பண்டைத் தமிழ் மக்களின் பழமையான தொழிலாகவும் தொழில்நுட்பத்துடன் இணைந்ததாகவும் அமைந்துள்ள தொழில் வேளாண்மைத் தொழில். ஏர் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கலப்பையில் அமைந்துள்ள பொருள்களின் எண்ணிக்கையையும் அவற்றைப் பொருத்தியுள்ள நுட்பத்தையும் எண்ணிப் பார்த்தால் இத்தொழிலில் அமைந்துள்ள நுணுக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். கம்பர் பாடிய ஏர் எழுபது என்னும் இலக்கியத்தில் இந்தக் கலப்பையின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விளக்கமாகப் பாடியுள்ளார்.
கலப்பையின் அடிப்பாகத்தில் கொழுமுனை என்னும் ஒன்றை இரும்பினால் கூர்மையாகச் செய்து வைத்திருப்பார்கள். ஆழ உழுவதற்கு, கலப்பையை நன்கு அழுத்திப் பிடிக்க வேண்டும். அதற்காக ஒரு கைப்பகுதியை அமைத்திருப்பார்கள். கொழுப் பகுதிக்கும் கைப்பகுதிக்கும் நடுவில் நீளமான ஒரு கம்பைப் பொருத்தி அதைக் காளை மாடுகளின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள நுகத் தடியுடன் பொருத்துவார்கள். இப்படி நுட்பமாக அமைக்கப்பட்ட உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் வற்றாத நீர் நிலைகள் வேண்டும்.
நீர்நிலை
நீர் நிலைகளில் மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, மழையில்லாக் காலத்தின் நீர்த்தேவையை நிறைவு செய்வது மிகச் சிறந்த நீர் மேலாண்மை ஆகும். இந்த நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மன்னன் கரிகால் பெருவளத்தான்.
கரிகால் பெருவளத்தான் என்னும் பெயரில் உள்ள பெருவளம் என்னும் சொல்லே, சோழ நாட்டில் வேளாண்மைத் தொழிலை வளப்படுத்தியவன் என்னும் பொருளைத் தரும். அதற்காகத்தான் அந்தக் காலத்திலேயே கல்லணை என்ற கல்லடுக்கு அணைக்கட்டை உருவாக்கி நீர்நிலையை அமைத்து வேளாண்மையை வளப்படுத்தினான்.
கரிகால் பெருவளத்தான், உறையூர் என்னும் நகரத்தை அமைத்து அங்கே வேளாண்மை வளர்ச்சி பெறுவதற்காகக் குளம் உருவாக்கியதை உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பட்டினப்பாலையில் பாடியுள்ளார்.
காடு கொன்று, நாடாக்கிக்
குளம் தொட்டு, வளம் பெருக்கிப்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி!
(பட்டினப் பாலை : 283-285)
என்னும் அடிகளில் காட்டை அழித்து அதை வளமிக்க வேளாண் நிலமாக மாற்றியதையும் அந்த நிலத்தின் நீர்த்தேவைக்காகக் குளத்தை உருவாக்கியதையும் இந்த அடிகள் விளக்குகின்றன.
நீர்நிலைக் காவல்
மழைக்காலங்களில் குளங்களில் நீர் பெருகிவிடும். அந்தக் காலத்தில் குளத்தின் கரை உடைந்து போகாமல் இருப்பதற்காகக் காவலர்களை நியமித்துப் பாதுகாப்பது வழக்கம். அவ்வாறு குளத்தைப் பாதுகாப்பவர்கள் இரவிலும் கண்ணுறங்காமல் காவல் காப்பர் என்பதை அகநானூற்றுப் பாடலில் நக்கண்ணையார் பாடியுள்ளார்.
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் (அகநானூறு : 252)
காற்றுடன் மழை பெய்யும் காலத்தில் குளத்து நீரில் அலை அடித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு அலை அடிக்கும்போது குளத்தின் சிறிய கரையானது உடைந்துவிடும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் உள்ள சிறுகோடு என்னும் சொல், சிறிய கரையை உணர்த்துகிறது. உவமையாகத்தான் இந்தக் குளத்தின் காவலன் சொல்லப்பட்டுள்ளான் என்றாலும் அந்தக் காலத்தில் குளத்தைப் பாதுகாப்பதை வேளாண் பெருமக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
நெல் பல பொலிக
ஒரு நெற்கதிரில் நெல்மணிகள் பலவாகப் பெருக வேண்டும் என்றுதான் உழவர் விரும்பினர். அந்த உழவர் எதிர் பார்க்கும் விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று பெண்கள் வேண்டியுள்ளனர். அந்த வேண்டுதலை ஐங்குறுநூற்றின் முதல் பாடலிலேயே ஓரம்போகியார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
நெல்பல பொலிக! (ஐங்குறு. 1)
என்னும் அடியில் அறுவடையின்போது நெல்மணிகள் மிகுதியாகட்டும் என்னும் வேண்டுதலைத் தெரிவித்துள்ளார். வேளாண் மக்கள் தங்கள் அறுவடையை முடித்தபின் களத்தில் நெல்லைக் குவித்து வைத்திருப்பார்கள். அதை நெற்பொலி என்றுதான் இன்றுவரை கூறுகிறார்கள். பொலிக என்னும் வேண்டுதல் என்பதும் இந்தப் பொலி மிகுதியாகப் பெருக வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது.
