கண்மணி  – ஹரணி. 

காலமானார் எழுத்தாளர் ஹரணி!(இயற்பெயர்: முனைவர் க.அன்பழகன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர். தஞ்சாவூர் ஹரணி என அழைக்கப்பட்டவர். நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர்களுக்கான இலக்கியம், சங்கப் பாடல்களின் எளிய உரை, அகராதிப் பணி, உயர்கல்வி பாட நூல்கள் என அவரது படைப்புலகம் பரந்துபட்டது. 65 வயதே ஆன ஹரணி, அக்டோபர் 2, 2026 ல் மறைந்தார். அவர் கடைசியாக அம்ருதா இதழுக்கு (நவ. 2026) எழுதிய கதையைப் பற்றி, அவர் நினைவாக குவிகம் இதழில் பதிவு செய்கிறேன்).

“ஆறறிவு படைத்த மனிதர்களை விட, ஐந்தறிவு படைத்த விலங்குகள் எவ்வளவோ மேல்” என்னும் கருத்து, பலவிதங்களில் இலக்கியங்களில் காணப்படுவதுதான். விலங்குகளுக்கும், மனிதர்களைப் போல ஆசை, பாசம், கோபம், வருத்தம் என எல்லா உணர்வுகளும் உண்டு என்பது அறிவியல் கூறும் உண்மை.

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு, கிராமங்களில் வாழும் எளிய மனிதர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அவர்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது அவர்கள் வீட்டில் வளரும் பிராணிகளுடன் ஆன பாசமும் நேசமும்!

பெற்ற குழந்தைகளை விட, தான் வளர்க்கும் மாடும், ஆடும், கோழியும், பூனையும், நாயும் மேலானவை என்பதை, நெகிழ்ச்சியுடன் சொல்கிறது “கண்மணி” சிறுகதை.

இரவு பகல் என்று விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது ‘கண்மணி’. “படுபாவிங்க, வாயில்லா ஜீவன்னு கூடப் பாக்காம கல்லால அடிச்சிருக்காங்க. வயித்துப் புள்ளக்காரி மேலக் கல் விட்டெறியறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ?” வருந்தினாள் ரேணுகா – முதலில் புகையிலைக் கம்பெனியிலும், பிறகு சீவல் கம்பெனியிலும் வேலை பார்த்துவிட்டு, இரவு ஏழு மணிக்குத்தான் வீட்டிற்கு வருவாள். வீட்டின் நிதி நிலைமை அப்படி. இந்த வேலையும் இல்லையென்றால் சாப்பாட்டுக்கு வழியில்லை.

அவள் கணவன் மூர்த்தி நாள் முழுக்கப் படாதபாடு பட்டு, மணல் வண்டி ஓட்டிப் பிழைப்பு நடத்துகிறான்.  திருட்டு மணலுக்காக ஒரு முறை ஜெயிலுக்கும் போய் வந்திருக்கிறான். மூணு மாசம் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் கட்டி பிணையில் வெளியே வந்தான். இப்போது அரசு அனுமதியுடன் 10 மைல் தள்ளியுள்ள ஆற்றிலிருந்த மணல் அடிக்கிறான். மாடுகள் முடியாமல் நுரை தள்ளிக் களைத்துப் போகின்றன. இரண்டு முறை மணல் ஏற்றி ஆற்றுப் படுகையில் ஏறும்போது, ஏற முடியாமல் மாடுகளோடு வண்டி பின்னிறங்கி, ஆற்றுக்குள் விழுந்து மூர்த்தி பிழைத்து வந்ததே மறுஜென்மம்.

ஏழ்மையில், மாடுகளுக்கு வைக்கோல் தவிர சத்தாக எதுவும் கொடுக்க முடியாத நிலை. மண்ணெடுக்க பர்மிட்டும் போடாமல் இழுத்தடிக்கிறார்கள். “கொள்ளையிலே போறவனுங்க. வாழவும் வுடமாட்டேங்குறானுங்க. சாவவும் விடமாட்டேங்குறானுங்க” என்று நொந்து கொள்கிறான் மூர்த்தி.

கண்மணி ஆடு கத்திக்கொண்டே இருந்தது. ரேணுகாவும், “கொஞ்சம் பொறுத்துக்கடா. விடியட்டும். அப்பா ஒன்ன ஆசுபத்திரிக்கு அழச்சிட்டுப் போயிடுவாரு. வயித்துக்கு நல்லா மேஞ்சியா. பத்தலியா.” தன் குழந்தையுடன் பேசுவதைப்போல வீட்டுப் பிராணிகளுடன் பேசுவது அவள் வழக்கம்.

மாடும் ஆடும் கோழியும் நாயும் பூனைகளும்தாம் ரேணுகா, மூர்த்தியின் உலகம். ‘கண்மணிக்குக் கல்லடியினால், உள்ளே இருக்கும் குட்டிகளுக்கு ஏதும் ஆபத்தாகி விடுமோ’ என்று கவலைப் பட்டார்கள். கை வைத்தியமாக, வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாள். மாட்டுக்கு வைத்திருக்கும் வயித்து வலி மருந்தை எடுத்துவந்து, கண்மணி வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினாள்.

