The Saga of Black Gold – Anuradha

          இத்தனை புத்தகங்களை விமர்சித்ததில் நான்கோ ஐந்தோதான் ஆங்கிலத்தில் நாவல் புனையும் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பற்றியது. கிடைக்காததால் அல்ல. தரமான நாவல்கள் என் கைக்குக் கிடைக்காததாலோ நான் அவற்றைப் படிக்காமல் போனதாலோ நஷ்டம் அவர்களுக்கல்ல; எனக்குத்தான். அற்புதமான ஆற்றல் படைத்த எழுத்தாளர்கள் பலர் – ரவீந்திரநாத் தாகுர், ஆர். கே, நாராயண், ராஜாராவ், அமிதாவ் கோஷ், விக்ரம் சேத், சித்ரா பானெர்ஜி திவாகருனி, சசி தரூர், அனிதா தேசாய், ரஸ்கின் பாண்ட், சேதன் பகத், இன்னும் பலர். இவற்றையெல்லாம் படிப்பதற்காகவே இன்னொரு ஜன்மம் எடுக்க வேண்டும்! நிற்க……

          இந்த ஆங்கில நாவல் 2016-ல்தான் அனுராதா (ராதா நாராயண மேனன்) என்பவரால் எழுதப்பட்டது. இவர் கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த எழுத்தாளராவார். இந்த எழுத்தாளர் மலையாள மொழியில் இரு சிறுகதைத் தொகுதிகளையும் பத்து நாவல்களையும் வெளியிட்டுள்ளார். இதுவே அவருடைய முதல் ஆங்கில நாவல். அருமையான எழுத்து.

          இந்த நாவல் சரித்திர நாவல்கள் வரிசையில் வருவது. 15ம் நூற்றாண்டு கேரளத்தின் காதல், போர், மிளகு வாணிகம் ஆகியவற்றைக் கொண்டு பின்னப்பட்டுள்ள நாவல் இதுவாகும். எடுத்தால் கீழே வைக்க இயலாது, அப்படிப்பட்ட விறுவிறுப்பு உடையது. படித்தால்தான் தெரியும்.

          சரி, கதைக்குள் வரலாமா?

          வாஸ்கோ டா காமா (Vasco Da Gama) பற்றி பள்ளிக்கூடத்தில் சரித்திரப்பாடங்களில் படித்திருக்கிறோம் அல்லவா? அதே வாஸ்கோ டா காமாவைச் சுற்றித்தான் கதை புனையப்பட்டுள்ளது. அவன் ஸ்பெயினிலிருந்து இந்தியாவை நோக்கி மூன்று கப்பற் பயணங்களை மேற்கொண்டான். இந்தியாவந்து அவன் செய்த செயல்களின் விளைவு ஆகியவற்றை இந்திய வரலாற்றுப் பின்னணியில் சுவையாகப் புதினமாகப் புனைந்திருக்கிறார் அனுராதா.

          மலபார் எனும் பிரதேசத்தின் வடக்குப்பகுதி கொளத்துநாடு எனும் பெயரில் கோலா வம்சத்தவர்களால் ஆளப்பட்டு வந்தது. இங்கு மிளகு, ஏலக்காய், இஞ்சி ஆகிய பொருட்களின் விளைச்சல் அதிகமாக உண்டு. எத்தனையோ ஆண்டுகளாக, சரித்திரம் பதிவு செய்யப்பட்ட நாட்களிலிருந்து மலையாள நாட்டின் மிளகானது எல்லா வெளிதேசங்களின் சமையலுக்கும் சுவையையும் காரத்தையும் சேர்த்து வந்திருக்கிறது. அதனாலேயே அது மற்றவர்களின் ஆர்வத்தையும் பொறாமையையும் ஈர்க்கும்வண்ணம் மிக முக்கியமான வாணிபப் பொருளாக இருந்தது. உலக வியாபாரத்தில் அதனை விற்று அதிகமாக தங்கக் காசுகளைச் சேர்க்க முடிந்ததனால் அதற்கு ‘கறுத்த பொன்னு’ (கறுப்புத் தங்கம்) என்னும் பெயரை வியாபாரிகள் இட்டிருந்தனர். இதனால் கொளத்துநாடு செல்வந்த நாடாக மாறி வந்தது. கொளத்து நாட்டரசரான ரவிவர்மா (இவர் வேறு; படங்கள் வரைந்தவர் அல்ல!!) மக்களின் நலனையே மனதில் கொண்டிருந்தவர். தற்போது நிகழ்ந்துவரும் சில மாற்றங்களால் பெரிதும் கவலை அடைந்திருந்தார்.

