WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் நடத்திய  இரண்டாவது உலகளாவிய சிறுகதைப் போட்டி(2026) ல் பங்கு பெற்று இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை

 

யாழ்ப்பாணத்தின் அந்தச் சின்னக் கிராமம் இன்னும் முழுசாக விழித்திருக்கவில்லை. அதிகாலைக் குளிரில் வயக்காட்டுப் பக்கமிருந்து வந்த ஈரக்காற்று, கொக்குவில் வீதியில் அமைந்திருந்த அந்தப் பழைய சாண்கல் வீட்டுத் திண்ணையின் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த சிவகுமாரின் உடலை ஊசி போல் துளைத்தது. புரண்டு படுக்கக் கூட உடம்பில் தெம்பிருக்கவில்லை. நாற்பத்தைந்து வயது தான் ஆகிறது; அதற்குள்ளேயே உடம்பு தளர்ந்து விட்டது போல் ஒரு சோர்வு. வலது கையின் பெருவிரல் ஓரத்திலும், உள்ளங்கையிலும் தையல் மிஷின் ஓட்டிய தழும்புகள் தடயங்களாகக் கிடந்தன.

சிவகுமார் கடந்த முப்பது வருடங்களாக சண்டிலிப்பாய் பக்கமுள்ள ஒரு சின்ன தையல் கடையில் கூலிக்குத்தான் சட்டை தைக்கிறான். முன்னரெல்லாம் விடிந்தால் இரவு வரை மிஷின் சத்தம் ஓயாது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்துச் சந்திகளில் ஆட்கள் கூடுவதே குறைந்து விட்டது. மக்களின் கைகளில் காசுப் புழக்கம் இல்லை. உடம்புக்குப் புதுச் சட்டை தைப்பதை விட, வயிற்றுக்கு ஒருவேளைக் கஞ்சி ஊற்றுவது தான் ஊரின் பெரும் போராக மாறியிருந்தது. தைக்கத் துணியில்லாமல், எண்ணெய்ப் பசையற்றுத் துருப்பிடித்துக் கிடக்கும் தையல் ஊசியைப் போலத்தான் சிவகுமாரின் வாழ்க்கையும் இறுகிப் போயிருந்தது.

சூரியன் உதிப்பதற்கு முன்னரே சிவகுமாரின் மண்டைக்குள் கணக்குப் புத்தகம் திறந்துவிடும். முன்னரெல்லாம் ஐம்பது ரூபாய்க்கு விற்ற ஒரு இறாத்தல் பாண்,  இருநூற்று ஐம்பது ரூபாய். நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு கிலோ சீனி, இன்று  ஐநூறைத் தொட்டு நிற்கிறது. அரசியல் மாறுகிறது, ஆட்சி மாறுகிறது; தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்ற நப்பாசையில் மக்களும் மாறி, மாறி ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கொழும்பில் நாடாளுமன்றக் குப்பைகள் கலைந்து புதுசாகக் கூடுகின்றன, ஆனால் யாழ்ப்பாணத்துச் சாமானியனின் சமையலறையில் பொருட்களின் விலை மட்டும் மூன்று மடங்காக ஏறி, அப்படியே பாறாங்கல்லாய் உட்கார்ந்து கொண்டது. விலைவாசி உயரும் போதெல்லாம் சாதாரண மக்களின் உசிரல்லவா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகிறது.

ஆயிரம் யோசனைகளுடன் சமையலறைக்குள் நுழைந்தாள் லெட்சுமி. ஒரு பெண்ணுக்குச் சமையலறை என்பது அவளது ராஜ்ஜியம் என்பார்கள். ஆனால் லெட்சுமி அந்த ராஜ்ஜியத்தை மகிழ்ச்சியாக ஆட்சி செய்து நீண்ட நாட்களாயிற்று. இப்போதெல்லாம் அது ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு போராடும் ஒரு போர்க்களமாகிப் போனது. அங்குள்ள சொத்துக்களைப் பட்டியலிட்டாள். மூன்று வாடிய கத்தரிக்காய்கள், இரண்டு காய்ந்த கொச்சிக்காய்கள், கைப்பிடி அளவு வெங்காயம், ஒரு சிறிய கிண்ணத்தில் மைசூர் பருப்பு, அப்புறம் ஒரேயொரு தேங்காய். அரிசிப் பானையைச் சாய்த்துப் பார்த்தாள். அடிமுட்டோடு கிடந்த அரிசியைக் கையில் அள்ளிப் பார்த்துவிட்டு, “அப்பாடா, இன்னும் இரண்டு நாளைக்கு பிள்ளையளுக்குச் சமாளிக்கலாம் போலிருக்கே!” என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சில் நிம்மதியை விடத் தவிப்பே அதிகமாக இருந்தது.

