கலெக்டர் ஆபீஸ் வாசலில் அனல் பறந்து கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய மறியல் ஆர்ப்பாட்டம் அது. கையில் துட்டு வயிறுக்கு பிரியாணி சாப்பாடு என்று ஆசை காட்டி வரவழைக்கப்பட்டவர்கள். கோஷங்களுக்கு நடுவே, ஒரு ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் 60 வயது விவசாயி பரமன். கையில் ‘குறை! குறை! பெட்ரோல் விலை குறை !’ என்று எழுதிய ஒரு பதாகை இருந்தது.
ஒரு பிரபல ஊடகத்தின் இளம் நிருபர், மைக்கைப் பிடித்துக் கொண்டு அவரிடம் ஓடி வந்தார். ஒரு ‘வித்தியாசமான’ பேட்டி எடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.
“ஐயா… உங்க பேர் என்ன?”
“மாடுசாமி.”
“பேரே ஒரு மாதிரியா இருக்கே ?” நிருபர் மெலிதாகச் சிரித்தார்.
” தம்பி !. எங்களுக்கு அந்த மாடு தான் சாமி !. அதான் எங்க அப்பன் வச்ச பேரு” . நிதானமாகச் சொன்னார் மாடுசாமி.
“சரி ஐயா… உங்ககிட்ட பைக்கு, கீக்கு இல்ல காரு, கீரூ இப்படி ஏதாவது வண்டி, வாகனம் இருக்கா?”
“இருக்கு தம்பி… ஒரு ஜோடி மாடு பூட்டுன வண்டி இருக்கு.”
“நல்லதாப் போச்சு! அதுக்கு பெட்ரோல் போடத் தேவையில்லையே !.. சரி, நிலத்துக்குத் தண்ணி பாய்ச்ச டீசல் மோட்டார் வச்சிருக்கீங்களா ?”.
“இல்ல தம்பி!, கவலை இறைக்கிறதும் அந்த மாடுக தான். மோட்டார் போடுற அளவுக்கு வசதியில்ல.”
நிருபர் உற்சாகமானார். “பிரமாதம்! அப்போ நிலத்தை உழறதுக்கு டிராக்டர் ?”
“அதுக்கும் எங்க மாடுக தான் தம்பி துணை. எரு அடிக்குறதுல இருந்து ஏர் ஓட்டுற வரைக்கும் எல்லாம் அதுங்க தான்.”
“சூப்பர் ஐயா! வீட்ல கேஸ் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு ஏதாவது…?”
“அட நீங்க வேற தம்பி… மாட்டுச் சாணத்த வறட்டியா தட்டி, அதை வச்சு தான் அடுப்பு எரியும். அந்தப் புகையில வேகுற சோறு தான் எங்களுக்கு ருசி.”
“எக்ஸலண்ட்! அட்லீஸ்ட் ராத்திரி நேரத்துல வீட்ல கரண்ட், சிம்னி விளக்கு ஏதாவது உண்டா?”
“சூரியன் மறையுற வரைக்கும் தான் எங்களுக்கு வேலை. சூரியன் சாய்ஞ்சா நாங்களும் பாயில சாய்ஞ்சிடுவோம். எங்களுக்கு அந்தச் சூரியன் தான் பெரிய விளக்கு. காசு கொடுத்துக் கரண்ட் வாங்குறதுக்கெல்லாம் வழியில்ல தம்பி.”
நிருபர் கேமராவைப் பார்த்துப் பெருமையாகப் பேச ஆரம்பித்தார். “பார்த்தீர்களா நேயர்களே! உலகமே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஸ்தம்பித்துக் கிடக்கும் போது, எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு மனிதர் இங்கே போராட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கிறார்!”
மீண்டும் மாடுசாமியிடம் திரும்பிய நிருபர், “ஐயா… பெட்ரோல், டீசலால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையே, அப்புறம் ஏன் இந்தப் போராட்டத்துக்கு வந்தீங்க?” என்றார்.
மாடுசாமி தன் துண்டை உதறித் தோளில் போட்டப்படி எழுந்தார்.
“தம்பி… முப்பது வருஷமா இதே வாசலுக்கு வருஷம் ஒரு தடவை நான் வந்துக்கிட்டு தான் இருக்கேன். வருஷா வருஷம் உங்களைப் போல ஒரு புது தம்பி கோட் சூட் போட்டுட்டு வந்து என்கிட்ட இதே கேள்வியைக் கேக்குறீங்க. நானும் இதே பதிலைத் தான் சொல்லிட்டு இருக்கேன்.”
நிருபர் குழப்பமாகப் பார்க்க, மாடுசாமி தொடர்ந்தார்:
“உங்களுக்கு இது ‘சூப்பர்’ பேட்டியா இருக்கலாம். ஆனா எனக்கு இது என் தலையெழுத்து தம்பி. கேஸ் வாங்க வழியில்லாததால தான் நான் இன்னும் சாணத்துல அடுப்பு எரிக்கிறேன். டிராக்டர் வாங்கத் துப்பில்லாததால தான் இன்னும் மாட்டுக்கு பின்னால ஓடுறேன். நீங்க சொல்ற ‘முன்னேற்றம்’ என் வீட்டுப் பக்கம் இன்னும் எட்டிப் பார்க்கவே இல்லைங்கிறது தான் நிஜம். நீங்க விலையைக் குறைக்கப் போராடுறீங்க… ஆனா என் வாழ்க்கை தரம் முப்பது வருஷமா அங்கேயே தான் நிக்குது. எனக்கு எதுவும் மாறல தம்பி!”
நிருபர் அப்படியே திகைத்து நின்றார். சுற்றி ஒலித்த போராட்டக் கோஷங்கள் அவருக்கு வெறும் சத்தமாக மட்டுமே கேட்டன.