          பக்கத்து நாட்டரசரான ஜாமொரின் (சாமூதிரி) உடைய படைபலமும், அதிகாரமும், செல்வாக்கும் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே வந்தது. தனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத பக்கத்து நாட்டவரைப் படைபலத்தால் அடக்கி ஒடுக்கி விடுபவன் அவன். பக்கத்து நாடான கொளத்துநாடு உணவுக்குச் சுவையூட்டும் பொருட்களான மிளகு, ஏலக்காய் போன்றவற்றைத் தன் நாட்டிலுள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகம் மூலமாகவே வாணிபம் செய்ய வேண்டுமென ஆணையிட்டான். மேலும் அதிகப்படியாக ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் வரி விதித்தான்; போதாக்குறைக்கு வியாபாரத்தில் வரும் கொள்முதலில் பெரும்பங்கு தனக்கு வந்து சேரும்படி ஆணை பிறப்பித்தான்.

          இதனால் கொளத்துநாடு தனது முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது. அதன் வருமானமும் குறையலாயிற்று. அதனுடைய கண்ணூர் எனும் துறைமுகம் போக்குவரத்து அற்றுப் போயிற்று. இதனால் அரசர் வருத்தமுற்றார். என்ன செய்யலாம் என யோசிக்கலானார். அவருடைய மருமகன்தான் கேரளவர்மா. இவனை உண்ணித் தம்புரான் என்றே அழைப்பார்கள். இவனே இப்போதைய அரசரான (தம்புரான்) ரவிவர்மாவின் பட்டத்து வாரிசு. (கேரளத்தின் மருமக்கள் தாயம் சிலபேருக்கு நினைவிருக்கலாம்!!) அவனும் கொளத்துநாட்டின் ஒரு சிறுபகுதியை நிர்வகித்து வந்தான். தனது மாமனான அரசரிடம் , சாமூதிரியின் ராஜதந்திரத்தை அறிந்துகொள்ள வேண்டி,  தானே மாறுவேடத்தில் கள்ளிக்கோட்டைக்குச் சென்று வருவேன் என வேண்டுகிறான்.

          மிகுந்த விவாதங்களின்பின்பு ஒரு திட்டத்தைத் தீட்டி உண்ணித்தம்புரானை அனுப்ப முடிவு செய்கிறார்கள். சாமூதிரி அரசன் வாஸ்கோ டா காமாவின் அடுத்த வருகையை எதிர்பார்த்து மனம் கலங்கி இருக்கிறான். தனது நாட்டை எதிர்நோக்கி உள்ள துயரங்களுக்குப் பரிகாரம் செய்ய எண்ணி, அதில் வல்லவரும் கொளத்துநாட்டில் வாழ்பவருமான தாந்திரீகர் காட்டுமாடோம் நம்பூதிரியை அழைத்துப் பலவிதமான ஹோமங்களை கோழிக்கோட்டில் தளி சிவன் கோவிலில் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். இதனை அறிந்துகொண்ட அரசர் ரவிவர்மா, அவருடன் உண்ணித் தம்புரான் அவருடைய சிஷ்யன் போலச் செல்வதெனத் தீர்மானம் செய்து கொள்கின்றனர். ஒரு எளிய பிராமணன் போலக் காட்சியளிக்கும் உண்ணித்தம்புரான் கோழிக்கோடு செல்கிறான்.