குழம்புக்கு உப்பு தேவைப்பட்டது. பருப்பில் உப்புச் சேர்ப்பதற்காக சாடியைத் திறந்து விரலால் துழாவிப் பார்த்தபோது, அது வறண்ட கிணறு போல வெறும் வெள்ளை நிறப் படிவங்களுடன் காட்சியளித்தது. சில துளி நீரைச் சேர்த்தால், கோயில் தீர்த்தம் போல ஓரிரு நாள் குழம்பில் தெளிக்கலாம் என்று தீர்மானித்தவளாக கையில் இருந்த ஒரே தேங்காயை எடுத்தாள். அதை இரும்புக் கத்தியால் ஒற்றைப் போடு போட்டாள். ‘டக்’ என்ற சத்தத்துடன் தேங்காய் பிளந்தது. ஆனால், அதிலிருந்து வந்த நாற்றம் அவள் மூக்கைத் துளைத்தது. இரண்டு பாதிகளும் கறுத்து அழுகிப் போயிருந்தன. அவளது இதயமும் அந்த அழுகிய தேங்காய் போலவே இரண்டாகப் பிளந்தது. பிள்ளைகள் இருவரும் காலையில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டுப் பள்ளிக்குச் சென்ற முகம் நினைவுக்கு வந்து அவளது தொண்டையை அடைத்தது.

மனம் உடைந்தவளாக அந்த அழுகிய தேங்காயைத் தூக்கிக் கொண்டு திண்ணையில் இருந்த கணவனிடம் வந்தாள். “என்னங்க, பாருங்க… இருந்த ஒரு தேங்காயும் கெட்டுப்போச்சு. சாடியில ஒரு பருக்கை உப்பும் இல்லே. பிள்ளையள் பள்ளி உட்டு வர்றதுக்குள்ள ஏதாச்சும் சமைச்சாகணுமே, இப்போ என்ன செய்யுறது?” என்றாள். அவளது குரலில் இருந்த நடுக்கம் சிவகுமாரையும் தொற்றிக்கொண்டது.

“மூத்த தம்பி பழைய கடனைத் தராமல் வாசப்படி மிதிக்கக் கூடாதுன்னு நேற்றே சந்தியில வச்சுச் சொல்லிட்டான் லெட்சுமி,” சிவகுமாரின் குரல் கம்மியது. மானமுள்ள மனிதனுக்கு அந்த வார்த்தை எவ்வளவு பெரிய வதையாக இருந்தது என்பதை அவன் மட்டுமே அறிவான்.

காலையில் கையில் இருந்த ஐந்நூறு ரூபாயில், பிள்ளைகள் இருவருக்கும் பஸ் காசுக்கும், இடைவேளைச் சாப்பாட்டுக்கும் ஆளுக்கு இருநூற்றைம்பது வீதம் கொடுத்து அனுப்பி விட்டான். சிவகுமாரினதும் லெட்சுமியினதும் ஆசை, இலட்சியம் எல்லாமே ஒன்று தான். பிள்ளைகள் இருவரையும் என்ன பாடுபட்டாவது படிக்க வைத்து ஒரு அரச உத்தியோகத்தில் அமர்த்தி விட்டால் போதும், அதன் பிறகு வாழ்வில் பொருளாதாரக் கஷ்டமே இருக்காது என அந்தப் பாமரர்கள் இருவரும் அப்பட்டமாக நம்பி இருந்தனர். பாவம்! அரச உத்தியோகத்தர்கள் மாதச் சம்பளத்தில் வாழ்க்கை எனும் வண்டியை உருட்ட என்ன பாடு படுகிறார்கள் என்பதை அவர்கள் எங்கே அறியப் போகிறார்கள்?