விதைத்து, அதை நாற்றாக்கி, அந்த நாற்றை வயலில் நட்டு, நீர்பாய்ச்சி, களைபறித்து, போதுமான உரமிட்டுப் பயிர் வளர்க்கும் வேளாண் மக்கள், அந்தப் பயிர் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். வேளாண் மக்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அடிப்படையானது வயலில் கிடைக்கும் நெல்லின் விளைச்சல் ஆகும்.
வீட்டில் இருக்கும் பெண்கள், வயலில் நெல் நன்றாக விளைச்சலைத் தரவேண்டும் என்று வேண்டியுள்ளனர். இதைத் தான் ஐங்குறுநூற்றில்,
விளைக வயலே! (ஐங்குறு. 2)
என்று பாடியுள்ளார்.
வேளாண்மையுடன் இணைந்த தொழிலாக விளங்குவது மாடு வளர்த்தல். மாட்டின் சாணத்தை வயலுக்கும் வயலில் நெற்கதிர்களின் கீழ் வளர்ந்திருக்கும் வைக்கோலை மாட்டுக்கும் போடும் வழக்கம் நமது வழக்கம். மாடுகள் தரும் பாலைச் சத்தான உணவாக மக்கள், பல்லாயிரம் ஆண்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவேதான், பால் பல ஊறுக என்று பசுவையும் பகடு பல சிறக்க என்று காளையையும் போற்றியுள்ளார்கள்.
வேளாண்மைக்குக் காளை பயன்பட்டதைப் போல் வேறு எந்த விலங்கும் பயன்பட்டது இல்லை. உழவு, பரம்படித்தல், வண்டி இழுத்தல் என எல்லாவற்றிற்கும் காளை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கொண்டாடும் பொங்கலின் அடுத்த நாளான மாட்டுப் பொங்கலின் போது மாடுகளுக்கு வழிபாடு செய்யப்பட்டாலும் சிறப்பாகக் காளை மாடுகளே கொண்டாடப்படும்.
பால் பல ஊறுக! பகடுபல சிறக்க! (ஐங்குறு. 3)
இந்த அடியில் பால் என்னும் சொல்லின் அளவினைக் குறிப்பிடுவதற்குப் பல என்னும் சொல் பயன்படுத்தப் படுவதில்லை. எண்ணல் அளவைப் பெயர், முகத்தல் அளவைப் பெயர், நிறுத்தல் அளவைப் பெயர், நீட்டல் அளவைப் பெயர் என அளவைப் பெயர், பல வகைப்படும். இங்கே பல என்னும் சொல், எண்ணல் அளவையைக் குறிக்கும். பால் என்னும் திரவப்பொருள் முகத்தல் அளவைப் பொருள் ஆகும். ஓரம்போகியார், ஐங்குறுநூற்றில் ‘பால் பல ஊறுக’ என்று பாடியுள்ள அடியின் பொருள் பாலைத் தரும் பல பசுக்களின் மடியில் பால் பெருகட்டும் என்பதுதான்.
மாடுகளை வேளாண்மையின் மையமாக்கிப் பார்த்த காரணத்தால்தான் அவற்றின் வளமும் பெருக வேண்டும் என்று பாடியுள்ளார்.
வேளாண்மையின் அடிப்படையாக அமைவது தண்ணீர். அந்தத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் மழை பொழிய வேண்டும். மழை இல்லை என்றால் மண்ணில் உயிர்கள் வாழ இயலாது. குறிப்பாக வேளாண்மை நடைபெறாது. அந்த வேளாண்மையைச் செய்வதற்குத் தேவையான மழைவளம் மிகவும் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்று பாடியுள்ளார்.