          அரசவையில் அரசருக்கருகே இருந்துகொண்டு அவர்கள் நாட்டில் எவ்வாறு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் எனக் கண்டு பிரமிக்கிறான். அரசன் என்பவன் எவ்வளவு டாம்பீகமாகத் தன்னைக் காட்சிப் படுத்திக் கொள்கிறான் என அறிந்து கொள்கிறான். பரிகார ஹோம ஏற்பாடுகள் நடக்கின்றன. அரசனின் தாயே அவற்றை மேற்பார்வையிடுகிறார். சாமூதிரி அரசன் மணம் செய்து கொள்ளாதவன். அவனுடைய சகோதரியின் மகனே அவனுக்குப் பின் ஆட்சி செய்வான். இந்த சகோதரிக்கு ஒரு மகளும் உண்டு. அவளே குஞ்சுலக்ஷ்மி. இந்தக் குழந்தைகளின் தாய் அவர்களின் சிறுவயதிலேயே காலமாகி விட்டாள். சாமூதிரி அரசனே மிகுந்த பாசத்துடன் அவர்களை வளர்க்கிறான். பெரிய தம்புராட்டி (அரசனின் தாய்) உடன் அடிக்கடி கோவிலுக்கு வரும் குஞ்சுலக்ஷ்மியை உண்ணித்தம்புரான் (இவனுடைய மாறுவேடப் பெயர் கிருஷ்ணனுண்ணி) பார்க்க நேரிடுகிறது. இருவரிடையேயும் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. காதல் மலர்கிறது. உண்ணியை யாரென அறியாமலே அவனிடம் காதல் கொள்கிறாள் குஞ்சுலக்ஷ்மி; அவள்தான் சாமூதிரி ராஜ்யத்திற்கு அடுத்த ராஜவாரிசைப் பெற்றளிக்க வேண்டிய தம்புராட்டி!

          உண்ணித் தம்புரான் இந்தக் காதல் விஷயத்தினால் தனது நாட்டிற்குத் திரும்புவதை நீட்டிக்கிறான். இதன் காரணம் அறியாமல் குழம்பும் காட்டுமோடம் நம்பூதிரி, ஒருவாறு இதனை அறிந்து கொள்கிறார்.

          போர்த்துகீசியப் படைகளை நடத்தும் காமா, சாமூதிரி அரசனின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அவனுடைய நாட்டு மக்கள் பலரைக் குரூரமாகக் கொலை செய்கிறான்.

        உண்ணியிடம் தன்னை யாரென்று குஞ்சுலக்ஷ்மிக்குத் தெரிவிக்க வேண்டுமென விஷயம் தெரிந்துகொண்ட கொளத்துநாடு அரசரும் உண்ணியின் தாயும் செய்தி அனுப்புகின்றனர். அவனும் அவ்வாறே செய்கின்றான். குஞ்சூட்டிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. காதலர் இருவரும் இரகசியமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். குஞ்சூட்டியின் சிறுவயது முதலே நெருக்கமான தோழி தேவூட்டி இதற்குத் துணை புரிகிறாள். பலமுறை அவர்கள் ரகசியமாகச் சந்திக்கவும் அவள் உதவுகிறாள்.

          இதற்கிடையே போர்த்துகீசியப் படைகளை நடத்தும் காமாவுக்கும் சாமூதிரி அரசனுக்கும் பலவிதமான மனஸ்தாபங்கள் ஏற்பட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உண்ணித்தம்புரான் கோழிக்கோட்டில் இருப்பது பெருத்த ஆபத்து என கொளத்துநாடு அரசர் அபிப்பிராயப் படுகிறார்.

          தேவூட்டியின் உதவியுடன் ரகசியத் திருமணம் செய்துகொண்ட காதலர் இருவரும் எப்படியாவது கோழிக்கோட்டைவிட்டு கொளத்துநாட்டிற்குச் செல்ல வேண்டுமென முடிவு செய்கின்றனர். ஒரு திருவிழா தினத்தன்று படகிலேறிக் கடல்வழியாகத் தப்புபவர்களை குஞ்சூட்டியின் அண்ணனின் தோழன் அடையாளம் கண்டுகொண்டு திரும்பக் கொண்டு வந்து விடுகின்றனர். குஞ்சுலக்ஷ்மியின் காதலன் யாரென்று தெரியாததால் அவளை வீட்டில் சிறை வைக்கின்றனர். தப்பிவிட்ட உண்ணித் தம்புரான் கொளத்துநாட்டையடைந்து, உடல்நிலை சீராகின்றான். பின் எப்படியாவது குஞ்சுலக்ஷ்மியைக் கொளத்துநாட்டிற்குக் கொண்டுவந்து விட வேண்டுமென அவனும் அரசரும் முயல்கின்றனர்.

