
- இலக்கியம், சின்னத்திரை, நூல் பதிப்பு, இதழியல் எனத் தடம் பதித்தவர் பாவை சந்திரன். பிரபல பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக இருந்து முத்திரை பதித்தவர். இவரது ‘நல்ல நிலம்’ தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்.’ஈழத்தமிழர் போராட்ட வரலாறு சிறந்த வரலாற்றுப் பதிவு நூல்.
- மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர் சி.சு.செல்லப்பா. அவரது ‘வாடிவாசல்’ குறுநாவலை மறந்துவிட முடியாது.மூன்று பாகங்களைக் கொண்ட ‘சுதந்திர தாகம்’ (சாகித்ய அகாதெமி விருது-2001) என்ற இதிகாச நாவலை 85 வயதில் எழுதி சாதனை படைத்தார்.
- எழுத்தாளர் கே.பி.நீலமணி ஒரு வயலின் வித்வான் என்பது பலருக்குத் தெரியாது. ‘புல்லின் இதழ்கள்’ அவர் எழுதிய நாவல்.சங்கீத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க படைப்பு. கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெற்றது.
- வாழ்க்கை வரலாறு நூல்கள் மூலம் கவனம் பெற்றவர் ரகமி. ‘வீரவாஞ்சி’, ‘ஆஷ் கொலை வழக்கு’, ‘கணிதமேதை ராமானுஜன்’, ‘தீரர் சத்தியமூர்த்தி’, ‘சுப்பிரமணிய சிவா’, ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ உள்ளிட்டவலை இவரது புகழ்பெற்ற வரலாற்று நூல்கள்.
- எழுத்தாளர் பூவை எஸ்.ஆறுமுகம் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. கிராமியச் சூழலில் மண்வாசனை கமழ்ந்திட எழுதுவதில் வல்லவர். ‘அன்னக்கிளி’, ‘களத்து மேடு’,’ தங்கச் சம்பா’, ‘நித்யமல்லி’ உள்ளிட்ட 28 நாவல்கள் எழுதியுள்ளார்.சிறுகதைத் தொகுப்புகளும் வந்துள்ளன.
- துங்கபத்திரை நதிச் சுழலில் சிக்கி இளம் வயதில் மறைந்த எழுத்தாளர் ஆதவன் கே.எஸ்.சுந்தரம் . இறந்த பின்னர் சாகித்ய அகாதெமி விருது (முதலில் இரவு வரும் ) அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் அவரது ஆகச் சிறந்த படைப்பு. தீபத்தில் எழுதிய’ நிழல்கள்’ சிறுகதையை பல ஆண்டுகள் கழித்து ஆனந்த விகடனுக்கு அனுப்பி அதுவும் பிரசுரமாகி கண்டனத்துக்குள்ளானார்.
- கல்கி இதழின் வெள்ளி விழா போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் ‘முள்ளும் மலரும்’. எழுதியவர் உமா சந்திரன். இயற்பெயர் பூர்ணம் ராமசந்திரன். ரஜினி நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ‘முள்ளும் மலரும்’ நாவல் திரைப்படமாக வெளிவந்தது.
- சமகால வாழ்வை கதைகளில் கிண்டலாக விமர்சித்தவர் சார்வாகனன். மருத்துவருமான இவர் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் (1964-1976) எழுதியுள்ளார்.தொழுநோயில் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரிசெய்வதில் இவர் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் உள்ளது.
- சரித்திர நாவல்கள் மூலம் கவனம் பெற்றவர் கோ.வி.மணிசேகரன். இவரது ‘குற்றால குறிஞ்சி’ நாவல் சாகித்ய அகாதெமி பரிசு (1992) பெற்றது. சமூக நாவல்களும் இவர் எழுதியுள்ளார். ‘தென்னங்கீற்று’ நாவல் தமிழ், கன்னடம் மொழிகளில் திரைப்படமாக வந்துள்ளது. பட இயக்கமும் நாவலாசிரியரே என்பது குறிப்பிடத்தக்கது.
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன் வீட்டு மாடியில் 1970-களில் காகங்கள் என்ற பெயரில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தினார். புதிய இளம் எழுத்தாளர்களுக்கு இது ஒரு களமாக அமைந்தது. ‘காகங்கள்’ என்ற பெயரில் சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. இவரது மாஸ்டர் பீஸ் நாவல்கள் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சில குறிப்புகள்..
