கடற்கரையில் சிரித்த நடிகை

Kumudam (Magazine) - Tamil Wiki

( முதல் இதழ்?? )

சமீப காலங்களில் ரீல்களில் சில சுவாரஸ்யமான வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள்.

உதாரணத்துக்கு.. -ஓர் எஸ்கலேட்டர் கீழேயிருந்து மேலே போய்க் கொண்டிருக்கும். மற்றொன்று மேலேயிருந்து கீழே வந்துகொண்டிருக்கும். இந்தப் பக்கம் உள்ள ஓர் ஆண் சட்டென்று அந்தப் பக்கம் உள்ள பெண்ணிடம் ஒரு பூங்கொத்தையோ பொம்மையையோ கொடுத்துவிட்டு மடமடவென்று போய்விடுவார். அவர்களால் உடனடியாக இவரை அணுக முடியாது. செய்வதறியாது திகைப்பார்.

இது போல் நான்கைந்து நபர்களிடம் கொடுக்கும்போது வீடியோ எடுத்து, “பாருங்கள். சும்மா ப்ராங்க்” என்று சிரித்தவாறு காமிராவைப் பார்த்து போஸ் கொடுப்பார்கள்.

ஒரு பெண்ணோ ஆணோ… மிகவும் பச்சையாகவும் கொச்சையாகவும் போனில் உரக்கப் பேசிக்கொண்டு வர, பக்கத்தில் உள்ள பெண்கள் சிரிப்பை அடக்க முடியாமல் மறுபுறம் திரும்பிக்கொள்ள.. இதுவும் ப்ராங்க்தான்.

இதற்கெல்லாம் முன்னோடியாக சில ஆண்டுகளுக்கு முன் டிவியில் இப்படிச் செய்தவர்கள் பிறகு டிவி கேமராவைப் பார்த்துக் குதூகலமாக தம்ஸ் அப் செய்ததைப் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

இதற்கும் முன்னோடியாகக் குமுதத்தில் நிறைய ஐடியாக்கள் செய்திருக்கிறார்கள்.

சாதாரணமாகவே, குமுதத்தின் ஐடியாக்கள் பொதுமக்களை மட்டுமன்றி சக பத்திரிகையாளர்களையும் எடிட்டர்களையும் வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதை ஈகோ இல்லாமல் அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள் (குமுதத்தைத் திட்டும் நபர்களும் அதன் புதுமை ஐடியாக்களைப் பற்றிப் பாராட்டத்தான் செய்வார்கள்) திட்டாமல் பாராட்டுபவர்களில் முதன்மையானவர் சாவி சார்.

📰 1980-களில் வெளிவந்த "விருந்து" இதழ்களின் தொகுப்பு – பகுதி 1 தமிழ் இதழியல் வரலாற்றில் தனித்துவமான அட்டைப்பட வடிவமைப்புகளாலும், கலைநயமிக்க ...இது போன்ற ஐடியாக்கள் எப்படித் தோன்றுகின்றன? ஒரு முதன்மை மூளையும் மூன்று துணை மூளைகளும் சில உப மூளைகளும் சேர்ந்து உழைப்பதன் பலன் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

எடிட்டர் எஸ் ஏ பி சாரோ, ரா கி ர சாரோ வெளிநாடு போய்விட்டு வந்தால் அங்கு பார்க்கும் புத்தகங்களையும் வாராந்திரிகளையும் மாதாந்திரிகளையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அவ்வளவு ஏன் .. இதற்காகவே பாமாஜி போன்றவர்களை மூர்மார்க்கெட் போய் அள்ளிவரச் செய்வார்கள்.

அதில் உள்ள அட்டைப் படங்களையும் சரி, உள்ளே உள்ள படங்களையும் சரி அந்தந்த சப் எடிட்டர்கள் பாதுகாத்து வைப்பார்கள். தங்கள் இதழ்களுக்கான ஐடியாக்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

அட்டைப்பட போஸ் இப்படி இருக்க வேண்டும்.. என்று ஒரு  போட்டோவை  சாம்ப்பிளுக்குக் காண்பிப்பார்கள்.

அது அனேகமாக வெளிநாட்டுப் பொருள் ஒன்றின் விளம்பரமாக இருக்கும். பிளிட்ஸ், அமெரிக்கன் டைம்ஸ், பிளேபாய் என்று பழைய இதழ்கள் குமுதம் ஆபீசில் குவிந்து கிடக்கும்.

