நூல் 6

என்னைப்போல் துணி நெய்ய முடியுமா?

லிடியா நாட்டில் (இன்றைய துருக்கி)  அரக்னே என்ற அழகி  வாழ்ந்து வந்தாள். ஆடைகள்  நெய்வதில்  அவளுக்கு  இணை  யாரும் இல்லை.   அவள் நெய்த துணிகள் அவ்வளவு அழகாக இருக்கும்.  அந்த நாட்டில் அனைத்து மக்களும்  அவளது கலைத் திறமையைக் கொண்டாடினார்கள். அவளுடைய புகழ்  பல நாடுகளுக்குப் பரவியது.

புகழ் அதிகரிக்க அவளுக்குக் கர்வமும் அதிகரித்தது.  அது  ஒரு சமயம் எல்லை மீறியது.  ‘கலைகளின் தெய்வமான மினர்வா தேவி என்னுடன் துணி  நெய்வதில் போட்டிக்கு வந்தால்  கூட, தோற்றுத்தான் போவாள். என்னை  வெல்ல  அவளாலும் முடியாது; அவளைப் படைத்த இறைவானாலும்  முடியாது  என்று மிகவும் திமிராகப் பேசினாள். அப்போது வானத்தில் உள்ள தேவர்களும் அவள் மீது கோபப்பட்டனர்.

கலைகளின் அதிபதியான மினர்வா தேவிக்கு அரக்னேயின் கர்வத்தை அடக்கவேண்டும் என்று  தோன்றியது. மினர்வா தேவி  ஒரு முதிய பெண் வேடத்தில் அரக்னே இருக்கும் இடத்திற்கு வந்தாள். முதலில் அரக்னேவுக்கு    அன்பாகப் புத்திமதி கூறினாள்.

“அழகிய பெண்ணே! ஆடைகள் நெய்வதிலும் வடிவமைப்பதிலும் உன் திறமையைப் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் தெய்வங்களின் திறமையைக் குறைவாக மதிப்பிட்டுப் பேசாதே. உனக்கு அது அழகல்ல.  உன் திறமைக்காகப் பெருமைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் கர்வம்  கொள்ளாதே. மினர்வாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்” என்றாள்.

அரக்னே அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள். .

“நான் ஏன்  மன்னிப்புக்  கேட்கவேண்டும்? அந்த மினர்வாவா என்னுடன் போட்டிக்கு வரட்டும். அப்போது புரிந்துகொள்வாள் என் திறமையை “என்று ஏகத்தாளமாகக் கூறினாள் அரக்னே,.

உடனே மினர்வா  தன் உண்மையான தெய்வீக உருவத்தை வெளிப்படுத்தினாள். ‘நான் போட்டிக்குத் தயார்’ என்றாள்.

இருவருக்குமிடையே போட்டி தொடங்கியது.

இருவரும் தங்கள் நெசவுத் தறிகளில் அமர்ந்து அழகிய துணிகளை நெய்யத் தொடங்கினர். மினர்வா தன் துணியில் தெய்வங்களின் பெருமைகளை மிக அழகாகச் சித்திரித்தாள். அரக்னே தன் துணியில் தெய்வங்கள் மனிதர்களிடம் செய்த தவறுகளையும், குறிப்பாக அவர்கள் பல்வேறு வேடங்களில் வந்து பெண்களை ஏமாற்றிய கதைகளையும் நுணுக்கமாக நெய்தாள்.

அரக்னேயின் கைத்திறன் உண்மையிலேயே வியக்கத்தக்கதாக இருந்தது. அவள் நெய்த துணியில் எந்தக் குறையும் காண முடியவில்லை. மினர்வாவுக்குக்கூட அவளுடைய கலைத்திறனை மறுக்க முடியவில்லை. ஆனால் தெய்வங்களை இழிவுபடுத்திய அவளது எண்ணம்  மினர்வாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

கோபத்தில் மினர்வா அந்தத் துணியைக் கிழித்தெறிந்தாள்.  அவமானத்தைத்  தாங்க முடியாத அரக்னே தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். மினர்வா அவளைத் தடுத்து, “நீ இனி எப்போதும் நெய்துகொண்டே இரு; ஆனால் மனித உருவில் அல்ல!” என்று சபித்தாள்.

