புத்தகம் : அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025 – பரிசுக் கதைகள் முழுத்தொகுப்பு

தொகுப்பாசிரியர்:  இராய செல்லப்பா

பதிப்பகம்: குவிகம்

பக்கங்கள் : 378

விலை : ரூ. 350

 தன் அன்புத் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் யக்யஸ்வாமி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் எழுத்தாளர் இராய செல்லப்பா அவர்களால் 2024 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய தமிழ்ச் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு, பல எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படுவதும், பரிசு பெற்ற கதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவதும் அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக குவிகத்தில் இணைந்து செயல்படும் நண்பர்களுக்கும் தெரிந்த விஷயமே.

   அவ்வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 35 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு இந்நூல்.

   அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு அறக்கட்டளை சார்பில் இந்நூலை குவிகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது என்பதையும் அறிந்திருப்போம்.

   2026 க்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டு, பரிசு பெற்ற சிறுகதைகளும் அடுத்த தொகுப்பில் வந்துவிட்டன.

   2025 தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, இந்தப் புத்தகத்தை வாங்கி வந்தேன். ஆனால், இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் படித்து முடித்தேன். பெட்டர் லேட் தேன் நெவர் !

   முதல் பரிசு பெற்ற கதைகள், இரண்டாம் பரிசு பெற்ற கதைகள், மூன்றாம் பரிசுக் கதைகள் என்று தரம் பிரித்து அதே வரிசையில் நூலில் இடம்பெறச் செய்திருக்கிறார் இராய செல்லப்பா. கதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கும்போதே அந்தத் தரவரிசை சரியாகத்தான் இருக்கிறது என்று நம்மை எண்ண வைக்கிறது. கதைகளை மதிப்பீடு செய்தவர்கள் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.

   நூலின் தொடக்கத்திலேயே வயது வாரி ஆண், பெண் எழுத்தாளர்கள் விவரம் என்ற அட்டவணையை வெளியிட்டு இருக்கிறார் தொகுப்பாசிரியர். 323 பேர் கதைகளை எழுதித் தள்ளியிருக்கிறார்கள். 17 வயது இளைஞர்கள் தொடங்கி நூறை எட்டுபவர்களும் பங்கேற்றிருக்கும் பெருமைமிகு முயற்சியின் தொகுப்பு இது.

   ஒவ்வொரு கதையும் மெதுவாகப் படித்து ரசிக்க வேண்டிய தரத்தில் இருக்கிறது. பலதரப்பட்ட கருக்கள். வித்தியாசமான எழுத்து நடைகள்.

    இராய செல்லப்பாவின் அயராத உழைப்பும், முயற்சியும், முன்னெடுப்பும் போற்றத்தக்கது.

   நூலைப் படித்து மகிழுங்கள்.

   சிறுகதை மழையில் நனைந்து மகிழுங்கள் நண்பர்களே