- எழுத்தாளர் அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி. கலைமகள் நாவல் போட்டியில் (1949) இவரது முதல் நாவல் ‘மணல் வீடு’ முதல் பரிசு பெற்றது. ‘கேட்டவரம்”, ‘ஒரே ஒரு வார்த்தை’, ‘அற்ப விஷயம்’ இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள்.
- இயக்குநர் பாலசந்தர் கல்கி இதழில் ‘மூன்று முடிச்சுகள்’ என்ற கதையை எழுதினார். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிக்க பாலசந்தர் இயக்கத்தில் வந்த ‘மூன்று முடிச்சுகள்’ திரைப்படத்தின் கதைக்கும் இதற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை.
- நஷ்டப்பட்டு கொண்டு இருந்தபோதும் கணையாழி இலக்கிய இதழை நடத்தியவர் கி.கஸ்தூரி ரங்கன்.கணையாழி அடையாளம் காட்டிய எழுத்தாளர்கள் பட்டியல் நீளமானது. தில்லியில் ஆங்கிலப் பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் கி.கஸ்தூரிரங்கன். தினமணி நாளிதழ் ஆசிரியராகவும் பணிபுரிந்த இவரது அரசியல் விமர்சனக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. ‘பேய்க்கு வாழ்க்கை பட்டால் உள்ளிட்ட சமூக நாவல்களும் எழுதியுள்ளார்.
- சிறுகதை, கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, மொழிபெயர்பு என எழுத்தின் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் கு.ப.ராஜ கோபாலன்.’கண்ணன் என் கவி ‘என்ற இலக்கியத் திறனாய்வு நூலை கு.ப.ராவும் சிட்டியும் இணைந்து எழுதினர். ‘வேரோட்டம்’ அவரது முற்று பெறாத நாவல்.
- குமுதம் ஆசிரியர் குழுவில் முதன்மையான மூவர்களில் ஒருவர் புனிதன்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.வெகு இயல்பான உரையாடல்கள் இவரது சிறப்பு. ‘ஆசை முகம் மறந்து போச்சே’ ‘கொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அழகிய பெண்களின் சினேகம்’, இவர் அவரல்ல’ உள்ளிட்ட 25 நாவல்களும் எழுதியுள்ளார்.
- வரகவி அ.சுப்பிரமணிய பாரதியின் புதல்வர் ஸோமாஸ்கந்தன். இவர் ஸோமாஸ், காந்தன், விஜயம் என்ற பெயர்களிலும் எழுதியுள்ளார்.’ நிமிஷக் கதைகள்’ எழுதியதன் மூலம் வாசகர்களிடம் பிரபலமானார்.
- ‘ கண்ணீர் பூக்கள்’, தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகன் அஞ்சலி ‘கவிதைத் தொகுதிகள் மூலம் கவனம் பெற்றவர் மு.மேத்தா. ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு ‘கவிதை நூல் சாகித்ய அகாதெமி (2004 )விருது பெற்றது.ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ‘கிழித்த கோடு’, சரித்திர நாவல் ‘சோழ நிலா’ பரிசு பெற்ற படைப்புகள். திரைப்பட பாடலாசிரியராகவும் முத்திரை பதித்தவர்.
- எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையில் பிறந்தர் கனடாவில் வசிக்கிறார்.பல்வேறு நாடுகளின் பண்பாடு,முரண்,மனிதர்களை எழுத்தில் கொண்டு வந்தவர். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘அக்கா’. ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, ‘கடவுள் தொடங்கிய இடம்’ இவரது நாவல்கள்.
- தமிழ் இலக்கிய உலகைத் திரும்பி பார்க்க வைத்த எழுத்தாளர்களில் ஒருவர் தோப்பில் முஹம்மது மீரான்.தமிழில் 6 நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.மலையாளத்திலும் 2 நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘சாய்வு நாற்காலி’ நாவல் சாகித்ய அகாதெமி விருது (1997) பெற்றது.
- சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாடகம், நாவல், அறிவியல், வரலாறு என்று பலவடிவங்களில் முத்திரை பதித்தவர் வையவன். நகர்புற, நடுத்தரப் பெண்களின் பிரச்னையைப் பெண்ணியப் பார்வையில் பேசும் ‘ஆட்டோ’ சிறுகதை ஆகச் சிறந்த படைப்பு. இவரது ‘இடிபாடுகள்’ நாடகம் தொலைக்காட்சிப் படமாக வந்துள்ளது.