அரக்னே சிலந்தியாக மாறினாள். இன்றும் சிலந்தி தன் வலையை நுணுக்கமாக நெய்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அரக்னேயின் கதை நினைவுக்கு வருகிறது.

பாறை  ஏன் கண்ணீர் சிந்துகிறது?

தீப்ஸ் நகரத்தின் அரசி நியோபி. அவளுக்கு ஏழு மகன்களும் ஏழு மகள்களும் இருந்தனர். அழகிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய அவர்கள் அவளுக்குப் பெருமை சேர்த்தனர்.

அந்த நகரில் லேட்டோ என்ற தெய்வத்திற்கானத்  திருவிழா  நடைபெற்றது. லேட்டோவுக்கு இரண்டு குழந்தைகள் அப்போலோவும் டயானாவும். அந்த விழாவில் மக்கள் லேட்டோவை வழிபடத் தொடங்கினர்.

இதைக் கண்ட நியோபி கோபமடைந்தாள்.

“எனக்கு பதினான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் லேட்டோவுக்கு இரண்டே குழந்தைகள்! அவளைவிட நான் எவ்வளவு உயர்ந்தவள்! எனவே என்னைத்தான் நீங்கள் வழிபட வேண்டும்!” என்று தன்னாட்டு மக்களுக்கு உத்தரவிட்டாள். 

லேட்டோ தேவியின்   மனம் புண்பட்டது.  அப்போலோவையும் டயானாவையும் அழைத்து, அரசியின்  ஆணவத்துக்குத் தக்க பதிலடி கொடுக்குமாறு கூறினாள்.

அப்போலோவும் டயானாவும் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு அரசியின்  குழந்தைகளைத் தாக்கினர். முதலில் வேட்டையாடச் சென்றிருந்த மகன்கள் அம்புகளுக்கு இரையாகினர். தன் மகன்கள் ஒவ்வொருவராக விழுவதைக் கண்டு அரசி கதறினாள். அவர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்தாள்.

மகள்களும் தப்பவில்லை. அவர்களும் அம்புகளால் வீழ்ந்தனர். ஒரே ஒரு மகள் மட்டும் தாயின் மடியில் உயிருடன் இருந்தாள். அவளையும் அரசியால் காப்பாற்ற முடியவில்லை.

பதினான்கு குழந்தைகளையும் இழந்த  அரசி கற்சிலையாக மாறினாள். ஆனாலும் அவளது  கண்களிலிருந்து கண்ணீர்  தொடர்ந்து வழிந்தது. இறுதியில் அவள் பாறையாக மாறினாள். ஆனால் அந்தப் பாறையிலிருந்தும் நீர் தொடர்ந்து வடிந்துகொண்டே இருந்தது.

 

மகனைக் கொன்ற தாய்

மன்னன் ஓனியஸ், அறுவடைத் திருவிழாவில் எல்லாத் தெய்வங்களுக்கும் காணிக்கை செலுத்தினான்; ஆனால் ஆர்ட்டெமிஸை மறந்துவிட்டான். கோபமடைந்த அவள், நாட்டை அழிக்கப் பயங்கரமான காட்டுப் பன்றியை அனுப்பினாள்.

அந்தக் கொடிய விலங்கைக்  கொன்று நாட்டைக் காப்பாற்றுமாறு  அரசன் அனைத்து  வீரர்களையும் வேண்டிக்கொண்டான். 

அந்நாட்டில்   மெலியாஜர் என்ற வீரன்  இருந்தான். வேட்டையாடுவதில் வல்லவனான அவன்,  அந்தக் காட்டுப் பன்றியை வேட்டையாட முன் வந்தான். 