விநோதம் என்னவென்றால் சுஜாதாவும் இதே பாணியில் யோசிப்பார் என்பது வியப்பளித்தது. அவர் குமுதம் எடிட்டராய் இருந்த காலகட்டத்தில் ஒரு கல்லூரி மாணவியின் ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் வென்ற சாதனை குறித்த பேட்டி பிரசுரமானது. சாதாரண போட்டோ பிரசுரிப்பதாக இருந்தது.  கலர்ப் பக்கத்திலா கருப்பு வெள்ளை பேஜிலா என்பது பற்றிச் சந்தேகம் இருந்ததால் என் கணவர், புகைப்பட நிபுணர் கே எஸ் அருணாசலத்திடம் இரண்டு பிரின்ட்கள் போடச் சொல்லி வாங்கி வந்தார். (ஆமாம். இப்போது மாதிரி அப்போதெல்லாம் எல்லாப் பக்கங்களும் கலரில் வராது)

அழகான பிரின்ட்டட் சில்க் சேலையில் அந்தப் பெண் சற்றே பக்கவாட்டில் பார்த்தவாறு லேசான புன்னகையுடன் இருந்த அந்த போட்டோவில், எல்லா இளம்பெண்களையும்போல ஒரு சாதாரணப் பெண் மாதிரிதான் தெரிந்தாள் என் கண்களுக்கு.

சுஜாதாவின் பார்வை நம் கண்களைப்போன்ற சாதாரணமான ஒன்றா என்ன?

“கோபாலன்.. இவங்களை அட்டைப் படத்துக்கு போடணும்யா.. இதோ இது மாதிரி போஸ் இருக்கணும். பிரைம் யூத் என்பது மி…க முக்கியம். குறிப்பாய் மாடர்ன் உடையில் இருக்கணும்” என்றார்.

இவருக்கு யோசனை. “அந்தப் பெண்ணைப் பார்த்தால் மாடர்ன் உடை போடுவாளா என்று தெரியலையே?”

“கேட்டுப் பாருங்கள். அட்லீஸ்ட் சல்வால் கமீஸ்?” என்றார் சுஜாதா.

அவர் காண்பித்த வெளிநாட்டு அட்டைப் படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் கடற்கரையில் அமர்ந்து வானம் பார்த்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். ஆபாசமற்ற உடை. அந்தச் சிரிப்பில் ஒரு நேர்த்தி இருந்தது. சரியாய்ச் சொல்ல  வேண்டுமானால் அந்தப் பெண் இயல்பாய்ச் சிரிக்கும்போது அவருக்கே தெரியாமல் எடுத்த கேண்டிட் ஷாட் மாதிரி இருந்ததே தவிர, போஸ் கொடுத்த மாதிரியே இல்லை.

“கடற்கரைப் பின்னணி என்பது அவசியமில்லை” என்று வயிற்றில் ரோஸ்மில்க் வார்த்துவிட்டார் சுஜாதா.

அந்தப் பெண் சூடிதார்தான் போட்டு போஸ் கொடுத்தார். ஆனால் இம்மி பிசகாமல் அதே போஸ். அதே மாதிரி இயல்பான சிரிப்பு.

அட்டைப் படத்தில் போடப் போகிறார்கள் என்று கமிட் செய்து கொள்ளக்கூடாது என்பது குமுதத்தின் எழுதப்படாத விதி. உள்ளே பிரசுரமாக வேண்டிய போட்டோ அதன் அழகு காரணமாக அட்டையில் வருவதும் உண்டு.. ஆப்போசிட்டாய் ஆவதும் உண்டு. எனவே எதுவும் சொல்லாமல் கலர்ப்படம் எடுத்தார் கே எஸ் ஏ.

தவிர, அட்டைக்கு என்றால் அந்தக் காலத்தில் டிரான்ஸ்பரன்ஸி என்று ஒன்று எடுப்பார்கள். அதாவது நாம் ஊடுருவிப் பார்க்கும் நெகடிவ் மாதிரியே இருக்கும்.  ஆனால் நெகடிவ்கள் மாதிரி ஆப்போசிட் நிறத்தில் இல்லாமல் ஒரிஜினல் நிறத்தில் இருக்கும். அதைப் பார்ப்பதற்கென்றெ கருவிகள் இருக்கும்.

சுஜாதா இந்தப் படத்தைப் பார்த்து சந்தோஷமாகிவிட்டார். அட்டைப்படத்தில் பிரசுரமான அந்த அழகியின் குடும்பமும், சுற்றமும், நட்பும் அதைவிட மகிழ்ந்தனர் என்று மீண்டும் மீண்டும் அவர்களிடமிருந்து வந்த போன்கால்கள் நிரூபித்தன.

