்து கண்ணீர் வடித்தனர்: “அரசே! நமது செல்வங்கள் போனாலும் பரவாயில்லை; நமது குலப் பெண்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் எதிரியிடமிருந்து காப்பாற்றுங்கள்!” என்று கதறி அழுதனர். ஹரிஹரரின் உள்ளம் உருகியது. சுல்தானிடம் தூதுவர்கள் அனுப்பப்பட்டனர். சுல்தான் ஃபிரோஸ் ஷா நிபந்தனையிட்டான்: “கைதிகளை விடுவிக்க, பத்து லட்சம் பொற்காசுகள் பிணைத்தொகையாக வழங்கப்பட வேண்டும்!”. ஹரிஹரர் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, அரசுக் கருவூலத்திலிருந்து பத்து லட்சம் பொற்காசுகளை உடனே வழங்கி கைதிகளை மீட்டான். ஓர் அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. சில மாதங்களிலேயே, இரண்டாம் ஹரிஹர ராயர் மரணமடைந்தான். அவனது மறைவுக்குப் பிறகு, அவனது மூத்த மகன் இரண்டாம் புக்க ராயர் விஜயநகரத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான். இரண்டாம் புக்க ராயர்,கி.பி. 1399 முதல் 1406 வரை ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
மகனைப் பறிகொடுத்த சோகத்திலும், இரண்டாம் புக்க ராயர், விஜயநகரத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினான். பாமினிப் படைகள் மீண்டும் தலைநகரை நெருங்காதவாறு அரண்களைப் பலப்படுத்தினான். அக்காலத்தில் விஜயநகரத்தின் சமவெளிப் பகுதிகள் நீரின்றி வறண்டு கிடந்தன. இரண்டாம் புக்கர், துங்கபத்திரை நதியின் குறுக்கே பிரம்மாண்டமான கருங்கல் அணை ஒன்றைக் கட்டினான்! அங்கிருந்து தண்ணீரைத் தலைநகருக்குக் கொண்டுவருவதற்காக, மலைகளின் அடிவாரத்தில் இருந்த பாறைகளைக் குடைந்து, பதினைந்து காதம் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான நீர்ப்பாசனக் கால்வாயை உருவாக்கினான்! அந்தக் கால்வாய், இடைக்கால இந்தியாவின் ஈடு இணையற்ற பொறியியல் சாதனையாக நிலைத்து நிற்கிறது.
பாமினி சுல்தானுக்கு வழங்கப்பட்டு வந்த திறைப் பணத்தை நிறுத்தினான். குஜராத், மாளவம் போன்ற பிற அரசுகளின் ஆதரவோடு சுல்தானைப் புறக்கணித்தான். நான்கு ஆண்டுகள் திறை வராதபோதும், விஜயநகரத்தின் வலிமையைக் கண்டு அஞ்சிய ஃபிரோஸ் ஷா போரிடத் துணியாமல் இருந்தான். இரண்டாம் புக்க ராயன் கி.பி.1406 இயற்கை எய்தினான். அவனுக்குப் பின், அவன் மகன் முதலாம் தேவராயர் விஜயநகரத்தின் புதிய மன்னனாகப் பொறுப்பேற்றான்.
முதலாம் தேவ ராயர் அரியணை ஏறியதுடன், விஜயநகர வரலாற்றில் காதல், வஞ்சகம் மற்றும் பெரும் போர்கள் நிறைந்த மற்றொரு பரபரப்பான புதிய நாடகம் நடந்தது. அதைப்பற்றி சரித்திரம் வரிந்து கட்டிக்கொண்டு பேசும்.