சிவகுமார் தன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தான். வெறும் ஐம்பது ரூபாய் தாள் தான் இருந்தது. இந்த ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துச் சந்தையில் ஒரு சுண்டு உப்புக்கூட வாங்க முடியாது. ஒரு சாதாரணக் கல் உப்பின் விலை ரூபாய் நூற்றைம்பதில் தொடங்கி, சிறப்பான தரம் நானூறு ரூபாய் வரை விற்கிறது. சிறிய தேங்காய் நூற்றைம்பதில் தொடங்கி, நல்ல பெரிய தேங்காய் இருநூற்றைம்பது ரூபாய் வரை செல்லும். விலை கேட்டுக் கேட்டே அவனுக்கு அந்த விலைப்பட்டியல் அத்தனையும் மனப்பாடமாகி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் அந்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு அடுத்த பொழுதைக் கடத்த வேண்டுமானால், அவனுக்கு ஏதேனும் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

அவன் திண்ணை விளிம்பில் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்த போதுதான், அந்தப் பெண் வீதி வழியே நடந்து வந்து வாசலில் சிவகுமாரின் முன்னால் வந்து நின்றாள். முப்பது வயது மதிக்கத்தக்க முகம். யாழ்ப்பாணத்து அரச உத்தியோகத்தர்கள் உடுத்தும் நேர்த்தியான காட்டன் சேலை தான் கட்டியிருந்தாள். ஆனால் ஆங்காங்கே சாயம் வெளுத்திருந்தது. தோளில் ஒரு அலுவலகப் பை தொங்கியது. கண்களில் ஏதோ ஒரு பயம் கலந்த பதற்றம் தெரிந்தது. முகமெல்லாம் வியர்த்துக்கொட்டியது. அது வெயிலால் உண்டான வியர்வையா, அல்லது பதற்றத்தால் உண்டான வியர்வையா எனச் சரியாக சொல்ல முடியவில்லை. விழிகளை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் சின்னக் குரலில்,“அண்ணை… வீட்டில பிள்ளையள் காலையில இருந்து குடிக்கப் பாலில்லாமல் அழுகுறாங்கள். நேற்று ராத்திரியும் கஞ்சி தான். ஏதாச்சும் உதவி செய்யேலுமே அண்ணை?” நடுக்கத்துடன் கேட்டாள்.

சிவகுமார் அவளை முன்னைவிடக் கூர்ந்து பார்த்தான். அவனுக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை, தன் பைக்குள் இருந்த, அந்த நாளின் கடைசிச் சொத்தான ஐம்பது ரூபாய் நோட்டையும் எடுத்து அவளிடம் நீட்டினான். ‘நாமாவது கடையடி வரை போய் வரலாம், இவள் பிள்ளையாவது ஏதோ குடிக்கட்டும்,’ என்ற ஏழைக்கே உரிய ஒரு இரக்க குணம் அவனை உந்தித் தள்ளியது போலும். பணத்தை அவசரமாக வாங்கியவள் கண்கள் கலங்கின.

“கடவுள் உங்களை கைவிடமாட்டார்ணே,” என்று முனகியபடி தன் தோளில் தொங்கிய பையைத் திறந்து ஒரு பணக்கட்டை வெளியே எடுத்தாள். அந்தப் பணக்கட்டைக் கண்ட சிவகுமாரின் பார்வை அப்படியே அதிலேயே உறைந்து விட்டது. அந்தப் பணக் கட்டில் இருபது, ஐம்பது, நூறு என ரூபாய் நோட்டுக்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குறைந்தது ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். ‘இவ்வளவு காசைப் பைக்குள் வைத்துக் கொண்டு தான் இவள் வீடு வீடாகப் பிச்சை கேட்கிறாளா?’ சிவகுமாரின் நெஞ்சுக்குள் சட்டென்று கோபம் ஏறியது. ‘ஏமாந்துவிட்டோம். நம்மைக் காட்டிலும் வசதியாக இருப்பவள் நம்முடைய கடைசி ஐம்பது ரூபாயையும் பறித்துக்கொண்டு போகிறாளே!’

அவள் பணக் கட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு, வேகமாக வீதியில் நடந்து மறைந்தாள். அடுத்த சில நிமிடங்களில் சிவகுமாரின் வறுமை அந்தக் கோபத்தை ஒரு விசித்திரமான சிந்தனையாக மாற்றியது. ‘கடவுள் வழிகாட்டுவான்,’ என்ற அந்தப் பெண்ணின் பிரார்த்தனை பலித்து விட்டதாக அவன் எண்ணினான். தன் பிரச்சினைகளுக்குக் கடவுள் அந்தப் பெண் வடிவில் ஒரு தீர்வை அனுப்பியதாக அவன் நம்பினான்.

