புத்தகம் : Life in a Senior Citizen Home ( English)
எழுதியவர் : R V Rajan
Published by : Creative Workshop
பக்கங்கள் : 154
விலை : ரூ. 325
முதியோர் இல்லங்கள் என்றாலே நம் கண் முன்னே ஒரு சோக பிம்பம்தான் வந்து போகிறது. காலம் காலமாய், வயதான காலத்தில், பாசத்துடன் வளர்த்த பெற்றோர்களை, பிள்ளைகள் தாங்கு தாங்கென்று தாங்க வேண்டும் என்ற கருத்தையும், அப்படி பிள்ளைகளின் அன்பான அரவணைப்பு கிட்டாத மூத்தோர்கள் தனிமையில் திண்டாடுவார்கள் என்ற எண்ணத்தையும் பல்லாண்டுகளாக நம் மனதில் காலம் விதைத்து விட்டது.
ஆனால், காலச்சக்கரம் கடகடவென்று உருண்டோடிச் செல்கின்றது. போன தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் இடையே சமூகச் சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. வேலைக்காக வெளியூர், நகரம் என்று பிள்ளைகள் செல்லும் நிலை மாறி, வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து, அங்கேயே வாழ்வின் பெரும் பகுதியைக் கழிக்கும் நிலைமையும், வேற்று நாட்டு குடிமக்களாக மாறி முற்றிலும் வேறு ஒரு வாழ்க்கைச் சூழலுக்கும் அதன் தேவைகளுக்கும் ஏற்ப தங்களை உருமாற்றிக் கொள்ளுதலும் இன்றைய நிதர்சனம் ஆகிவிட்டது.
வேறு வழியில்லாமல் முதியோர் இல்லங்களுக்குத் தள்ளப்பட்ட நிலை மாறி, முதியவர்களே தங்களுடைய பணி நிறைவுக்குப் பின் வரும் காலத்திற்கு தங்களை முழுவதுமாய் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய ஆயத்தத்தின் முக்கிய அங்கம்தான் தங்களுக்கு ஏற்ற முதியோர் இல்லங்களைத் தேர்ந்தெடுப்பதும், தகுந்த சமயத்தில் அங்கே குடியேறுவதும், அங்கே சென்று தங்கள் பருவத்திற்கு ஏற்றாற்போல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்.
இச்சிறு நூலின் எழுத்தாளர் ஆர் வி ராஜன் அவர்களை நான், 30 வருடங்களாக என்னுடைய சந்தை ஆய்வு நாட்களிலிருந்தே நன்கு அறிவேன். ஒரு விளம்பர வல்லுனராக அன்று பரிமளித்த அவர், இன்று ஓர் எழுத்தாளராக பளபளக்கிறார். முப்பது மாதங்களுக்கு மேலாக கோவையில் உள்ள நானா நானி (4) என்ற சீனியர் சிட்டிசன் ஹோமில் இருந்து கொண்டு, இந்த எவர்கிரீன் மனிதர் சிட்டாகப் பறந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய அனுபவத்தை வைத்து, அவசியம் சீனியர் சிட்டிசன் ஹோம்களைப் பற்றியும் அங்குள்ள மகிழ்ச்சியான, செறிவுள்ள வாழ்க்கையைப் பற்றியும் அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு இந்நூல் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆர் வி ராஜன் அவர்கள்.
ஆனால், நானா நானி (4) அனுபவம் என்ற ஆசிரியரின் ஒற்றைப் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது இந்நூல்.
சீனியர் சிட்டிசன் ஹோம்கள் பெருகி வரும் காலம் இது. பணி ஓய்வுக்குப் பிறகு வரும் காலத்தைப் பற்றி முன்னரே சிந்தித்து திட்டங்கள் தீட்ட வேண்டிய தேவை அனைவருக்கும் உண்டு.
இந்நூல் அதற்கு வேண்டிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கிறது.
படித்துப் பயனடையுங்கள் நண்பர்களே !



Will read.
LikeLike