அத்தியாயம் பதினைந்து
கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மனிதனின் இயல்பினையும், கர்ம யோகம் மூலம் எவ்வாறு அவன் இறைத் தன்மையையும் அடைய முடியும் என்பதையும் பற்றிக் கூறினார்.
ஏழாம் அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரை இறைவனின் தன்மை பற்றியும், அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும், உருவத்துடன் வரும் சகுண இறையைப் பற்றியும், எந்த உருவத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது, அனைத்திலுமாக இருக்கும் நிர்குண இறையை, அந்த பிரும்ம தத்துவத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.
முதல் ஆறு அத்தியாயங்கள் தனி மனித முயற்சியைப் பற்றிக் கூறும்; ஆனால் அடுத்த ஆறு அத்தியாயங்களும் இறைவனது கருணையை, அருளைப் பற்றிக் கூறும்.
ஏழாம் அத்தியாயம் ஞான விஞ்ஞான யோகம் என்று அழைக்கப் படுகிறது. இந்த அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், தன்னை முழுமையாக அறியும் அறிவைப் பற்றி விளக்குகிறார். அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவை விஞ்ஞானம் என்றும் இந்த அறிவு ஞானத்தை அடைய மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார். தன்னை விட வேறுபட்டவராக, குணங்களுடன் கூடிய இறைவனைப் பற்றிய அறிவு “ஞானம்” அல்லது சாதாரண அறிவு எனப்படுகிறது. இறைவனும் தானும் வேறல்ல என்ற உண்மையை உணர்ந்து, இறைவனை தன்னுடன் ஒன்றாக உணர்ந்து அறிதலே “விஞ்ஞானம்” என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
இந்த அறிவே உயர்ந்த அறிவாகும். ஏனெனில், மனிதனின் அறிவியல் தேடல் இந்த அறிவில் தான் நிறைவு பெறுகிறது. இந்த அறிவை அடைய முயற்சி செய்யவும் மற்றும் அதில் வெற்றி பெறவும் விரும்பும் மனிதர்கள் மிகவும் குறைவாக இருப்பர், இந்த அறிவின் நுண்மையையும் அரிய தன்மையையும் எல்லா மனிதராலும் புரிந்து கொள்ள முடியாது..
ஸ்ரீகிருஷ்ணர் இறைத் தன்மையை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்:
இறைவனது படைப்பில் அடிப்படை இயலான பொருள் உலகம் என்பது ஐம்பூதங்களான நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம், இவற்றோடு மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றையும் குறிக்கும். இதையே அபரா பிரகிருதி என்பர். நாம் பார்க்கும், தொடும், உணரும் எல்லாமே அபரா பிரகிருதி. நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்கள் எல்லாம் — மரம், நீர், காற்று — இவை எல்லாம் அபரா பிரகிருதி.
இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தியான ஜீவாத்மாவோ உயர்ந்த இயலாக பார்க்கப்பட்டு, பரா பிரகிருதியாக நிற்கும். இது இல்லாமல் உயிர் இல்லை
மனிதன், விலங்கு, உயிர்கள் — இவற்றில் இருக்கும் உயிர் சக்தி, நம்முள் உள்ள உயிர் சக்தி — அதுதான் பரா பிரகிருதி.
அபரா பிரகிருதி எட்டு வகைகளைக் கொண்டது, அவையாவன ஐந்து சூட்சுமப் பொருட்கள், (பஞ்சபூதங்கள்), பிரபஞ்ச அஹங்காரம், பிரபஞ்ச புத்தி மற்றும் வெளிப்படாத நிலை (அவ்யக்தம்). இதனையே தாழ்ந்த இயல் என்று அழைப்பர், இது தாழ்ந்த இயல் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், இது மாற்றமடையும் தன்மை உடையது, சஞ்சலங்கள் நிறைந்தது; எல்லைக்குட்பட்டது மற்றும் பிறவற்றை சார்ந்து இருப்பதாகும்.
உயர்ந்த இயல் என்பது ஒவ்வொரு உயிரினத்தின் பின்னணியில் இருக்கும் சித்தம் அல்லது செயலாற்றும் அறிவு ஆகும். அதுவே முழுப் படைப்பையும் தாங்கி நிறுத்துகிறது. இது உயர்ந்த இயல் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், இது மாற்றமில்லாதது, சித்தமுடையது (அறிவுடையது), அளவற்றது மற்றும் எதையும் சாராமல் தன்னிச்சையாக இருப்பதாகும்.
இந்த இறைவனிடமிருந்தே முழு படைப்பும் தோன்றுகிறது. அந்தப் படைப்பில் உயிர் சக்தியாகி நிற்கும் ஆத்மா அதாவது உயர்ந்த இயலாக இருக்கும் பரா பிரகிருதி மற்றும் சஞ்சலங்கள் நிறைந்த அபரா பிரகிருதி ஆகிய இரண்டும் அடங்குகின்றன. இறைவனே இந்தப் படைப்பைத் தாங்கி நிறுத்துகிறார்; இறுதியில் அதையே தன்னுள் இழுத்து ஒன்றாக்குகிறார். உண்மையில் பார்த்தால், படைப்பு என்பது அவரிடமிருந்து வேறுபட்டதாக இல்லை; எல்லாவற்றின் சாரமாக, எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பதும் அவரே. இதனால் இறைவன் எதையும் சார்ந்திருக்கவில்லை; ஆனால் அனைத்தும் அவரைச் சார்ந்தே இருக்கின்றன. இவ்வுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் காரணம் பரமாத்மா என்பதையே, ஸ்ரீகிருஷ்ணர் “எல்லாம் என்னால் தோன்றுகிறது, என்னிலேயே நிலைக்கிறது” என்று கூறுகிறார்.