‘அவளிடம் இருக்கும் அந்தப் பையில் இருக்கும் பணம் மட்டும் கைக்குக் கிடைத்தால்? அரை மூடை அரிசி வாங்கலாம். கொஞ்ச நாளைக்கு லெட்சுமி நிம்மதியாக அடுப்பு மூட்டுவாள். பிள்ளைகளின் ஸ்கூல் பீஸைக் கட்டலாம். தையல் கடைக்காரன் வாடகைக்குக் குடையும் குடைச்சலைத் தீர்க்கலாம்.’ இதுவரை அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத, யாழ்ப்பாணத்து மண்ணின் மானத்தோடு வாழ்ந்த ஒரு நேர்மையான மனிதனின் உள்ளே, விலைவாசி உயர்வு ஒரு திருடன் உருவாக வழி சமைத்தது. அவள் போகும் பாதையை கற்பனை செய்தான். ‘அவள் அயலூர்க்காரி. எப்படியும் சண்டிலிப்பாய் குறுக்குச் சந்து வழியாகத்தான் பிரதான வீதிக்குக் போக வேண்டும். அந்தச் சந்தின் இருபுறமும் உயரமான கிடுகு வேலியும், பாழடைந்த சுவர்களும் மட்டும் தான் இருக்கும். இந்த நேரத்திற்கு அங்கே ஆள் நடமாட்டமே இருக்காது,’ என எண்ணியபடியே சிவகுமார் கடகடவென்று வீட்டுக்குள் போனான். லெட்சுமி கிணற்றடிக்குப் போயிருந்தாள்.

அறைக்குள் கிடந்த பழைய மரப்பெட்டியைத் திறந்து, போன வருடம் மகன் ஸ்கூல் நாடகத்திற்காகப் போட்டிருந்த ஒரு கறுப்புத் துணி முகமூடியை எடுத்தான். தையல் மேசையின் மேல் கிடந்த கூர்மையான பெரிய தையல் கத்திரிக்கோலையும் கையில் மறைத்துக்கொண்டான். கால்கள் நடுங்கின, நெஞ்சு ‘டொப் டொப்’பென்று அடித்துக்கொண்டது. இருந்தாலும் பசியும், ஏமாற்றமும் அவனை உந்தித்தள்ள, அந்தச் சந்து நோக்கி ஓடுவதும் நடப்பதுமாய் விரைந்தான்.

 

சந்தின் ஒரு பாழடைந்த சுவரின் பின்னால் ஒளிந்து நின்று மூச்சிரைக்கக் காத்திருந்தான். ‘சிவகுமார், நீ ஒரு கள்ளன், உன்னை ஊரே காறித்துப்பும்,’ என்று மனசாட்சி கத்தியது. ஆனால், சமையலறையில் லெட்சுமி காட்டிய அந்த அழுகிய தேங்காயும், உப்பில்லாத சாடியும் தான் கண்ணுக்குள் வந்து போனது. சில நிமிடங்களில் அந்தப் பெண் அந்தச் சந்துக்குள் நுழைந்து நடந்து வந்தாள். பையைத் தன் நெஞ்சோடு இறுக்கமாகக் கட்டியணைத்தபடி, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

அவள் நெருங்கியதும், சிவகுமார் முகமூடியை அவசரமாக மாட்டிக்கொண்டு சட்டென்று முன்னால் பாய்ந்தான். அவளது கையைத் திடீரென்று திருகிப் பிடித்தான். கத்திரிக்கோலை அவளது கழுத்துக்கு நேரே காட்டினான்.

“சத்தம் போடாதே! கையில் இருக்கிற பையை அப்படியே கீழ போடு! காசையெல்லாம் எடு!” குரலை மாற்றி, கரகரப்பாக மிரட்டினான். அந்தப் பெண் பயத்தில் அப்படியே உறைந்து விட்டாள். ஆனால், அவளது உயிராகக் கருதிய பையை மட்டும் அவள் விடவில்லை. அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.