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க (ஐங்குறு. 10)
என்னும் இந்த அடியில் அமைந்துள்ள ‘நனி சிறக்க’ என்னும் சொல்லுக்கு மிகவும் சிறப்பாக அமையட்டும் என்பது பொருள் ஆகும். போதுமான மழையை விடவும் மிகுதியான மழை பெய்தால்தான் அதைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த முடியும் என்ற காரணத்தால் ‘நனி சிறக்க’ என்று பாடியுள்ளார்.
அறுவடை
குயம் என்னும் சொல், அரிவாளைக் குறிக்கும். கூனிக் குயம் என்றால் வளைந்த அரிவாள். அந்த அரிவாளால் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்தனர். அறுவடை செய்த நெற்கதிர்களுக்குச் சூடு ஏற்றுவதற்காக ஒரே இடத்தில் குவித்து வைத்தார்கள். அப்படிக் குவித்து வைத்த நெற்கதிர்க் கட்டுகள் பெரிய மலைபோல் காட்சியளித்தன.
கதிர்க் கட்டுகளை ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேலாகக் குவித்து வைத்தபின் ஒரு நாள் கழித்து, அந்தக் கட்டுகளை எடுத்துப் பிரித்துக் களத்தில் அடித்தால் அந்த நெற்கதிர்களில் உள்ள நெல்மணிகள் எளிதில் உதிர்ந்து விடும். அப்படிச் சூடு ஏற்றுவதற்காகக் குவித்து வைப்பதைச் ‘சூடு’ என்று சொல்வார்கள். தற்காலத்திலும் குமரி மாவட்ட மக்கள் ‘சூடு’ என்றுதான் சொல்கிறார்கள். அப்படிச் சூடேற்றுவதற்காக மலைபோல் குவித்து வைக்கப்பட்ட கதிர்களைக் களத்தில் அடித்தலைச் ‘சூடு அடித்தல்’ என்கிறார்கள்.
சூடு அடித்த பிறகு நெல் மணிகள் ஒவ்வொரு களத்திலும் சிறிய குன்றுகள் போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த நெல்லை, மூடைகளில் அடைத்து அவற்றைத் தைத்துப் பாதுகாப்பாக அடுக்கினர். மூடைகளைத் தைப்பதைக் ‘கடுந்தெற்று’ என்று முடத்தாமக் கண்ணியார் கூறியுள்ளார். தெற்றுதல் என்பது, மூடையின் வாய்ப்பகுதியில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் இரும்பு ஊசியால் (கோணி ஊசி) தைப்பதைக் குறிக்கும். சாக்கு மூடைகளை இதே முறையில்தான் இன்று வரை தைத்து மூடுகிறார்கள். அந்தக் காலத்தில் தைத்த சாக்குகளிலிருந்து நெல்மணி வெளியில் சிதறாது. எனவே அதைக் ‘கடுந்தெற்று’ என்று கூறியுள்ளார்.
இவ்வாறு தைத்து அடுக்கப்பட்ட மூடைகளைத் தானியக் கிடங்குகளில் அடுக்கி வைத்துள்ளனர். மூடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக நெருக்கி அடுக்கி வைத்ததை ‘நெரீஇ’ என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். நெரீஇ என்றால் நெருக்கமாக என்று பொருள்.
அவற்றை எந்தத் தனிமனிதனும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாமல் எல்லோருக்கும் பயன்படும்படியாகக் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நடைமுறை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையிலும் நடைபெறுகிறது. நெற்களங்களில் அரசு, நெல்லைப் பெற்று அதைத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கிறது. அவ்வாறு சேமிக்கப்பட்ட நெல்லை அரவை ஆலைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து அரைத்து அரிசியாக்குகிறார்கள். அதனைத் தான் தற்காலத்திலும் நியாய விலைக் கடைகளில் விற்கிறார்கள்.
கரிகால் வளவனின் ஆட்சிக் காலத்திலும் நெல்லை அரசே கொள்முதல் செய்துள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்த நெல்லைக் களஞ்சியங்களில் நிறைத்து வைத்துள்ளது. அதனைத் தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ உண்பதற்குப் பயன்படுத்தாமல் பொருநருக்கு வழங்கியுள்ளான் என்று பட்டினப் பாலை தெரிவிக்கிறது.
பொருநர் என்போர் பாணர் குலத்தில் ஒரு பிரிவினர். பாணர் என்னும் சொல் பாடுநரைக் குறிக்கும். பாடினி என்னும் சொல், பாடும் பெண்ணைக் குறிக்கும். விறலி என்னும் சொல், பல வகையான திறம் பெற்ற பெண்ணைக் குறிக்கும். பொருநர் என்பது ஒருவர் போல மற்றொருவர் வேடமிட்டு நடித்தலைக் குறிக்கும். இங்கே பொருநர் என்னும் சொல், இந்த வேடமிட்டு நடிப்போரை மட்டும் குறிக்காமல் பாணர், பாடினி, விறலி, பொருநர், கூத்தர் என எல்லோரையும் குறிக்கிறது.