மனிதர்கள் மாயையின் காரணமாக இந்த உண்மையை அறிய முடியாமல் தவிக்கிறார்கள். இந்த மாயையை கடக்க, கடவுளில் முழு நம்பிக்கை வைத்து அந்த இறைத் தன்மையின் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மனிதர்களில் சிலர் மட்டுமே உண்மையை அறிய முயற்சி செய்கிறார்கள். அவர்களுள் மிகச் சிலரே பரமாத்மாவை உண்மையாக அறிகிறார்கள்.
இவ்வாறு இறைவனை அறிய முயலும் மனிதகுலத்தை ஸ்ரீகிருஷ்ணர் ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார். அவற்றில் மிகக் கீழ்மையானவர்கள், இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் அவரை நாடாதவர்களும் ஆவர். தங்களது ஆசைகளால் நடத்தப்படும் வாழ்க்கையை வாழ்ந்து, அசுர இயல்புகளுக்குள் செல்லும் இவர்கள் மாயையில் முற்றிலும் மூழ்கி விடுகின்றனர்.
மற்றவர்கள் பக்தர்களாக இருந்தாலும், அவர்களின் மனப்பக்குவ நிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனப்பாங்குகளுடன் இறைவனை வணங்குகின்றனர்.
- துன்பத்தில் இருக்கும் போது இறைவனை வணங்குபவன் ஆர்த்தன் எனப்படுகிறான்.
- பொருளாதார வளம் பெற இறைவனை நாடுபவன் அர்த்தார்த்தி எனப்படுவான்.
- உலகிலுள்ள அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்ந்து, அறிவின் மூலம் இறைவனை அறிய விரும்புபவன் ஜிஜ்ஞாஸு ஆவான்.
- வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை அடைந்து, தன்னையும் இறைவனையும் ஒன்றாக உணர்ந்தவனே ஞானி என அழைக்கப்படுகிறார்.
இந்த நான்கு பேரிலும் ஒரு ஞானியையே மிக உயர்ந்த பக்தனாக ஸ்ரீகிருஷ்ணர் கருதுகிறார்.
ஒரு ஞானியின் பக்தி நிலையானதும், பிரிவற்றதுமாகும். அவர் இறைவனை தன்னை நேசிப்பதைப் போலவே நேசிக்கிறார்; ஏனெனில் அவருக்கு இரண்டாகப் பார்க்கும்) எண்ணமே இல்லை. இயல்பாகவே, இறைவனும் அந்த பக்தனை தன்னுள் இரண்டறக் கலந்தவனாகவே பார்க்கிறார் (17).
இவ்வாறு படைப்பை இரண்டாகப் பார்க்காமல் அனைத்திலும் இறைவனையே பார்க்கும் ஞானிக்கு இறைவன் உயர்ந்த இலக்கை அருளுவதாக வாக்குறுதி அளிக்கிறார்; ஏனெனில் முழுமை என்பது இரண்டற்ற நிலையில்தான் சாத்தியம் (18).
இத்தகைய பார்வை பல பிறவிகளில் தன்னைத் தயார் செய்ததன் மூலம் கிடைக்கிறது; அத்தகைய அரிய பாக்கியசாலிகள் மிகவும் சிலரே.
மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடவுளை நாடுகிறான். தனது தேவைகளுக்கு ஏற்ப அவன் கடவுளரையும் தேர்ந்தெடுக்கிறான். மனிதனது தேவைகள் அவனது ஆசைகளின் அடிப்படையில் இருந்து எழுகின்றன. இந்த ஆசைகள் மற்றும் விருப்பு வெறுப்புகள் உண்மையை அறியத் தடையாக இருக்கின்றன. இதனாலேயே மனிதனால் பல தெய்வங்களை வணங்கின போதிலும், அனைத்து வழிபாடுகளும் இறுதியில் ஒரே பரமாத்மாவை அடைகின்றன என்ற உண்மையை உணர முடிவதில்லை.
ஏழாவது அத்தியாயத்தின் பதிமூன்றாவது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மனிதனின் இந்தத் தேடலுக்கும் சம்சாரம் என்ற பந்தத்தில் சுகதுக்கங்களில் உழன்று, இறைத்தன்மையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கான காரணங்களைக் கூறுகிறார். படைப்பில் இருக்கும் சத்வ ராஜசிக தாமசிக குணங்களின் தன்மையால் தன் நிலை மறந்து உலகில் ஆனந்தத்தை தனக்கு வெளியே தேடி மயங்குகிறான். இந்த . தெய்வீக மாயை (மயக்கத்தை உண்டாக்கும் சக்தி), சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களால் ஆனது. இந்த மாயையை மனிதன் தனது தனிப்பட்ட முயற்சியால் வெல்ல முடியாது. ஆகவே, இறைவன் ஒரே தீர்வை கூறுகிறார் —
“என்னைச் சரணடைபவர்கள் மட்டுமே இந்த மாயையைத் தாண்ட முடியும்.”
ஸ்ரீகிருஷ்ணர் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் இருப்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களால் விவரிக்கிறார்.
• நான் நீரில் உள்ள சுவை.
• சூரியனிலும் சந்திரனிலும் இருக்கும் ஒளியும் நானே.
• மனிதர்களுக்குள் இருக்கும் வலிமையும் நானே.
கடவுள் அனைத்திலும் இருப்பது புரிந்தால் மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும். இறைவனிடம் முழு சரணாகதியடைய முடியும்.
மாயையைக் கடக்கவும் உண்மையை அறியவும், கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைவது அவசியம்.