“அண்ணை… தயவுசெய்து இந்தப் பணத்தை மட்டும் எடுத்திடாதீங்க அண்ணை. என்னை வேணுமென்றால் அடிங்க, காசை எடுத்திடாதீங்க,” என்றாள் கதறலாக. “நான் ஒண்ணும் பிச்சைக்காரி இல்லை அண்ணை… என்னை நம்புங்க…”

சிவகுமாரின் கைப் பிடி கொஞ்சம் தளர்ந்தது. “பிச்சைக்காரி இல்லைன்னா அப்புறம் ஏன் வீடு வீடா காசு வாங்குறாய்? பையில இவ்வளவு காசு வச்சுக்கொண்டு ஏமாத்துறியா?” என்று அதே கரகரப்புக் குரலில் கேட்டான்.

அவள் அழுதுகொண்டே, மூச்சிரைக்கத் சொன்னாள்: “என் புருஷன் டவுன்ல இருக்கிற கச்சேரியிலதான் கிளார்க்கா வேலை செய்றார் அண்ணை. அரச உத்தியோகத்தர் என்று தான் எங்கப்பு தேடித் தேடி அவரைக் கட்டி வெச்சாரு. ஆனா அவரோட மாசச் சம்பளம் எதுக்குமே பத்தல. முன்னாடியெல்லாம் அந்தச் சம்பளத்தை வச்சு எப்படியோ கஞ்சி குடிச்சு குடும்பம் ஓடிச்சு. இப்போ விலைவாசி மூணு மடங்கா ஏறிப்போச்சு அண்ணை. நாலு பிள்ளையள் எனக்கு. அதுல வேற ரெட்டைப்பிள்ளங்க கைக்குழந்தைங்க. அதுங்க ரெண்டுக்குமே ரெண்டு நாளைக்கு ஒரு பால் டின் வேணும். என் புருஷனோட ஒரு மாதச் சம்பளத்தை வச்சு பத்து பால் டின் கூட வாங்க முடியாது. ஒரு மாசக் கரண்ட் பில்லே ஏழாயிரம் ரூபாய் வருது. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவருன்னு வெளியில் தான் கௌரவம், உள்ளுக்குள்ள நாங்க படுற அவஸ்தை அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.”

அவளது குரல் அந்தச் சந்தெங்கும் எதிரொலித்தது. சிவகுமார் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

அவள் தொடர்ந்தாள்: “சாப்பாட்டுக்கே வழியில்லாமல் யாழ்ப்பாணம் முழுக்கக் கடன் வாங்கிட்டோம். கடைக்காரன் இனிமேல் ஒரு பருப்புக் கூட கடன் தரமாட்டேனென்று கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டான். வீட்டில் நேற்றிலிருந்து பால் கூட இல்லை. பிள்ளையள் பசியில அழுது, அழுது தொண்டை வறண்டு போய்க் கிடக்காங்க. அரசாங்க உத்தியோகம் பார்க்கிற புருஷனை வச்சுக்கொண்டு வெளியில் போய் பிச்சை கேட்க முடியாம மானத்துக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கெடந்த நான், பிள்ளையள் பசியில அழுகுறதைத் தாங்க முடியாம தான் அண்ணை இந்த முடிவுக்கு வந்தன். இது தெரிஞ்சா என் புருஷன் என்னைக் கொண்ணே போட்டிருவார். அவர் அந்திக்கி வீட்ட வாறதுக்குள்ள நான் ஊர் போய்ச் சேரணும் அண்ணை. உசிரைப் பணயம் வெச்சி ஊர் ஊரா அலைஞ்சு சேர்த்த காசுண்ணை இது. இதை வச்சுத்தான் பிள்ளைகளுக்குப் பாலும் அரிசியும் வாங்கணும். இது போயிட்டா நான் என் பிள்ளைகளோட சேர்ந்து விஷத்தைக் குடிச்சுட்டுச் சாவதைத் தவிர வேற வழியில்லை அண்ணை… என்னை விட்டுடுங்க…”

வார்த்தைக்கு வார்த்தை “அண்ணை, அண்ணை,”  என்று ஒரு சொந்த அண்ணனிடம் குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி அழுது புலம்புவது போல புலம்பிய அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிவகுமாரின் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.

