நிலம் கூறும் தன்கதை.

வறண்ட நிலத்தில் உலவும் பாம்பு… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா நீ்ங்க பலே கில்லாடி!மாமூலனார் பாடல்கள் – 8 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் - அகர முதலவறட்சியிலும் வளமான நிலம் - Vivasayam | விவசாயம்

நானிலம் ஆளும் மனிதா கேள்!

பெரு வெளிச்சம் என் கண்கள் திறந்தது.
எனக்குப் பெயரில்லை; என்னைக் கூப்பிடுவாரில்லை
நிலம் என்னும் பெயரை நீதான் வைத்தாய்

கண் திறந்து கவனித்தேன்,
இரவு, பகல், மழை, வெயில், குளிர் கடந்து போனது;
செடி மரமானது, மரம் காடானது;

பூச்சிகள் ஊர்ந்தன. மிருகங்கள் பறவைகள் கடந்தன.
மனிதர்கள் கடந்தனர். சிலர் தங்கினர்.

நிலத்தைப் பண்படுத்தி வயலாக்கிப் பயிராக்கி
இங்கேயே தங்கினர்.

அவர்கள் சந்தோஷம் என்னை மகிழ்வித்தது.

அவர்கள் துக்கம் என்னை வருத்தியது.
நீடிக்கவில்லை இது;

வானம் வறண்டது. மழை பொய்த்தது.

பஞ்சம் தலைவிரித்தாடியது.

மக்கள் இங்கிருந்து புலம் பெயர்ந்தனர்.
பெருந் திரள் மக்கள் கூட்டம் கடந்து சென்றது.
கடந்து போனது காலமும்தான்.

செடிகள் காய்ந்தன. மரங்கள் வறண்டன. வறட்சி ! வெறுமை!!

மீண்டும் மழை, மீண்டும் செடி, மீண்டும் மரம்…காடு
பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் மீண்டும் வந்தன…

இது காலச் சுழற்சி!

போர் வீரர்கள், பெரும் படைகள் கடந்து சென்றனர்.
பல போர்கள் நடந்தன. நிலத்துக்கான போர்.

உயிரோடிருந்தவர்களின் தலைவன் சொன்னான்:
“இந்த நிலத்தை நான் வென்று விட்டேன்”

இறந்த உடல்களை, ஓநாய்கள் இழுத்துச் சென்றன,
கழுகுகள் கொத்திக் கிழித்தன.

காலங்கள் மாறின.மக்கள் வந்தார்கள். தங்கினார்கள்.
விவசாயம் செய்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டார்கள்:

‘நான் என் நிலத்தை உழுது விட்டேன், நான் நீர் பாய்ச்சி விட்டேன்.’
சிலர் விற்றார்கள், சிலர் வாங்கினார்கள்.

நிலத்துக்காக சண்டைகள் பற்பல.
எத்தனை தகராறு. எத்தனை கொலைகள்.

முன்பு போரில் வென்றவன் சொன்னான்: ‘இது என்நிலம்’
அவனை வென்றவனும் அதையே சொன்னான். அவனைக்
கொன்றவனும் அதையே சொன்னான்.

பத்திரம் போட்டு வாங்கியவனும், விற்றுக் காசாக்கியவனும்,
கையெழுத்திட்ட அதிகாரியும், பத்திரத்தை எழுதியவனும்
எல்லாரும் செத்துத்தான் போனார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இங்கேயே
இருக்கிறேன்

நான் நிலம்.