Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

பகவத் கீதை வாழ்க்கையை ஒரு சவாலாகவும், கடமையாகவும், ஆன்மீகப் பயணமாகவும் பார்க்கிறது. இது மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கும் முக்கிய வாழ்க்கை நெறிமுறைகள்.

உபநிடங்களில் ஒரு கதை உண்டு. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருந்தனவாம். பறவைகளில் ஒன்று தன் இந்திரியங்களை அடக்கி தன்னுள்ளே நிலை பெற்றதாய் இருந்ததாம். மற்றொன்றோ இனிய கனிகள் மற்றும் இனிப்பற்ற கனிகளை உண்டு இன்பதுன்பங்களுக்கு ஆளாகி நின்றதாம்.

இரண்டாவது பறவை துன்பப் படும்போதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைத்துப் பார்த்து அதன் அருகே வர முயன்றதாம். அருகே வரவர அதன் துன்பம் குறைந்ததாம். கடைசியில், மேலான நிலையிலிருந்த பறவையுடன் ஒன்றி ஆனந்தமயமாக நின்றதாம்.

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை அறியாத ஜீவாத்மாவாக நிற்கிறான். நிறைநிலையில் நிற்கும் பரம்பொருளுடன் ஐக்கியமாகும்போது பரமானந்த நிலையை உணர்கிறான். இந்த ஐக்கியத்திற்கும் பரம்பொருளின் மகத்துவத்தை உணர்வதற்கும் ஒரு நெருக்கடியான நிலை அவசியமாகிறது.

நெருக்கடியின்போது மட்டுமே நாம் நம் பலத்தையும் பலவீனங்களையும் அறிய முடியும். அர்ஜுனனுக்கு குக்ஷேத்திர யுத்தம் என்ற நெருக்கடி வந்தவுடன், இதுவரை யுத்தம் என்றால் மனம் கலங்காது, அச்சத்தை உணராத அர்ஜுனனுக்கும் மனக்குழப்பம் நேரிடுகிறது.

மனம் குழம்பிய அர்ஜூனன், இறைவன் கண்ணனைப் பார்த்துக் கூறுகிறான் –
கார்பண்ய-தோஷோபஹத-ஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட-சேதா:
யச் ஶ்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே
ஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்
அதாவது, 
நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து,  பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி  கேட்டுக் கொள்கிறேன். இப்போது சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறான்.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி
பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத  கடமைகளைச் செயலாற்றுவதில், யாருமே கவலைப்படக் கூடாது என்கிறான் கண்ணன்.

பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் பாரதியார் எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பாமர மக்களும் கீதையின் ஆழமான தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 1912-ஆம் ஆண்டு புதுச்சேரியில் தங்கியிருந்தபோது இந்த மொழிபெயர்ப்பைச் செய்தார்.

பாரதியார் தனது கீதை மொழிபெயர்ப்புக்கு மிக நீண்ட, ஆழமான முன்னுரையை எழுதியுள்ளார். அதில் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் கீதையின் கர்ம யோகம் குறித்த தன் பார்வைகளைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.அர்ஜுனனின் தயக்கத்தைப் போக்கி, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என கிருஷ்ணர் போதித்த கர்ம யோகத்தை, பாரதியார் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்தார். அச்சம் தவிர்த்து நாட்டுக்காகப் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை மக்களுக்கு ஊட்ட கீதையைப் பயன்படுத்தினார்.

பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் கீதையின் தாக்கத்தைக் காணலாம். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, குருவாகப் பாடிய பாரதி, கீதையில் வரும் விஸ்வரூப தரிசனத்தையும் ஞான யோகத்தையும் தன் கவிதைகளில் எளிமைப்படுத்தித் தந்துள்ளார்.

“எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறான்” என்ற கீதையின் சமத்துவக் கருத்தை, பாரதியார் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் ஆயுதமாகக் கையாண்டார்.

