மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்”
— கண்ணதாசன்
அவர் எழுதிய வார்த்தைகள் இன்று அவருக்கே எத்தனை புகழ்மாலைகளைச் சூட்டுகின்றன! ஒருவன் பிறந்தால் எப்படிவாழ வேண்டும், பிறர் போற்றும் வகையில் வாழ வேண்டும் என்று எழுதிய திரு. கண்ணதாசன், எழுதும்பொழுது கண்டிப்பாகத் தனக்கும் அது ஒருநாள் பொருந்தும் என்று நினைத்திருக்க மாட்டார்.
‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல், பட்டங்கள், பதவிகள், ஆளுமை ஆகியவை அளிக்காத பெருமையை, வாசிப்பு என்ற ஒரு சொல் இவருடைய வாழ்க்கையில் ஒரு மகத்தான சாதனையாகப் படைத்தது என்றால் அது மிகையாகாது.
சங்க இலக்கியம் முதல் பாகவதம், பாரதியார் பாடல்கள் வரை இவர் படிக்காத நூல்களே இல்லை என்பதற்குச் சாட்சி, இவர் எழுதிய பாடல்களிலும் நூல்களிலும் அவற்றின் தாக்கம் காணப்படுவதே.
ஒரு நூலை வாசிப்பது என்பது ஆத்மானுபவம்; அதை நினைவில் நிறுத்தி, தன்னுடைய பாடல்களில் தகுந்த இடத்தில், நிகழ்வுக்கு ஏற்றவாறு பிரதிபலிக்கச் செய்வது பரமாத்ம அனுபவம்.
தன்னுடைய எண்ணற்ற பாடல்களின் மூலம் பல அருமையான கருத்துகளைத் தந்த கவிஞர், அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை.
பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், அந்தப் பரமனின் மீது முப்பது திருப்பாவைப் பாடல்களைப் பாடியுள்ளாள். ஆண்டாள் என்றாலே பக்தி, பிரேமை, அர்ப்பணிப்பு, ஆலிங்கனம் ஆகியவைதான் நினைவுக்கு வரும். அவள் கண்ணனிடம் கொண்ட பக்தி,
‘ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணோ: ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்’ என்ற நவவித பக்திக்கும் மேலானது.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்தக் கண்ணன் சொன்னதால், மார்கழி முப்பது நாட்களும் பாவை நோன்பு நோற்று அந்த வடபத்ரசாயியை அடைந்தவள் ஆண்டாள்.
அவள் எழுதி அருளிய திருப்பாவையில் ஒரு பாடல்:
“
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்!
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.”
இது தோழியர்கள் நப்பின்னையைப் பார்த்துச் சொல்வது போல் அமைந்துள்ளது.
‘எம்பிராட்டியே! சுடர்விட்டு எரியும் குத்துவிளக்கின் ஒளியில், யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல், அன்னத்தின் தூரிகை, இலவம் பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில்தூரிகை ஆகிய ஐந்து விதமான பொருட்களால் அமைக்கப்பட்ட மென்மையான பஞ்சணையின் மீது, நப்பின்னையின் மலர்மார்பில் பள்ளிகொண்டிருக்கும் என் கண்ணனை எழுப்பாமல் தடுக்கிறாயே! இது உனக்கே நியாயமா?
மை தீட்டிய அழகிய கண்களை உடைய எம்பிராட்டியே! அந்த மேகவர்ணக் கண்ணனை நாங்கள் எப்போது காண்பது? உன்னால் அவனைப் பிரிய முடியவில்லை. ஆனால் நாங்கள் அவனை எப்போது காண்பது?’ என்று தோழியர்கள் கேட்பதாகப் பாடுகிறாள் ஆண்டாள்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று சொன்ன கண்ணனைப் பாடி, பறை கொண்டு அவன் பாதம் சேர்ந்த கோதை நாச்சியாரைப் பாருங்கள்! எப்படி நம் கவிஞரை ஈர்த்திருக்கிறாள் என்று!
“குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தனை!”
என்ற பாடல் பச்சை விளக்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
எப்படி எழுதுகிறார் கவிஞர்! மணமுடித்த பெண், மலர் மஞ்சத்தில் தன் மணாளனுக்காகக் காத்திருப்பதை, ஆண்டாளின் பாடலை ஒட்டியே அழகாகப் படைத்திருக்கிறார்.
ஆண்டாள் பாடுகிறாள்: சயனத்தில் இருக்கும் கண்ணனை துயில் எழுப்ப வேண்டும் என்று.
கவிஞரோ, அழகான குத்துவிளக்கின் சுடரில், மாலைத் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்ட மலர் மஞ்சத்தில், மெல்லியலாள் தன் கைப்பிடித்தவனுக்காகக் காத்திருக்கிறாள். அந்த வண்ண மலர்க்கண்ணன் வராமல் போய்விடுவானா என்ன? அழகான பெண்ணின் அன்புக்கு மயங்காமல் இருப்பானோ? என்று அந்த நிகழ்வுக்குப் பொருத்தமாகச் சந்தங்களை அமைத்திருப்பது சுவையோ சுவை!
ஆண்டாள் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள். கண்ணதாசனின் நாயகியோ அவனை மஞ்சத்தில் எதிர்கொள்ளக் காத்திருக்கிறாள்.
சந்தங்கள் ஒன்றுதான்; ஆனால் எண்ணங்களோ வேறுவேறு!
பின்வரும் சரணங்களில் அவர் அந்த நாயகன், நாயகியின் நிலையைப் பேசுகிறார்.
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்தில் குத்துவிளக்குதான் ஒளி தரும் தாரகை. வீட்டு மாடத்தில் பொழுது சாயும் நேரத்தில் விளக்கேற்றுவது, புழக்கடையில் விளக்கு வைப்பது, நடுக்கூடத்தில் விளக்கு வைப்பது என்பவை பண்டைய மரபுகள்.
மின்சாரம் வந்த பிறகும், மின்சார ஒளியில் பாடல் எழுதினாலும், கவிஞரை ஈர்த்தது அந்த மின்சாரம் இல்லாத காலத்து மரபு விளக்குகள்தான்.
விளக்கின் திரியை நிமிண்டியும், நீட்டியும் ஒளியை அதிகரித்தோ குறைத்தோ செய்வது வழக்கம்.
ஆன்மிகவாதியான கவிஞரின் உடலும் உள்ளமும் திளைத்தது என்னவோ பழமையில்தான். அதனால்தான் அவரது பாடல்களில் அந்தப் புராணப் பின்னணிகள் இடம் பெற்றன என்றால் மிகையாகாது.
இந்தப் பாடலில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்
.
செதலை பாலசுப்ரமணியம், பாலு மாமா என்று அழைக்கப் படும் கர்நாடக இசைக் கலைஞர், தன்னுடைய கச்சேரிகளில் சில பாடல்களுக்கு முன்பு விருத்தம் அல்லது செய்யுள் போன்றவற்றைப் பாடிவிட்டு, பின்னர் முறையான ராகம், தாளத்துடன் பாடலைப் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பிற்காலக் கலைஞர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
கவிஞரின் இந்தப் பாடலும் அந்தப் பாணியை ஒட்டியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நான்கு வரிகள் அந்தப் பாணியை ஒட்டி செய்யுள் போலவும், பின்வரும் சரண அடிகள் பாடலாகவும் அமைந்திருப்பது, அவரிடம் இருந்த இசை அறிவையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வியக்கத்தக்க ஒன்றல்லவா இது!
எவ்வளவு விதமான பொருட்செறிந்த பாடல்கள்! ஆன்மிகம் கலந்த, வாழ்க்கைக்கு ஏற்ற அறிவுரைகள்! எனப் பல பரிமாணங்களைக் கொண்ட இவரது பாடல்கள் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
அடுத்த கவிஞரின் சந்திப்பில் மீண்டும் சந்திப்போம்…