அவன், வீரர் பலர் நிறைந்த கூட்டத்துடன் காட்டுபன்றியை வேட்டையாடச்  சென்றான். அனைவரும்  இணைந்து அந்தப் பன்றியை எதிர்த்தனர். அவர்களுள் அட்லாண்டா என்ற வீராங்கனையும் இருந்தாள். அவள் முதலில் எய்த அம்புதான் பன்றியைத் தாக்கியது. பின்னர் மெலியாஜர் அதனுடன் போராடி, அதைக் கொன்றான். வெற்றியின் அடையாளமாகப் பன்றியின் தோலை அட்லாண்டாவுக்கு வழங்கினான்.

ஆனால் இந்தப் பரிசு அவனுடன்  கூட வந்த  அன்னையின் சகோதரர்களுக்குப்  பிடிக்கவில்லை.  அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின்னர் சண்டையாக மாறியது. மெலியாஜர்  கோபத்தில் தாக்கியதில்  அவர்கள் உயிரிழந்தனர்.

அவனுடைய தாய்  துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்தாள். மெலியாஜர் பிறந்தபோது, அவனுடைய உயிர் ஒரு மரக்கட்டையின் ஆயுளோடு பிணைக்கப்பட்டிருப்பதாக விதிக்கப்பட்டிருந்தது. அந்த மரக்கட்டையை அவள் பாதுகாப்பாக வைத்திருந்தாள். இப்போது மகன் தன் சகோதரர்களைக் கொன்றுவிட்டதால், கோபத்தில்   அந்த மரக்கட்டையை நெருப்பில் தூக்கிப்  போட்டாள்.

மரக்கட்டை எரிய எரிய, மெலியாஜரின் உயிரும் பிரிந்தது.

தன் செயலை உணர்ந்த தாய் துயரத்தில் துடித்தாள். தாயின் கோபம் மகனின் உயிரையே பறித்துவிட்டது!

பிள்ளைக் கறி  சமைத்த தாய்

த்ரேஸ் நாட்டின் மன்னன் தெரேயஸ், ஏதென்ஸ் மன்னனின் மகளான ப்ரோக்னேவை மணந்திருந்தான். அவர்களுக்கு இட்டிஸ் என்ற மகன் இருந்தான். ஒருநாள் ப்ரோக்னே தன் தங்கை பைலோமீலாவைப் பார்க்க விரும்பினாள். எனவே அவள் கணவன் மனைவியின் தங்கையை  அழைத்துவரச் சென்றான்.

ஆனால் பைலோமீலாவின் அழகைக் கண்ட தெரேயஸ் அவள்மீது மோகம் கொண்டான். அவளைத் தன் நாட்டுக்கு அழைத்துச் சென்ற பிறகு, அவளிடம் தவறாக நடந்துகொண்டான்.  அவள் அதனை வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளுடைய நாக்கையும் வெட்டிவிட்டான்.

பேச முடியாத பைலோமீலா, தன் துயரத்தைத் துணியில் நெய்து சித்திரமாக வெளிப்படுத்தினாள். அந்தத் துணியைத் தன் சகோதரி  அரசியிடம்  அனுப்பினாள். அதைப் பார்த்த ப்ரோக்னே தங்கைக்குக் கணவன் இழைத்த கொடுமையைக் அறிந்து அதிர்ச்சியடைந்தாள்.

கணவனின் கொடுமைக்குப் பழிவாங்க அவள் முடிவெடுத்தாள். தன் மகனைக்  கொன்று, அவனுடைய இறைச்சியைக்  கணவனுக்கு  உணவாகப் பரிமாறினாள். உணவை உண்ட பிறகுதான் அது தன் மகனின் உடல் என்பதைத் தெரேயஸ் அறிந்தான். கோபத்தில் அவன் இரு சகோதரிகளையும் கொல்லத் துரத்தினான்.

அப்போது தெய்வங்கள் ஆணையால்  அவர்கள் இருவரும்  வானம்பாடியாகவும், நைட்டிங்கேலாகவும்  மாறினார்கள்.  தெரேயஸும்  ஹூப்போ என்ற  பறவையாக மாறினான்.