பாரதியார் கீதையை வெறும் மத நூலாகப் பார்க்காமல், மனித வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகவே அணுகினார். சோம்பலையும் பயத்தையும் நீக்கி, வீரத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதே உண்மையான கீதா உபதேசம் என்பது பாரதியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

பாரதி கீதையை மொழிபெயர்த்தபின் கீதை முன்னுரை என்ற கட்டுரையில் கீதை குறித்த தனது அணுகுமுறை என்ன என்று விளக்கினார். இறைவன் எங்கும் உளன், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதே அவன்  கீதையில் கண்ட உண்மை.

பாரதி பாடல்களில் பகவத் கீதை மேற்கோள் வரும் இடமெல்லாம் இலக்கிய நயத்தைக் காணலாம். கண்ண பிரானைவிட அதே கருத்தை கொஞ்சம் ஆணித்தரமாகவே கூறுவான்.

போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை  புகன்றதெவருடைய வாய்? – பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவி மலர்த்திரு வாய்.

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

இதுவும் பகவத் கீதை ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பே.

இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? ஒவ்வொரு மனிதனும் பாசப் பிணைப்பு என்ற பந்தத்தில் மாட்டுகிறான். இந்தப்பிணைப்போடு வருவது சோகம்; மனதில் சோகம் வந்தால் தானே மோஹம் என்ற மாயையில் மாட்டி புத்தி செயலிழக்கும்.

கவியரசு கண்ணதாசன், மிக எளிமையாக தனது பாடல்களில் இதைக் கூறுகிறார் –

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

என்றும்,

சொந்தம் ஒரு கை விலங்கு , நீ போட்டது

அதில் பந்தம் ஒரு கால் விலங்கு,  நான் போட்டது

சோதனை மேல் சோதனை,  போதுமடா சாமி

என்றும் பாடுகிறார்.

கண்ணன், பாரதி, மற்றும் கண்ணதாசன் மானுடத்துக்குக் கூறுவது இதைத்தான் –  

பலனை எதிர்பாராமல் நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் தன் கடமையைச் செய்ய வேண்டும் (நிஷ்காம கர்ம யோகம்). இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி இரண்டிலும் சமமான மனநிலையைப் பேண வேண்டும்.

மனம் ஒருவனின் சிறந்த நண்பனாகவும் இருக்கலாம், அல்லது எதிரியாகவும் மாறலாம். எண்ணங்களைச் சீர்படுத்த வேண்டும்.

கடந்த காலக் கவலைகளையோ எதிர்கால அச்சங்களையோ நினைக்காமல், தற்போதைய தருணத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

உடல் தற்காலிகமானது, அழிவுள்ளது; ஆனால் ஆன்மா நிரந்தரமானது, அழியாதது என்ற உண்மையை உணர வேண்டும்.

காமம், கோபம், பேராசை மற்றும் அகந்தை போன்றவை மனிதனின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

தத்வித்தி ப்ரணிபாதேன  பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே க்ஞானம் க்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய்தால், உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் நமக்கு ஞானத்தை அளிக்க முடியும் என்கிறது கீதை.

இதனையே பாரதி,

கண்ணன் திருவடி எண்ணுக மனமே

திண்ணம் அழியா வண்ணம் தருமே.

தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை

ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே.

என்று பாடுகிறார்.

 

கவியரசு கண்ணதாசன்,

 ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்… வேங்கடம் அறியுமடா

நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால்… உன் கடன் தீருமடா…

செல்வம் உன்னிடம் சேருமடா…

 

எரிமலை போலே ஆசை வந்தாலும்… திருமலை தணிக்குமடா…
நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா

உன் எண்ணங்கள் மாறும்… வண்ணங்கள் மாறும்…
நன்மைகள் நடக்குமடா… உள்ளம் நல்லதே நினைக்குமடா…

என்றே பாடுகிறார்.

அடுத்த மாதம் சந்திப்போம்.