அந்தக் காலத்தில் கலையை வளர்ப்போராக இந்தப் பாணர் முதலானோர் இருந்துள்ளனர். அவர்களுக்கு வருவாய் வரவேண்டும் என்றால் பொது மக்கள் பொருள் கொடுக்கவேண்டும். பொதுமக்கள் எல்லாக் காலத்திலும் கொடுக்க இயலாது. எனவே கரிகால் வளவன் காலத்தில் இந்தப் பாணர் முதலானோருக்கு ஆண்டு தோறும் இப்படி நெல்லை ஊதியமாக வழங்கியுள்ளனர் என அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு பொருநர் முதலான பொதுப் பணியாளர்க்கு வழங்குவதற்காகவே களஞ்சியங்களில் நெல்லைச் சேமித்து வைத்திருந்த தன்மையைப் பொருநராற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் பாடியுள்ளார்.
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெட நெரீஇக்
களந்தொறும் விளைந்த கணக்கற்ற பெரும்பயன்
யாரும் ஓம்பாது உண்பதும் அன்றிப்
பொருநர்க்கு ஈயும் வண்மையோனே! (பொருநராற்றுப்படை : 242 – 248)
என்னும் அடிகள், வயல் அறுவடை எவ்வாறு நடைபெற்றது என்பதையும் அந்த நெற்கதிர்கள் களத்துமேட்டிற்குக் கொண்டு செல்லப்பட்ட தன்மையையும் அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தன்மையையும் அறுவடை செய்த நெல்லை அரசே கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைத்திருந்து பொது நன்மைக்குச் செயல்படுவோருக்கு வழங்கியதையும் தெரிவிக்கின்றன.
தளம்பு அடித்தல்
வேளாண் பெருமக்கள் வயலைச் சமப்படுத்தும்போது வயலில் உள்ள பெரிய தொளி(சேற்று)க் கட்டிகளைத் தளம்பு என்னும் கட்டைக் கருவியால் அடிப்பார்கள். அப்படி அடிக்கும்போது வயலில் உள்ள வாளை மீன்கள் துண்டாகிவிடும். அப்படித் துண்டான வாளை மீனை வீட்டிற்குக் கொண்டுபோய், கறி சமைத்து உண்டிருக்கிறார்கள். (வாள் போல் பட்டையாக நீண்டு இருப்பதால் வாளை மீன்)
அந்த வாளை மீன் குழம்பை வெண்சோற்றுடன் கலந்து உழவர்கள் உண்டனர். வயிறார உண்ட அவர்கள், காலையில் வயலில் அறுவடை செய்து போட்டிருந்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டி, சுமந்து கொண்டு களத்திற்குச் சென்று சூட்டில் சேர்த்தனர். அவ்வாறு கதிர்க் கட்டுகளைச் சுமந்து செல்லும்போது அவர்களின் நடையில் தள்ளாட்டம் ஏற்பட்டது. அந்தத் தள்ளாட்டத்திற்கு இரண்டு காரணம் இருந்துள்ளது.
வாளை மீன் குழம்பு கலந்த உணவை வயிறார உண்டதால் ஏற்பட்ட சோர்வு ஒன்று என்றால் கதிர்க்கட்டில் உள்ள பாரம் தாங்காமல் தள்ளாடியது அடுத்த சோர்வு எனப் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு நெற்கதிர்களில் நெல்மணிகள் மிகுதியாக இருந்துள்ளன என அறிந்து கொள்ள முடிகிறது.
உழவர்கள் சுமந்து சென்ற கதிர்க் கட்டைச் சூட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தனர். அந்தச் சூடுகள் தென்னை உயரத்திற்கும் பனைமர உயரத்திற்கும் உயர்ந்து இருந்துள்ளன. அந்தச் சூட்டின் மேல் ஏறிய சிறுவர்கள் தென்னை மரத்தில் உள்ள தேங்காயையும் பனைமரத்தில் உள்ள பனம்பழத்தையும் பறித்து உண்டுள்ளனர்.
தென்னை மரத்திலும் பனை மரத்திலும் ஏறுவதற்குப் பயிற்சி இல்லாத சிறுவர்கள், நெற்சூட்டின் மேல் ஏறிப் பறிக்கும் அளவிற்கு உயர்ந்த சூடுகள் அந்தக் காலக் களத்து மேட்டில் இருந்துள்ளன என்பதைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ளார்.