இவ்வாறு மனிதர்களின் கொடுமையும் பழிவாங்கும் வெறியும் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டன.

குளத்தில் கத்தும்  தவளைகள்

ஒருமுறை லேட்டோ  என்ற தேவதை  தேவ சாபத்தால் பூமிக்கு வந்தாள். அவளுக்கு யாரும் உதவக்கூடாது என்று உத்தரவும் இருந்தது. 

அவள் தன் இரு குழந்தைகளான அப்பல்லோ மற்றும் டயானாவுடன் ஒரு காட்டுக்கு வந்தாள்.அங்கே  கடும் வெயில் அவர்களை வாட்டியது.  தாகத்தால் தவித்தபடி ஒரு குளத்தை அடைந்தாள்.  குளத்து நீரைக் குடிக்கப் போனாள். அங்கிருந்த விவசாயிகள்  அவளை  அந்தக் குளத்தில் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தனர்.  அதையும் மீறி  அவள் குளத்தில் இறங்கித் தண்ணீர் குடிக்க முயன்ற போது, அவர்கள் தண்ணீரைக் கர கர என்று  கலக்கி அவளைக் குடிக்க முடியாமல் செய்தனர்.  கோபமடைந்த லேட்டோ , “நீங்கள் மனிதர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் . இனி இந்தக் குளத்திலேயே தவளைகளாக இருந்து கத்திக் கொண்டிருங்கள்.” என்று சபித்தாள். உடனே அந்த விவசாயிகள்   தவளைகளாக மாறினர். இன்றும் தவளைகள் நீரில் வாழ்ந்து கரகரவென்று ஒலிப்பதற்குக் காரணம் இதுதான் என்று அந்தக் கதை  கூறுகிறது.

 இசைப் போட்டி

மார்ஷியாஸ் என்பவன்  புல்லாங்குழல் போன்ற இசைக்கருவியை வாசிப்பதில் வல்லவன். தன் இசைத்திறனால்   அப்போலோ தேவனையே வெல்ல முடியும் என்று சவால் விட்டான். போட்டியில் அப்போலோ வெற்றி பெற்றதால்  தோல்வியடைந்த மார்ஷியாஸை மரத்தில் கட்டி வைத்து  தோலை உரித்துக் கொன்றார்கள்.  அவனுடைய  கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து  ஓடியது. 

திறமை இருந்தாலும் அகந்தை அழிவைத் தரும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 

 

5. ஆரெத்தியூசாவின் உருமாற்றம்

ஆரெத்தியூசா என்ற அழகிய இளம்பெண், நதிக்கடவுளான அல்பியஸிடமிருந்து தப்பி ஓடினாள். தன்னைக்   காப்பாற்றும்படி டயானா தேவியிடம் வேண்டினாள். டயானா அவளைப் பனிமூட்டமாக மாற்றி மறைத்தாள். பின்னர் அவள் ஓர் ஊற்றாக மாறி நிலத்துக்குள் பாய்ந்தாள். அல்பியஸும் அவளைத் தேடி நதியாக மாறி அவளைப் பின்தொடர்ந்தான். இவ்வாறு இருவரும் நீரின் வடிவில் ஒன்றோடொன்று இணைந்ததாகப் புராணம் கூறுகிறது.

தீய எண்ணங்களின்  வெளிப்பாடு 

ஒவ்வொரு கதையிலும் மனித உணர்வுகள் எல்லை மீறும்போது வாழ்க்கை எவ்வாறு சிதைகிறது என்பதை ஓவிட் காட்டுகிறார். உருவங்கள் மாறினாலும், அந்த மாற்றங்களுக்குக் காரணமான  பொறாமை, கர்வம், கோபம், பழிவாங்கும் உணர்வு ஆகிய பல்வேறு  உணர்வுகள் நம்மிடையே இன்றும் இருக்கின்றன. 

அதுவே ஓவிடின் கதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நம்மை ஈர்ப்பதற்குக் காரணம்.