          சாமூதிரி அரசன் போர்த்துகீசியருடனான போர்களில் படுகாயப்பட்டுள்ளான். அவனுக்கு வைத்தியம் நடக்கிறது குஞ்சூட்டி பற்றிய ரகசியம் – அவளுடைய கள்ளத் திருமணத்தின் கணவன் கொளத்துநாட்டு வாரிசான கேரளவர்மா என்றும், அவள் கருவுற்றிருக்கிறாள் எனவும் அறிந்தவன் கொதித்துப் போகிறான். தன்னை இழிவு செய்த தன் மருமகளையும் அவளுடைய தோழி தேவூட்டியையும் ஒரு படகிலேற்றிக் கடலில் தனித்து விட்டு விடுமாறு கட்டளையிடுகிறான். அவ்வாறு விடப்பட்ட அவர்கள் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டு கொளத்துநாட்டை அடைகின்றனர். அங்கு கோலாகலமாக குஞ்சுலக்ஷ்மிக்கும் உண்ணித்தம்புரான் எனப்படும் கேரளவர்மாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. விரைவில் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறக்கின்றது. ஆதிரை எனப் பெயரிடுகிறார்கள்.

சுபம் போட்டு விடலாமா?

          நான் சொல்லாமல் விட்டது மிக அதிகம். போர்த்துகீசியர்கள் எவ்வாறு இந்திய, கேரள மக்களையும், மன்னர்களையும் அடிமை கொண்டு ஏமாற்ற முனைந்தார்கள், அதன் விளைவாக நடந்த போர்கள் என்னவென்ன என்பன எல்லாம் இந்தப் புதினத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு சரித்திரச் செய்தியை அது நிகழ்ந்த நாட்டு மக்கள் கூறினால்தான் உண்மை விளங்குகிறது. வெறும் பொதுவான உலகச் சரித்திர ஆதாரங்களை மட்டுமே நோக்கினால் சரித்திரத்தின் மறுபகுதி அறிய இயலாதது. இதனை கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம், திருவரங்கன் உலா, திரு. பைரப்பாவின் ஆவரணா (திரை) ஆகிய புதினங்களும் நூல்களும் ஊர்ஜிதம் செய்கின்றன.

          ஆசிரியை அனுராதாவின் எழுத்து வன்மை போற்றத்தக்கது பிரமிக்க வைப்பது. அற்புதமான சரித்திர நாவல்களைப் பெண்களாலும் எழுத இயலும் என்பதற்கு இவருடைய எழுத்தும் ஒரு எடுத்துக்காட்டு. இதனை இயன்றவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அந்தந்தப் பிரதேசத்தின் சரித்திரத்தை அப்பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் எழுதும்போது அதன் சுவையும் உண்மைத்தனமும் பன்மடங்காகிறது எனலாம். இதுவே என்னை பிரமிக்க வைத்தது.

உலகமே ஆவலாக உண்டு, உபயோகித்து மகிழும் ‘கரும்பொன்’ எனப்படும் மிளகின் மகிமை மங்கவே மங்காது. இதன் காரணமாக எத்தனை போர்கள், எத்தனை எத்தனை பணத்தாசைகள், இதன் வாசத்தில் முகிழ்த்த காதல் என்று, இந்தப் புதினம் ஒரே அமர்க்களம்தான், போங்கள்!!

          இவர் ஆங்கிலத்தில் இன்னொரு புதினமும் (The Silent Witness) எழுதியுள்ளார். நான் அதனையும் அமேசானில் வாங்கினேன். இன்னும் கைக்கு வரவில்லை. படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

       [மீண்டும் சந்திப்போம்]