இதே போல் வெளிநாட்டுத் தாள்களைக் கிழித்துக் கொடுத்து அதே மாதிரியே போட்டோ எடுப்பது குமுதத்தில் சகஜமாகிவிட்ட ஒன்று.

பழைய குமுதம் இதழ்களில், நான்கு கல்லூரி மாணவிகளின் குரூப் போட்டோ வெளியாகியிருந்தால் நாரு பேரும் நேராக கேமராவை நோக்கவே மாட்டார்கள். ஒருத்தி குனிந்து சிரிப்பாள்.  மற்றவள் அடுத்தவளைப் பார்த்தபடி அவள் தோள்மேல் கை போட்டிருப்பாள். மற்றொருத்தி அண்ணாந்து பார்ப்பாள். இப்படி ஒரு போட்டோவை நீங்கள் குமுதத்தில் பார்த்திருந்தால் அது வெளிநாட்டுப் பத்திரிகையில் வெளியான ஏதோ ஒரு போட்டோவை அடியொற்றியது என்று நிச்சயமாக நம்புங்கள்.

ஒரு முறை இது போல் வெளிநாட்டுப் பத்திரிகையில் நடிகர் ஒருவரின் குடும்ப போட்டோ வெளியாகியிருந்தது.

அத்தனைபேருமே காதலிக்க நேரமில்லை அல்லது காசேதான் கடவுளடா படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மாதிரி பிரமாதமாக வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

எடிட்டர் எஸ் ஏ பி அதை என் கணவரிடம் காண்பித்து, “மகாராஜபுரம் சந்தானம் தயாரிக்கும் இதழில் அவரின் குடும்பப் படம் இது மாதிரி வர வேண்டும்” என்று சொல்லிவிட்டார். (1992)

ஒரு குடும்பம் மொத்தத்தையும் அப்படிச் சிரிக்க வைக்க கிரேசி மோகனோ அல்லது சித்ராலயா கோபுவோ வந்தால்தான் சாத்தியம்.

ஆனால் அதை என் கணவர் கோபுவே செய்துவிட்டது இறைவன் அருள்.

சந்தானம், அவரின் மனைவி, மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆறேழுபேர் அழகாக இரண்டு வரிசைகளில் உட்கார, இவர் அடுத்தடுத்து ஜோக் சொல்ல, “நான் ரெடி என்று சொல்லிய பிறகுதான் போட்டோ எடுப்பேன்” என்று சொல்லிவிட்டு வேண்டுமென்றே அப்படிச் சொல்லாமல் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தபோதே புகைப்பட நிபுணர் படம் எடுக்க..

மைகாட்.. அப்படி ஒரு அற்புதமான குடும்ப போட்டோ.. வாய்கொள்ளாமல் அனைவரும் சிரிக்கும் போட்டோ அதுவரை குமுத்தில் வந்ததும் இல்லை.. இன்று வரை அதன் பிறகு வரவும் இல்லை. இனி வந்தால் மகிழ்வேன். அது இறைவன் அருள்.

🎼 மகாராஜபுரம் சந்தானம் — கர்நாடக இசையின் இனிமைமிகு குரல் 🎼, தமிழ் இசை உலகில் தனித்துவமான குரல், தெளிவான உச்சரிப்பு, பக்தி நிறைந்த பாடல் பாணி ஆகியவற்றால் என்றும் நினைவில் நிற்கும் பெருமகன் மகாராஜபுரம் ...சந்தானம் இஷ்யூவுக்கு வந்த கடிதங்களைவிட, அந்த அட்டைப் படத்துக்குப் பாராட்டுக் கடிதங்கள் நூற்றுக்கணக்கில் வந்தன.

“திருஷ்டி பட்டுவிடப் போகிறது,” என்று அனைவருமே குறிப்பிட்டது உண்மையாகி…

அதே ஆண்டில் ஜுன் மாதம் விழுப்புரத்துக்கு அருகில் நடந்த கார்விபத்தில் அவரும், அவர் உறவினர் ஒருவரும், பேத்தி அகிலாவும் இறந்துபோனார்கள்.

(அந்தப் பேத்தியும்  அட்டைப் படத்தில் இடம் பெற்றார்)

அவருடைய மனைவி ஐ சியூவில் கணவர் இறந்ததைக்கூட அறியாமல் பலத்த காயத்துடன் வெகுநாட்கள் இருந்த பிறகே கண்திறந்தார். பிழைத்து எழுந்தார்.

வெளிநாட்டு ஐடியாக்கள் போட்டோக்களில் மட்டுமின்றி, வேறு பல கட்டுரைகளுக்கும் வழிவகுத்த சுவாரஸ்யமான விவரம் அடுத்த  அத்தியாயத்தில்…