Jnanpith Award - Highest Literary Honor of India - Study Wrap

 

கவிஞர் வைரமுத்து

இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 சென்ற மாதம் குவிகம் வெளியிடும்  பொழுது (15 மார்ச்)  ஞானபீடப்  பரிசுச்  செய்தி தினமணி இதழில் வந்தது.  செய்தியை வெளியீட்டு ஞானபீட விருது பெற்ற வைரமுத்து அவர்களை வாழ்த்தி எழுதினோம்.

அதற்குப்பின்  200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் அதற்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தினர்.

குறிப்பாக ஜெயமோகன் அவர்கள் இவருக்குக் கொடுத்த ஞானபீட விருது தமிழின்  தரத்தையே  தாழ்த்திவிட்டது  என்ற தொனியில் கடுமையாகச் சாடினார்.

மகளிர் அணிகளும் ‘மி டூ’ வில் குறிப்பிடப்பட்ட ஒருவருக்கு இந்த உயரிய பரிசு தரலாகாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதன் முதலில் அகிலன் அவர்களுக்கு 1975 இல் ஞானபீடம் விருது கொடுத்தபோது சுந்தர ராமசாமி அவர்கள் கண்டனக் கணைகளைத்  தொடுத்தார். 

பின்னர் ஜெயகாந்தன் அவர்களுக்கு 2002 இல்  கிடைத்தபோது அவர் தகுதியானவர் என்று அனைவரும் ஒத்துக் கொண்ட போதிலும் , அவர் ஜெய ஜெய சங்கர நூல்  எழுதியதால்தான் கிடைத்தது என்று சிலர் குரல் எழுப்பினர்.

இப்போது வைரமுத்து அவர்களுக்கு 2026இல் இந்த விருது வழங்கிய போது எதிர்ப்புக் குரல் சற்று பலமாக இருக்கிறது. ஒருவேளை ஊடகங்கள் நாம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதனால் இப்படித் தோன்றுகிறதோ?

எந்த விருது யாருக்குக் கிடைத்தாலும் அதைப் போற்ற பலரும் , தூற்ற பலரும் இருப்பது உலகம் முழுதும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. 

மீ டூ விவகாரம் பெரிது என்றால் ஏற்கனவே விருது பெற்ற பலரும்  நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டி வரும்.  

தகுதியானவரா?  – தரமானவரா? என்றால் தரத்தை நிர்ணயிப்பது யார் என்ற பெரிய கேள்வி எழும். 

அதெல்லாம் இருக்கட்டும், குவிகம்  எரிந்த கட்சியா எரியாத கட்சியா   என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்வோம். 

பரிசையும் விருதையும் எந்த அமைப்பு  கொடுக்கிறதோ அதன்  தீர்ப்பு இறுதியானது.

நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அது சரியல்ல என்று கூற நமக்கு உரிமை இருக்கிறது .

ஆனால் அதை த் திரும்பப் பெறவேண்டும்  அல்லது இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்கவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் நமக்கு இல்லை என்று நினைக்கிறேன். 

அது சரி, உங்கள் கணிப்புப்படி யாருக்கு ஞானபீட விருது கொடுத்தால் அனைத்துத்  தமிழ் மக்களும் எந்தவித எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் ஏற்றுக் கொள்வார்கள்? ( ஞானபீட விருதுச் சட்டப்படி அவர் உயிரோடு இருக்கவேண்டும்.) 

இந்திரா பார்த்தசாரதி ? ஜெயமோகன்? எஸ் ராமகிருஷ்ணன்? பெருமாள் முருகன்? சாரு நிவேதிதா? வேறு ஒருவர்? 

சொல்லுங்கள்!!!