 

அரசாங்க ஆபீஸில் வேலை செய்யும் ஒரு கிளார்க்கின் குடும்ப நிலைமையே இதுதானா? ஒரு மாதச் சம்பளத்தை வைத்துக் கொண்டு நாலு பிள்ளைகளுக்குப் பால் மா கூட வாங்க முடியாத அசிங்கமான பொருளாதாரச் சூழலிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

அவன் கையில் இருந்த கத்திரிக்கோல் மெதுவாகக் கீழே நழுவித் தரையில் விழுந்தது. முகமூடிக்குள்ளே அவனது கண்கள் முழுக்கக் கண்ணீர் முட்டி, காது ஓரமாக வழிந்தது. அவன் கொள்ளையடிக்க நினைத்தது தன்னைப்போலவே இந்த நாட்டின் அரசியல் சீரழிவாலும், விலைவாசி உயர்வாலும் நசுக்கப்பட்டு, பிள்ளைகளின் பசிக்காகத் தன் மானத்தையே அடகு வைத்துவிட்டுப் போராடிக்கொண்டிருக்கும் இன்னொரு அப்பாவி ஏழைத் தாயை என நினைக்கையில் அவனுக்குத் தன் மீதே அருவருப்பாக இருந்தது. தான் எவ்வளவு பெரிய பாவி என்ற எண்ணம் அவனது ஆன்மாவை உலுக்கியது.

சில நொடிகள் அவனால் நகரக் கூட முடியவில்லை. நாக்கு வறண்டு போயிருந்தது. பிறகு மெதுவாக அவளது கையை முற்றிலுமாக விட்டான். முகமூடியைக் கழற்றாமலேயே தலையைக் குனிந்து கொண்டான்.

“போ….போங்க…” என்றான், அவனது அசல் குரலில்.

அவள் பயத்தோடும் குழப்பத்தோடும் அவனைப் பார்த்தாள். கத்திரிக்கோலைக் கீழே போட்டுவிட்டு அழும் அந்தத் திருடனை அவளுக்குப் புரியவில்லை.

“போங்க… உங்க பிள்ளையளிடம் சீக்கிரம் போங்க,” அதற்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லை.

முகமூடியைக் கழற்றிப் பைக்குள் திணித்துக்கொண்டு, அவன் திரும்பி வீட்டை நோக்கி தள்ளாடியபடியே நடந்தான். அவனது உடலும் உள்ளமும் சோர்ந்து கிடந்தது. பசிக்கும் பிள்ளைகளின் முகம், அந்தப் பெண்ணின் கண்ணீர் என அனைத்தும் அவன் மனத்திரையில் ஓடின. வறுமை அவனை அசிங்கப்படுத்தி, ஒரு திருடனாக மாற்றப் பார்த்திருந்தது. ஆனால், அவனது மனசாட்சி இன்னும் சாகாமல் உயிரோடு இருப்பதை அவன் உணர்ந்தான். காசைக் கொள்ளையடித்திருந்தால் அவன் வீட்டில் அரிசி வந்திருக்கும், ஆனால் அவனுக்குள் இருந்த மனிதன் செத்திருப்பான்.

வீட்டை அடைந்தபோது, லெட்சுமி கொள்ளிகளை அடுக்கியபடி அடுப்பங்கரையில் கவலையோடு நின்று கொண்டிருந்தாள். சிவகுமார் தலைகுனிந்தபடி வெற்றுக்கையோடு முற்றத்தில் வந்து நின்றான். அவளிடம் சொல்ல அவனிடம் வார்த்தைகள் இல்லை. “மதியச் சாப்பாட்டிற்கு வழி என்ன?” என்பது போல் அவனது விழிகளை நோக்கினாள் லெட்சுமி.

அப்போது, வாசலோரப் பனைமரத்தின் உச்சியிலிருந்து ‘தொப்’ என விழுந்த பனம்பழம் அவளது வினாவுக்கு விடையளித்தது. சிவகுமார் மெதுவாக நடந்து போய், குனிந்து அந்தப் பனம்பழத்தை எடுத்தான். அதன் மேல் ஒட்டியிருந்த மணலைத் தட்டினான். அவனுக்கு அது வெறும் பனம்பழமாகத் தெரியவில்லை. இன்றைய பசியை ஆற்ற, அவனது நேர்மைக்காக அந்த இயற்கை கொடுத்த ஒரு கொடை போலத் தோன்றியது. அதனைச் சுட்டுப் பாணி எடுத்து சாதத்தோடு கரைத்துத் தின்றால் இன்றைய பொழுதைக் கழித்துவிடலாம்.

அரசாங்க ஊழியனே பிச்சை எடுக்கும் இந்தத் தேசத்தில், தன் மானத்தை விற்காமல் பசியோடு வாழப் பழகிக் கொள்வதே ஆகப் பெரிய கௌரவம் என அவன் உணர்ந்து கொண்டான்.

******