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்… (புற நானூறு 61)
என்னும் இந்தப் பாடலில் தென்னை மரத்தின் காய்களைச் சூட்டின்மேல் நின்று பறிக்க முடிந்துள்ளது என்பதையும் பனம்பழத்தைப் பறிப்பதற்கு அந்தச் சூட்டிலிருந்து துள்ளி எழுந்து முயன்றுள்ளனர் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
வளைந்து வளர்ந்த தென்னையை விடவும் நேராக வளர்ந்த பனை உயரமாக இருந்த தன்மையை இந்தப் பாடலில் நுணுக்கமாகப் புலவர் பாடியுள்ளார்.
அந்தக் காலத்தில் ஒரு வயலில் அறுவடை நடந்து கொண்டிருக்கும்போதே அறுவடை முடிந்த வயலில் உழவுத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் வயலில் பாய்ந்த வாளை மீன், தளம்பு என்ற கட்டையால் அடிபட்டுத் துண்டாகியுள்ளது.
வேளாண் மக்கள், தங்கள் வேளாண் தொழிலை ஓய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை இந்தப் பாடல் தெரிவித்துள்ளது.
வயல் வாளை
பாண்டிய நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிறுகுடியை நிர்வகித்தவன் வாணன் என்பவன். அவனது கட்டுப்பாட்டில் உள்ள குளத்தின் மடையை வேளாண்மைக்காகத் திறந்து விட்டனர். அந்தக் குளத்திலிருந்து வாளைமீன் ஒன்று குளத்து மடை வழியாக வெளியேறிக் கால்வாய் வழியாகச் சென்றது.
கால்வாய் வழியாகச் சென்ற அந்த வாளைமீன் வயலை அடைந்தது. அந்த வயலில் உழவர்கள் உழுது கொண்டிருந்தார்கள். அந்த உழவுச் சால் வழியாக அது பாய்ந்தது. அங்கே உழுதுகொண்டிருந்த காளை மாடுகளின் காலால் மிதிபட்டு அந்த வாளைமீனின் உடலில் புள்ளிகள் தோன்றின. காளை மாடுகளின் பின்னால் அவற்றை ஓட்டியபடி செல்லும் உழவன், தன் கையில் கோல் ஒன்றை வைத்திருந்தான். அந்தக் கோலால் அடிபட்ட அந்த வாளை அருகில் உள்ள நாற்றங்காலில் துள்ளி விழுந்து புரளும் என்று நக்கீரர் பாடியுள்ளார்.
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல் அம்கழனி உள்வாய் ஓடி,
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ்சால் உழவர் கோல் புடை மதரி,
பைங்கால் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி! (நற்றிணை : 340)
பாகனிடம் நடைமுறையைக் கற்றுக் கொள்ளாத யானையைப்போல் குளத்தின் மடை வழியாக வந்த வாளை மீன், பெரும்பாடு பட்டதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. இந்தப் பாடலில் உணர்த்தப்படும் கருத்து என்பது, தலைவியைப் பிரிந்த தலைவன் இந்த வாளைமீனைப் போல் பரத்தையர் வீட்டிற்குச் சென்று துன்பப்பட்டான் என்பதைத் தெரிவிப்பது ஆகும். என்றாலும் இந்தப் பாடலில், முழுமையாக வேளாண் செய்திகளே இடம்பெற்றுள்ளன.
வயலுக்குக் குளத்திலிருந்து கால்வாய் வழியாக நீர் செல்லும் நடைமுறையும் அந்த நீர், வயலுக்குப் பாய்வதும் வயலில் உழவர்கள், காளை மாடுகளை அல்லது எருமைக் கடாக்களைப் பயன்படுத்தி ஏர் உழுததும் அருகில் நாற்றங்கால் அமைக்கப்பட்டிருந்த தன்மையும் சொல்லப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்கள், அந்தக் கால மக்களின் வாழ்வியல் முறையைத் தெளிவாக்கும் இலக்கியங்கள். மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத வேளாண்மையைப் பற்றி இந்தப் பாடல்களைப் போல் பல பாடல்கள் தெரிவிக்கின்றன. இங்கே பயன்படுத்தப்பட்ட பாடல்கள் அனைத்தும் மருத நில வேளாண்மை பற்றியவை ஆகும். இவை அல்லாமல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நடைபெற்ற வேளாண்மையைப் பற்றியும் பல செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