கண்மணி கத்தலை நிறுத்தவே இல்லை. எப்போதும் போல, கண்மணியிடம் பேசிக்கொண்டே இருந்தாள் ரேணுகா. “என்னதாண்டா பண்ணுது உனக்கு? நான் என்னடா செய்யணும்?” என்று அழ ஆரம்பித்தாள்.

ரேணுகாவிற்குப் பிறந்தவை ‘இரட்டை’ குழந்தைகள். சமாளிப்பது சிரமம். அப்போதெல்லாம் குடித்துக்கொண்டே இருப்பான் மூர்த்தி. வீடு, குழந்தைகள் எல்லாவற்றையும் சமாளிக்க ரேணுகா மிகவும் சிரமப்பட்டாள். திருமணம் செய்துகொள்ளாத மூர்த்தியின் அண்ணன், இந்தக் கஷ்டங்களையெல்லாம் பார்த்து, தன் மனை ஒன்றை, மூர்த்தியும் ரேணுகாவும் அனுபவிக்கவும், உரிமையை இரட்டைப் பிள்ளைகளுக்கும் எழுதி வைக்கிறான். மூர்த்தியின் அக்கா ஈசுவரி, இதைப் பயன்படுத்திக்கொண்டாள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதாய்க் கூறி, அண்ணன் எழுதிக்கொடுத்த மனையை மூர்த்தியிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்ள திட்டம் போடுகிறாள். குழந்தைகளைப் பெற்றோரிடம் அதிகம் சேராமல் பார்த்துக் கொண்டாள். வளர்ந்து, இரண்டு பிள்ளைகளும் காதல் திருமணம் செய்துகொண்டு, அத்தை ஈசுவரியுடனேயே, அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மூர்த்தி, ரேணுகாவைப் புறக்கணித்தனர்.

படிப்பறிவில்லாத மூர்த்தியும், ரேணுகாவும் வேறு வழியில்லாமல், வீட்டுப் பிராணிகளுடன் வாழ்க்கையை ஓட்டினார்கள்.

மறுநாள் காலை கண்மணியை ஆட்டோவில் அழைத்துச் சென்று டாக்டரிடம் கண்பித்து ஊசி போட்டு, மருந்து வாங்கிக்கொடுக்கிறான் மூர்த்தி. “ஒண்ணும் ஆகாது. பயப்படாதீங்க. எப்ப வேணாலும் குட்டி போட்டுடும்” என்றார் டாக்டர்.

அப்போது வீட்டிற்கு பெரிய பிள்ளை தன் குழந்தையுடனும், மனைவியுடனும் வருகிறான். “அத்தைதான் குழந்தையைக் காண்பித்து வரச் சொன்னார்கள்” என்கிறான். பேரனைக் கையிலெடுத்து வாரியணைத்து மகிழ்கின்றார்கள் ரேணுகாவும், மூர்த்தியும். எதுவும் சாப்பிடாமல், தாத்தா மூர்த்தி கொடுக்கும் பொம்மையையும் வாங்கிக்கொள்ள மறுத்து, வீட்டிற்குக் கிளம்புவதிலேயே இருக்கிறார்கள் வந்தவர்கள்.

அப்போது கண்மணி பெருங்குரலெடுத்துக் கத்துகிறது. குழந்தையைக் கொடுத்துவிட்டு ஓடுகிறாள் ரேணுகா. கண்மணி ஒரு குட்டியைத் தரையில் ஈன்றுவிட்டு, அடுத்ததை ஈன, முனகிக்கொண்டிருந்தது.

“அத்தை தேடுவாங்க, நான் கிளம்புகிறேன்” என்ற மகனுக்கு, “கிளம்பு” என்ற ஒற்றைச் சொல்லில் விடைகொடுத்துவிட்டு, ரேணுகா, மூர்த்தியிடம், “ஏங்க, மறுபடியும் பேத்திதான் பொறக்கும் பாருங்க” என்று சொல்லி, கண்மணியைத் தடவிக் கொடுத்தாள். மூர்த்தி ஒரு வறண்ட சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்!

கிராமத்து மனிதர்கள், அவர்களின் வாழ்வு நிலை, உறவுகளின் துரோகம், சுயநலம் எனத் தெளிவான நடையில் கதை சொல்கிறார் ஹரணி. குழந்தைகளின் மீதுள்ள பாசத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத, சொல்லப்போனால் அதைவிட அதிகமான பாசத்தைக் கண்மணியின் மேல் காண்பிக்கும் மூர்த்தியும் ரேணுகாவும் உயிர்ப்புடன் உலவுகின்றார்கள். ஓர் அழகிய கிராமத்தில் பயணிக்கும் வாசிப்பானுபவம்.